அடக்குமுறை நடவடிக்கைகள் தொடருமானால் – தைத் திங்கள் முதலாம் திகதி தொடக்கம் தமிழர் தாயகம் எங்கும் அஹிம்சைப் போராட்டம் தொடரும்-மாவை சேனாதிராசா

534

 

வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழர்களின் இருப்பபையே இல்லாதொழிக்கும் தனது அடக்குமுறை நடவடிக்கைகளை இலங்கை அரசு நிறுத்திக் கொள்வதற்கு காலக்கெடு விதிக்கவிருக்கின்றது இலங்கைத் தமிழரசுக் கட்சி. அடுத்த மூன்று மாதத்துக்குள் – அதாவது இந்த ஆண்டு டிசெம்பர் 31 ஆம் திகதிக்குள் – அடக்கு முறை நடவடிக்கைகளை நிறுத்தி, நிலைமையைச் சீர்செய்வதற்கு இலங்கை அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறுமானால் – அடக்குமுறை நடவடிக்கைகள் தொடருமானால் – தைத் திங்கள் முதலாம் திகதி தொடக்கம் தமிழர் தாயகம் எங்கும் அஹிம்சைப் போராட்டம் தொடர்ந்து கட்டவிழும்.

அந்தப் போராட்டத்துக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் முழு ஆதரவு தரவேண்டும். – இவ்வாறு அறிவிக்கவிருக்கின்றது இலங்கைத் தமிழரசுக் கட்சி. அக்கட்சியின் 15 ஆவது தேசிய மாநாடு வவுனியாவில் நேற்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றமை தெரிந்ததே. மாநாட்டுத் தீர்மானங்கள் நாளைய இறுதிநாள் அமர்வில் வெளியிடப்படவிருக்கின்றன.

அங்கு அறிவிக்கப்படவிருக்கும் பதினைந்துக்கும் குறையாத தீர்மானங்களில் கடைசித் தீர்மானம் அஹிம்சைப் போராட்ட முஸ்தீபு பற்றிய அறிவிப்பாக இருக்கும் என்று தெரிய வருகின்றது. “பிளவுபடாத – ஐக்கிய – இலங்கைக்குள் இணைந்த வடக்கு, கிழக்குப் பிரதேசத்துக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் வழிமுறையில் தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஓர் அரசு தமிழினத்துக்கு அதற்கேயுரிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் கிட்டும் வரையில் தொடர்ந்து போராடுவோம் என எமது மக்களுக்கு உறுதி கூறுகின்றோம்”- என்ற அடிப்படையிலான தீர்மானம் ஒன்றும் நாளை தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் நிறைவேற்றப்படும் எனத் தெரிகின்றது. அதிகளவிலான அதிகாரப் பகிர்வு அடிப்படையில் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காண வழி செய்யும் புதியதோர் அரசமைப்பை உருவாக்குவதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு பிற கட்சிகளுக்கும், முஸ்லிம்கள் உட்பட்ட ஏனைய தரப்பினருக்கும், முற்போக்கு சக்திகளுக்கும் அழைப்பு விடுக்கும் தீர்மானமும் – அத்தகைய முயற்சிகளுக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் ஆதரவு தரவேண்டும் என்று கோரும் தீர்மானமும் – இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை இனிமேலும் காலம் தாழ்த்தாமல் முழு அளவில் நடைமுறைப்படுத்தக் கோரும் தீர்மானமும் கூட நாளை நிறைவேற்றப்படும் எனத் தெரிகின்றது.

SHARE