வெலிக்கடைச் சிறைச்சாலையில் 25.7.1983 அன்று பி-3 பிரிவில் இருந்த 6 பேரும் டி-3 பிரிவில் இருந்த 29 பேரும் பலியெடுக்கப்பட்டனர்.

623

1966745717Welikada-Prison

வெலிக்கடைச் சிறைச்சாலையில் 25.7.1983 அன்று 

 அதேவேளை சி-3 பிரிவில் இருந்த ஈழப் போராளிகளையும் அன்றே கொல்வதற்கு இனவெறிக் கூட்டம் ஓடிவந்து இரும்புக் கதவுகளை உடைத்தபோது அங்கு வந்த சில சிறை உயர் அதிகாரிகள், “”இன்று இவ்வளவு போதும் சென்று ஓய்வெடுங்கள் வீரர்களே! உங்களுக்கு ஒன்றும் நடக்காது” என்று கூறியபோது, அக்கும்பலின் வெறி தற்காலிகமாகத் தணிந்தது.
603549_4396656197233_1041698071_n

25.7.1983 அன்று வெலிக்கடைச் சிறைச்சாலையின் பி-3 பிரிவில் இருந்த 6 பேரும் டி-3 பிரிவில் இருந்த 29 பேரும் பலியெடுக்கப்பட்டனர். அதாவது அன்று இரண்டு பிரிவுகளிலும் இருந்த ஒருவரும் தப்பாது மொத்தம் 35 பேர் கொல்லப்பட்டனர். அன்று இரவு இப்படுகொலைகளை வழிநடத்திய சிறைக் கைதிகளுக்கு மதுவும் சுவையுணவும் தாராளமாகப் பரிமாறப்பட்டன. இப்படுகொலைகள் நடைபெற்ற மறுநாள் 26.7.1983 அன்று மாலை விசாரணை என்ற நாடகத்தை நடத்துவதற்குப் போலீஸôரும், நீதிபதியும், அரசாங்க உயர் அதிகாரிகளும் வந்து கொலைக்களத்தைச் சென்று பார்வையிட்டார்கள்.

சி-3 பிரிவில் இருந்த தமிழ் இளைஞர்களிடம் நடந்த சம்பவங்களை விசாரித்தார்கள். “”இனிமேல் நேற்று நடந்த மாதிரி ஒன்றும் நடக்கமாட்டாது” என்று நீதிபதி, சிறை உயர் போலீஸ் அதிகாரிகள் எல்லாரும் கூடிப் பேசினார்கள். தேநீர் விருந்துடன் அன்றைய விசாரணை முடிவடைந்தது. வந்த அரசாங்க அதிகாரிகள் திருப்தியுடன் சென்றுவிட்டார்கள்.

நீதிபதி வருவதற்கு முன்பு சிறை அதிகாரிகள் அங்கே மிஞ்சியிருந்த தமிழ்க் கைதிகளை நீதிபதியிடம் ஒன்றும் கூறவேண்டாம் என்று மிரட்டினார்கள். எஞ்சியிருந்த தமிழ் இளைஞர்கள் சிறை அதிகாரிகளின் பயமுறுத்தலுக்கு அஞ்சாது படுகொலையில் சம்பந்தப்பட்ட சிங்களக் கைதிகளில் சிலரை அடையாளம் காட்ட முடியும் என்று விசாரணையின்போது தெரிவித்தனர்.

ஆனால் நீதிபதியோ, அதிகாரிகளோ இது விஷயமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெலிக்கடைச் சம்பவத்தின்போது உயிர் தப்பிய தமிழ்க் கைதிகள் கொலைகாரர்களிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வெலிக்கடையிலிருந்து வேறொரு இடத்துக்கு மாற்றும்படி விடுத்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.

26.7.83 அன்று இரவு வானொலியில் முதலில் கொல்லப்பட்ட போராளிகளின் பெயர் விவரம் அறிவிக்கப்பட்டபோது சிங்களக் கைதிகள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சி கொண்டாடினர்.

வெலிக்கடையிலிருந்து தம்மை வேறு பாதுகாப்பான இடத்துக்கு மாற்றும்படி தமிழ் அரசியல் கைதிகள் விடுத்த கோரிக்கையை நிறைவேற்றாத அதிகாரிகள் ஒரு கண்துடைப்பு நடவடிக்கையை எடுத்தனர். 26-ஆம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு சப்பல் கட்டடத்தின் சி-3 பிரிவில் இருந்த எஞ்சிய தமிழ்க் கைதிகள் 28 பேரையும் ஒய்.ஓ. (வர்ன்ற்ட்ச்ன்ப் ஞச்ச்ங்ய்க்ங்ழ்ள்) கட்டடத்திற்கு மாற்றினார்கள்.

இக் கட்டடம் சப்பல் கட்டடத்திற்கு அருகாமையில் புத்த விகாரைக்குப் பின்னால் சிறைச்சாலையின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. ஒய்.ஓ. கட்டடம் மேல்மாடி ஒன்றைக் கொண்டுள்ளது. மேல்தளம் மண்டப வடிவில் அமைந்துள்ளது. கீழ்த்தளம் பாதுகாப்பான இரும்புக் கதவுகளுடன் கூடிய 9 அறைகளைக் கொண்டுள்ளது.

ஒய்.ஓ. கட்டடத்தில் ஏற்கெனவே 9 தமிழ் அரசியல் கைதிகள் வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் ஒன்பது பேரும் மேல் தட்டிற்கு மாற்றப்பட்டார்கள். மதகுருமார்கள் சிங்கராயர், சின்னராசா, ஜெயகுலராஜா, டாக்டர் ஜெயதிலகராஜா, விரிவுரையாளர் நித்தியானந்தன், காந்தீய தலைவர் எஸ்.ஏ. டேவிட், காந்தீய அமைப்புச் செயலாளர் டாக்டர் ராஜசுந்தரம், சுதந்திரன் ஆசிரியர் கோவை மகேசன், தமிழீழ விடுதலை அணித் தலைவர் டாக்டர் தர்மலிங்கம் ஆகியோர் மேல்தளத்தில் இருந்தார்கள். கீழ்த்தளத்தில் 8 அறைகளில் மும்மூன்று பேரும் ஓர் அறையில் நான்கு பேருமாக 28 தமிழ்க் கைதிகள் மாற்றப்பட்டனர்.

