நூருல் ஹுதா உமர்.
கடலோர மக்களுக்கு அலைகளும், அலையின் இசையும் புதிதல்ல. பழகிப்போன இசையும் இசைந்துபோன வாழ்வும் அது. சந்தேகமில்லா உறவு கடலுக்கும் அந்த மக்களுக்கும் அந்த டிசம்பர் 26 வரை இருந்தே வந்தது. அன்று வந்த சுனாமி அலையையும் சாதாரணமாகவே நினைத்தனர். ஆனால், ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்து பல ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வை தலைகீழாக புரட்டிப்போடும் என்று யாரும் கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்
2004 ஆம் ஆண்டு கிறிஸ்மஸின் மறுதினத்தை உலகம் அவ்வளவு எளிதில் மறக்க மாட்டாது. அந்த ஞாயிற்றுக்கிழமை எழும்பிய ஆழிப்பேரலையின் ஓலத்தின் ஓசை 16 ஆண்டுகள் கடந்தும் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இப்போதுவரை அந்தப் பாதிப்பில் இருந்து மீளமுடியாமல் உலகம் உழன்று கொண்டிருக்கின்றது. உலகில் ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கைப் பேரழிவுகளில் சுனாமியே முதன்மையானது. 2020 எனும் இவ்வாண்டு அமோசன் காடுகளை எரித்துக்கொண்டு ஆரம்பித்து இன்றுவரை ஆரம்ப சூடு தணியாமல் கடந்துவருவது வேறுகதை.
2004-ம் ஆண்டு இந்தோனேஷியாவின் சுமத்ரா எனும் தீவில் உள்ள கடல்பகுதியில் அதிகாலை வேளையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 9.1 முதல் 9.3 ரிக்டர் அளவிற்குப் பதிவானது. இதன் காரணமாக ஏற்பட்ட சுனாமியால் சுமார் 14 நாடுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். உலக பொருளாதாரம் பல கோடி டாலர்கள் கடலில் மிதந்து அழிந்தது.
இலங்கையின் கடலோர மாவட்டங்கள் எல்லாம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டன. இன்று வரை டிசம்பர் 26-ம் தேதி மறக்கமுடியாத நாளாக அனைவரின் உள்ளத்திலும் உள்ளது. கடலோர மக்களுக்கு அலைகள் புதிதல்ல. அன்று வந்த அலையையும் சாதாரணமாகவே நினைத்தனர். 2004 ஆம் ஆண்டு 26 ஆம் திகதி நத்தார் பண்டிகையை கொண்டாடிய சந்தோசத்தில் திளைத்திருந்த மக்களை, துயரத்தின் எல்லைக்கு கொண்டுசெல்லும் நிலையில் அந்த கோர சம்பவம் நடந்தேறியது. இந்து சமுத்திரத்தின் அருகில் உள்ள இந்தோனேசியாவின் தீவுக் கூட்டங்களில் ஒன்றான சுமாத்திரா தீவின் வடக்கே கடலுக்கு அடியில் காலை 07 மணியளவில் 9.0 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கமானது சுனாமியைத் தோற்றுவித்தது.
சுனாமி பேரலைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து, அந்தமான் தீவுகள் என உலகின் 14 நாடுகளைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்து 676 உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் வீடுகள், கட்டிடங்கள், வாகனங்கள், உயிரினங்கள் என கண்ணிமைக்கும் நொடியில் அனைத்தும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதில் இந்தோனேசியாவில் ஒரு இலட்சத்து 84 ஆயிரம் உயிர்களும் இலங்கையில் 35 ஆயிரத்து 322 பேரும் பலியானதாக அன்றைய ஆரம்ப அறிக்கை கூறியது.
சுனாமியின் தாக்கத்தால் அதிகளவான அழிவுகளை எதிர்கொண்ட இரண்டாவது நாடு இலங்கை என்பது வேதனையான உண்மை. எமது நாட்டில் சுமார் 35,322 பேரின் உயிர்கள் பறிபோகின. சுமார் ஐந்தரை இலட்சம் பேர் வரை இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன் லட்சக்கணக்கான கட்டிடங்கள் முற்றாக தரைமட்டமாகியது. வடக்கு-கிழக்கு மாகாண கடற்கரையோரப் பிரதேசங்களே அதிகளவான சுனாமி அழிவுகளை சந்தித்தது.
