மனித உரிமைப் பிரகடனத்தில் 30 உறுப்புகள் அடிப்படை உரிமைகள்
மனித உரிமை என்பது, ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப்பெறவேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனிதன் என்றாலே அவன் இவைகளால் வாழ முடியாது என கருதப்படும் அடிப்படையான தேவைகளை உள்ளடக்கிய உரிமைகள் இதில் சாரும். இந்த உரிமைகள் “மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக”[1] கருதப்படுகின்றன. இனம், சாதி, நிறம், சமயம், பால், தேசியம், வயது, உடல் உள வலு ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கும் இந்த அடிப்படை உரிமைகள், மனிதர் சுதந்திரமாக, சுமூகமாக, நலமாக வாழ அவசியமான உரிமைகளாகக் கருதப்படுகின்றன. மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள், வாழும் உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை, நகர்வுச் சுதந்திரம், பண்பாட்டு உரிமை, உணவுக்கான உரிமை, கல்வி உரிமை என்பன முக்கியமானவை. மனிதனின் இன்றியமையாத தேவைகளான நீர், நிலம், காற்று. உறைவிடம், பிறப்பு மற்றும் வாழுதல் போன்றவைகளை அடிப்படையாகக்கொண்டும் அந்தந்த நாட்டின் மூலச்சட்டங்களையும் கருத்தில்கொண்டும் இந்த மனித உரிமைகள் வடிவமைக்கப்படுகின்றன.
நோக்கம்
முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள் நடைபெற்றபோது வளர்ந்த மற்றும் பலம் மிகுந்த நாடுகளின் ஆதிக்க வெறிக்கு சாமானிய மக்கள் பலியானது சமூக சிந்தனையாளர்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து உருவான ஐக்கிய நாடுகள் அவை, உலகில் உள்ள அனைத்து மனித குலத்தினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான ஆவணம் ஒன்றை உருவாக்கியது.
1948ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி, பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையில் “அனைத்துலக மனித உரிமைப் பிரகடனம்” அறிமுகம் செய்யப்பட்டது. உடனடியாக 58 உலக நாடுகள் இந்த பிரகடனத்தை அங்கீகாரம் செய்தன.
மனித உரிமைப் பிரகடனத்தில் 30 உறுப்புகள்
1. சமத்துவ உரிமை – சகல மனிதர்களும் சுதந்திரமாக பிறக்கின்றனர். அவர்கள் பெருமானத்திலும், உரிமைகளிலும் சமமானவர்கள், அவர்கள் நியாயத்தையும், மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள்.
2. ஏற்றத்தாழ்வுகள் காட்டப்படாமல் இருப்பதற்கான உரிமை – இனம், நிறம், பால், மொழி, மதம், அரசியல் மற்றும் தேசிய அல்லது சமூகம், பிறப்பு அல்லது பிற அந்தஸ்துகளால் வேறுபடுத்த முடியாமல் உலகில் உள்ள மனிதர்கள் எல்லோரும் சம உரிமை பெற்றவர்கள்.
3. சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு.
4. யாரையும் அடிமையாக நடத்த எவருக்கும் உரிமை இல்லை.
5. சித்திரவதைக்கு, மனிதத் தன்மையற்ற தாக்குதல்களுக்கும் உள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம்.
6. சட்டத்தின் முன் அனைவருக்கும் சம உரிமை
7. பாரபட்சம் எதுவுமின்றி சட்டத்தின் பாதுகாப்புக்கும் எல்லோரும் உரித்தானவர்கள்.
8. ஒருவரின் உரிமை மதிக்கப்படாத போது சட்ட உதவியை நாடும் உரிமை.
9. சட்டத்துக்கு புறம்பாக ஒருவரை காவலில் வைக்கவோ, நாடு கடத்தவோ யாருக்கும் உரிமை இல்லை.
10. நீதியான, பகிரங்கமான விசாரணைக்கான உரிமை
11. குற்றஞ்சாட்டப்படுவோர், குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என நிரூபிக்க வாய்ப்பு வழங்கும் உரிமை.
