அடுத்த ஜனாதிபதியைத் தமிழ் மக்கள் தீர்மானிக்க முடியுமா?

498

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் எடுக்கப் போகும் முடிவு முக்கியமானது. ஏனெனில் இந்தோ பசுபிக் பாதுகாப்பு வலைப் பின்னலைப் பொறுத்தவரை இப்பிராந்தியத்தில் தமிழ் மக்களின் பாத்திரம் மிகவும் நிர்ணயகரமானது. தமிழ்மக்களின் வகிபாகம் கேந்திர முக்கியத்துவம் மிக்கது. அதாவது கேந்திர முக்கியத்துவம் மிக்க வாக்குகளை பெற்ற ஒரு மக்கள் கூட்டமே தமிழர்கள். ஆனால் தமது வாக்குகளின் கேந்திர முக்கியத்துவத்தை அவர்கள் போதிய அளவுக்கு விளங்கியிருப்பதாகத் தெரியவில்லை. அவர்களுடைய தலைவர்களில் பலருக்கும் அந்த முக்கியத்துவம் விளங்கியிருப்பதாக தெரியவில்லை.

கடந்த 15 ஆண்டுகால கட்டத்துக்குள் ஜனாதிபதி தேர்தல்களை தமிழ் தரப்பு எவ்வாறு கையாண்டிருக்கிறது என்பதை குறித்து ஒரு தொகுக்கப்பட்ட ஆய்வு அவசியம்.

2005ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் ஜனாதிபதி தேர்தலில் நன்கு திட்டமிட்டு ரணில் விக்ரமசிங்கவை தோற்கடித்தது. 2010இல் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி மஹிந்தவை தோற்கடிக்க முயற்சித்தது. ஆனால் தோற்று விட்டது. 2015இல் மேற்கு நாடுகளும் இந்தியாவும் ரணில் – மைத்திரி – சந்திரிகா – கூட்டமைப்பு – முஸ்லிம்கள் ஆகிய தரப்புகளை இணைத்து மகிந்தவுக்கு எதிராக நிறுத்தி வெற்றிகரமாக மஹிந்தவை தோற்கடித்தன.

இதில் 2005 ஆம் ஆண்டு புலிகள் இயக்கம் ரணிலை தோற்கடித்த பொழுது அவர்களிடம் தெளிவான வழி வரை படம் இருந்தது. அந்த வழி வரைபடம் சரியா பிழையா என்பதைத் தனியாக விவாதிக்க வேண்டும். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ராணுவத் தந்திரோபாயத்திற்குரிய வழி வரை படம் அது. ரணில் கொண்டு வந்த சமாதானம் ஒரு பொறி என்று அந்த இயக்கம் கருதியது. எனவே அவரை தோற்கடிப்பதன் மூலம் அந்தப் பொறியை உடைத்துக் கொண்டு வெளியே வரலாம் என்று அந்த இயக்கம் நம்பியது. போரில் புதிய பிரதேசங்களை விடுவித்து அதன் மூலம் நமது பேரத்தை அதிகப்படுத்தலாம் என்றும் அந்த அமைப்பு நம்பியது.

அதேசமயம் கடும்போக்குடைய மஹிந்த ராஜபக்சவை ஆட்சியில் அமர்த்துவது மூலம் அவர் ஒடுக்குமுறையை தீவிரப் படுத்துவார் இது அனைத்துலக அளவில் தமிழ் மக்களின் போராட்ட நியாயத்துக்கான அங்கீகாரத்தை அதிகப்படுத்தும்; என்றும் அந்த இயக்கம் நம்பியது. ஆனால் விடுதலைப் புலிகளின் இந்த தந்திரோபாயம் வெற்றி பெறவில்லை. மாறாக அது அந்த இயக்கத்தை தோற்கடிப்பதில் முடிந்தது.

அதன்பின் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவோடு வெளிப்படையாக கூட்டுச் சேர்ந்தது. ஆனால் அந்தக் கூட்டை புலிகளுக்கும் பொன்சேகாவுக்கு இடையிலான கூட்டாக மஹிந்த தரப்;புக் காட்டியது. அதுவும் சரத் பொன்சேகாவின் தோல்விக்கு ஒரு காரணம். பொன்சேகாவை முன்னிறுத்தியது என்பது மேற்கு நாடுகளின் ஒரு வியூகம்தான.; அந்த வியூகத்தின் ஒரு கருவியாக கூட்டமைப்பு தொழிற்பட்டது. ஆனால் அந்த வியூகம் வெற்றி பெறவில்லை.

