தமிழர் தாயகம் வடகிழக்கினை ஒன்றிணைத்து தமிழர்கள் தங்கள் சுயாட்சி உரிமையை மீட்டு எடுக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு இருக்கும் ஒற்றை தெரிவு போராட்டம் ஒன்றே
ஒரு இனம் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அந்த இனம் தனது மொழி, தனது பண்பாடு, தனது நாகரீகம், தனது பூர்விக நிலப்பரப்பு போன்றவற்றை பேணிக்கொள்ளுதல் அவசியமாகின்றது. இந்த காப்பாற்றும் தன்மையே அந்த இனத்தின் தொடக்கத்தையும் வாழ்வாதாரத்தின் முதன்மையையும் அறிமுகம் செய்து வைக்கும் காரணியாகின்றது எதையெல்லாம் உங்களால் பாதுகாக்க முடியவில்லையோ, அவையெல்லாம் உங்களைவிட்டு என்றாவது விலகிச் சென்றுவிடும்.
இராஜதந்திர ரீதியாக சிங்கள மேட்டிமைவாத நிகழ்ச்சி நிரல் திரைமறைவைக் கடந்து விட்ட போதும் நல்லாட்சி எனும் வெற்றுக் கோசத்தில் தமிழ் மக்கள் வெறுமையிலேதான் உள்ளனர். போர்க்காலத்தில் தமிழர் தாயகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இனவழிப்பு இராணுவம் மேலதிக அதிகரிப்புடன் இன்றும் ஆக்கிரமிப்பின் அடையாளமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. உயர்பாதுகாப்பு வளையங்கள் என்ற போர்வையில் இராணுவப்பிடிக்குள் விழுங்கப்பட்ட பல்லாயிரம் ஏக்கர் தமிழர் நிலங்கள் மீதான ஆக்கிரமிப்பும் தொடர்கின்றது.
சிங்கள ஆட்சி பீடத்தில் இருப்பவர்கள் எல்லோரும் ஒரே இலக்கில் உள்ளவர்களே. அவர்கள் அந்த இலக்கை அடைய பயன்படுத்தும் வழிமுறைகளிலேயே வேறுபடுகிறார்கள்.
நல்லாட்சி என்று உலகிற்கு காட்டிக்கொண்டு இன்னமும் எமது மக்களை தன் இராணுவக்கண்காணிப்பினுள்ளும் பயப்பிராந்திக்குள் வைத்திருக்கும் சிறிலங்கா அரச இராணுவ இயந்திரம். இணக்க அரசியல் செய்யும் அரசு அல்ல இது. இணங்கி பின் இடர் விழைவிக்கும் அரசு. யாரும் எமக்கு தாம்பாளத்தில் தீர்வை தர போவதில்லை அக புற நெருக்கடிகளே எமக்கான தீர்வை பொற்றுதரும்.
ஈழத் தமிழ் மக்கள் தங்களுக்கு நிகழ்த்தப்ட்ட அநீதிகளுக்கு, நீதி வேண்டிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரசாங்கமே யுத்தத்த்தை தொடர்ந்தும் மாபெரும் வெற்றிச் சாதனையாக பெருமிதத்தை வெளிப்படுத்துகிறது.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெளிவாக சில விடயங்களைச் சொல்லியிருக்கிறார். இலங்கை அரசாங்கம் ஒரு விசாரணையை நடத்தினால் அது எப்படியான விசாரணையாக அமையும் என்பதையும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்பதை தெளிவாகச் சொல்கிறார். இராணுவத்தை தண்டிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று மைத்திரி சொல்லுகிறார்.
இலங்கை அரசாங்கத்தின் யுத்த வெற்றிக்கு இனப்புடுகொலை யுத்தம் என்ற மறுபெயரும் உண்டு. நீதியையும் உண்மையையும் வழங்கும் ஒரு தரப்பு முதலில் அதனை ஏற்க வேண்டும்.
இராணுவம் இழைத்த குற்றங்களை மறைத்துக் கொண்டு இராணுவத்தை கண்ணை மூடிக்கொண்டு பாதுகாக்கும் போக்கில் நீதியும் உண்மையும் ஏற்படாது. தமிழ் மக்கள் போரில் எவ்வாறு எல்லாம் அழிக்கப்பட்டார்கள் என்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் வந்துவிட்டன.