12. தனிப்பட்ட அல்லது அந்தரங்க விஷயத்தில் எவரும் தலையிடாமல் இருப்பதற்கான சுதந்திரம்.
13. ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் சுதந்திரமாக நடமாடுவதற்கும், நாட்டை விட்டு வெளியேறவும், திரும்பி வரவும் உரிமை.
14. ஆபத்து காலத்தில் பிற நாட்டில் தஞ்சம் கேட்க உரிமை உண்டு.
15. ஒவ்வொரு பிரஜைக்கும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற தேசிய இனத்தை மாற்றிக்கொள்ள உரிமை.
16. எந்த ஆணும், பெண்ணும் விரும்பினால், திருமணம் செய்துகொண்டு பாதுகாப்புடன் குடும்பம் நடத்துவதற்கான உரிமை. சமுதாயத்தாலும், அரசாலும் இது பாதுகாக்கப்பட வேண்டும்.
17. சொத்து வைத்துக்கொள்ளும் உரிமை. தனியாகவும், கூட்டாகவும் ஆதனத்தைச் சொந்தமாக வைத்திருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.
18. சிந்தனைச் சுதந்திரம், மனச்சாட்சிச் சுதந்திரம், மதச் சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.
19. கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் எவருக்கும் உண்டு. எவ்வழிவகைகள் மூலமும், எல்லைகள் இன்றி தகவலையும் கருத்துக்களையும் நாடுவதற்கும், பெறுவதற்கும் பரப்புவதற்குமான சுதந்திரம்.
20. எந்த ஒரு கூட்டத்திலும் கலந்துகொள்ள, சங்கத்தில் உறுப்பினராக யாருக்கும் உரிமை உண்டு.
21. அரசியல் உரிமை – அரசாங்கத்தில், சுதந்திரமான தேர்தலில் பங்குபெறவும், பொதுச்சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்குமான உரிமை, ஒவ்வொருவருக்கும் தத்தம் நாட்டிலுள்ள அரசாங்க சேவையில் சமமான முறையில் அமர்த்தப்படுவதற்கு உரிமையுண்டு.
22. சமூகப் பாதுகாப்பிற்கும், தன் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் உரிமை
23. ஒவ்வொருவரும் விரும்பிய தொழில் செய்யவும், வேறுபாடு எதுவுமின்றி, சமமான தொழிலுக்குச் சமமான சம்பளம் பெறுவதற்கு உரிமை கொண்டவர்கள். ஒவ்வொருவருக்கும் தொழிற்சங்கம் அமைக்க உரிமை. அவற்றில் சேர்வதற்கும் உரிமையுண்டு.
24. இளைப்பாறுவதற்கும், ஓய்வெடுக்கவும் உரிமை.
25. ஒவ்வொருவரும் உணவு, உடை, இருப்பிடம், மருத்துவக் காப்பு, அவசியமான சமூக சேவைகள் உட்பட தமது குடும்பத்தினாலும், உடல் நலத்துக்கும் நல்வாழ்வுக்கும் போதுமான வாழ்க்கைத்தரத்துக்கு உரிமை உடையவர்.
26. அத்துடன் வேலையின்மை, இயலாமை, கைம்மை, முதுமை காரணமாகவும் அவை போன்ற அவரது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட பிற சூழ்நிலை காரணமாகவும் வாழ்க்கை வழியில்லாமை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு பெறவும் உரிமை உண்டு.
27. தாய்மை நிலையும் குழந்தைப் பருவமும் விசேஷ கவனிப்பு மற்றும் உதவியை பெற உரிமை கொண்டவை.
28. ஒவ்வொருவருக்கும் கல்வி கற்பதற்கான உரிமையுண்டு. குறைந்தது ஆரம்ப அடிப்படைக் கட்டங்களிலாவது கல்வி இலவசமாக இருத்தல் வேண்டும்.
29. சமுதாயத்தின் பண்பாட்டு வாழ்க்கையில் சுதந்திரமாகப் பங்குகொள்வதற்கும், கலை மற்றும் அறிவியல் முன்னேற்றத்திலும், அதன் நன்மைகளிலும் பங்கெடு்ப்பதற்கும் எவருக்கும் உரிமையுண்டு.
