அனுராதபுர காட்டில் நமது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து கிடக்கும் ஆறு சோழர்காலக் கோயில்கள்

278

 

அனுராதபுர காட்டில் நமது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து கிடக்கும் ஆறு சோழர்காலக் கோயில்கள்
சிவபூமியின் சுவடுகளைத் தேடி இலங்கையின் பண்டைய தலைநகரான அனுராதபுரத்திற்குச் சென்றேன். அனுராதபுரத்தில் 40 இந்துக் கோயில்களின் சுவடுகள் உள்ளன என அறிந்தேன். அவற்றைக் கண்டறிய அனுராதபுரத்திற்கு இரண்டு தடவைகள் சென்று ஆய்வுகளை மேற்கொண்டேன். அப்போது ஜேதவனாராம விகாரை வளாகம், அபயகிரி விகாரை வளாகம் ஆகிய பகுதிகளில் யக்ஷ, யக்ஷி தெய்வங்களின் அழகிய சிற்பங்கள் பலவற்றைக் கண்டேன். அவை மட்டுமல்லாது பலவித வடிவங்களில் நாகராஜரின் சிற்பங்களையும் ஜேதவனாராம, அபயகிரி ஆகிய விகாரை வளாகங்களில் காணக் கிடைத்தது. பேராசிரியர் சிற்றம்பலம் இவற்றில் சிலவற்றைப் பற்றித் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். இவற்றைக் கண்டவுடன் ஆய்வு செய்யும் ஆர்வம் அதிகரிக்க அடுத்தடுத்து பல தடவைகள் அனுராதபுரத்திற்கு சென்று பண்டைய நகரில் இருந்த எல்லா இடங்களிலும் ஆய்வுகளை மேற்கொண்டேன்.
இக்கால கட்டத்தில் 130 வருடங்களுக்கு முன்பு எச்.சி.பி.பெல் எனும் ஆங்கிலேய ஆராய்ச்சியாளர் எழுதியிருந்த ஆய்வுக் குறிப்புகளைத் தேடி இலங்கைத் தொல்பொருள் திணைக் களத்திற்கு சென்று அவை பற்றிய விபரங்களையும் குறிப்பெடுத்தேன். அதில் அனுராதபுரத்தின் வடக்கில் இருந்த ஆறு கோயில்களைப் பற்றியும் அவர் குறிப்பிட்டிருந்தார். அவரது குறிப்பின் படி இந்த ஆறு கோயில்களும் ஒரே இடத்தில் உள்ளன. இவற்றை பெல் அவர்கள் தமிழர் இடிபாடுகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் மூன்றாவது தடவையாக அனுராதபுரத்திற்கு சென்றேன். அனுராதபுரம் பெளத்த யாத்திரீகர்களாலும், சுற்றுலாப் பயணிகளாலும் எப்பொழுதும் நிரம்பி வழியும் ஓர் சுற்றுலாத்தலம். அன்றும் அப்படித்தான். கூட்டம் களை கட்டியது. இந்தத்தடவை பெல் அவர்கள் குறிப்பிட்டிருந்த கோயில்களைத் தேடி அபயகிரி விகாரையின் வடக்குப் பக்கம் உள்ள பங்குளிய, பெருமியன் குளம், அசோகாராம, விஜேராம ஆகிய இடங்களுக்குச் சென்றேன். அங்கெல்லாம் பெல் குறிப்பிட்ட கோயில்களைக் காண முடியவில்லை.
அப்போதுதான் இவ்விடங்களுக்கு நடுவில் இருந்த ஓர் காட்டுப்பகுதி என் கவனத்தை ஈர்த்தது. அக்காட்டுக்குள் சென்று பார்க்க வேண்டும் எனும் ஆவல் ஏற்பட்டது.
அப்பகுதியில் தற்செயலாக சந்தித்த இரு சிங்கள தம்பிமாரின் உதவியுடன் காட்டுப் பகுதிக்குள் நுழைந்தேன். சுற்றுலாப் பயணிகள் யாரும் செல்லாத இடம். பட்டப் பகலில் கூட ஆள் நடமாட்டம் இல்லாத இடம். பறவைகளும், காட்டு வண்டுகளும் கத்தும் ஓசை மட்டுமே காதுகளில் கேட்டுக் கொண்டிருந்தது. சூரிய வெளிச்சமே படாமல் சற்று இருட்டாக அக்காட்டுப்பகுதி காணப்பட்டது.
காட்டுக்குள் சிறிது தூரம் நடந்து சென்று கொண்டிருந்த போது காலில் ஏதோ தடுக்கி விழப் பார்த்தேன். என் காலில் தடுக்கியது என்னவென்று பார்த்தபோது தான் தெரிந்தது, அது சிற்பங்கள் செதுக்கப்பட்ட ஓர் நாகக்கல். முக்கால்வாசி மண்ணுள் புதையுண்டு அக்கல் காணப்பட்டது. ஆர்வம் மேலிட அப்பகுதியில் இருந்த பற்றைகளையும், காய்ந்த சருகுகளையும் விலக்கிப் பார்த்த போது ஆச்சரியமும், ஆனந்தமும் அடைந்தேன். அவ்விடத்திலே காட்டுப் பற்றைகளுள் மறைந்தும், மண்ணுள் புதையுண்டும் ஏராளமான கோயில்களின் இடிபாடுகளும், பரந்த அளவில் நூற்றுக்காணக்கான கற்தூண்களின் துண்டங்களும், செங்கல் அத்திவாரங்களும், கட்டிடங்களின் சிதைவுகளும், ஓர் தீர்த்தக் கேணியின் இடிபாடுகளும், தீர்த்தக் கேணியின் படிக்கட்டுகளும் காணப்பட்டன. அதுதான் எச்.சி.பி.பெல் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் கோயில்களின் வளாகம் என்பதைப் புரிந்து கொண்டேன்.