சிங்கள பௌத்த பேரினவாத அரசின் தமிழ் இனவழிப்பானது வெவ்வேறு வடிவங்களில் தமிழர் தாயகத்தில் தற்போதைய நல்லாட்சி அரசும் தொடர்ந்து வருகிறது.
வடகிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி இம்மாகாணங்களில் இனவிகிதாசாரத்தில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது சிங்கள அரசு.
கோரிக்கைகளை முன்வைப்பதும் வேண்டுகோள்களை விடுப்பதும் ஒருபோதும் மகாவம்சத்து கனவுகளை ஊடறுத்து பேரினவாதத்தின் காதுகளில் போய்சேரப்போவதில்லை என்பதே வரலாறு தரும் பாடமாகும். ஒற்றை ஆட்சிக்குள் ஏதாவது ஒரு தீர்வுக்குள் முடங்கிப் போய்விடுங்கள் என்று வகுப்பு நடாத்தும் சம்பந்தன், சுமந்திரன்,மாவை போன்றவர்களும், இந்திய வல்லாதிக்கமும் இன்றும் ஒரு வரலாற்றுப் பாடமாகும்.
தமிழ் இனம் தனக்கு வரலாற்றில் இழைக்கப்பட்ட கொடுமைகளை என்றும் மறந்து விடக்கூடாது மறைக்கவும் அனுமதிக்கக் கூடாது
நமது அடயாளங்கள் அழிக்கப்படும் போது…தமிழ் இனத்தின் உரிமை மறுக்கப்படும் போது…தமக்கான அதிகாரம் ஒடுக்கும் போது…தனது இனத்தின் உரிமை,சமத்துவத்திற்காக ஒரே நோக்குடன் செல்லும் பாதையே போராட்டம்…
மக்கள் புரட்சி அரச பயங்கரவதங்களுக்கும் முதலாளித்துவ சுரண்டல்களுக்கும் எதிராக வெடிக்க வேண்டும்.
இந்த உண்மையை மக்கள் முதலில் உணர வேண்டும். தமிழர் தாயகத்தில் தொடரும் சிங்கள – பௌத்த மயமாக்கல் மற்றும் தமிழின அடக்கு முறைகளுக்கு எதிராக நமக்கான போராட்டத்தை நாமே ஆரம்பிக்க வேண்டும்;
தொடரவேண்டும். நேர்த்தியான கொள்கை வகுப்புடனும், சிறந்த திட்டமிடல் முகாமைத்துவத்துடனும் முன்னெடுக்கப்படும் மக்கள் மயப்பட்ட போராட்டம், எமக்கான நேச சக்திகளையும், எமக்கு சாதகமான அக, புறச்சூழல்களையும் உருவாக்கும்.
மாறாக, எமக்காக யாரும் போராடுவார்கள், யாராவது எமக்கு நீதியை தருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்க முடியாது. நாம் போராடாமல் விடுகின்ற ஒவ்வொரு தருணத்திலும், நாம் சோர்வடைகின்ற ஒவ்வொரு கணப்பொழுதுகளிலும், யாரையும் நம்பி நாம் காத்திருக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், எமக்கான பிரதிநிதிகள் எனக் கூறிக்கொள்வோர் சோரம்போகிற, சரணாகதியடைகிற ஒவ்வொரு சூழலிலும் எமது போராட்டம் நீர்த்துப் போகும். அந்தப் பலவீனமான நிலையென்பது எமது போராட்டத்தின் அடித்தளத்தை மெதுமெதுவாக ஆட்டம் காணச் செய்து, இறுதியில் எமது நீதிக்கான போராட்டத்தை முற்றுமுழுதாக அழித்துவிடும்.
1,46,679 தமிழர்களைப் படுகொலை செய்து அதை நம் கண் முன்னே மூடி மறைப்பதையும் வரலாறு பதிவு செய்து கொண்டு இருக்கிறது. நாங்கள் சுதந்திரத்தை கேட்டோம்
மரணத்தை தந்தார்கள்
மரணத்தையும் வென்றோம்
இனி எதை தர போகிறார்கள் …?
நாம் இறந்தாலும் எமது தத்துவம் இறக்காது.. அது விதைக்கப்பட்டுவிட்டது..இழந்த உரிமைகளை கேட்டு பெற முடியாது மாறாக போராடிதான் பெற முடியும்…
காசுக்கும் நல்வாழ்வுக்குமாக காட்டிகொடுக்கும் காக்கை வன்னியர்கள் விளைச்சல் அதிகரித்த இனத்தில் அவதாரங்கள் அவ்வப்போது தோன்றி அழிவிலிருந்து மக்களை காக்க தம் ஆயுளை முடித்து கொள்வார்…
தமிழர் தாயகம் வடகிழக்கினை ஒன்றிணைத்து தமிழர்கள் தங்கள் சுயாட்சி உரிமையை மீட்டு எடுக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு இருக்கும் ஒற்றை தெரிவு போராட்டம் ஒன்றே. அரசுகளால் மக்களுக்கு நீதி வழங்க முடியாது. போராடும் மக்களே தங்கள் உரிமையையும் விடுதலையையும் வென்றெடுக்கும்.
போராடுவது ஒன்றே அடிமை தமிழர்தேசியத்திற்கு வழி!! போராடும் மக்களின் ஒன்றிணைவே அனைத்து போராட்டங்களுக்கும் வலு சேர்க்கும்!
ஆகவே, எமக்காக நாமே போராட வேண்டும். எமக்கு நடந்த அநீதியை, இன அழிப்பை ஓங்கி ஒலித்து, உறுதிபட நாமே சொல்ல வேண்டும். உறுதிகுன்றாத மனோதிடமும் போராட்டத்தின் இடைவிடாத தொடர்ச்சியும் நீதிக்கான எமது போராட்டங்களின் அடிநாதங்களில் முக்கியமான அம்சங்களில் ஒன்று. ”சிறந்த அரசியல் போராளியானவன் சிறந்த படைத்துறை வீரனாக இருக்க வேண்டும். அதாவது எமது மண்ணின் ஒவ்வொரு அங்குல நிலத்தையும் மீட்பதற்கு அல்லது எதிரி எமது நிலத்தைக் கபளீகரம் செய்வதைத் தடுப்பதற்கு நாம் சிந்துகின்ற இரத்தத்தின் விலை தெரிந்தவர்கள் அரசியலை நடத்துபவர்களாக இருக்க வேண்டும்.”
தமிழீழ விடுதலை போராட்டம் என்பது பல விடுதலை பயிர்களின் உயிர்களை விதைத்திருக்கும் வெளி.
தாயக மக்களின் அவலம் போக்கும் மக்கள் திரள் போராட்டங்கள் புலம் பெயர்ந்து தமிழர்கள் வாழும் தேசங்களில் முன்னெடுக்க வேண்டும். இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் தொடர் செயல்பாடுகள் புலம் பெயர்ந்த மக்களால் கருத்து வேறுபாடு இன்றி நிகழ்த்த வேண்டும்.
மாயைகளையும் வார்த்தைஜாலங்களையும் ஏமாற்றும் முயற்சிகளையும் தாண்டி, அர்ப்பணிப்புகளை நெஞ்சினில் தாங்கி நேர்மையுடனும் மனச்சாட்சியுடனும் இனத்தின் நலனுக்காய் தொடர்ந்தும் கொள்கை உறுதியுடன் நடப்போம்!
மீண்டெழும் காலம் மறுபடியும் உருவாகும்..மாண்டவர் கனவும் பலிக்கும்.
சிங்கள தேசத்தின் வெற்றிக் கொண்டாட்டமும், தமிழர் மீதான வதை முகாம் கொடுமைகளும், அச்சுறுத்தல்களும், கடத்தல்களும், படு கொலைகளும், காணாமல் ஆக்குதல்களும் முன்னரை விடவும் பலமான எதிர்வினைகளை உருவாக்கியே தீரும். அந்த எதிர்வினை, ஈழத் தமிழர்களை மட்டுமல்ல, உலகில் வாழும் எல்லாத் தமிழர்களையும் ஒன்றிணைக்கும். அந்த மாபெரும் தமிழர் எழுச்சி ஈழத் தமிழர்களை வெகு விரைவில் விடுவிக்கும். அதுவே விடுதலைப் புலிகளின் தியாகத்திற்கு உலகத் தமிழினம் வழங்கும் கவுரவமாக அமையும். தமிழீழம் மீளும் நாளை தமிழே ஆளும்!