வெள்ளையர் ஆட்சியில் இருந்து இந்தியா 1947 ஓகஸ்ட் 15ஆம் திகதி விடுதலை அடைந்தது. அதற்கு 5 1/2 மாதம் கழித்து, 1948 பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கை சுதந்திரம் பெற்றது.
சுதந்திரப் போராட்டம்
இரண்டு நாடுகளும் சுதந்திரம் அடைந்ததில் பெரிய வித்தியாசம் உண்டு.
இந்தியாவிற்கு சுதந்திரம் பெறுவதற்காக, மகாத்மாகாந்தி 30 ஆண்டுகளுக்கு மேலாக அஹிம்சை வழியில் உண்ணாவிரதம், உப்பு சத்தியாகிரகம் போன்ற போராட்டங்களை நடத்தினார். வேறு வழி இல்லாமல், சுதந்திரம் கொடுக்க இங்கிலாந்து முடிவு செய்தது. இலங்கையில் அத்தகைய போராட்டம் எதுவும் நடக்கவில்லை. வெள்ளையர்கள் தாங்களாகவே முன்வந்து சுதந்திரம் கொடுத்தனர். இன்னொரு முக்கிய வித்தியாசம், ‘முஸ்லிம்களுக்கு தனி நாடு வேண்டும்’ என்று ஜின்னா போராடி வெற்றியும் பெற்றார். அதனால் இந்தியா துண்டாடப்பட்டு, ‘பாக்கிஸ்தான்’ அமைக்கப்பட்டது. ஆனால், ‘தமிழீழம்’ வேண்டும் என்று போராடுவதற்கு அந்த நேரத்தில் இலங்கையில் யாரும் இல்லை. அதன் காரணமாக, முழு இலங்கையையும் சிங்களவர்களின் கையில் வெள்ளையர்கள் ஒப்படைத்துவிட்டனர். அப்போது தமிழர் தலைவர்கள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தியிருந்தால், ‘தமிழ் ஈழம்’ கிடைத்திருக்கும்.
சிங்கக்கொடி
1948 பெப்ரவரி 4ஆம் திகதி, இலங்கையில் பறந்து கொண்டிருந்த இங்கிலாந்து நாட்டுக்கொடியான ‘யூனியன் ஜாக்’ இறக்கப்பட்டது. இலங்கையின் தேசியக் கொடி (சிங்கக்கொடி) ஏற்றப்பட்டது. இக்கொடியை வடிவமைக்கும்போது, ‘இலங்கை, சிங்களர் தேசம் என்று குறிக்கும் விதத்தில் சிங்கத்தை இடம் பெறச் செய்திருக்கிறீர்கள். இலங்கையின் மற்றொரு தேசிய இனமான தமிழர்களைக் குறிக்கும் வகையில், கொடியில் மாறுதல் செய்யவேண்டும்’ என்று தமிழர்களால் வற்புறுத்தப்பட்டது. இக்கோரிக்கை ஏற்கப்படவில்லை.
தமிழர்களின் உரிமை பறிப்பு
சுதந்திரத்திற்கு முன்னதாக நடந்த தேர்தலில் வெற்றிபெற்று பிரத மராக இருந்த டி.எஸ்.சேனநாயக, தொடர்ந்து பிரதமராக நீடித்தார். இலங்கை சுதந்திரம் அடைந்ததால், தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வெள்ளையர் ஆட்சியின்போது ஓரளவுக்கு இருந்த உரிமைகளும் பறிபோ யின. தேயிலைத்தோட்டங்களிலும், ரப்பர் தோட்டங்களிலும் ஓயாது உழைத்த மலையகத் தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. 10 லட்சம் மலையகத் தமிழர்கள் வாக்குரிமை இழந்து, ‘நாடற்றவர்கள்’ என்று அறிவிக்கப்பட்டனர். அதாவது 1931, 1936, 1941, 1947 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வாக்களித்த 10 லட்சம் தமிழர்கள், அந்த உரிமையை இழந்தனர்.
