பொதுபல சேனாவை கட்டுப்படுத்தாவிடின் ஐ.எஸ்.ஐ.எஸ் நுழையும்: இலங்கைக்கு அபாயம்

442
 pikku-007

இலங்கையில் இயங்கிக் கொண்டிருக்கும் பௌத்த தீவிரவாத அமைப்பான பொதுபல சேனாவை அரசாங்கம் கட்டுப்படுத்தாவிட்டால், இலங்கைக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். இஸ்லாமிய பயங்கரவாதம் நுழைவதற்கு அதிகபட்ச சாத்தியப்பாடு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் எஸ்.ஆர்.ஏ. அமைப்பு (Security Risk Asia) இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

டெல்லியில் இயங்கும் எஸ்.ஆர்.ஏ. அமைப்பின் பிரதானி பிரிகேடியர் பொன்ஸாலே வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பொதுபல சேனாவுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலுள்ள பிரச்சினை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்குச் செல்லாமல் தடுக்க வேண்டும்.

பொதுபல சேனாவின் மீதுள்ள வெறுப்பு, பகைமை என்பன முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாதிகளாக ஆயுதம் தூக்க வைக்கும் நிலைமைக்கு கொண்டு செல்வதைத் இலங்கை அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி குறித்து பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் கருத்து வெளியிடுகையில்,

இந்தியர்கள் எங்களது விடயத்தில் குழப்பமடையாது, அவர்களது வேலையைப் பார்த்துக் கொள்ளட்டும்.

நாம் எமது வேலையைப் பார்த்துக் கொள்கின்றோம். நாம் இந்த நாட்டில் மோதலையோ, குரோதத்தையோ விதைக்கவில்லை. ஐ.எஸ்.ஐ.எஸ். மட்டுமல்ல, எந்தவொரு அடிப்படைவாதிகளுக்கும் இந்த நாட்டில் இடமில்லை.

இந்தியாவிலிருந்து வரும் இந்தக் கருத்தும் அந்த அடிப்படைவாதிகளின் குரல் ஆகும். எங்களை நிர்வகிப்பதற்கு இந்தியாவிலுள்ளவர்கள் பிரச்சினைப்பட வேண்டிய தேவையில்லை என கூறியுள்ளார்.

 

SHARE