அணு ஆயுத சோதனைக்கு எதிரான சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 29–ந் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. உலகில் அணு ஆயுதங்கள் இல்லாத நிலையை உருவாக்குவதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு அணு ஆயுத பரவல் தடைச் சட்டம் ஒன்றை ஐ.நா. கொண்டு வந்தது.
சீனா, எகிப்து, ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இதில் கையெழுத்திட்டு இருந்தாலும் கூட, இதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஒப்புதலை இன்னும் இந்த நாடுகள் அளிக்கவில்லை. இதேபோல் இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா ஆகிய 3 நாடுகளும் இந்த சட்டத்தில் இன்னும் கையெழுத்திடவில்லை.
இந்த நிலையில் அணு ஆயுத சோதனைக்கு எதிரான சர்வதேச தினத்தையொட்டி, பான் கீ மூன் விடுத்த அறிக்கையில், ‘‘அணு ஆயுத பரவல் தடைச் சட்டத்தில் இதுவரை கையெழுத்திடாத நாடுகளும், இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை அறிவிக்காத நாடுகளும் தங்களது ஒப்புதலை அளிக்கவேண்டும். அப்போதுதான் இந்த சட்டத்தை வேகமாக நடைமுறைப்படுத்த இயலும். அணு ஆயுத சோதனைகளுக்கு முடிவு கட்டப்பட்டால் அது உலக நாடுகளின் பாதுகாப்பான மற்றும் சுபிட்சமான எதிர்காலத்துக்கு வழி காட்டுவதாக அமையும்’’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.