27.7.1983 அன்று பிற்பகல் 4 மணிக்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு நேரத்தையே சிறை அதிகாரிகள் இரண்டாவது கொலைத் தாக்குதலுக்கும் தெரிந்தெடுத்தனர். ஊரடங்குச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு இருப்பதால் இப்படுகொலைச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எந்தவொரு கைதியும் சிறையை விட்டுத் தப்பிச் செல்லும் எவரும் சுட்டுக் கொல்லப்படலாம், அல்லது கைது செய்யப்படலாம். ஊரடங்கு நேரத்தில் மரணத்திற்குப் பயந்து கைதிகள் தப்பிச்செல்ல முயற்சிக்கமாட்டார்கள் என்பது சதிகாரச் சிறை அதிகாரிகளுக்குத் தெரிந்திருந்தது.

xwelikadai_51

இரண்டாவது நாள் படுகொலைத் திட்டத்தைக் கச்சிதமாக முழுமையாக நிறைவேற்றினார்கள். சிறைக் காவலர்கள் பயங்கரமான பொய் வதந்தி ஒன்றைக் கைதிகள் மத்தியில் பரப்பினர். யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் இருந்த சிங்களச் சிறை அதிகாரிகளும் கைதிகளும் தமிழ்க் கைதிகளினால் கொல்லப்பட்டுவிட்டனர் என்ற வதந்தி மூலம் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றப்பட்டது.

27.7.1983 அன்று மாலை 4.00 மணிக்கும் 4.30 மணிக்கும் இடைப்பட்ட நேரம். சப்பல் பகுதியில் ஏ-3 விசேஷ பிரிவில் இருந்த விசாரணைக் கைதிகளும் (சிங்களவர்) தண்டிக்கப்பட்ட கைதிகளும் (இத்தாலிய விமானமொன்றை பிணைப் பணம் கேட்டு கடத்தியதற்காகத் தண்டிக்கப்பட்ட சேபால ஏக்க நாயக்கா உட்பட) கத்தி, கோடாரி, பொல்லு, விறகு கட்டை, கம்பி, குத்தூசி போன்ற ஆயுதங்களுடன் பெரும் கூச்சல் போட்டுக் கொண்டு கொலை வெறியுடன் ஒய்.ஓ. கட்டடத்தை நோக்கி ஓடிவந்தார்கள்.

ஏ-3 பிரிவில் இருந்த இக்கைதிகள் ஒய்.ஓ. கட்டடத்திற்கு வரவேண்டுமானால் பூட்டிய பெரும் இரும்புக் கதவுகள் மூன்றையும் பூட்டிய சிறிய இரும்புக் கதவொன்றையும் உடைத்தும் சுவரொன்றை ஏறியுமே உள்வர முடியும். ஆனால் கைதிகள் இக்கதவுகளை உடைக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அக்கதவுகள் யாவும் அவர்களுக்காகத் திறந்து விடப்பட்டிருந்தன.

சுதந்திரமாக விடப்பட்ட முதல் நாள் சிங்களக் கொலைகாரர்களும் இவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். தாக்க வந்தவர்கள் தமது கைகளில் சாவிக்கொத்தை வைத்திருந்தார்கள். சில கதவுகள் உடைக்கப்பட்டன; சில கதவுகள் சாவிகளினால் திறக்கப்பட்டன. மீண்டும் தமிழ் இளைஞர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டு ரத்த ஆறு ஓடியது.

முதல்நாள் படுகொலையின் பின்னர் எஞ்சிய தமிழ் இளைஞர்கள் எச்சரிக்கையுடன் இருந்தனர். சாவதற்கு முன் எதிர்த்துப் போராடுவதற்குத் தீர்மானித்துவிட்டனர். ஆயுதத் தாங்கிய கும்பலை எதிர்ப்பதற்கு அவர்கள் கையில் எந்தவிதக் கருவிகளும் இல்லை. போர்வையைக் கதவுக் கம்பிகளுக்குள் விட்டு, கதவைத் திறக்காதபடி போர்வையை உள்ளுக்குள் இருந்து இழுத்துப் பிடித்தனர். சிறை அறையில் பாத்திரங்களுக்குள் இருந்து சிறுநீரையும் சாப்பிடக் கொடுக்கப்பட்ட காரமான குழம்பையும் இடையிடையே கொலைகாரர்கள் மீது ஊற்றினார்கள். கொலை வெறியர்கள் கதவுக்கு அருகில் நெருங்கும்போது சாப்பாட்டுக் கோப்பைகளினால் குத்தப்பட்டார்கள்.

சிங்களக் கைதிகள் வெளியிலிருந்து நீண்ட தடிகளினாலும் கம்பிகளினாலும் குத்தினார்கள். தமிழ்ப் போராளிகள் பலருக்குக் காயம் ஏற்பட்டது. தமிழ்க் கைதிகள் போர்வையால் கதவை இழுத்துப் பிடித்தபோது சிங்களக் காடையர் போர்வைகளைக் கோடாரிகளினால் கொத்தினார்கள். இப்படியே சிறிது நேரம் போராட்டம் நீடித்தது. இதேசமயம் மேல்மாடியிலிருந்த தமிழ்க் கைதிகள் தம்மைப் பாதுகாக்கத் தயாரானார்கள்.

welikkadai-1

மத குருமார்களுக்குப் பூசை செய்ய மேஜை ஒன்று கொடுக்கப்பட்டு இருந்தது. மேல் மாடிக்குச் சுமார் 50 சிங்களக் கைதிகள் வருவதைக் கண்டதும் அவர்கள் மேசைக் கால்களை உடைத்துக் கையிலெடுத்துக் கொண்டனர். 75 வயது நிரம்பிய டாக்டர் தர்மலிங்கத்தின் கையில் கூட ஒரு மேசைக் கால் இருந்தது. “”நாங்கள் நாய் போலச் சாகக்கூடாது” என்று டாக்டர் தர்மலிங்கம் வீரமூட்டினார். சிங்களக் கைதிகள் அறைக்கதவை ஒரே அடியில் உடைத்து விட்டனர்.

டாக்டர் ராஜசுந்தரம் கதவருகே சென்று சிங்களத்தில் “”நாங்கள் சகோதரர்கள். உங்களுக்கும் எங்களுக்கும் என்ன பிரச்னை? எங்களை ஏன் கொல்ல வருகிறீர்கள்?” என்று கூறியபொழுது அவர் வெளியே இழுக்கப்பட்டார். தலையில் பலமான ஒரு அடி. டாக்டர் ராஜசுந்தரத்தின் தலை பிளந்து ரத்தம் ஆறாக ஓடியது. அத்துடன் பல உயிர்களைக் காப்பாற்றிய உயிர் பிரிந்தது.

