மலேசியாவில் விடுதலைப்புலிகள் தேடுதல் வேட்டை தொடருகிறது

463
கடந்த வியாழக்கிழமை, மலேசியாவின் செர்தாங்க், செந்துல், சுங்காய் பெசி, மத்திய கோலாலம்பூர் ஆகிய பகுதிகளில் மலேசிய போலீசார் நடத்தி அதிரடி தேடுதல் வேட்டையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 32,37,43 மற்றும் 45 வயது கொண்ட 4 பேர் சிக்கினர். இதில் ஒருவர் வெடிகுண்டு தயாரிப்பதில் கைதேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

எனினும் இவர்களது பெயர் விவரத்தை இதுவரை மலேசிய போலீசார் வெளியிடவில்லை. 4 பேருக்கும் இலங்கையில் நடத்தப்பட்ட பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் தொடர்பு இருக்கலாம் என்று மலேசிய அரசாங்கம் சந்தேகிக்கிறது.

இவர்களில் ஒருவர், 1999-ம் ஆண்டு அப்போதைய இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவை கொல்ல நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சியில் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படுகிறது.

2009-ம் ஆண்டு முதல் இவர்கள் மலேசியாவில் தங்கியிருந்ததும் தெரிய வந்தது.

கடந்த மே மாதம் 15-ந் தேதி இதேபோல் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். பின்பு அவர்கள் விசாரணைக்காக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். எனவே இப்போது பிடிபட்டுள்ள விடுதலைப்புலிகளும் விசாரணைக்காக இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம் என்று தெரிகிறது.

இதனிடையே, மலேசிய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் காலித் அபு பக்கர் கூறியதாவது:-

மலேசியாவில் தற்போது பிடிபட்டுள்ள 4 பேரும் 1990-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே விடுதலைப்புலிகள் அமைப்பில் செயல்பட்டு வந்து உள்ளனர். இவர்களில் ஒருவர் சிறுவயதிலேயே விடுதலைப்புலிகள் அமைப்பில் சேர்ந்து இருக்கிறார்.

2009-ல் இலங்கையில் விடுதலைப்புலிகள் ஒடுக்கப்பட்ட பின்பு, இவர்கள் மலேசியாவுக்கு வந்துள்ளனர். இங்கிருந்து அந்த இயக்கத்தை மீண்டும் புதுப்பிக்க திட்டமிட்டு செயல்பட்டு இருக்கிறார்கள்.

இவர்களிடமிருந்து ஏராளமான போலி மலேசிய பாஸ்போர்ட்டுகள், குடியேற்ற அதிகாரிகள் முத்திரையிட்ட போலி ஸ்டாம்புகள் ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளன. இவை பெரும்பாலும் வெளிநாட்டு தூதரகங்களால் வழங்கப்பட்டவை.

இவ்வாறு அவர் கூறினார்.

கைதான விடுதலைப்புலிகளிடம் இருந்து அதிக அளவில் போலி பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதால் மலேசியாவில் இன்னும் ஏராளமான விடுதலைப்புலிகள் பதுங்கி இருக்கலாம் என்று மலேசிய அரசாங்கம் சந்தேகிக்கிறது.

இதனால் அவர்கள் மீதான தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

SHARE