இலங்கை சுதந்திரம் அடைந்து ஒரு ஆண்டு ஆவதற்குள் இந்த அநியாயம் நடந்தது. இந்தச்சட்டம் நடைமுறைக்கு வந்ததால், இலங்கையில் தமிழர்களால் குழப்பம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும், இந்திய அரசாங்கத்தின் எதிர்ப்போ, இங்கிலாந்து அரசின் எதிர்ப்போ வந்தால் அதை சமாளிக்கவும் பிரதமர் சேனநாயக ஒரு ராஜதந்திர யுக்தியைக் கையாண்டார். அப்போது ‘அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்’ தலைவராக இருந்த ஜி.ஜி.பொன்னம்பலத்தை அரசாங்கத்துக்கு ஆதரவாக இழுக்கத் தீர்மானித்தார். பொன்னம்பலத்தை சந்தித்துப்பேச தன் நம்பிக்கைக்கு பாத்திரமான ஆலிவர் குனதிலகாவை தூது அனுப்பினார்.அவர், பொன்னம்பலத்தை சந்தித்தார். ‘எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு என்ன சாதிக்கப்போகிறீர்கள்? அரசாங்கத்தில் இடம்பெற்று, தமிழ் மக்களுக்கு நன்மை செய்யலாமே!’ என்று ஆசை காட்டினார்.
இதுபற்றி, கட்சியின் செயற்குழுவில் கலந்துபேசி, அதன்பின் தன் முடிவைத் தெரிவிப்பதாக பொன்னம்பலம் கூறினார்.
அதன்படி செயற்குழு கூடியது. மந்திரிசபையில் சேரலாமா, வேண்டாமா என்று காரசாரமாக விவாதம் நடந்தது. ‘மந்திரிசபையில் சேருவது நல்லது’ என்று பாராளுமன்ற தமிழ் உறுப்பினர் குமாரசாமி கூறினார். கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நாகநாதன் அதை கடுமையாக எதிர்த்தார். ‘டி.எஸ்.சேனாநாயகவை வகுப்புவாதி என்று சில நாட்களுக்கு முன் ஏசினீர்களே! எந்த முகத்தோடு அவருடைய மந்திரிசபையில் போய் சேருவீர்கள்?’ என்று பொன்னம்பலத்தை நேருக்குநேராகப் பார்த்துக்கேட்டார். ‘எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு உணர்ச்சிகரமாகப் பேசலாமே தவிர, தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யமுடியாது’ என்று பொன்னம்பலம் பதில் அளித்தார்.
செல்வநாயகம் எச்சரிக்கை
பிற்காலத்தில் ‘இலங்கை தமிழர்களின் தந்தை’ என்று புகழ்பெற்ற எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அப்போது ‘இலங்கை தமிழ்க் காங்கிரஸ்’ கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். ‘தமிழ் மக்களை பலவீனப்படுத்தவே, சேனாநாயக உங்கள் ஆதரவைக் கோரியுள்ளார். அவருடைய வலையில் சிக்க வேண்டாம்’ என்று அவர் பொன்னம்பலத்தை எச்சரித்தார். அவரு டைய கருத்தை இன்னொரு முக்கிய தலை வரான வன்னியசிங்கம் ஆதரித்தார்.முடிவில், இரு தரப்பினரையும் சமரசம் செய்யும் நோக்கத்துடன் ஒரு தீர்மானத்தை செயற்குழு நிறைவேற்றியது. ‘மலை யகத் தமிழர்களுக்கு பிரஜா உரிமை கிடைப்பதற்கு, பிரஜா உரிமைச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை செய்ய சேனா நாயக சம்மதித்தால், மந்திரிசபையில் இலங்கை தமிழ்க்காங்கிரஸ் சேரலாம்’ என்பதே அந்த தீர்மானத்தின் சாரமா கும். இந்த தீர்மானத்தை குணதிலகாவி டம் பொன்னம்பலம் தெரிவித்தார். ‘பிரஜா உரிமை சட்டத்திற்கு திருத்தம் கொண்டு வருவதில் சிரமம் ஏதும் இல்லை. நீங்கள் முதலில் மந்திரியாகிவிடுங்கள். அதன் மூலமாக, சட்டம் திருத்தம் செய்வது எளிதாகி விடும்’ என்று பசப்பு வார்த்தைகள் கூறினார், குணதிலகா. அவர் கூறியதை அப்படியே நம்பினார் பொன்னம்பலம். மந்திரி பதவி ஏற்க சம்மதம் தெரிவித்தார். 1948 டிசம்பர் மாதத்தில், அவரை மந்திரியாக சேனாநாயக நியமித்தார். பொன்னம்பலம் விரும்பியபடியே கைத்தொழில், கடல் சார்ந்த தொழில் ஆகிய இலாகாக்கள் அவருக்கு ஒதுக்கப்பட்டன. அவருடைய ஆதரவாளரான கனகரத்தினத்துக்கு துணை மந்திரி பதவி கொடுக்கப்பட்டது.