இடையிடையே மேலேயிருந்த தமிழ்ப் போராளிகள் கதவுக் கம்பியில் ஓங்கி அடித்துச் சத்தமெழுப்பியபோது, சிங்களக் கைதிகள் பின்வாங்கினார்கள். உண்மையில் அவர்கள் கோழைகள். வெளியிலிருந்த சிங்களக் கைதிகள் கம்பிகளினாலும், தடிகளினாலும் குத்தினார்கள். வெளியிலிருந்து கைதிகள் எறிந்த கம்பி ஒன்று தமிழ்ப் போராளிகள் வசம் கிடைத்தது. நீண்ட நேரமாக ஜீவமரணப் போராட்டம்.

இக்கொலை வெறிச் சம்பவங்கள் நடந்த அதே நேரத்தில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குப் பின்னால் அமைந்த கொழும்பு விசாரணைக் கைதிகளுக்கான சிறைச்சாலையிலிருந்து கைதிகள் சிறைப் பூட்டுகளை உடைத்துத் தப்பி ஓட முயற்சித்தபோதுதான் சிறைச்சாலை நிர்வாகம் உஷாரானது. சிங்களக் கைதிகள் ஆயுதங்களைத் தங்கள் மீதே திருப்பித் தப்பி ஓட முயற்சிக்கலாம் எனப் பயந்த நிர்வாகம் கைதிகளை அமைதிப்படுத்தத் தொடங்கியது.

தாக்குதல் தொடங்கி சுமார் 45 நிமிடங்களுக்குப் பின்தான் ராணுவ அதிரடிப் படையினர் உள்ளே வந்து கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்தனர். கட்டடத்திற்கு வெளியேயிருந்த சிங்களக் கைதிகள் “”கொட்டியாவ மறண்ட ஓன” “”கொட்டியாவ மறண்ட ஓன” (புலிகளைக் கொல்ல வேண்டும், புலிகளைக் கொல்ல வேண்டும்) என வெறிக்கூச்சல் எழுப்பினர். அன்று ஓர் இஸ்லாமியரால் வழிநடத்தப்பட்ட அதிரடிப் படை ஓரளவு நியாயத்துடன் நடந்து கொண்டது.

மாறாக முதல்நாள் தாக்குதலின்போது ஆயுதப் படையினர் படுகொலைக்கு உற்சாகமூட்டினர். இதில் ஒரு சிங்களக் கமாண்டரே வழி நடத்தினார்.

திட்டமிட்டு நிறைவேற்றிய சதி!

ராணுவத்தினரின் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தைத் தொடர்ந்து சிங்களக் கைதிகள் கலைந்தனர். மேல் மாடியில் ஐந்து சிங்களக் கைதிகள் கண்ணீர்ப் புகையைச் சகிக்க மாட்டாது தமிழ்ப் போராளிகள் வசம் அகப்பட்டபோது தமிழ்ப் போராளிகள் சிங்களக் கைதிகளுக்கு உயிர்ப்பிச்சை அளித்தனர். சிங்களக் கைதிகள் கலைந்தவுடன் தமிழ்க் கைதிகள் விழுந்துகிடந்த தமது தோழர்களை அணுகியபோது படுகாயமுற்ற பலரின் உயிர்கள் பிரிந்துவிட்டன.

படுகாயமுற்ற சிலரின் உயிர்கள் ஊசலாடிக் கொண்டிருந்தன. உயிர்கள் ஊசலாடிக் கொண்டிருந்தோரை சிறை அலுவலர்கள் தாக்கிக் கொண்டிருந்தனர்.

படுகாயங்களுடன் யோகராசா என்ற தமிழப் போராளி கொழும்புப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அங்கிருந்த சிங்கள வைத்தியர்கள் சிகிச்சையளிக்க மறுத்துவிட்டனர். அங்கிருந்த சிங்களத் தாதிகள் கேலி செய்தனர். இறுதியாகச் சிங்களப் பெண் டாக்டர் ஒருவர் யோகராசாவுக்குச் சிகிச்சையளித்து யோகராசாவுக்கு மறுபிறப்பு அளித்தார்.

27.7.1983 அன்று 18 தமிழ்ப் போராளிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். 19 பேர் தமது பயங்கர அனுபவங்களுடன் தப்பிப் பிழைத்தனர்.

வெலிக்கடையில் கொல்லப்பட்ட ஈழப் போராளிகளின் உடல்களை அவர்களது பெற்றோர், மனைவி, மக்கள், உறவினர், நண்பர்கள் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. ஈழப் போராளிகளின் உடல்கள் அவர்களது விருப்பத்திற்கு மாறாகச் சிங்கள மண்ணில் சங்கமமானது. சிங்களப் பாசிசச் சட்டத்தின் கீழ்க் கொல்லப்படும் எந்த நபரினது உடலையும் மரண விசாரணையின்றித் தகனம் செய்யவோ, அடக்கம் செய்யவோ முடியும். இதன்மூலம் ஆயுதப்படையினர் கேட்பாரின்றித் தமிழர்களைக் கொலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

தமது பாதுகாப்பிலிருந்த சிறைக்கைதிகளின் கொலைகளுக்கு அரசு முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும். ஒரு கம்பித்துண்டைச் சிறைக் கைதிகள் வைத்திருப்பதையே மிகவும் பாரதூரமான குற்றம் எனக் கருதும் சிறைச்சாலை நிர்வாகம் பயங்கரமானதும் கொல்லக்கூடியதுமான ஆயுதங்களைச் சிங்களக் கைதிகள் வைத்திருக்க அனுமதித்தது ஏன்?

