இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அண்மையில் கலந்து கொண்ட சுதந்திரக் கட்சியின் அம்பாந்தோட்டை மாவட்ட பிரதிநிதிகளுடனான கூட்டத்திற்கு வருகை தந்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மெய்ப்பாதுகாவலரான இராணுவ கோப்ரலிடம் அனுமதியற்ற கைத்துப்பாக்கியொன்று இருந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அங்குணுகொலபெலஸ்ஸ என்ற இடத்தில் கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் பங்கு பற்றிய ஜனாதிபதி மைத்ரிபாலவிற்கு அருகில் இராணுவ கோப்ரல் அனுமதியின்றி ஆயுதத்துடன் நடமாடிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்த பல உண்மைகள் இன்று கொழும்பில் பிரசுரமாகிய வாராந்தப் பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளதால், கொழும்பு அரசியலில் மாத்திரமன்றி மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கூட்டத்தில் கலந்து கொண்ட மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் வந்திருந்த இராணுவ கோப்ரலின் இடுப்பில் கைத்துப்பாக்கியொன்று இருந்ததை அன்றைய தினம் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பொலிஸ் அதிகாரிகள் குற்றப்புலனாய்வு பிரிவினர் நடத்திவரும் விசாரணைகளின் போது உறுதிப்படுத்தி உள்ளனர்.
ஜனாதிபதி உட்பட விசேட பிரபுக்களின் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய பாதுகாப்புக்கு பொறுப்பான படை அதிகாரிகள் தவிர்ந்த வெளியில் இருந்துவரும் எந்தவொரு பாதுகாப்பு அதிகாரியும் ஆயுதங்களுடன் நடமாட முடியாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மெய்ப்பாதுகாவலராக நீண்டகாலமாக கடமையாற்றிவரும் சம்பந்தப்பட்ட இராணுவ கோப்ரல் இந்த நடைமுறையை அறியாதவராக இருப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் அதனால் அந்த இராணுவ அதிகாரியின் ஆயுதத்துடனான பிரசன்னம் தொடர்பில் அரசாங்க தரப்பினர் மாத்திரமன்றி பாதுகாப்பு படைப்பிரிவுகளும் சந்தேகம் தெரிவித்துள்ளன.
25 ஆம் திகதி கூட்டம் நடைபெற்ற மண்டபத்திற்கு வந்த கட்சிப் பிரதிநிதிகள் மூன்று வாயில்கள் ஊடாக பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சோதனை நடந்து கொண்டிருந்த போது அன்றைய தினம் முற்பகல் 10.30 அளவில் நாமல் ராஜபக்ச மண்டபத்திற்கு வந்துள்ளார்.
இதற்கமைய பாதுகாப்பு சோதனைகள் முடிந்து நாமல் ராஜபக்ச சோதனைக் கடவையை கடந்த போது அவருடன் வந்திருந்த அங்கு பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பல்வலகேயை கண்டு அவருடன் கதைத்துள்ளார்.
பொலிஸ் அதிகாரி மல்வலகே மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போதும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றியவர் என்பதால் நாமல் ராஜபக்சவிற்கு மல்வலகேயுடன் நல்ல அறிமுகம் இருந்துள்ளது. இதற்கமையவே அவருடன் நாமல் அளவளாவியுள்ளார்.
இதன்போது அங்கு வந்த இராணுவ கோப்ரல் சேனக்க குமாரவை காண்பித்து அவரையும் உள்ளே அனுமதிக்குமாறு நாமல் ராஜபக்ச ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு கூறியுள்ளார்.