30. மனித உரிமைகளை உறுதிசெய்யும் சமூக அமைப்புகளில் பங்குபற்றும் உரிமை.
31. ஒவ்வொருவரும் பிறரது உரிமையை மதிக்க வேண்டும்.
32. இந்த பிரகடனத்தில் குறிபிட்டுள்ள எந்த ஒரு உரிமையையும் ஒருவர் பெறுவதற்கு தடையாக இருக்க உரிமை கிடையாது.
ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையத்தின் இணைய தளத்தில் இந்த பிரகடனத்தின் தமிழ் மொழி பெயர்ப்பும் உள்ளது.
இந்த மனித உரிமைப் பிரகடனத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்லும் பணியில் பல அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
எனினும் மனித உரிமைகள் குறித்து அனைத்து மக்களிடமும், போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பதே உண்மை.
மனித உரிமைகள் குறி்த்து மக்களிடம் ஏற்படும் விழிப்புணர்வே மனித உரிமைகளை பாதுகாக்கவும், மேலும் விரிவுபடுத்தி வளர்த்தெடுக்கவும் உதவும். இதற்கான பணியில் கல்வி அறிவு பெற்ற அனைவரும் பங்கேற்க வேண்டும்.
மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளை நாம் மனித உரிமைகள் என்று அழைக்கிறோம்.
சாதி, மதம், பால், இனம், நாட்டுரிமை ஆகிவற்றிற்கு அப்பால், ஒவ்வொரு தனி மனிதருக்கும் பொதிந்திருக்கக் கூடிய பிறப்புரிமைகளை, மனிதனின் சுதந்திரத்திற்கும், கண்ணியத்திற்கும், நலன்களுக்கும் அவசியமான உரிமைகளை, மனித உரிமைகள் என்று நாம் அழைக்கின்றோம். மனிதர்களுக்கு மனித உரிமைகள் மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவதால் சில நேரங்களில் மனித உரிமைகளை அடிப்படை உரிமைகள் என்றும், இயற்கை உரிமைகள் என்றும், பிறப்புரிமைகள் என்றும், உள்ளார்ந்த உரிமைகள் என்றும் நாம் அழைக்கின்றோம். ஒவ்வொரு நாட்டிலும் அதற்கேற்ற, உரிய சட்டமியற்றும் வழிமுறைக்கு ஏற்ப இந்த மனித உரிமைகள் சட்ட வடிவம் பெறுகின்றது. டி.டி பாசு அவர்கள் மனித உரிமைகளை வரையறுக்கும் பொழுது “எவ்வித மறுபயனுமின்றி மனிதனாகப் பிறந்த காரணத்தினாலேயே அரசிற்கு எதிராக ஒவ்வொரு தனி நபருக்கும் இருக்கக் கூடிய குறைந்தபட்ச உரிமைகளே மனித உரிமைகள்” என்று குறிப்பிட்டுள்ளார். 1993ஆம் ஆண்டு வியன்னா நகரில் நடைப்பெற்ற மனித உரிமைகள் குறித்த உலக மாநாட்டின் பிரகடனத்தில் “மனிதனின் மதிப்பிலிருந்தும், கண்ணியத்திலிருந்தும் விளைவதே மனித உரிமைகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல, அதுபோல் மனித உரிமைகள் எவராலும் வழங்கப்பட்டதுமல்ல. எனவே தான் மனித உரிமைகள் எவராலும் பறிக்கப்பட முடியாத உரிமைகள் என அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது. மனிதனாகப் பிறந்த காரணத்தினால், ஒருவனுக்கு இயற்கையிலேயே உடன் பிறந்த உரிமைகள் மனித உரிமைகள். இந்த உரிமைகள் எந்த ஒரு சமுதாயத்தினாலோ, அரசினாலோ அல்லது அரசியல் அதிகார அமைப்புகளினாலோ உருவாக்கப்பட்டதல்ல. அதனால்தான் எந்த ஒரு அரசிற்கும், அதிகார அமைப்பிற்கும் மனித உரிமைகளை மீறுவதற்கான அதிகாரம் அளிக்கப்படவில்லை.