என்னோடு வந்த தம்பிமார் இருவரும் இதுதான் “தமிழர்கள் அழித்த பெளத்த விகாரைகளின் சிதைவுகள்” எனக் கூறினார்கள். அந்த சிறுவர்களுக்கு இப்படித்தான் உண்மைக்குப் புறம்பாக ஓர் பொய்யைக் கூறி வைத்துள்ளார்கள் என்பது புரிந்தது. சுமார் 400 மீற்றர் நீள, அகலம் கொண்ட இக்காட்டுக்குள் எல்லா இடத்தையும் சுற்றி வந்தேன். ஒரு மணி நேரத்தின் பின் வெளியே வந்தோம்.
இது போன்று பாதையின் அடுத்த பக்கத்தில் உள்ள காட்டிலும், விஜேராம விகாரைக்கு செல்லும் வீதியில் உள்ள காட்டிலும் அழிக்கப்பட்ட விகாரைகளின் சிதைவுகள் இருப்பதாகக் அவர்கள் கூறினர். சிங்களத் தம்பிமார்களின் உதவியோடு பாதையின் கிழக்குப் பக்கத்தில் உள்ள காட்டிற்கும் சென்று பார்த்தேன். அங்கும் கோயில்களின் சிதைவுகளைக் கண்டேன். பின்பு தம்பிமார் இருவரையும் அனுப்பிவிட்டு விஜேராம காட்டுப் பகுதிக்குச் சென்றேன். அங்கும் சிதைவுகள் பெருமளவில் காணப்பட்டன.1000 வருடங்களுக்கு முன் ஒரே கோயில் வளாகமாக இருந்த இப்பிரதேசம் இப்போது பாதைகள் அமைக்கப்பட்டு மூன்று துண்டுகளாகப் பிரிக்கப் பட்டு விட்டது.
சுமார் 700 மீற்றர் அகலமும், 1500 மீற்றர் நீளமும் கொண்ட அந்தக் காட்டுப்பகுதி முழுவதும் கோயில்களின் சிதைவுகள் பரந்து காணப்பட்டன. மொத்தமாக இக்காட்டுப் பகுதியில் சுமார் 20 கட்டிடங்களின் இடிபாடுகள் காணப்பட்டன. குறைந்தது ஆறு கோயில்கள் இவ்விடத்தில் இருந்தன. வரலாற்று ஆய்வாளர் எச்.சி.பி.பெல் அவர்களின் ஆய்வுக் குறிப்புகளில் இவற்றை “Tamil Ruins” (தமிழர் இடிபாடுகள்) எனக் குறிப்பிட்டுள்ளார். 1893 ஆம் ஆண்டு பெல் அவர்கள் இவ்விடத்தில் இருந்து இரண்டு சிவலிங்கங்கள், மூன்று அம்மன் சிலைகள், மூன்று சூரிய பகவான் சிலைகள் உட்பட பல தொல்பொருள் சின்னங்களைக் கண்டெடுத்தார். அக்குறிப்புகளில் பெல் குறிப்பிட்டுள்ள அத்தனை இடங்களும் இங்கே துல்லியமாகக் காணப்பட்டமை ஆச்சரியத்தையும், பெருமகிழ்ச்சியையும் உண்டாக்கியது.
1000 வருடங்களுக்கு முன்பு அனுராதபுரத்தில் ஓர் சைவ சாம்ராஜ்யம் செழிப்புடன் விளங்கிய இடம் இன்று மனிதர்கள் உற்புகக்கூட முடியாத அளவிற்கு அடர்ந்த காடு மண்டிப்போய் கிடக்கிறது. மந்திர முழக்கமும், மணி ஓசையும் இடை விடாமல் ஒலித்துக் கொண்டிருந்த ஓர் இடம் இன்று மயான அமைதியுடன் உறங்கிக் கொண்டிருந்தது. இந்துக் கோயில்கள் காணப்படும் இக்காட்டுப் பகுதியைச் சுற்றி இலங்கைத் தொல்பொருள் திணைக்களத்தினால் “பெருமியன் குளம் ஒதுக்கப்பட்ட பிரதேசம்” என பெயர் பலகை போடப் பட்டுள்ளது.
பண்டைய அனுராதபுர நகரில் உள்ள பெளத்த வழிபாட்டிடங்கள் அனைத்தும் கலாசார முக்கோணத் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு பெளத்த மக்கள் வழிபடும் வகையில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆனால் சைவ மக்களின் மூதாதையர்களால் வழிபடப்பட்ட இந்துக் (சைவக்) கோயில்கள் எதுவும் புனரமைக்கப்படாமல் தேடுவாரற்று காடுகளுக்குள் மறைந்து போய்க் கிடக்கின்றன. இதன் மூலம் புராதன அனுராதபுர இராச்சியத்தில் சைவசமயம் இருக்கவில்லை எனும் தோற்றப்பாட்டை எதிர்கால சந்ததியினர் நோக்கும் நிலை உருவாகியுள்ளது. அதேசமயம் இங்கிருந்து எடுக்கப்பட்ட அழகிய இந்து (சைவம) தெய்வச்சிலைகள் இலங்கையின் நூதன சாலைகளையும், தொல்பொருள் காட்சிச் சாலைகளையும் அழகு படுத்திக் கொண்டு உல்லாசப் பிரயாணிகளைக் கவரும் வகையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர்
இலங்கை.
SHARE