ஆனால் 2015 மேற்கு நாடுகள் மற்றும் இந்தியாவின் வியூகம் வெற்றி பெற்றது. ரணில் மைத்திரி கூட்டு மஹிந்தவை தோற்கடித்தது. இதிலும் கூட்டமைப்பு ஒரு கருவிதான். வியூகம் மேற்கு நாடுகள் வகுத்ததுதான். எனினும் அந்த வியூகத்தை கடந்த ஒக்டோபர் மாதம் மஹிந்த முறியடித்து விட்டார். ஆட்சி மாற்றத்தால் ஏற்பட்ட வலுச் சமநிலை இப்பொழுது குழம்பி விட்டது. இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் மற்றொரு ஜனாதிபதி தேர்தல் வருகிறது.

கடந்த 15 ஆண்டு கால கட்டத்துக்குள் தமிழ்தரப்பு முன்னெடுத்த தந்திரோபாயங்களை தொகுத்துப் பார்த்தால் விடுதலைப் புலிகள் இயக்கம் சொந்தமாக ஒரு முடிவை எடுத்தது. அது மேற்கு நாடுகளின் கருவியாக தொழிற்பட மறுத்தது. எனவே தோற்கடிக்கப்பட்டது.

ஆனால் கூட்டமைப்பு கடந்த இரண்டு ஜனாதிபதித் தேர்தல்களின் போதும் மேற்கு நாடுகளின் கருவியாக தொழிற்பட்டது அதனால் பெற்றது என்ன? ஆயுதப் போராட்டத்தை அழிக்க உதவிய மேற்கு நாடுகளும் இந்தியாவும் ஒரு தீர்வை தர மறுக்கும் அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என்று இப்போது சம்பந்தர் மன்றாடுகிறார்.

இப்படிப்பார்த்தால் கடந்த 15ஆண்டு காலகட்டத்துக்குள் நடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தலின் போதும் தமிழ் மக்களின் தந்திரோபாயம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இது தொடர்பில் முழுமையான தொகுக்கப்பட்ட ஓர் ஆய்வு அவசியம். அந்த ஆய்வு முடிவின் அடிப்படையில் வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலை குறித்து ஒரு புதிய தந்திரோபாயம் வகுக்கப்பட வேண்டும். ஜனாதிபதித் தேர்தலின் போது மட்டும் அல்ல மாகாண சபைத் தேர்தல், பொதுத் தேர்தல் எல்லாவற்றின் போதும் பொருத்தமான, தீர்க்கதரிசனம் மிக்க, துணிச்சலான தந்திரோபாயங்களை கண்டு பிடிக்க வேண்டும். யார் கண்டு பிடிப்பது?

இலங்கை தீவில் சிங்கள மக்கள் ஓர் அரசுடைய தரப்பு. எனவே அவர்களுக்கு நிறுவனப் பலம் உண்டு. போதிய கட்டமைப்புக்கள் உண்டு. அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவுகளுக்கூடாக அவர்கள் தங்களைப் பலப்படுத்திக் கொள்வார்கள.; எனவே அரசுடைய தரப்பு என்ற காரணத்தால் சிங்கள மக்களிடம் மூலோபாய ஆராய்ச்சிகளுக்கும் தந்திரோபாய ஆராய்ச்சிகளுக்கும் போதிய வளம் உண்டு. நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் பலமான கட்டமைப்புக்கள் உண்டு.

தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை அவர்கள் நீண்டகால நோக்கில் திட்டமிட்டுக் முன்னெடுக்கிறார்கள.; அங்கே இனவாதம் நன்கு நிறுவனமயப்பட்டுள்ளது. உதாரணமாக, சிங்களக் குடியேற்றங்கள் மூலம் தமிழ் மக்களின் நிலங்களை அபகரிப்பது, குடித்தொகையை நீர்த்துப் போகச் செய்வது. சிங்கள பௌத்த மயமாக்கலை செய்வது, வடக்கு கிழக்கைப் பிரிப்பது போன்ற எல்லா விடயங்களிலும் அவர்களிடம் மிக நீண்டகால நோக்கிலான திட்டங்கள் உண்டு. அவ்வாறு திட்டங்களை வகுத்துக் கொடுக்கத் தேவையான மூலோபாய ஆராய்ச்சி நிறுவனங்களும் தந்திரோபாய ஆராய்ச்சி நிறுவனங்களும் அவர்களிடம் உண்டு.