அப்போது மல்வலகே, கோப்ரலை பார்த்து ஆயுதம் ஏதும் இருக்கின்றதா என்று கேட்ட போது அவர் அதற்கு தன்னிடம் எதுவும் இல்லை என்று கூற அவரை முறையான உடல் ரீதியான சோதனைக்கு உட்படுத்தாது உள்ளே செல்ல அனுமதித்துள்ளார். இதனையடுத்து இராணுவ கோப்ரல் மண்டபத்திற்குள் சென்றுள்ளார். இதன்போது இராணுவ கோப்ரலின் காற்சாட்டை பை வித்தியாசமாக இருந்ததை கண்ட அதிரடிப்படை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனது மேலதிகாரியான அதிகாரியிடம் அது குறித்து முறையிட்டுள்ளார்.
இதனையடுத்து இந்த இராணுவ கோப்ரல் குறித்து விசாரிக்க முற்பட்ட போது அந்த இராணுவ கோப்ரல் தான் இராணுவ அதிகாரி என்றும் நாமல் ராஜபக்சவின் பாதுகாவலர் என்றும் கூறியுள்ளார்.
அப்போது விசேட அதிரடிப்படை அதிகாரி இராணுவ கோப்ரலின் மேலாடையை பிடித்து உயர்த்திய போது அவரது காற்சாட்டை பையில் துப்பாக்கி இருந்ததை கண்டுள்ளார். இதனை தாங்களும் கண்டதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நடத்திவரும் விசாரணைகளின் போது அதிரடிப்படை அதிகாரிகள் இருவர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதேவேளை இராணுவ கோப்ரலிடம் கைத்துப்பாக்கி இருப்பது குறித்து ஜனாதிபதி பாதுகாப்புப் படைப்பிரிவின் உயர் அதிகாரி நிஸ்ஸங்கவிடம் அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் முறையிட்டுள்ள போதிலும் எந்தவித விசாரணைகளும் நடத்தாது அவரை வெளியே செல்ல அவர் அனுமதித்துள்ளார்.
இதனையடுத்து ஏப்ரல் 27 ஆம் திகதி இராணுவ கோப்ரல் சேனக்க குமாரவும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும், குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் தாமகாவே வந்து வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளனர்.
இதன்போது இராணுவ கோப்ரல் சம்பவ தினம் தனது உத்தியோகபூர்வ கைத்துப்பாக்கி வாகனத்திலேயே வைத்துவிட்டு சென்றதாக சாட்சியமளித்துள்ளார். இதனை நாமல் ராஜபக்சவின் சாரதியும் உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும் மண்டபத்தில் கடமையாற்றிய அதிரடிப்படை பொலிஸ் அதிகாரிகள் மூன்று பேர் இராணுவ கோப்ரலிடம் கைத்துப்பாக்கியொன்று இருந்ததாக அடித்துக் கூறுகின்றனர். இதனையடுத்தே அனுமதியற்ற கைத்துப்பாக்கியொன்றை வைத்திருந்த குற்றத்திற்காக இராணுவ கோப்ரல் சேனக்கவை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்து தடுத்துவைத்துள்ளனர்.
அதேவேளை இராணுவ கோப்ரல் குற்றமிழைத்திருக்கா விட்டால் எதற்காக நாமல் ராஜபக்சவிடம் அறிவிக்காமலேயே அவச அவசரமாக வெறியேறிச் செல்ல வேண்டும் என்றும் சந்தேகம் எழுந்துள்ளால் அது குறித்தும் தற்போது விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதேவேளை தனது பாதுகாப்பு அதிகாரியொருவை நாமல் ராஜபக்சவுடன் அனுப்பிவைத்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் அறிக்கையொன்றை விடுத்து அறிவித்துள்ளார்.
இந்த நிலையிலேயே இராணுவ கோப்ரல் சேனக்க ஜனாதிபதி மைத்ரிபால கலந்துகொண்ட கூட்டத்திற்கு எதற்காக கைத்துப்பாக்கியுடன் நுழைந்தார் என்றும் ஜனாதிபதியை கொலை செய்யும் சதித்திட்டம் இருந்திருக்குமா என்றும் சந்தேகம் எழுந்துள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளதுடன் அதன் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிவித்துள்ளது.