தாக்குதல் தொடங்கியவுடன் சிறை அதிகாரிகளோ அருகிலிருந்த ராணுவத்தினரோ சிங்களக் கைதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது உற்சாகமூட்டியது ஏன்? 23-ஆம் தேதி படுகொலைகளைத் தொடர்ந்து சட்ட அமைச்சகம் நீதி விசாரணை நடைபெறும் என அறிவித்தது. ஆனால் எந்தவிதப் பாதுகாப்பும் கொடுக்கப்படாததால், முதல் நாள் கொலையிலிருந்து தப்பிய தமிழ்க் கைதிகள் 27-ஆம் தேதி கொலை செய்யப்பட அனுமதிக்கப்பட்டார்கள். “”இலங்கையிலேயே மிகப்பெரிய சிறைச்சாலை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையாகும். கண்டி போகம்பர சிறைச்சாலையைவிடப் பன்மடங்கு பிரம்மாண்டமானதும், சிறந்த பாதுகாப்பும் கொண்டது. இதன் வாசலில் சிறைச்சாலை கண்காணிப்பாளர் அலுவலக வீடு உள்ளது. சிறைச்சாலையின் வெளிவாசலுக்கு வலது பக்கம் பெண்கள் சிறையுண்டு. அதற்கு முன்பக்கத்தில் சிறைச்சாலை கமிஷன் அலுவலகம் உண்டு. அதன் பின்பக்கத்தில் கொழும்பு விசாரணைக் கைதிகளின் சிறைச்சாலை.

வெலிக்கடை சிறைச்சாலையின் இடது பக்கமாகச் செல்லும் சிறிய தெருவில் ஓரங்களில் சிறை உத்தியோகஸ்தர்கள், காவலர்களின் வீடுகள் உள்ளன. இவைகளுடன் சிறைச்சாலை வாசலில் ராணுவப் பாதுகாப்பும் இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமைந்திருக்கும் ஒரு சிறைக்குள் இவ்வளவு பெரிய கொலைகள் நடந்தது என்றால், இது அரசின் ஆசீர்வாதத்துடன், உயர் அதிகாரிகளின் ஆதரவுடன் நடந்த கொலைகள்தான் என்பது பெரியதொரு புதிரில்லை” என்கிறார் ஈ.பி.ஆர்.எல்.எஃப் போராளியான புஷ்பராஜா, ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்கிற அவரது நூலில் (பக்.371-372).

வெலிக்கடைக் கொலைச் சம்பவங்களுக்கு முந்தைய சில நாட்களில் “”தீவ்யன” போன்ற சிங்களப் பத்திரிகைகளில் தமிழ்க் கைதிகள் சிறைச்சாலைகளில் விசேஷமாகக் கவனிக்கப்படுகிறார்கள் என்று பொய்ச் செய்திகள் வெளியிடப்பட்டதன் மூலமும் தமிழ்க் கைதிகளுக்கு எதிராகத் துவேஷம் சிங்களக் கைதிகள் மத்தியில் வளர்க்கப்பட்டது.

வெலிக்கடைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட எந்தவொரு சிங்களக் கைதிக்கு எதிராகவோ சிறைச்சாலை அதிகாரிக்கு எதிராகவோ இன்றுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இவையெல்லாம், வெலிக்கடைப் படுகொலைகள் முன்னரே திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்ட சதி என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சுட்டிக்காட்டுகின்றன.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு:

தங்கதுரை என்று அழைக்கப்படும் நடராசா தங்கவேல்,
குட்டிமணி என்று அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன், ஜெகன் என்று அழைக்கப்படும் கணேஷானந்தன் ஜெகநாதன்,
தேவன் என்று அழைக்கப்படும் செல்லதுரை சிவசுப்பிரமணியம், சிவபாதம் மாஸ்டர் என்று அழைக்கப்படும் நவரத்தினம் சிவபாதம், செனட்டர் என்று அழைக்கப்படும் வைத்திலிங்கம் நடேசுதாசன், அருமைநாயகம் என்றும் சின்னராஜா என்றும் அழைக்கப்படும் செல்லதுரை ஜெயரெத்தினம்,
அன்ரன் என்று அழைக்கப்படும் சிவநாயகம் அன்பழகன்,
ராசன் என்று அழைக்கப்படும் அரியபுத்திரன் பாலசுப்பிரமணியம், சுரேஷ் மாஸ்டர் என்று அழைக்கப்படும் காசிப் பிள்ளை சுரேஷ்குமார், சின்னதுரை அருந்தவராசா,
தேவன் என்றும் அரபாத் என்றும் அழைக்கப்படும் தனபாலசிங்கம் தேவகுமார்,
மயில்வாகனம் சின்னையா,
சித்திரவேல் சிவானந்தராஜா,
கணபதிப்பிள்ளை மயில்வாகனம்,
தம்பு கந்தையா,
சின்னப்பு உதயசீலன்,
கணேஷ் என்றும் கணேஷ்வரன் என்றும் அழைக்கப்படும் கதிரவேற்பிள்ளை ஈஸ்வரநாதன்,
கிருஷ்ணபிள்ளை நாகராஜா,
கணேஷ் என்று அழைக்கப்படும் கணபதி கணேசலிங்கம்,
அம்பலம் சுதாகரன், இராமலிங்கம் பாலச்சந்திரன்,
பசுபதி மகேந்திரன்,
கண்ணன் என்று அழைக்கப்படும் காசிநாதன் தில்லைநாதன்,
குலம் என்று அழைக்கப்படும் செல்லப்பா குலராஜசேகரம்,
மோகன் என்று அழைக்கப்படும் குமாரசாமி உதயகுமார்,
ராஜன் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகுமார்,
ராஜன் கோதண்டபிள்ளை தவராஜலிங்கம்,
கொழும்பான் என்று அழைக்கப்படும் கருப்பையா கிருஷ்ணகுமார், யோகன் என்று அழைக்கப்படும் ராஜயோகநாதன்,
அமுதன் என்றும் அவுடா என்றும் அழைக்கப்படும் ஞானசேகரன் அமிர்தலிங்கம்,
அந்தோணிப் பிள்ளை உதயகுமார், அழகராசா ராஜன்,
வேலுப்பிள்ளை சந்திரகுமார்,
சாந்தன் என்று அழைக்கப்படும் சிற்றம்பலம் சாந்தகுமார் முதலிய 35 பேர்.

இரண்டாம் நாள் படுகொலை செய்யப்பட்டோர் விவரம் வருமாறு:

1. தெய்வநாயகம் பாஸ்கரன்
2. பொன்னம்பலம் தேவகுமார்
3. பொன்னையா துரைராசா
4. குத்துக்குமார் ஸ்ரீகுமார்
5. அமிர்தநாயகம் பிலிப் குமாரகுலசிங்கம்
6. செல்லச்சாமி குமார்
7. கந்தசாமி சர்வேஸ்வரன்
8. அரியாம்பிள்ளை மரியாம்பிள்ளை
9. சிவபாலம் நீதிராஜா
10. ஞானமுத்து நவரத்தின சிங்கம்
11. கந்தையா ராஜேந்திரம்
12. டாக்டர் ராஜசுந்தரம்
13. சோமசுந்தரம் மனோரஞ்சன்
14. ஆறுமுகம் சேயோன்
15. தாமோதரம்பிள்ளை ஜெயமுகுந்தன்
16. சின்னதம்பி சிவசுப்பிரமணியம்
17. செல்லப்பா இராஜரட்னம்
18. குமாரசாமி கணேசலிங்கன்.

 ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதல்கள்!

1983 ஜனவரியில் இருந்தே தொடர்ந்து ராணுவ பயங்கரவாத நிலைமைகள் யாழ் பகுதியில் நிலவியது. ராணுவ ஆட்சி போன்ற மூர்க்கத்தனமான கொடுமையை இலங்கைத் தமிழர்கள் மீது ஜனநாயகத்தின் பேரால் அரசு நடத்தியது.

ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு இதன் உச்ச கட்டம் படிப்படியாக வளர்கிறது. வவுனியாவில் இருந்த, 1977-லிருந்து 1981 வரை நடந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகள் அனைவரையும் காந்தீயம் நிறுவனம் புனரமைப்புச் செய்திருந்தது. அதே இடத்தில் மீண்டும் ராணுவம் ஒரு தாக்குதலைத் தொடுக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான அகதிகள் பாதிக்கப்பட்டனர்.

மே மாதம் 18-ஆம் தேதி அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் வெளி உலகோடு துண்டிக்கப்பட்டுப் பத்திரிகைத் தணிக்கை அமல் படுத்தப்பட்டது.

ராணுவத்தினரின் அட்டகாசம் வெளி உலகிற்குத் தெரியாமல் இருக்கவே இப்பத்திரிகைத் தணிக்கை முறை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் ராணுவ மிருகங்கள் மூன்று தமிழ்ப் பெண்களைக் கடத்திச் சென்று கற்பழித்து எறிந்து விடுகிறார்கள். தமிழ் மக்கள் ஆவேசமடைகிறார்கள். ஆத்திரம் அடைந்த விடுதலைப் புலிகள் ராணுவத்தினருடன் மோதி ராணுவ டிரக்கை குண்டு வீசி அழிக்கிறார்கள். 13 ராணுவத்தினர் கொல்லப்படுகின்றனர். ராணுவம் மூர்க்கத்தனமான ஆத்திரத்துடன் வெறி பிடித்து அலைந்தனர்.

இறந்த ராணுவச் சடலங்கள் ஜூலை 24-ஆம் தேதி கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டன. ராணுவத்தினரின் கோபம் முதலில் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவுக்கு எதிராகத் திரும்பியது. அவருடைய கார் தாக்கப்பட்டது. மயானத்திற்குச் செல்லமுடியாமல் அவர் ராணுவத்தினரால் தடுக்கப்பட்டார். வெறி அடங்காத ராணுவத்தினர் சிங்களவர்களுடன் சேர்ந்துகொண்டு கலவரத்தில் இறங்கினர்.

முதலில் தமிழர் அதிகம் வசிக்கின்ற பதுளைப் பகுதியில் அட்டூழியங்கள் துவங்கின. பின் திம்பிரிகசாயாப் பகுதிக்குப் பரவியது. கண்ணில் படும் தமிழர்கள் அனைவரையும் சிங்களவர் தாக்கினர். பொருள்களைக் கொள்ளையடித்தனர். உடமைகளுக்குத் தீ வைத்தனர்.

இக்கலவர நெருப்பு, பின்னர் வெள்ளவத்தை, தெகிவளை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி போன்ற தமிழர் பகுதிகளுக்கும் பரவியது.

அரசால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அது வளர்ந்தது. இந்த நேரத்தில்தான் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலைகள் – நாகரிக மனிதச் சமூகம் இதுவரை கேள்விப்படாத வகையில் நடந்தன. இதைத் தொடர்ந்து இரு வார காலக் கலவரங்களின் போது கொழும்பில் மட்டுமே ஏறத்தாழ 2000 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

ஒரு லட்சம் மக்களுக்கு மேலானவர்கள் வீடிழந்தனர். அகதிகள் நிலைக்கு ஆளாகி “முகாம்’களில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களின் உடமைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. வியாபாரத் தொழில் நிறுவனங்கள் தகர்க்கப்பட்டன.

ராணுவத்தின் ஆதரவுடன் சிங்களக் குண்டர்கள் மேற்கொண்ட அட்டூழியம் கண்டி, நுவரேலியா, சந்தைப் பகுதி, மாத்தளை ஆகிய இடங்களுக்கும் பரவியது. அங்கும் வன்முறை வெறியாட்டங்கள் நடத்தப்பட்டன.

அனைத்துப் பிரதான சாலைப் போக்குவரத்துகளும், தமிழர்களை சோதனை இடுவதற்காகத் தடுத்து நிறுத்தப்பட்டன.

எல்லா இடங்களிலும் தமிழர்கள் ஊரடங்கு சட்டத்தின்போது வீடுகளுக்குள்ளேயே தங்கி இருந்தார்கள். ஊரடங்குச் சட்டம் நீடித்த நேரம் சிங்கள வெறிக் கூட்டத்திற்குச் சரியான வாய்ப்பாக இருந்தது.

அப்போதுதான் உச்சகட்டமாக அட்டூழியம் நிகழ்த்தப்பட்டது. திருகோணமலைப் பகுதி இருதடவை கடற்படை ராணுவத்தின் கொள்ளைக்கு ஆட்பட்டது.

அவர்கள் தங்கள் முகாம்களை விட்டு வெளியேறி அட்டூழியத்தில் இறங்கினர். கலவரம் நீடித்த இருவார காலத்தின் இறுதி நாட்களில் தமிழர்களில் அரசு ஊழியர்களாக இருந்த பலர் அலுவலகத்திற்கு வரவில்லை. நிர்வாகம் ஸ்தம்பித்தது. எல்லாத் தமிழர்களுமே பாதிக்கப்பட்டனர்.

