அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு அமைச்சர் கலாநிதி. ஹரினி அமரசூரிய அவர்களுக்குமிடையிலான விஷேட சந்திப்பு

13
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கும் நாட்டின் கௌரவ பிரதமர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கலாநிதி. ஹரினி அமரசூரிய அவர்களுக்குமிடையிலான விஷேட சந்திப்பொன்று  பிரதமர் காரியாலயத்தில் நடைபெற்றது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பொதுச் செயலாளர், உதவிப் பொதுச் செயலாளர், உப குழுக்களின் செயலாளர்கள், உறுப்பினர்கள் சிலர் இந் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த சந்திப்பில், ஜம்இய்யாவின் வரலாறு மற்றும் கடந்த காலப் பணிகள் குறித்த அறிமுகம் வழங்கப்பட்டதுடன், அனைத்து இலங்கையர்களும் ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்வதற்கான வழிகாட்டுதல்களை ஜம்இய்யா எப்போதும் வழங்கி வருவதும் தெளிவுபடுத்தப்பட்டது.
மேலும், ஆலிம்கள் இந்நாட்டிற்கு ஆற்றியுள்ள சேவைகள் குறித்த விளக்கங்கள் பிரதமர் அவர்களுக்கு வழங்கப்பட்டதுடன் கல்வி ரீதியாக முஸ்லிம்கள் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள், அரபுக் கல்லூரிகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் இஸ்லாம் பாட மௌலவி ஆசிரியர் நியமனத்தில் நிலவும் சிக்கல்கள் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்தும் தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டது.
இதனையடுத்து கௌரவ பிரதமர் அவர்கள், தனது அதிகாரத்தின் கீழ் எல்லோருக்கும் பொதுவான, சமமான முறையில் கல்வி கற்கக்கூடிய சூழல் உருவாக்கப்படும் என தெரிவித்ததோடு அதற்கு முஸ்லிம் சமுதாயத்தின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் தனித்துவங்கள், வேறுபாடுகள் இருந்த போதிலும் அனைவரும் நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் சகலரது உரிமைகளும் பேணிப் பாதுகாக்கப்படும் சூழல் நாட்டில் உருவாக்கப்பட வேண்டியதை வலியுறுத்திய பிரதமர் அவர்கள் அதற்கும் முஸ்லிம் சமூகத்தின் ஒத்துழைப்பு அவசியம் என்று கருத்துத் தெரிவித்தார்.
அத்தோடு இவ்விடயம் தொடர்பில் ஜம்இய்யாவுடன் ஆரோக்கியமான தொடர் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கு தான் எதிர்பார்ப்பதாகவும் இதன்போது பிரதமர் தெரிவித்தார்.
இச்சந்திப்பின் இறுதியில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையால் வெளியிடப்பட்ட அல்-குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு மற்றும் மேலும் சில வெளியீடுகளும் பிரதமர் அவர்களுக்கு கையளிக்கப்பட்டன.
இதில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித், உதவிப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம், ஒத்துழைப்புக்கும் ஒருங்கிணைப்புக்குமான குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம். பாஸில் பாறூக், ஊடகக் குழுவின் செயலாளர் அஷ்-ஷைக் எம். ரிபாஹ் ஹஸன், ஆகியோருடன் செயலக நிர்வாகி அஷ்-ஷைக் டி. நுஃமான் அவர்களும் கலந்துகொண்டனர்.
SHARE