மைசூரில் இன்று தொடக்கம் : 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசம் ஏ – கர்நாடகா மோதல்

279

மைசூர்: ரஞ்சி சாம்பியன் கர்நாடகா – வங்கதேசம் ஏ அணிகள் மோதும் 3 நாள் பயிற்சி ஆட்டம், மைசூரில் இன்று தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள வங்கதேசம் ஏ அணி, முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடியது. இதில் உன்முக்த் சந்த் தலைமையிலான இந்தியா ஏ அணி 2-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது. அடுத்து இந்தியா ஏ – வங்கதேசம் ஏ மோதும் டெஸ்ட் போட்டி (3 நாள்), பெங்களூர் எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் வரும் 27-29 தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த போட்டிக்கு பயிற்சி பெறும் வகையில், வங்கதேசம் ஏ அணி ரஞ்சி சாம்பியன் கர்நாடகா அணியுடன் 3 நாள் ஆட்டத்தில் மோதுகிறது. மைசூரில் நடைபெறும் இந்த போட்டி காலை 10.00 மணிக்கு தொடங்குகிறது. வினய் குமார் தலைமையிலான கர்நாடகா அணியில் லோகேஷ் ராகுல், ராபின் உத்தப்பா, மணிஷ் பாண்டே, கருண் நாயர், அபிமன்யு மிதுன், ஷ்ரேயாஸ் கோபால், நாத் அரவிந்த் போன்ற திறமையான வீரர்கள் இடம் பெற்றுள்ளதால், வங்கதேசம் ஏ அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது. தென் ஆப்ரிக்காவுடன் டி20 தொடரில் மோதவுள்ள இந்திய அணியில் நாத் அரவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளது

SHARE