மனித உரிமைகளின் வகைகள்
மனித உரிமைகள் பொதுவாக பிரிக்கப்பட முடியாதவை. மேலும், அவை ஒன்றோடு ஒன்று சார்ந்து இருப்பவை. அதனால் பல்வேறு வகையான மனித உரிமைகள் இருப்பதற்கு சாத்தியமில்லை. முக்கியத்துவத்தின் அடிப்படையிலும், அனைத்து மனித உரிமைகளும் சமமான முக்கியத்துவத்தினை பெறுகிறது. அதனால்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தில் எவ்விதமான வகைப்பாடுகளும் காணப்படவில்லை.
உரிமைகள்
அவை :
1. குடிமையியல்
2. அரசியல் உரிமைகள்
3. பொருளாதார உரிமைகள்
4. சமூக உரிமைகள்
5. கலாச்சார உரிமைகள்
மனித உரிமைக் கல்வி – தனி மனிதருக்கு உரிய உரிமைகள்
• குடிமை உரிமைகள் (Civil Rights)
• உயிர் வாழ்வதற்கான உரிமை
• சட்டத்திற்கு முன் சமமாக நடத்தப்படுவதற்கான உரிமை
• தேசிய இனத்திற்கான உரிமை
• நீதிமன்றத்தை அணுகுவதற்கான உரிமை
• வெளிப்படையான விசாரணைக்கான உரிமை
• குற்றமற்றவர் என அனுமானிக்கப்படுவதற்கான உரிமை
(இலவச) சட்ட உதவிக்கான உரிமை
• குற்றம் சுமத்தப்பட்டவர் முன்னிலையில் விசாரணை நடக்கவும், அவரே எதிர் வாதாடவும் உள்ள உரிமை
• உறுதியளிக்கப்பட்ட உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் மீறப்படும்போது குறைத்தீர்க்கும் அமைப்புகளை அணுகுவதற்கான உரிமை.
• ஒரே குற்றத்திற்காக இருமுறை தண்டிக்கப்படுவதிலிருந்து விடுதலை பெறுவதற்கான உரிமை
மேல்முறையீடு, மறுபரிசீலனை செய்வதற்குமான உரிமை
• மதம் மற்றும் அரசியல் நம்பிக்கைகள் உட்பட கருத்து கொண்டிருக்க உரிமை
• தனது வீட்டில் தனியாக இருக்க உரிமை
• தன் மாண்பும் நற்பெயரும் காக்கப்படுவதற்கான உரிமை
நடமாட்ட சுதந்திரத்திற்கான உரிமை
• நீதி தவறாக வழங்கப்படுகையில் நிவாரணம் பெறும் உரிமை
• தன்னிச்சையாக நாடு கடத்தப்படாமல் இருப்பதற்கான உரிமை
• ஒரு நாட்டில் நுழைவதற்கான உரிமை
• ஒரு நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான உரிமை
அரசியல் உரிமைகள்
• கருத்துகளை வெளியிட உரிமை
• கூட்டம் கூடுவதற்கான உரிமை
• சங்கமாகச் சேருவதற்கான உரிமை
• வாக்களிப்பதற்கான உரிமை
• அரசியல் பங்கேற்புகான உரிமை
• பொதுப்பணிகளில் சம வாய்ப்பு பெறுவதற்கான உரிமை
பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகள்
• வேலைக்கான உரிமை
• வேலையைத் தெரிவு செய்யும் உரிமை
• சொத்து வைத்திருப்பதற்கான உரிமை
• போதிய வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருப்பதற்கான உரிமை
• கல்வி பெறுவதற்கான உரிமை
• சமூகப் பாதுகாப்புக்கான உரிமை
• ஆயுள் காப்பீட்டுக்கான உரிமை
• சமூக, மருத்துவ உதவி பெறும் உரிமை
• அறிவியல் முன்னேற்றங்களின் பலன்களை அனுபவிப்பதற்கான உரிமை