துணி, திரைப்பட விநியோகம், போக்குவரத்து போன்றவற்றில் முதன்மையாக இருந்து வந்த குணரத்தினம் என்பவரும், செயின்ட் அந்தோணி இரும்பு எஃகு வியாபாரம், சின்டெக்ஸ் மற்றும் ஆசியன் காட்டன் மில்ஸ் ஆகியவற்றின் உரிமையாளரான ஞானம் (இதில் 10,000 பேர் வேலை செய்த சின்டெக்ஸ் தொழிற்சாலை தரைமட்டமாக்கப்பட்டு திரும்பவும் எடுத்து நடத்த முடியாத அளவுக்கு சேதப்படுத்தப்பட்டது) என்பவரும், அலங்காரப் பொருள் உற்பத்தியிலும், இறக்குமதி ஏற்றுமதி வியாபாரத்திலும் தமிழர்களில் முதன்மையான வருமான இராஜமகேந்திர மகாராஜா ஆகியோருடன் 50 ஆண்டுகளாகக் காலூன்றி வளர்ந்த ஐதராமனிஸ், ஜெபர்ஜீஸ், சிந்தி, போக்ரா வியாபாரிகளும் கூட சுமார் 800 கோடி ரூபாய்க்கு (அன்றைய மதிப்பில்) மேல் நஷ்டம் அடையும் வகையில் கலவரம் உச்ச நிலையில் இருந்தது.

மேற்கூறிய தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டதால் 1.5 லட்சம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பு இழந்தனர். அரசு மேற்பார்வையிலேயே கலவரம் தூண்டிவிடப்பட்ட போதிலும், ராணுவத்தினர் மீது தன் கட்டுப்பாட்டை ஜனாதிபதி இழந்தார். தன் சொந்தப் பாதுகாப்பிற்கே விசுவாச ராணுவ உயர் அதிகாரிகளிடம் தஞ்சம் அடைந்தார்.

அந்த அளவிற்கு அரசும், கட்சிகளும் தூண்டிவிட்ட இனவெறி வாதம் ராணுவத்தினரிடம் ஊறிப் போய் இருந்தது.

வாக்காளர் பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு தமிழர்களுக்குச் சொந்தமான கடை, வீடுகள், தொழிற்சாலைகளின் முகவரியைத் தேடித்தேடி இனவெறிக் கும்பல் அலைந்தது.

ராணுவம் தங்களுக்குள் திட்டமிட்டு பல குழுக்களாகப் பிரிந்து தமிழர் பகுதிகளைத் தேர்ந்து எடுத்துக் கொடூரமான தாக்குதல் நடத்தியது.

அதேநேரத்தில் சிங்களக் கூட்டமும், கலக ராணுவமும் பிக்குப் பெரமுனவைச் சேர்ந்த தீவிர புத்தமத வெறியர்களால் வழிகாட்டப்பட்டுச் செயல்பட்டனர்.

மட்டுநகர் சிறையுடைப்பு!

தீக்கிரையாக்கப்பட்ட தமிழர் கடைகளில் ஒன்று… தமிழர்களின் கடைகளையும் தொழிற்சாலைகளையும் அழிப்பதற்கு அடையாளம் காட்டியவரும், புத்தமத வெறியரும் தொழிற்சங்கத் தலைவருமான சிறில் மத்தியூதான் ராணுவ-சிங்கள வெறிக் கும்பலின் தமிழர் அழித்தொழிப்பு திட்டங்களின் “மூளை’ எனப்படுபவர்.

இந்த மத்தியூ பாராளுமன்றத்தில் புத்தமதப் பலாத்காரத்தை நியாயப்படுத்திப் பேசினவர் ஆவார்.

“”சிங்களவர்கள் பல வருடங்களாகவே தளர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் வேறுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் பெரும்பான்மையான இனமாக இருக்கும்போது அவர்கள் ஏன் ஆசியாவிலும் பெரும்பான்மையராக இருக்கக் கூடாது” என்று கூச்சலிட்டார்.

சிங்கள இனவாத வெறியுடன் கூடவே பாசிச ஜெயவர்த்தனா அரசாங்கம் தமிழர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தொடுத்த அனைத்து எதிர்ப்பு நடவடிக்கைகளையும் கடுமையான பலாத்காரத்துடன் ஒடுக்கியது. அதேசமயம் சிங்களவர்களின் அட்டூழியத்தைக் கண்மூடி மெüனியாகவே எதிர்கொண்டது.

தமிழர் வாழும் பகுதியில் பீரங்கி வண்டிகளைத் தெருக்களில் நடமாடவிட்டும், ஹெலிகாப்டர்களைத் தாழ்வாகப் பறக்கவிட்டும் தமிழர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

கொழும்புக்கு வெளியே பதின்மூன்று மாவட்டங்களில் ராணுவ சிவிலிய நடவடிக்கைகளை ஒன்றிணைக்க 10 மூத்த ராணுவ அதிகாரிகளையும், மூன்று உயர்மட்ட அதிகாரிகளையும் அரசு நியமித்தது.

இலங்கையின் 13,000 பேர் கொண்ட இலங்கை ராணுவத்தில் பாதிக்கு மேல் யாழ்ப்பாணப் பகுதியில் மட்டுமே குவிக்கப்பட்டு தொடர்ந்து அங்கு நிற்க வைக்கக்கூடிய பகுதியாக அது மாற்றப்பட்டது.

யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் மாவட்டங்களில் ராணுவ ஆட்சியாலும், நெருக்கடி நிலை சட்டங்களாலும் பலப்படுத்தப்பட்டதன் விளைவாக எவ்வித பின்விளைவு பற்றியும் பயமின்றி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை பயன்படுத்துவதில் சர்வ சுதந்திரமாகச் செயல்பட ராணுவம் அனுமதிக்கப்பட்டது.

மேலும் பிரிவினை கோரும் அனைத்துக் கட்சிகளையும் தடை செய்து ஓர் அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

இக்கலவரத்தின் உச்சகட்டத்தில் அரசாங்கம் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்படும் மக்களின் சடலங்களை, அவர்கள் யார் என்ற விவரம் தெரிவிக்காமல் புதைக்கவும், எரிக்கவும் அனுமதித்தது. லண்டனில் உள்ள சர்வதேச மனித உரிமைக் கழகமானது, இலங்கைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பற்றி கருத்துக் கூறுகையில், இலங்கையில் செய்யப்பட்டிருக்கும் அரசியல் சட்டத் திருத்தம் தென் ஆப்பிரிக்காவில் உள்ள சட்டங்களைக் காட்டிலும் மிக மோசமான சட்டமாகும் என்று கூறுகிறது.

இச்சட்டத்தின்படி விசாரணை இன்றி 18 மாதம் சிறை வைக்கவும், விருப்பப்படி கைது செய்யவும், சந்தேகப்படும் யாரையும் மிக மோசமான சித்திரவதை வழிமுறைகளில் விசாரணை செய்யவும், நடைமுறையில் வரம்பில்லாத அதிகாரத்தை ராணுவத்திற்கு அளிக்கிறது.