இலங்கையின் கிழக்கு கல்முனைப் பகுதியை தாக்கிய சுனாமி அலையினால் முற்றாக அழிந்துபோன அக்பர் கிராமம் முதல் பொத்துவில் வரையுள்ள நீண்ட கடற்கரைப் பகுதிகளே பெருமளவு பாதிப்பை கண்டுள்ளன. மட்டுமில்லாமல் திருக்கோவில் தம்பட்டை கிராமங்கள் முழுமையாக அழிந்துள்ளன. 2004இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையினால் இலங்கையின் பாரிய மனித உயிர்சேதம் அம்பாறை மாவட்டத்திலேயே இடம்பெற்றிருக்கின்றது. இங்கு சுமார் 9 ஆயிரத்திற்கும் அதிக மக்களை கடல் காவுகொண்டுள்ளது. இதற்கு அடுத்ததாக சுமார் 4500 பேர் ஹம்பாந்தோட்டையிலும். சுமார் 3774 பேர் காலியிலும், மட்டக்களப்பில் 2975 பேரும், முல்லைத்தீவில் 2902 பேரும் பலியானதாக ஆரம்ப அறிக்கை கூறியபோதிலும் பின்னர் இவை மாற்றம் ஏற்பட்டது. அதேசமயம் கொழும்பிலிருந்து ஹம்பாந்தோட்டை சென்ற ரயில், அதாவது மிகுந்த சனநெரிசல் மிக்க பயணிகள் ரயில் கடலலையின் சீரற்றத்திற்கு இரையானது. இதில் மிக மகிழ்வுடன் வீடு நோக்கிப் பயணித்தவர்களில் 1700 இற்கும் மேற்பட்ட மக்கள் மாண்டு போனார்கள். இது ஆசியாவின் ரயில் விபத்துக்களில் முக்கியமானதாகவும் உள்ளது.என்பதுதான் மறக்க முடியாத சோக நிகழ்வாகும்.
இந்த சுனாமியின் பாதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 14 நாடுகளில் ஒட்டுமொத்தமாக சுமார் 2,29,866 பேர் உயிரிழந்தனர். மேலும் 1,25,000 பேருக்கு மேல் காயமடைந்தனர். 43,786 காணாமல் போயினர். மேலும் 17 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் வாழ்விடத்தை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர்.அதிகம் பாதிக்கப்பட்ட நாடான இந்தோனேசியாவில் மட்டும் 1,67,736 உயிரிழந்துள்ளனர். 37,063 பேர் காணாமல் போயினர்.
நேரடியாகப் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்த பல நாட்டு சுற்றுலாப்பயணிகளும் இந்தப் பாதிப்பில் சிக்கி இறந்தது மிகவும் சோகமான விஷயம். மீனவர்கள் சுனாமியில் சிக்கி உயிரிழந்ததால் அவர்களையே நம்பியிருந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்றுவரை அந்தத் துயரத்திலிருந்து மீண்டுவரமுடியாமல் தவித்து வருகின்றனர். சுனாமி பாதிப்பின் நினைவாக ஆங்காங்கே சுனாமி நினைவுப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. சுனாமி பாதிப்பு ஏற்பட்டு இன்றுடன் 16-வது ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் உயிர்களை பறிகொடுத்த பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், மீனவர்கள், பொதுமக்கள் எனப் பலர் ஒவ்வொரு ஆண்டும் அவர்களை நினைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த பொழுதில் இலங்கை மண்ணை காவுகொண்ட சுனாமி அலை அம்பாறையை வெகுவாக பாதித்த போது இல்லிடம் கொடுத்து, உன்ன உணவும் கொடுத்து அடைக்கலம் காத்த சம்மாந்துறை மண்ணின் மனதையும், மறைந்த அமைச்சர் அன்வர் இஸ்மாயிலின் அன்றைய நாட்களையும் பாராட்டாமல் விட முடியாது. நாட்கள் கடந்து மாதங்கள் தாண்டி வருடக்கணக்கில் அடைக்கலம் கொடுத்தது மட்டுமின்றி சுனாமியில் மரணித்த உடல்களையும் சம்மாந்துறை மண் தனது மடியில் தாங்கி கொண்டது இங்கு நன்றியுடன் நினைவு கூறப்பட வேண்டியதே.