கட்சி உடைந்தது
இதைத்தொடர்ந்து ‘இலங்கை தமிழ்க் காங்கிரஸ்’ இரண்டாக உடைந்தது.பொன்னம்பலத்தை எதிர்த்தவர்கள் செல்வநாயகம் தலைமையில் ஒன்று திரண்டனர். பொன்னம்பலம் கோஷ்டியும், செல்வநாயகம் கோஷ்டியும் தனித்தனியாக செயற்குழு கூட்டங்களை கூட்டி, ஒரு வரை நீக்கி தீர்மானம் நிறைவேற்றினர். செல்வநாயகம், தமிழர் வாழும் பகுதி களை ஒன்று சேர்த்து தனி மாகாணம் ஆக்கி, ‘சுயாட்சி’ வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினார். ‘தமிழர் பகுதி களை ஒருங்கிணைத்து ஒரே மாகாணமாக அமைக்கவேண்டும். இதுபோல், சிங்களப் பகுதிகளை ஒன்றுசேர்த்து மற்றொரு மாகாணம். இரண்டுக்கும் பொதுவான ஒரு மத்திய அரசு. மாநிலங்களில் சுயாட்சி. மத்தியில் கூட்டாட்சி. இதன் மூலமாகத்தான் தமிழர்களின் நலனை காப்பாற்றமுடியும்’ என்று அவர் கூறினார்.
இதற்காக புதிய கட்சி தொடங்க தீர்மானிக்கப்பட்டது.
‘தமிழரசு கட்சி’ உதயம் செல்வநாயகம் தொடங்கினார்.
இலங்கைத் தமிழர்களுக்கு சுயாட்சி பெற்றுத்தரும் நோக்கத்துடன் ‘தமிழரசு கட்சி’ யை செல்வநாயகம் தொடங்கினார். அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஜி.ஜி.பொன்னம்பலம், பிரதமர் சேனாநாயகவின் அழைப்பை ஏற்று மந்திரியாகிவிட்டதால், கட்சி இரண்டாக உடைந்தது. கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய எஸ்.ஜே.வி.செல்வநாயகம், தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து புதிய கட்சி தொடங்க முடிவு செய்தார்.
வழக்கறிஞர்
செல்வநாயகத்தின் முழுப்பெயர் சாமு வேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம். இவர் 1898 மார்ச் 31ஆம் திகதி, மலாயாவில் உள்ள ஈப்போ நகரில் பிறந்தார். பிராடஸ்டன்ட் கிறிஸ்துவர். இளம் வயதிலேயே இலங்கையில் குடி யேறி, தெல்லிப்பளை என்ற கிராமத்தில் ஆரம்பக்கல்வி பயின்றார். பின்னர் யாழ்ப்பாணம் செயின்ட் ஜோன்ஸ் கல்லூரியில் சேர்ந்து கல்வி பயின்றார். பிறகு அதே கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்த்தார். பின்னர் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார். பிற்காலத்தில் பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவின் தந்தை ஈஸ்மன்ட் விக்கிரமசிங்கே, பிர தம நீதிபதியான நெவில் சமரக்கோன் உட்பட பல முக்கிய புள்ளிகள் இவரிடம் ஜூனியர்களாகப் பணியாற்றினார்கள். பிரிட்டிஷ் ராணியின் வழக்கறிஞர் என்றும் புகழ் பெற்றவர், செல்வநாயகம். நீதி நேர்மை, தூய வாழ்க்கை முதலான உயர் பண்புகளைக்கொண்டிருந்த இவரை, அரசியலுக்கு வருமாறு பொன்னம்பலம் அழைத்தார். 1945ஆம் ஆண்டிலேயே வழக்கறிஞர் தொழிலில் மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பாதித்தார் செல்வா. அரசியலில் நுழைந்து பணம் சம்பாதித்தவர்களுக்கு மத்தியில், கட்சிக்காக தன் பணத்தை செலவிட்டவர் இவர். இதனால், இறுதிக் காலத்தில் பொருளாதார ரீதியில் சிரமப்பட்டார்.