இவ்வளவு வன்முறைகளும், கொலைகளும், கொள்ளைகளும் நடத்தப்பட்ட ஜூலைக் கலவரம் சிங்களச் சிப்பாய்கள் 20 பேர் கொல்லப்பட்டதன் தொடர்நிகழ்வு என்று ஜெயவர்த்தன அரசும் வேறு சிலரும் பிரசாரம் செய்தார்கள்.

ஆனால், தன்னை மறந்த நிலையில் ஜெயவர்த்தன ஜூலைக் கலவரத்தின் இரு வாரங்கள் கழித்து, பி.பி.சி நிருபருக்கு அளித்த பேட்டியில், “”இவ்வன்முறை தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே, ஜூலை முதல் வாரத்தையடுத்து, கலவரத்தைத் தூண்டும் நோக்கில் தமிழருக்கு எதிரான உணர்வுடன் ராணுவம் கட்டுக்கடங்காமல் நடந்துகொண்டது. இந்தச் செய்தியை வேண்டுமென்றே மறைத்துவிட்டார்கள்” என்று கூறி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

ஏககாலத்தில், லண்டனில் இருந்து வெளியாகும் “கார்டியன்’ இதழ், சிப்பாய்களின் கட்டுக்கடங்காத செயல் என்னவென்று ஏராளமான படங்களுடன் வெளியிட்ட செய்தி என்ன தெரியுமா?

பேருந்து நிலையம் சென்று 18-20 வயதுள்ள மாணவர்களை வரிசையாக நிற்கவைத்துச் சுட்டுக்கொன்றனர். பின்னர் ஒரு கிராமத்தில் நுழைந்து, கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டு வீழ்த்தினர். அதன்பின்னர், அவர்கள் அனைவரும் முகாம் செல்லுமாறு உத்திரவு இடப்பட்டது.

பின்னர், அதே சிப்பாய்கள் சாதாரண உடையில் திரும்பவந்து ஒவ்வொரு வீடுகளிலும் நுழைந்து சுட்டுத்தள்ளிக் கொண்டே, கையில் கிடைத்தப் பொருள்களையெல்லாம் வாகனத்தில் எடுத்துப்போட்டுக்கொண்டே சென்றனர்.

இப்படிப்பட்ட வன்கொடுமை நடைபெற்ற பின்னர்தான் போராளிகள் இந்த இரக்கமற்ற சிப்பாய்களுக்குத் தண்டனை அளித்தனர் என்றும் “கார்டியன்’ செய்தி வெளியிட்டிருந்தது(தகவல்: கு.வெ.கி.ஆசான், “ஈழ விடுதலைப் போர்’ 1948-1996).

இப்படுகொலைகள் குறித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அ.அமிர்தலிங்கம் மற்றும் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தன் இருவரும் “இலங்கையின் இனப்படுகொலைகள்’ என்னும் தலைப்பில் கடிதம் எழுதியதுடன், அதை தகவல் தொடர்புச் சாதனங்களுக்கும் அளித்தனர்.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் உயிர் தப்பிய 19 தமிழ் இளைஞர்களும் நிர்மலா நித்தியானந்தனும் ஜூலை 27-ஆம் தேதி இரவு கட்டுநாயக்கா விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். வெலிக்கடைத் தாக்குதலின்போது படுகாயமுற்றிருந்த இக்கைதிகள் ராணுவ வீரர்களினால் பஸ்ஸிற்குள் குப்புறப்படுத்திருக்கும்படிக் கட்டளையிடப்பட்டனர். அங்கு காவலுக்கு நின்ற ராணுவ வீரர்கள் இழிவான வார்த்தைகளினால் ஈழப் போராளிகளை ஏசியதுடன் அவர்களைத் தாக்கியும் துன்புறுத்தினர்.

வெறும் தண்ணீர்கூடக் கொடுக்கப்படாது அன்றிரவு முழுவதும் அங்கு வைத்திருக்கப்பட்ட இக் கைதிகள் மறுநாள் 28-ஆம் தேதி காலை மட்டுநகர்ச் சிறைச்சாலைக்கு விமானப்படை விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டனர். விமானத்தில்கூட காயமுற்றிருந்த இக்கைதிகள் கீழே குனிந்தபடி இருக்குமாறு பணிக்கப்பட்டனர்.

ஜூலை 28-ஆம் தேதியும் அதற்குப் பின்னரும் சிங்களப் பிரதேசங்களிலிருந்த ஏனைய தமிழ் அரசியல் கைதிகள் சுமார் 25 பேரும் மட்டுநகர்ச் சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இப்போராளிகள் மட்டுநகர்ச் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த சமயம் அங்குள்ள புத்தவிகாரையில் கைக்குண்டுகள், பெட்ரோல், டயர் போன்றவை அங்கு முகாமிட்டிருந்த ராணுவத்தினரால் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.

இவை மட்டுநகர்ச் சிறைச்சாலை உட்பட மட்டுநகரை எரிப்பதற்காகச் சேமிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மட்டுநகர்ச் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை மீண்டும் கொழும்பிற்கு மாற்ற சில நாள்களுக்குப்பின் அரசு முயற்சியெடுத்தது. சிங்கள அரசின் இம்முயற்சியை ஈழப் போராளிகள் செப்டம்பர் 23-ஆம் தேதி முறியடித்தனர்.

இவர்கள் விடுதலைப் போராட்டத்தை வெளியே தொடர்வதற்காகவும் இனவெறி அரசு தம்மைக் கொல்வதற்கான முயற்சியைத் தவிடுபொடியாக்கும் எண்ணத்துடனும் செப்டம்பர் 23-ஆம் தேதி இரவு சுமார் 7.45 மணியளவில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மக்கள் விடுதலைப் படையினரின் முன்முயற்சியால் மட்டுநகர்ச் சிறையைத் தகர்த்துப் புதிய வரலாறு படைத்தனர்.