ஆனால் அரசற்ற தரப்பாகிய தமிழ் மக்களோ மையம் சிதறிக் காணப்படுகிறார்கள். ஒருபுறம் கூட்டமைப்பு எதிர்ப்பு அரசியல் சுலோகங்களின் கீழ் இணக்க அரசியலை செய்கிறது. இன்னொரு புறம், கூட்டமைப்புச் செய்வது பிழை என்று கூறும் தரப்புகள் தங்களுக்கிடையே ஐக்கியப்பட முடியாதவைகளாகக் காணப்படுகின்றன. மேற்படி தரப்புகளை ஒன்றிணைக்கும் ஓர் இடையூடாட்டத் தளமாகக் காணப்பட்ட பேரவையும் நலிந்து செல்கிறது.

இப்படிப்பட்டதோர் துர்ப்பாக்கியச் சூழலில்;தான் அடுத்த ஜனாதிபதி தேர்தல் வர இருக்கிறது. இனிவரும் காலம் ஒரு தேர்தல் காலம். தமிழ் மக்களிடம் இப்பொழுது ஆயுத போராட்டம் இல்லை. பலமான மக்கள் அமைப்பும் இல்லை. பேரவை ஒருநாள் எழுக தமிழை நடத்தி முடிப்பதற்கே கடுமையாக உழைக்க வேண்டி இருக்கிறது. இந்நிலையில் வெகுஜனக் கிளர்ச்சிகளின் மூலம் மக்கள் அதிகாரத்தை தம் கையில் எடுத்துக் கொண்டு மூலோபாய ரீதியாகவும் தந்திரோபாய ரீதியாகவும் அரசியலைத் திட்டமிடவல்ல எந்த ஒரு மக்கள் அமைப்பும் தமிழ் மக்கள் மத்தியில் கிடையாது.

இருப்பதெல்லாம் தேர்தல் மையக் கட்சிகள்தான.; அப்படியென்றால் மக்கள் அதிகாரத்தை தேர்தல் மூலம்தான் பெறலாம.; அவ்வாறு மக்கள் அதிகாரத்தை தேர்தல் மூலம் பெறுவது என்றால் சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கிடையே வெற்றியை மையமாகக் கொண்ட ஒரு பலமான கூட்டு உருவாக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலையொட்டி உடனடியாக அப்படியொரு கூட்டைபற்றி சிந்திக்க முடியாது அதற்குப் பின்னரும் சிந்திக்கலாமா என்பதே சந்தேகம்தான். இப்படிப்படடதோர் துர்பாக்கியச் சூழலில் வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து ஒன்றுபட்ட ஒருமித்த முடிவை தமிழ்த்தரப்பு எடுக்க முடியுமா?

பேரவை இது தொடர்பில் ஒரு நகர்வை மேற்கொண்டிருக்கிறது. அதற்கென்று ஒரு சுயாதீனமான குழுவை நியமித்திருக்கிறது. இக்குழு சம்பந்தப்பட்ட தமிழ்க் கட்சிகளை சந்தித்து வருகிறது. இது தவிர அண்மை நாட்களாக் ஆங்காங்கே சிறு சிறு சந்திப்புகள் ஒழுங்கு செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறான சந்திப்புகளில் தமிழ் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தும் தெரிவுக்கே அதிகம் ஆதரவு இருப்பதாகத் தெரிகிறது. அதன் மூலம் தமிழ் வாக்குகள் அத்தமிழ் வேட்பாளருக்கே விழும். அப்படி நடந்தால் முதலாவது வாக்குக் கணக்கெடுப்பில் எந்த ஒரு பிரதான சிங்கள வேட்பாளரும் ஐம்பது விகிதத்துக்கு கூடுதலான வாக்குகளை பெற முடியாத ஒரு நிலையை ஏற்படுத்தலாம் ஏன்று சிந்திக்கப்படுகிறது. அதன் மூலம் இரண்டாவது வாக்குக் கணக்கெடுப்புக்குப் போக வேண்டியிருக்கும். அதில் தமிழ் மக்கள் யாரைத் தமது இரண்டாவது விருப்பத் தெரிவாக தெரிவு செய்கிறார்களோ அவரே அடுத்த ஜனாதிபதியாக வரும் வாய்பு அதிகமாகும். அதாவது தமிழ் மக்களால் தீர்மானிக்கப்படும் ஒரு ஜனாதிபதி?
அப்படியென்றால் யார் அந்தப் பொதுத் தமிழ் வேட்பாளர்? அவரைக் கூட்டமைப்பும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இது நடக்கிற காரியமா? அப்படியென்றால் தமிழ் மக்களின் தெரிவு எது?

(நிலாந்தன்)

SHARE