• சுகாதாரம், பாதுகாப்புக்கான உரிமை
குழுக்களின் உரிமைகள்
• சமய ஊதியத்திற்கான உரிமை (ஒரே வகைப்பட்ட வேலைக்கு சமமான ஊதியம்)
• கூட்டாகப் பேரம் பேசுவதற்கான உரிமை
• தொழிற்சங்கங்களை அமைப்பதற்கும், தொழிற்சங்கங்களில் சேர்வதற்குமான உரிமை போராட்ட உரிமை
• பணி நீக்கம் செய்யப்படுவதற்குமுன் முன்னறிவிப்புப் பெறும் உரிமை
• பதவி உயர்வில் சம வாய்ப்பும், பாதுகாப்பான, சுகாதாரமான பணிச்சூழலில் பணிப்புரிவதற்குமான உரிமை
• வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுதல், பயிற்சி பெறும் உரிமை
• சம்பளத்துடன் கூடிய விடுப்புக்கான உரிமை
• நியாயமான ஊதியத்திற்கான உரிமை
• வரையறுக்கப்பட்ட வேலை நேரத்திற்கான உரிமை (வாராந்திர ஓய்வுக்கான உரிமை)
பெண்களுக்கான உரிமைகள்
• சம ஊதியம் பெறுவதற்கான உரிமை
• பாலியல் சமத்துவத்திற்கான உரிமை
• தம்பதியருக்கிடையில் சமத்துவ உரிமை
• சுரண்டலிலிருந்து பாதுகாப்புப் பெற உரிமை
• கர்ப்பிணிப் பெண்கள் மகப்பேறு விடுப்புரிமை
• குழந்தைகள், இளங்குற்றவாளிகளுக்கான உரிமைகள்
கல்விப் பெறுவதற்கான உரிமை
• தொழிற்பயிற்சி மற்றும் வேலையிடைப் பயிற்சிகளை இலவசமாகப் பெற உரிமை
• கைது செய்யப்பட்ட இளம் குற்றவாளிகள் புனர்வாழ்வுப் பெற உரிமை
• மரண தண்டனை விதிக்கப்படாமல் இருப்பதற்கான உரிமை
• சித்திரவதை, சுரண்டல், கவனிக்கப்படாமையிலிருந்து பாதுகாப்புப்
பெறுவதற்கான உரிமை
• வேலைக்கான குறைந்தபட்ச வயதை நிர்ணயிக்கும் பாதுகாப்பு உரிமை
• விளையாட்டு, பொழுதுபோக்கிற்கான வாய்ப்புப் பெறும் உரிமை
• சமூக சேவைகளைப் பெறுவதற்கான உரிமை
சிறைக்கைதிகளின் உரிமைகள்
• சிறைக்கைதியாகப் பதிவு செய்யபடுவதற்கான உரிமை
• சிறைக் கைதிகளை வகைப்படுத்திப் பிரித்து வைப்பதற்கான உரிமை
• சிறையில் தனியாகத் தங்கவைக்கப்படுவதற்கான உரிமை
• போதிய காற்றோட்டம், வெளிச்சம், உடல்நலம் மற்றும் சுகாதாரத்திற்குத்
தேவையான வசதிகளுக்கான உரிமை
• துணிமணிகள், படுக்கை, போதிய உணவு, தண்ணீர், மருத்துவ வசதி பெற உரிமை பயிற்சி, விளையாட்டுக்கான உரிமை
• கொடூரமான, கேவலமான தண்டனைகளிலிருந்து பாதுகாப்புப் பெறும் உரிமை
• அதிகாரிகளிடம் வேண்டுகோள் மற்றும் புகார்கள் கொடுப்பதற்கான உரிமை
• குடும்பம், நண்பர்களுடன் தொடர்பு கொள்வதற்கான உரிமை (கடிதத்
தொடர்பு, நேர்காணல் மூலம்)
• வெளியுலகச் செய்திகளை தொடர்ந்து பெறுவதற்கான உரிமை
• சிறைச்சாலையின் நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கான உரிமை
மதத்தைப் பின்பற்றுவதற்கான உரிமை
• சொந்த சொத்துக்களை வைத்துக் கொள்ளவதற்கான உரிமை
• பெண் சிறைக் கைதிகள் பெண் அதிகாரிகளாலேயே பாதுகாக்கப்படுவதற்கான உரிமை