மொத்தம் சுமார் 60 தமிழ் அரசியல் கைதிகள் மட்டுநகர்ச் சிறைச்சாலையிலிருந்து தப்பி வந்து விடுதலைப் போராட்டத்தை மேலும் ஊக்கத்துடன் தொடர்ந்தனர். (சிறையில் இருந்த பிற விடுதலைக் குழுக்களும் இதில் இணைந்து பங்கெடுத்தனர் என்றும் கூறப்படுகிறது.) மட்டுநகர்ச் சிறையுடைப்புச் சம்பவமானது உலகின் சமீபகால வரலாற்றில் மிகப்பெரியது என்பதுடன், எந்தவொரு தமிழ் அரசியல் கைதியும் கைது செய்யப்படாது தப்பிவிட்டனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.*

* -ஸ்ரீலங்கா, வெலிக்கடைச் சிறைப் படுகொலைகள்-ஈழ மக்கள் செய்தி தொடர்பு வெளியீட்டிலிருந்து.

நிர்மலா சிறைமீட்பு!

தமிழீழப் புரட்சிகரப் போராளியான நிர்மலா 1982-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி தனது கணவர் நித்யானந்தனுடன் கைது செய்யப்பட்டார். அவர்மீது சாட்டப்பட்ட குற்றம்:

சாவகச்சேரி போலீஸ் நிலையத்தைத் தாக்கிக் காயமுற்ற ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களுக்குப் புகலிடம் கொடுத்தார். விடுதலைப் போராளிகளைப் பற்றிய தகவல் அறிந்தும் போலீஸôருக்குத் தெரிவிக்கவில்லை என்பதாகும்.

இவர் குருநகரின் ராணுவ முகாமில் சில காலமும் வெலிக்கடைச் சிறையிலுமாக வைக்கப்பட்டார். வெலிக்கடைச் சிறையில் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் போன்றோர் படுகொலை செய்யப்பட்டபோது இவரின் உயிருக்கும் உலை வைக்கப்பட்டது. அந்தச் சதியிலிருந்து நிர்மலா தப்பினார். பின்னர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.

1983 செப்டம்பர் 23-ஆம் தேதி ஈழப் போராட்ட வீரர்கள் மட்டுநகர் சிறைச்சாலையிலிருந்து தப்பி வெளியேறியபோது இவர் தப்ப முடியாத நிலை ஏற்பட்டது. இந்தத் தப்பித்தல் நடந்த பிறகு ராணுவத்தின் அதிரடிப் படைப்பிரிவினர் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பாதுகாப்புக்கென நிரந்தரமாக்கப்பட்டனர்.

நிர்மலாவைத் தப்பிப்பது என்பது சாத்தியமில்லை என்று அனைவராலும் நம்பப்பட்டது. ஆனாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் துணிகரமான சிறை மீட்பு திட்டம் ஒன்றினைத் தீட்டினர்.

1984 ஜூன் 15-இல் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கெனக் கொழும்பிற்கு நிர்மலாவைக் கொண்டு செல்ல அரசு முடிவு செய்திருந்தது. அதற்கு முன்னதாக நிர்மலாவை மீட்க வேண்டும்.

விடுதலைப் புலிகள் ஜூன் 10-ஆம் தேதி இரவு 7.15 மணியளவில் அதி நவீன ரக ஆயுதங்களுடன் மட்டக்களப்புச் சிறைச்சாலையை முற்றுகையிட்டனர். வீரர்கள் அனைவரும் சிறைக்காவலாளி உடையில் இருந்தனர்.

சிறைச்சாலைக் கதவைத் தட்டி, கொழும்பிலிருந்து சில கைதிகளை அடைப்பதற்காகக் கொண்டு வந்திருப்பதாகக் கூறி கதவைத் திறக்கச் சொன்னார்கள். முதலாவது கதவு ஒருக்களித்தவாறு திறக்கப்பட, விடுதலைப் புலிகள் உள்ளே நுழைவதற்குள் அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்று சிறை அதிகாரிகள் உணர்ந்து உஷாராயினர். விரைவாகக் கதவை மூடவும் முற்பட்டனர்.

சிறைக்குள் துப்பாக்கிப் பிரயோகம் செய்வது நல்லதல்ல, பாதுகாப்பானதும் அல்ல என்ற முடிவுக்கிணங்க விடுதலைப் புலிகள் துப்பாக்கியின் துணையை நாடவில்லை. மாறாக, சற்றும் தாமதிக்காது அதிரடி முறையில் கைகளால் மட்டுமே தாக்குதலைத் தொடுத்தனர். சிறை அதிகாரிகளை மடக்கினர். இந்த மோதலில் இரண்டு சிறை அதிகாரிகளுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.

சிறைச்சாலைக்குள்ளேயும் பலத்த பாதுகாப்பு இருந்தது. இரண்டாவது-இரும்புக் கதவுக்குரிய சாவியைச் சிறை அதிகாரிகளிடமிருந்து பெறமுடியவில்லை. இரும்புக்கதவை உடைத்தே திறந்தனர். விடுதலைப்புலிகளின் தாக்குதலை அறிந்த காவலாளிகள் பலர் எதிர்த்துப் போராடாது தப்பினால் போதும் என்று ஓடி ஒளிந்தனர். இரும்புக் கதவை உடைத்துத் திறந்ததும் பெண்களுக்கான சிறைக் கதவையும் உடைத்தனர்.

நிர்மலா இருந்த சிறைக்கதவுச் சாவியை வைத்திருந்தவர் ஓடி ஒளிந்து விட்டதால் அந்தக் கதவையும் உடைத்தே திறந்தனர். வெளியே ஏதோ நடக்கிறது என்பதைச் சூசகமாக உணர்ந்து கொண்ட நிர்மலா தனது அறையின் கதவு உடைபடுவதை அறிந்து தயார் நிலையில் இருந்தார். கொரில்லா வீரர்கள் சிறைக்கதவை உடைத்ததும், தாமதம் ஏதும் செய்யாது சில மணித்துளிகளில் அங்கிருந்து வீரர்கள் யாவரும் வெளியேறினர். நிர்மலா நித்யானந்தன் சிறை மீட்கப்பட்டதும் அவரையும் கணவர் நித்யானந்தனையும் அதி வேகப் படகு மூலம் தமிழகத்திற்கு அழைத்து வந்தனர். விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன், பேபி சுப்ரமணியம், ரகு உள்ளிட்டோர் நிர்மலாவை புலவர் புலமைப்பித்தன் இல்லத்தில் தங்க வைத்தனர்.

Velikkadaich-Siraichchaalaiyil...-600x341

இந்தச் சிறை மீட்புப்பணி தமிழீழ விடுதலைப்புலிகளின் புரட்சிகரமான ஆயுதப் போராட்ட வரலாற்றில் சிறப்பான அத்தியாயமாயிற்று!

SHARE