மலையக உறவுகளின் துயரத்தில் பங்கு கொள்கின்றோம்!- டக்ளஸ், ப.சத்தியலிங்கம் மற்றும் பாஸ்க்கரா

457

இயற்கை அனர்த்தங்களால் இழப்புகளை சந்தித்த மலையக உறவுகளின் துயரத்தில் பங்கெடுக்கின்றோம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண சுகாதார அமைச்சர் மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சி. பாஸ்க்கரா ஆகியோர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சர் டக்ளஸின் அனுதாபச் செய்தி

thoபதுளை மாவட்டம் கொஸ்லாந்த மீரியபெத்த பிரதேசத்தில் நடந்த இயற்கை அனர்த்தங்களால் இடர்பட்டு, இழப்புகளை சந்தித்த மலையக மக்களின் துயரத்தில் நாமும் பங்கெடுக்கின்றோம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெவித்துள்ளார்.

இது குறித்து உடனடி மீட்பு பணிகளில் ஈடுபடுமாறும், தேவையான நிவாரணங்களை வழங்குமாறும் உத்தரவிட்டிருப்பதோடு, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்றும் பார்வையிட்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதோடு, ஜனாதிபதியின் பணிப்புரைகளில் எந்தவித காலதாமதத்துக்கும் இடம் கொடுக்காமல் அதிகாரிகள் மனிதாபிமான அடிப்படையில் செயல்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உறவுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, பெற்றோரை இழந்து அநாதரவாக நிற்கும் பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் தேவைகள் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் அவதானத்துடனும், மனிதாபிமானத்துடனும் செயல்பட்டு அந்தச் சிறுவர்களை அரவணைத்துப் பாதுகாக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுவரை பத்துப்பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள அதேவேளை சரிந்த மண்ணுக்குள் மேலும் சுமார் முந்நூறு பேர் சிக்குண்டிருக்கலாம் என்று அச்சம் தெரிவிக்கப்படுகின்ற செய்தியை கேட்டு ஆறாத துயரமடைந்தேன்.

மனது மறக்க முடியாத இந்த துயரத்தில் நாமும் பங்கெடுக்கின்றோம் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இழப்புகளின் றணங்களை உணர்ந்தவர்கள் நாம்!  மலையக உறவுகளின் துயரத்தில் பங்குகொள்கின்றோம்- வடமாகாண சுகாதார அமைச்சர்

இந்த நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்கள் சபிக்கப்பட்ட இனமாகவே வாழ்ந்து வருகின்றோம்.

அரசியல் ரீதியா மட்டுமன்றி இயற்கையாலும் கொடூரமாக பாதிப்பிற்குள்ளாக்கப்பட்ட இனமாக வாழ்ந்து வருகின்றோம் என வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009ல் முடிவுக்கு வந்த செயற்கை அனர்த்தத்தால் (யுத்தம்) பல்லாயிரக்கணக்கான எமது மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டார்கள். உலகையே உலுக்கிய இந்த மறக்கமுடியாத துயரச்சம்பவம் முடிவுற்று ஐந்து வருடங்கள் கடந்த நிலையில் மீண்டுமொரு இயற்கை அனர்த்தம் பதுளை மாவட்டத்தில் நடந்தேறியுள்ளது 2004 இல் ஏற்பட்ட ஆழிப் பேரலையிலும் ஆயிரக்கணக்கானவர்களை இழந்தோம்.

இந்த நாட்டின் உழைக்கும் வர்க்கமான எமது மலையக உறவுகள் என்றுமே அரசியல் ரீதியாக புறக்கணிக்கப்பட்டவர்களாகவே இருந்து வந்துள்ளனர்.

தேர்தல் காலங்களில் மட்டும் அரவணைக்கபட்டு பின்னர் அநாதாரவாக விடப்படுகிறார்கள். இந்த நிலையில் நேற்றைய மண்சரிவு இயற்கை அனர்த்தம் இவர்களை மேலும் கடுமையாக பாதிப்புள்ளாக்கியுள்ளது.

பல நூற்றுக்கணக்கானவர்களை காவுகொண்ட இந்த பேரனர்த்தத்தால் ஏறக்குறைய ஒருகிராமமே மண்ணிற்குள் புதையுண்டுள்ளது.

இழப்புகளின் றணங்களை உணர்ந்தவர்கள் நாம். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட எமது உறவுகளின் துயரத்தில் வடக்கு மாகாண மக்களாகிய நாம் பங்குகொள்கின்றோம்.

சுகாதார அமைச்சர் என்ற வகையில் ஊவா மாகாண சுகாதார அமைச்சினூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ ரீதியிலான உதவிகள் வழங்க தயாராவுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சகோதர மக்களின் இழப்பிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் -பாஸ்க்கரா

paskara-415x260பதுளை – கொஸ்லாந்த – மீரியபெத்த தோட்ட கிராமத்தில் இடம்பெற்ற பாரிய இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்த மலையக உடன் பிறப்புகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களும், அஞ்சலிகளும் என ஜனநாயக மக்கள் முன்னணி ஊடகச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி. பாஸ்க்கரா தெரிவித்தார்

இலங்கை வரலாற்றிலே ஒரு மண் சரிவு அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களின் பாரிய தொகையாக இது காணப்படுகின்றது.

இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் இறந்த மக்களுக்காக எமது கட்சி வியாழன் 30 முதல் ஒரு வார காலத்தை சோக வார காலமாக அனுஷ்டிப்பதுடன் சகல இல்ல, அலுவலக, வர்த்தக நிலையங்களில் வெள்ளைக்கொடிகளை பறக்க விடுவதுடன் இயன்ற வரை கறுப்பு உடை அணிந்து கொண்டு இவ்வாரத்தை சோக வாரமாக அனுஷ்டிப்போமாக!

அரசானது உடனடியாக புதையுண்டு போன மக்களை மீட்பதற்கான நடவடிக்கையும், காயப்பட்டவர்களுக்கான சிகிச்சையையும் இன்னலுறும் மக்களுக்கான நிவாரணத்தையும் வழங்குவதை வரவேற்கிறோம்.

இது மேலும் விரிவுபடுத்தப்பட்டு எவ்வித காரணமும் கொண்டு மீட்புப் பணி இடைநிறுத்தப்படாமல் நவீன வசதிகள் இல்லாதவிடத்து அயல் நாட்டு உதவியுடனாவது தொடர்ந்து புதையுண்டு போன மக்களை மீட்பதற்கும் அவர்களின் சிகிச்சைக்கு உதவவும் மேலதிக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

SHARE