யாழ் தாச்சி சுற்றுப் போட்டிகள்: தாவடி காளியம்பாள் விளையாட்டு கழகம் சம்பியனாக தெரிவு

352
இலங்கையில் தமிழ் மக்களின் திருநாளான ஆடிப் பிறப்பை முன்னிட்டு நடத்திய தாச்சி சுற்றுப் போட்டியில் தாவடி காளியம்பாள் விளையாட்டு கழகம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.வட மாகாண கல்வி பண்பாட்டு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத் தினைக்களத்தின் ஆதரவுடன் யாழ் மாவட்ட தாச்சி விளையாட்டுக் கழகங்களுக்கு இடையே இப்போட்டிகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கோண்டாவில் மறுமலர்ச்சி விளையாட்டுக் கழக மைதானத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தாவடி காளியம்பாள் விளையாட்டுக் கழகமும் உடுவில் ஆலடி சிந்து விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டன.

இரு அணிகளும் பலம் பொருந்திய அணிகளாக இருந்த போதிலும் முதற் பாதி ஆட்டத்தில தாவடி காளியம்பாள் விளையாட்டுக் கழகம் அதிரடியாக விளையாடி ஐந்து பழங்களை பெற்றுக் கொண்ட போதிலும் சிந்து விளையாட்டுக் கழகத்தினால் பழம் பெற எடுத்த முயற்சிகள் கைகூடாத நிலையில் ஆட்டம் முடிவடைந்தது.

இரண்டாம் பாதி ஆட்டத்திலும் காளியம்பாள் விளையாட்டுக் கழகம் அதிரடியாக விளையாட எத்தனித்த போதிலும் முதற் பாதி ஆட்டம் போன்று பழம் பெற முடியாதவாறு சிந்து விளையாட்டுக் கழகம் மறித்த நிலையில் தாவடி காளியம்பாள் விளையாட்டுக் கழகம் 02 க்கு 01 என்ற முன்னிலைப் பழ அடிப்படையில் போட்டி முடிவடைந்தது.

ஆட்ட நிறைவில் தாவடி காளியம்பாள் விளையாட்டுக் கழகம் 07 க்கு 01 பழம் என்ற அடிப்படையில் சிந்து விளையாட்டுக் கழகத்தை வெற்றி பெற்று 2015 ம் ஆண்டுக்கான சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

காளியம்பாள் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த எஸ்.ஜசிந்தன் போட்டியின் ஆட்டநாயகனாகவும் சிறந்த தாச்சியாக பொ.கமலநாதனும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

வட மாகாண கல்வி விளையாட்டுத் தினைக்களம் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்திய போட்டிகளில் காளியம்பாள் விளையாட்டுக் கழகம் தொடர்ந்து சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை சுட்டிக் காட்டக் கூடியதாகும்.

போட்டியில வெற்றி பெற்ற அணிகளுக்கு முறையே வட மாகாண கல்வி பண்பாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் த.குருகுலராசாவும் மற்றும் வட மாகாண சபை உறுப்பினரும் விளையாட்டுக் கழகங்களின் இனைப்பாளருமான இ.ஆனால்ட் ஆகியவாகள் வெற்றிக் கிண்ணங்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE