அடக்க நினைக்கும் அதிகார வர்க்கமே போராட்டத்தைத் தூண்டுகிறதா?

414

அதிகார வர்க்கத்திற்கும் தொழிலாளர் வர்க்கத்திற்குமான போராட்டம் புதியதல்ல. அதிகார வர்க்கம் தொழிலாளர்களின் உரிமைகளை எப்பொழுதெல்லாம் தர மறுக்கிறதோ அப்பொழுதெல்லாம் தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை பெற போராட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படுகின்றனர். வவுனியா மாவட்டத்தில் கடந்த மாதத்தில் மாத்திரம் இரண்டு தொழிலாளர்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஒன்று வவுனியா நகரசபை ஊழியர்கள் மற்றும் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் முன்னெடுத்த போராட்டம், இன்னொன்று வவுனியா பொது வைத்தியசாலை சுகா தார சுத்திகரிப்பு தொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்.

வவுனியா நகரசபை தொழிலாளர்கள் தங்களுக்கான வருடாந்த கொடுப்பனவு வழங்கப்பட வில்லையென்றும், பணி வெற்றிடங்களை நிரப்பக்கோரியும் மற்றும் தங்களது அடிப்படை சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்து அவைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே நான்கு நாட்கள் பணிபகிஸ்கரிப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். நகரசபை தொழிலாளர்களின் கோரிக்கையானது பல இழுபறிக்கு மத்தியில் ஏற்கப்பட்டதுடன் வாக்குறுதிகளுடன் போராட்டம் கைவிடப்பட்டு தொழிலாளர் மீண்டும் பணிக்கு திரும்பியிருந்தனர்.
வவுனியா நகரசபையில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களது தேவைகளையோ அல்லது உரிமைக ளையோ பெறவேண்டுமானால் நிர்வா கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியே அதைப்பெற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள். வடமாகாண சபை சுகாதார அமைச்சினால் சுகா தார சிற்றூழியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு வவனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றவேளை வவுனியா நகரசபை சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் எவரை யும் வெளியேறாத வகையில் மண்டபத்தை முற்றுகையிட்டதுடன் நகரசபை சுத்திரிப்பு தொழிலாளர் எட்டு பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என வடமாகாண சுகாதார அமைச்சர் வாக்குறுதி கொடுத்து நியமனம் வழங்காது தங்களை ஏமாற்றிவிட்டதாக தெரிவித்திருந்தனர். தொழிலாளர்களின் முற்றுகைப்போராட்டத்தை அறிந்து அவர்களை சந்தித்த வடமாகாண சுகா தார அமைச்சர் சத்தியலிங்கம் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் தொழிலாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படுமென மீண்டும் வாக்குறுதி அளித்ததுடன் பின்பு ஆளுநர் அவர்களால் நியமனங்கள் வழங்கப்பட்டதுவே கடந்தகால வரலாறாக இருக்கிறது.

unnamed (1)  unnamed (2)

கடந்த 07-09-2015 அன்று ஆரம்பிக்கப்பட்ட வவுனியா நகரசபை தொழிலாளர்களின் போராட்டமானது அகில இலங்கை பொது ஊழியர் சங்கத்தின் வவுனியா மாவட்ட செயலா ளர் மற்றும் தலைவர் ஆகியோர் அடங்கிய குழுவினரால் வவுனியா நகரசபை நிர்வாகத்தினருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையில் நிர்வாகம் சற்றும் இறங்கி வராத நிலையில் போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

இவ்வேலை நிறுத்தப் போராட்டத்தை தடைசெய்யக் கோரி வவனியா நகரசபை நிர்வாகத்தால் வவுனியா பொலிசாருக்கு முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டு முறைப்பாடு ஏற்கப்பட்டதுடன் பொலிசார் தொழிலாளர்களுடன் போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட மறுத்த காரணத்தினால் மறைமுகமாக அச்சுறுத்தும் பாணியில் பொலிசார் நடந்துகொண்டனர். மூன்றாவது நாளாக நடைபெற்ற போராட்டத்தை பார்வையிட்ட வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்கள் தொழிலாளர்களின் பிரச்சினையை கேட்டறிந்து கொண்டதுடன் நகரசபை செயலாளருக்கும், தொழிலாளருக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். பேச்சுவார்த்தையில் ஒருசில தீர்வுகள் எட்டப்பட்டிருந்த போதும் முழுமையான தீர்வு கிடைக்கும்வரை போராட்டம் கைவிடப்படாது என அகில இலங்கை பொது ஊழியர் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவர் ஆர்.சித் திரனால் அறிவிக்கப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா நகரசபைக்கு யாழ்ப் பாணத்திலிருந்து வருகை தந்திருந்த வடமாகாண உள்ளூராட்சி ஆணை யாளர் தொழிலாளர்களை சந்திக்க மறுத்ததுடன், போராட்டம் குறித்து கருத்து கேட்க சென்ற ஊடகவியலாளர்களையும் சந்திக்க மறுப்பு தெரிவித்திருந்ததுடன் நகரசபை தொழிலாளர்கள் சார்பாக செயற்படுவதாக கூறி நகரசபை பெண் அலுவலக ஊழியர் ஒருவரை தகாத வார்த்தை பிரயோகங்களால் திட்டியதுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை தாக்க முற்பட்டும் தகாத வார்த்தைகளை பிரயோகித்து கீழ்த்தரமாக நடந்து கொண்டதாகவும் தொழிலாளர்கள் கவலை வெளியிட்டனர்.

நான்காவது நாளாக தொடர்ந்த நகரசபை தொழிலாளர்களின் போராட்டமானது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி அனந்தன் அவர்களின் வாக்குறுதியை அடுத்து நகரசபை தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பியிருந்தனர்.

இன்று வரையில் நகர சபை நிர்வாகமானது பழைய குருடி கதவை திறவடி என்கிற பாணியிலேயே நடப்பதாகவும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையென்றே வவுனியா நகரசபை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.அதேபோன்று வவுனியா வைத்தியசாலை சுகாதார சுத்திகரிப்பு தொழிலாளர்கள் 45 பேர் 2000 ஆம் ஆண்டிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றியவர்கள். 12-09-2015 அன்று இவர்களில் 25 பேரை நிர்வாகம் வெளியேற்றியதாக கூறி அனைவரையும் உள்வாங்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூன்று நாட்கள் நடந்த சுத்திகரிப்பு தொழிலாளர்கள் போராட்டத்தில் இரண்டாவது நாள் தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து கொண்ட வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் இது குறித்த காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்கவில்லை என்பதுடன் அண்மையில் வடமாகாண சபையிலிருந்து தெரிவாகிய வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இப்பிரச்சினையானது ஒப்பந்த நிறுவனத்தின் பிரச்சினை. நாங்கள் எதுவும் செய்ய முடியாது என தெரிவித்து ஒதுங்கிக் கொண்டார். மக்களின் முன்னால் தேர்தல் காலங்களில் கும்பிடு போட்டு வாக்கு கேட்பவர்கள் வெற்றிபெற்றதும் அம் மக்களின் பிரச்சினைகளிலிருந்து ஒதுங்கிக்கொள்வது அரசியலை வியாபாரமாக செய்கிறார்களா? ஏன எண்ணத்தோன்றுகிறது.

unnamed (4)  unnamed

வவுனியா வைத்தியசாலை சுகா தார சுத்திகரிப்பு தொழிலாளர்கள் 45 பேரில் முப்பது பேர் விதவைகள் என்பது குறிப்பிடத்தக்கதுடன். தொழிலாளர்களின் கோரிக்கையாக தங்களுக்கு பணிநீடிப்பு செய்து தாருங்கள் என்கிற கோரிக்கை மாத்திரமே முன்வைக்கப்பட்டிருந்ததுடன் கடந்த 14 வருடங்களாக வைத்தியசாலையில் பணியாற்றும் நாங்கள் வைத்தியசாலை சுத்திகரிப்பு தொழிலை மாத்திரமே நம்பியுள்ளோம் எனக் குறிப்பிட்டதுடன் இதுவும் இல்லையென்றால் நாங்கள் விபச்சாரம்தான் செய்ய வேண்டும் அப்படி வாழ்வதைவிட குடும்பத்துடன் தற்கொலை செய்வதே மேல் என குறிப்பிட்டிருந்தனர். கடந்த 30 வருடங்களாக யுத்தத்தின் கோரப்பிடியில் வாழ்ந்த மக்கள் உறவு களையும், பொருளாதாரத்தையும் இழந்து அநாதரவான நிலையில் வாழ்ந்து வரும் நிலையில் வடமாகா ணசபை தெரிவு செய்யப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் விதவைகள், உடல் அவையவங்களை இழந்தவர்கள், முன்னாள் போரா ளிகள் போன்றவர்களுக்கு எந்தவிதமான இழப்பீடுகளும். ஆற்றுப்படுத்தல்களும் மேற்கொள்ளாத நிலையில் சத்திரசிகிச்சை வெற்றி நோயாளி இறந்துவிட்டார் என்கிற நிலையிலேயே இயங்கி வருகிறது.

வவுனியா வைத்தியசாலை சுகா தார சுத்திகரிப்பு தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து வைத்தியசாலை பணிப்பாளரிடம் கேட்டபோது தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து கவனத்தில் எடுத்துள்ளோம் மனிதாபி மானரீதியில் பிரச்சினை அணுகப்படும் என தெரிவித்ததுடன் வவுனியா மாவட்ட மக்கள் மாத்திரமல்ல கிளிநொச்சி, முல்லைத்தீவு, சிங்கள பகுதியிலிருந்தும் நோயாளிகள் வருவதுடன் வவுனியா பொது வைத்தியசாலையானது மாகாண பொது வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட இருப்பதாலும் வடமாகாண சபைக்கு உட்பட்ட வைத்தியசாலைகளில் முதன்மையானது வவுனியா பொது வைத்தியசாலை என்பதனால் சுகாதார சுத்திகரிப்பு தொழிலாளர்களின் தேவை அதிகமாகவே காணப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
பணிப்பாளரின் வேண்டுகோளை ஏற்று சுழற்சிமுறையில் பணி செய்வதாக கூறி தொழிலாளர்கள் பணிக்கு திரும்பியிருந்தாலும் வடமாகாண சபையின் அதிகாரத்திற்குட்பட்ட இந்த இரண்டு சுகாதார தொழிலாளர்களின் பிரச்சி னைகளும் தீர்க்கப்படாமல் நீறுபூத்த நெருப்பாகவே இருக்கிறது. வடமாகாண சபையானது தொழிலாளர்களின் உரிமை களை பறிக்கும் ஒரு ஒடுக்குமுறை நிறுவ னமாக மாறி நிற்கிறதா? என்கிற சந்தேகமே தற்போது எற்பட்டுள்ளது. நகரசபை தொழிலாளர்களின் போராட்டத்திற்காக அவர்களை தூண்டிய காரணத்தை ஆராய்ந்த போது ‘ஒரு குப்பை அள்ளும் தொழிலாளி அதிக சம்பளம் எடுக்க கூடாது’ என்பதற்காக தங்கள் அடிப்படை சம்பளத்தில் கைவைத்துள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். வடமாகாண சபையால் அனுப்பப்பட்ட சுற்று நிருபத்தில் பல முரண்பாடுகள் காணப்படுவதாகவும் அதன் காரணமாக வவுனியா நகரசபை நிர்வாக ஊழியர்கள் குழப்பங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரியவருகிறது.

நகரசபை தொழிலாளர்கள் போராட்டம் நடத்தும் போதெல்லாம் வவுனியா நிறுவனங்களின் முதலாளிகள் அவர்கள் மீது சேறுபூசும் நடவடிக்கைகளையே மேற்கொள்கின்றனர். இவர்கள் இப்படித்தான் எதற்கெடுத்தாலும் போராட்டம் என்று இறங்கிவிடுகிறார்கள் இதனால் மக்களுக்குத்தான் கஸ்ரம் என்கிற வகையில் முதலாளி வர்க்கத்தின் கருத்துக்கள் அமைந்திருக்கும். மக்கள் தொழிலாளர்களின் போராட்டங்களினால் சில சிரமங்களை எதிர்கொண்டாலும் அவர்களுடைய கோரிக்கைகள் நியா யமானதே. அவர்கள் செய்யும் சுத்திகரிப்பு தொழிலை யாரும் செய்ய முடியாது என்கிற நிலையே காணப்படுகிறது என தெரிவிப்பதுடன் வவுனியா நகர சபையின் நிர்வாக சீர்கேட்டையும் சுட்டிக்காட்டுகின்றனர். இதில் அதிகார வர்க்கத்திற்கு ஆதரவாக செயற்படும் சிலர் நகரசபை சுத்திகரிப்புப் பணியை ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்கு வழங்குமிடத்து தொழிலாளர்களின் போராட்டத்தை இல்லாது ஒழிக்க முடியும் என அறிக்கைவிடுவதுடன் தொழிலாளர்களின் பிரச்சினையானது தனி ஒரு மனிதனின் பிரச்சினையல்ல ஒவ்வொரு தொழிலாளியின் பின் ஒரு குடும்பம் இருக்கிறது என்பதனை மறந்து தொழிலாளர்களின் போராட்டத்தை வைத்து அரசியல் செய்ய முற்படுவது மிகவும் கேவலமான ஒரு நடவடிக் கையாகவே பார்க்கப்படுகிறது. சுகாதார தொழிலாளர்களின் கோரிக்கைகளையோ அல்லது அவர்களை மனிதர்களாகவோ அதிகார வர்க்கங்கள் கடுகளவும் மதிப்பதில்லை. சுகாதார தொழிலாளர்கள் போராட்டம் நடத்தும் நேரத்தில் வவுனியா நகரம் குப்பைகளால் நிரம்பும்போது அரசியல்வாதிகள் வந்து வாக்குறுதி அளிப்பதும் பின் அவர்களின் பிரச்சினை கிடப்பில் போடப்படுவதும் வழக்கமாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையானது நிர்வாகத்தால் தொழிலாளர்கள் பழிவாங்கப்படுவதற்கு வாய்ப்புக்களை அதிகப்படுத்தியுள்ளதுடன் 26-10-2015அன்று நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கையாக போராட்டத்திற்கு தலைமைதாங்கிய நகர சபை தொழிலாளர்களான ஆர்.சித்திரன் மற்றும் எஸ்.கோல்டன் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இப்பணிநீக்கம் தொடர்பாக நிர்வாகம் பணியாளர்களில் ஒருவர் பணிநேரத்தில் போதையில் இருந்ததாகக் குற்றஞ்சாட்டியும், பிறப்பு அத்தாட்சி பத்திரம் போலியாக சமர்ப்பித்து வேலை யில் சேர்ந்துள்ளார்கள் என்று கூறியும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

15 வருடமாக பணியாற்றிய இரு தொழிலாளர்களின் திடீர் பணிநீக்கமானது அப்பட்டமான பழிவாங்கல் நடவடிக்கை என்பதுடன் வவுனியா நகரசபை நிர்வாகத்தின் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கையாகவே பார்க்கப்படுவதுடன் வடமாகாண முதலமைச்சரின் செயலா ளர் இ.வரதீஸ்வரன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் முன்நிலையில் தொழிலாளர்கள் மீது எந்தவிதமான பழிவாங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படமாட்டாது எனக் கொடுக்கப்பட்ட வாக்குறுதியும் ‘பழைய குருடி கதவைத்திறவடி’ என்கிற வகையில் மீறப்பட்டுள்ளது.

unnamed (6) unnamed (7)

வவுனியாவில் நடத்தப்பட்ட சுகாதார தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு ஏனைய மாவட்ட சுகாதார தொழிலாளர்கள் ஆதரவு தெரிவித்து ஒன்றிணைந்து போராடியிருந்தால் போராட்டம் வெற்றி பெற்றிருக்கும். ஆனால் அதற்கு அவர்களுடைய தொழிற்சங்கமான அகில இலங்கை பொது ஊழியர் சங்கம் தயாராக இல்லை. இதன் காரணமாகவும் தொழிலாளர்கள் அவமானகரமான நிலைமையைத்தான் சந்தித்துள்ளனர். நிரந்தர தொழிலாளிகள், ஒப்பந்த தொழிலாளிகள் என பிரித்து அதிகார வர்க்கங்கள் இயக்குகின்றன. அரச துறைகளில் மாத்திரமல்ல தனியார் துறைகளிலும் இப்படிதான் நடக்கிறது.

தொழிலாளர்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்படின் அனைத்து தொழிலாளர்களும் ஒற்றுமைப்பட்டு போராடவில்லையானால் தொழிலாளர் வர்க்கத்திற்கு அழிவுதான் ஏற்படும். வடமாகாணசபை தொழிலாளரின் பிரச்சினைகளை அலட்சியம் செய்வதை விடுத்து அவர்களின் பிரச்சினைக்கு உடனடி திர்வு காண்பது அவசியமானது. அப்படி இல்லாதவிடத்து தமிழ்த்தேசியம் என்பது கேள்விக்குறியாவதுடன் அதற்கு எதிராக தொழிலாளர்களின் போராட்டங்கள் முளை விடத் தொடங்குவதுடன் தொழிலாளர்களின் உரிமையின் போராட்டத்திற்கான பாதையை வட மாகாணசபையே அகலப்படுத்திக் கொடுத்ததாக அமைந்துவிடும்.

சுகந்தன்

 

 

SHARE