முகம் தெரியாத மனிதனுக்கு உதவுவதும் நாட்டுப்பற்றுதான் -நடிகர் அர்ஜுன் பேச்சு 

426


ஸ்ரீராம் பிலிம்ஸ் சார்பில் அர்ஜுன் தயாரித்து, இயக்கி நடிக்கும் படம், ‘ஜெய்ஹிந்த் 2’. இந்தப்படம் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் தயாராகிறது. சுர்வீன் சாவ்லா, சிம்ரன் கபூர், ராகுல்தேவ், பிரம்மானந்தம், ரவிகாளே நடித்துள்ளனர். எச்.சி.வேணுகோபால் ஒளிப்பதிவு. அர்ஜுன் ஜெனியா இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குனர் பாலா வெளியிட, காஷ்மீர் எல்லையில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்தின் மகள் ஆஷியா, குழந்தை நட்சத்திரம் யுவி பெற்றுக் கொண்டனர். விழாவில், மேஜர் முகுந்தின் தந்தை வரதராஜன், தாய் கீதா, மனைவி இந்து, மகள் ஆஷியா ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். பின்னர் நடிகர் அர்ஜுன் பேசியதாவது: ஒரு தயாரிப்பாளராக இந்தப் படத்தை எந்த சமரசமும் இல்லாமல் எடுத்திருக்கிறேன். இதுவரை இல்லாத மாதிரி வித்தியாசமாக நடித்திருக்கிறேன்.

நான் நாட்டுப்பற்றுள்ள படங்களை இயக்கி இருக்கிறேன். எல்லையில் போரிடுவது மட்டும் நாட்டுப்பற்றல்ல. முகம் தெரியாத ஒரு மனிதனுக்கு உதவுவது கூட நாட்டுப் பற்றுதான். நாட்டுக்குள் இருந்து கொண்டே மக்களுக்காகப் போராடுகிற ஒருவனின் கதை இது. இந்திய கல்வி முறைதான் கதைக் களம். நமது கல்வித் தரம் நன்றாக இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வி எழுகிறபோது இல்லை என்கிற பதில்தான் அதிகமாக இருக்கிறது. நமது கல்விமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதை ஒரு சாதாரண மனிதனின் பார்வையில் சொல்கிற படம். படத்தின் வேலைகள் முடிந்துவிட்டது. அடுத்த மாதம் வெளிவருகிறது. இயக்குனர் பாலா பேசும்போது, ‘நான் எந்த சினிமாக்காரர்களுடனும் போட்டோ எடுத்துக்கொள்ளவில்லை. இங்கே வந்திருக்கிற மேஜர் முகுந்த் குடும்பத்தினருடன் போட்டோ எடுத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்’ என்றுசொல்லி போட்டோ எடுத்துக்கொண்டார். தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, முரளி, காஸ்மோ சிவகுமார், நடிகர்கள் மனோபாலா, மயில்சாமி, கானா பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, அர்ஜுன் வரவேற்றார். ஐஸ்வர்யா அர்ஜுன் நன்றி கூறினார்

 

SHARE