பிரபல சிங்கள புலனாய்வு செய்தி இணையத்தளமான லங்கா ஈ நியூஸ் உள்ளிட்ட சிங்கள இணையத்தளங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன.
அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
அண்மையில் கண்டியில் சுமார் 59 கிலோ கிராம் எடையுள்ள போதைப் பொருள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது.
அதனை பதுக்கி வைத்திருந்த அஹமட் சப்ரி என்ற வர்த்தகரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
அஹமட் சப்ரியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அவருக்கு மலேசியாவில் வாழும் இலங்கை வர்த்தகரான டாத்தோ முஜாஹிதீன் என்பவர் போதைப் பொருளை வழங்கி வருவது தெரியவந்துள்ளது.
மேலும் டாத்தோ முஜாஹிதீன் என்பவருக்குச் சொந்தமான சொகுசுப் படகொன்று இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவல்களின் பிரகாரம், டாத்தோ முஜாஹிதீன் என்பவர் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பராவார்.
அதற்கு மேலதிகமாக இராணுவ உயரதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் அவருக்கு நெருக்கமான தொடர்புகளும், செல்வாக்கும் இருப்பது தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாக கண்டியில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் வர்த்தகருடன் டாத்தோ முஜாஹிதீனுக்கு இருக்கும் தொடர்புகள் குறித்து செய்திகளை வெளியிட வேண்டாம் என்று ஊடகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தவிரவும் டாத்தோ முஜாஹிதீன் போன்றவர்களுடன் இணைந்து கோத்தபாயவே இந்த போதைப் பொருள் வர்த்தகத்துடன் நேரடித் தொடர்பைக் கொண்டுள்ளார்.
இதன் காரணமாக இலங்கையில் போதைப் பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவது மிகவும் சிக்கலான விடயம் என்பதாகவும் பொலிசார் கவலை தெரிவித்துள்ளனர்.