மஹிந்தவிற்கு எதிராக நியூயோர்க் நகரில் எதிர்வரும் 24ம் திகதி ஆர்ப்பாட்டங்களிற்கு ஏற்பாடு

406
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதை கண்டித்து தமிழர்கள் நியூயோர்க்கில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த பேரணி நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு வெளியில் எதிர்வரும் 24 ஆம் திகதி பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

அமெரிக்கா மற்றும் கனடாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொள்ள உள்ளனர்.

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதை கண்டித்தும், ஐ.நா போர் குற்ற விசாரணையாளர்களுக்கு இலங்கை செல்ல அனுமதி மறுக்கப்பட்டமையை முன்னிலைப்படுத்தியும், ஐ.நா விசாரணைக்கு சாட்சியமளிக்கும் சாட்சியாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் உள்ளிட விடயங்களுக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் ஐ.நா தலைமையகத்திற்கு எதிரில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளன.

ஐ.நா போர் குற்ற விசாரணையாளர்களை இலங்கைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில், ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் பொதுச் சபை தலைவர் ஆகியோர் கடும் கண்டத்தை வெளியிட வேண்டும்.

இலங்கை அரசின் இந்த வரம்பு மீறிய செயலை கவனத்தில் கொண்டு, ஐ.நாவின் நம்பகத்தன்மை மற்றும் திறனை பாதுகாக்க உறுப்பு நாடுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா அதிபருக்கு எதிராக நியூயோர்க்கிலும் தமிழகத்திலும் அணிதிரள்வோம் : தொல்.திருமாவளவன்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஐ.நா. பொதுச்சபை உரையினை மையமாக கொண்டு செப்டெம்பர் 24ம் திகதி இடம்பெறுகின்ற பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வுக்கு தனது தோழமையினைத் தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இதனையொட்டி தமிழகத்தில் இடம்பெறுகின்ற போராட்டங்களிலும் தங்கள் கட்சி பங்கெடுக்குமென அறிவித்துள்ளார்.

தமிழகத்தின் வேலூரில் ஊடக நிருபர்களிடம் இது தொடர்பில் தொல்.திருமாவளவன் தெரிவித்திருப்பதாவது:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இலங்கை அதிபர் ராஜபக்ஷ ஐ.நா. பொது சபை பேரவையில் கலந்து கொள்வதை இந்திய அரசு உடனடியாக தலையிட்டுத் தடுக்க வேண்டும். சர்வதேச நாடுகளுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் 24-ஆம் தேதி கண்டனப் பேரணி நடத்தப்படுகிறது.

இதில், பல்வேறு தமிழ் அமைப்புகள், பெரியார் இயக்கங்கள்,அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு என்ற பெயரில் நடத்தும் கண்டனப் பேரணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் பங்கேற்பர்.

ஐ.நா. பேரவை முன்பு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.

அந்த ஆர்ப்பாட்டம் வெற்றி பெற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

ராஜபக்ஷ ஐ.நா. பேரவையில் பேசக்கூடாது என எதிர்க்கும் வகையில் அனைவரும் 25-ஆம் தேதி கருப்புச் சட்டை, கருப்புச் சின்னம் அணிய வேண்டும்.

இல்லங்களில் கருப்புக் கொடி ஏற்ற வேண்டும் என்று டெசோ அமைப்பின் தலைவரும், திமுக தலைவருமான கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.

இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் முழுமையாகப் பங்கேற்பர் எனத் தெரிவித்துள்ளார்.

 

SHARE