மலையக எம்பியின் இரட்டை வேடம்! பதவியைத் தக்க வைக்க இலக்கு? – மலையக அரசியல்வாதிகளின் கபட நாடகம் அம்பலம்?

477

கொஸ்லாந்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் உண்மை நிலையினை நேற்று லங்காசிறி வானொலியில் இடம்பெற்ற சிறப்புக் கருத்துக்களம் வெளிக்கொண்டு வந்தமை அனைவர் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி, அரசியல்வாதிகளில் தேர்தல் நாடகம், மக்களின் உள்ளக் குமுறல்கள் என பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களிலிருந்து உண்மைத் தன்மையினை மேலும் வலுவாக்கியுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் கரிசனை கொள்ள வேண்டிய பாராளுமன்ற உறுப்பினரின் இரட்டை வேடம், தற்போது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

குறித்த பாராளுமன்ற உறுப்பினர், மண்சரிவில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டபின் வெளியிட்ட கருத்துக்கள் அவரது அரசியல் நாடகத்தினை வெளிக்காட்டியுள்ளதாக மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

இராணுவத்தினருடன், ஐக்கிய தேசியக் கட்சி எம்பி மற்றும் ஜனாதிபதியின் புதல்வர் நாமலுடனும் பாதிக்கப்பட்ட மக்களையும் இடங்களையும் சென்று குறித்த எம்பி பார்வையிட்டுள்ளார்.

அதன் பின்னர் அவர் ஊடகத்திற்குத் தெரிவித்த கருத்துக்கள் மூலம் பல கேள்விகளை மக்கள் எழும்புகின்றனர்.

ஜனாதிபதியுடன் நெருக்கமான தொடர்பினை வைத்திருக்கும் அவர் ஏன் மலையக மக்கள் மீது கரிசனை காட்டவில்லை.

மண்சரிவில் பாதிக்கப்பட்ட இடங்களில் இரண்டு பெக்கோ இயந்திரம் மட்டுமே மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறிய அவர், இவ்வாறான சந்தர்ப்பத்தில் எத்தனை பெக்கோவினை கொண்டு மீட்புப் பணியினை செய்திருக்க வேண்டும்.

மலையக பிரதிநிதியான இவர்,ஏனையவர்களை குறை கூறுவது சரியா? போன்ற கேள்விக் கணைகளை பாதிக்கப்பட்ட மக்களின் குரல்கள் பிரதிபலிக்கின்றன.

எதிர்பார்க்கப்படும் பாராளுமன்றத் தேர்தலில் தற்போது மக்களுக்கு எதையாவது செய்தால் தான் தனது இருப்பைத் தக்க வைக்க முடியும். தனது நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்துள்ளாரா?

பாராளுமன்றிற்குச் சென்ற பிறகு லயனில் வாழும் மக்களுக்கு வீடமைப்புத் தொடர்பில் ஏதாவது செய்திருக்கின்றாரா? அல்லது ஜனாதிபதியிடம் கேட்டு, வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்திருக்கின்றாரா? என மக்களின் உள்ளக் குமுறல்கள் வெளிவந்துள்ளன.

இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையில் இன்றைய சிங்கள பத்திரிகையில் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பாக செய்தி வெளிவந்துள்ளது.

இராணுவத்துடன் பாதிக்கப்பட்ட இடங்களைச் சென்று பார்வையிட்டமை தொடர்பாக லங்காசிறி வானொலி சுட்டிக்காட்டியதன் பிற்பாடு இவ்வாறான செய்தி வெளிவந்துள்ளமை இவரின் போலித்தன்மைக்கு வலுச்சேர்த்துள்ளது.

இதன் மூலம் அரசாங்கத்திற்கும் குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையிலான அந்நியொன்னியம் மற்றும் மக்களை ஏமாற்றும் விதம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

மலையக மக்கள் இனியும் போலி அரசியல்வாதிகளைக் கண்டு ஏமாறுவார்களா என புலம்பெயர் வாழ் தமிழர்கள் தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்துகின்றனர்.

மலையக அரசியல்வாதிகளின் கபட நாடகம் அம்பலம்?

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 2005ம் ஆண்டு தேர்தலின்போது 50 ஆயிரம் வீடுகள் மலையக மக்களுக்கு அமைத்துத் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

அதுதவிர, மீண்டும் இம்முறை மலையக மக்களுக்கு 50ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலத்து வாக்குறுதிகள் இனியாவது நிறைவேற்றப்படுமா என பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள், லங்காசிறி வானொலியில்  இடம்பெற்ற சிறப்புக் கருத்துக்களம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

மேலும், கொஸ்லாந்த, மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை கொடுக்க விடாது அதிகாரிகள் தடுப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

நிவாரணப் பொருட்கள் போதும் என்று சொல்லுமளவிற்கு கொடுக்கவில்லை. தற்போது இருக்கும் இடமும் சரியாக செய்து தரவில்லை. நிவாரணம் அறவே கிடைக்கவில்லை என்று சொல்லவில்லை.

அரச அதிகாரிகள் மற்றும் ஏனையவர்களிடமிருந்து வரும் சாமான்கள் எங்கு போகின்றது என தெரியாது.

எல்லாம் கொண்டுவந்து கொடுத்துவிட்டோம் என்று கூறுகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொடுத்த பொருட்கள் எங்கு இருக்கின்றன என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மண்சரிவில் பாதிக்கப்பட்ட இடங்கள் முழுவதும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களுக்கு எங்களையும் செல்ல விடுவதில்லை. அவர்களும் போவதாகத் தெரியவில்லை.

இரவிரவாகப் போகிறார்கள், வருகிறார்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

தமிழ் அரசியல்வாதிகள் எங்களைப் பார்வையிட வந்தால் அவர்களுடன் பேச விடுவதில்லை. ஏனைய அரசியல்வாதிகள் இப்பிரதேசங்களுக்கு பொலிஸ், இராணுவத்துடன் வந்து பார்த்துவிட்டு செல்கின்றனர்

என பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

SHARE