மோடி பிரதமர் ஆவதை தடுக்க 3–வது அணிக்கு காங்கிரஸ் ஆதரவை அளிக்கும் பிரகாஷ் கரத் நம்பிக்கை

779

தேர்தலுக்கு பின்பு மோடி பிரதமர் ஆவதை தடுக்க 3–வது அணிக்கு காங்கிரஸ் ஆதரவை அளிக்கும் என்று மார்க்சிஸ்ட் தலைவர் பிரகாஷ் கரத் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத் நேற்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

காங்கிரஸ் ஆதரவு தரும்

தேர்தலுக்கு பின்பு 3–வது அணியின் தலைமையிலான மதசார்பற்ற அரசு அமையும் சூழ்நிலை உருவானால் அப்போது காங்கிரஸ் முக்கிய பங்காற்றும் சூழ்நிலை ஏற்படும். மத்தியில் பா.ஜனதா அரசு அமைவதை காங்கிரஸ் விரும்பாது. அதனால் மதசார்பற்ற மாற்று அரசை அமைப்பதில் காங்கிரஸ் தனது பங்களிப்பை தரவேண்டிய நிலை வரும்.

எனவே, 1966–ம் ஆண்டு தேவேகவுடாவின் ஆட்சிக்கு வெளியில் இருந்து காங்கிரஸ் ஆதரவு கொடுத்ததுபோல் இப்போதும் தரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

மோடி அலை இல்லை

காங்கிரசும், பா.ஜனதாவும் பலமாக உள்ள மாநிலங்களில் காங்கிரசுக்கு எதிரான மனோநிலை பா.ஜனதாவுக்கு ஆதரவாக அமையலாம். எனினும் மோடி அலை என்றும் எதுவும் நாட்டில் வீசவில்லை.

பல மாநிலங்களில் பிராந்திய கட்சிகள் வலுவாக இருக்கின்றன. இவை பா.ஜனதா ஆட்சி அமைக்க ஆதரவு தராது.

தேர்தலுக்கு பிறகு முடிவுக்கு வருவோம்

இது தொடர்பாக தேர்தலுக்கு முன்பே இடதுசாரிகள் 6–7 மாநில கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளது. தேர்தலின்போது நாம் காங்கிரசையும், பா.ஜனதாவையும் எதிர்ப்போம். தேர்தலுக்கு பின்பு ஒன்றுகூடி ஒரு முடிவுக்கு வருவோம் என்று அப்போது பேசப்பட்டுள்ளது.

2004–ம் ஆண்டு இடதுசாரிகள் 64 தொகுதிகளில் வெற்றி பெற்றதை போலவே இப்போதும் பெறும் என்று நம்புகிறோம். மேற்கு வங்காளத்தை பொறுத்தவரை தேர்தல் தில்லு முல்லு என்னும் தடையை தாண்டி வருவதுதான் எங்களுக்கு முன்பாக உள்ள பிரச்சினையாக இருக்கிறது.

மதசார்பற்ற அணியில் ஜெயலலிதா

பல்வேறு மாநில கட்சிகள் தங்களது மாநிலங்களில் வலிமையாக இருப்பதால் அந்த கட்சிகள் எங்களுடன் கூட்டணி அமைத்துக்கொள்ளவில்லை.

தமிழ்நாட்டை பொறுத்தவரை பலமுனை போட்டி தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கருதி அ.தி.மு.க. தனித்து போட்டியிட முடிவு செய்து இருக்கலாம். எனினும் கூட்டணியை முறித்துக்கொண்டதற்கான எந்த விளக்கத்தையும் அவர்களிடமிருந்து நாங்கள் கேட்கவில்லை.

தேர்தலுக்கு பிறகு மதசார்பற்ற கட்சிகளுடன் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இருப்பார் என்றே நம்புகிறேன்.

ஏனெனில், இந்த தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் தங்களது அதிகப்பட்ச வெற்றியை பெறவேண்டும். அதன் பிறகு ஒட்டுமொத்தமாக நமது பலத்தை காட்டுவோம் என்பது புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

SHARE