தமிழரசுக் கட்சி
செல்வநாயகத்தின் ‘தமிழரசு கட்சி’யின் (ஆங்கிலத்தில் ‘பெடரல் கட்சி) தொடக்கக்கூட்டம், 1949ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாவது வாரத்தில் கொள்ளுப்பிட்டியில் உள்ள அவர் வீட்டில் நடந்தது. தமிழர்களுக்கு மாநில சுயாட்சி பெற்றுத்தருவதற்கு தமிழரசு கட்சி போராடும் என்று அவர் அறிவித்தார்.தன் கட்சியின் நோக்கங்களை விளக்க, பல்வேறு இடங்களில் நடந்த கூட்டங்களில் செல்வநாயகம் பேசி னார். இந்தக் கூட்டங்களில் நட்சத்திர பேச்சாளராக அமிர்தலிங்கம் (செல்வநாயகம் மறைவுக்கு பின்னர் இலங்கைத் தமிழர்களின் தலைவராக விளங்கியர்) அறிமுகப்படுத்தப்பட்டார். கட்சி பணிகளில் வன்னியசிங்கம் முக்கியப் பங்கெடுத்துக்கொண்டார்.
கண்துடைப்பு மசோதா
இதற்கிடையே, பொன்னம்பலத்துக்கு கொடுத்த வாக்குறுதிக்காக பிரஜா உரிமை சட்டத்தில் திருத்தங்கள் செய்யும் ஒரு மசோதாவை, பாராளுமன்றத்தில் பிர தமர் சேனாநாயக கொண்டுவந்தார். இது வெறும் கண்துடைப்பாகவே நடந்தது. ‘பிரஜா உரிமை பெறாதவர்கள் அந்த உரிமையைப்பெற, திருமணம் ஆனவராக இருந்தால் இலங்கையில் தொடர்ந்து 7 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும். திருமணம் ஆகாதவராக இருந்தால், 10 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும்’ என்று இந்த திருத்தங்களில் கூறப்பட்டிருந்தது. தன்னுடைய பாட்டன், முப்பாட்டன் எல்லாம் இலங்கையில் வசித்தவர்கள் என்பதற்கெல்லாம் ஆதாரங்கள் காட்டவேண்டியிருந்தது.பாராளுமன்றத்தில் இந்த திருத்தத்தின் மீது விவாதம் நடைபெற்றபோது, செல்வநாயகம் அதை கடுமையாக எதிர்த்தார். ‘பிரஜா உரிமையை இழந்தவர்கள் அதை பெறுவதற்கு உதவும் வகையில் திருத்த மசோதா அமைய வேண்டும். இப்போது பிரதமர் தாக்கல் செய்துள்ள மசோதா, பிரஜா உரிமை பெற உதவுவதற்கு பதிலாக, பல தடை களை ஏற்படுத்தியுள்ளது. பல தோட்டத் தொழிலாளர்கள், அடிக்கடி தங்கள் இருப்பிடங்களை மாற்றி இருக்கிறார்கள். அப்படியிருக்க, அவர்கள் எப்படி தாங்கள் தொடர்ந்து இலங்கையில் இருந்ததை நிரூபிக்க முடியும்? என்று அவர் கேட்டார்.
காரசாரமான விவகாரத்துக்கு பிறகு, திருத்த மசோதா மீது ஓட்டெடுப்பு நடந்தது. பொன்னம்பலமும் அவர் ஆதரவாளர்களும் மசோதாவை ஆதரித்து ஓட்டுபோட்டனர். செல்வநாயகமும் அவர் ஆதரவாளர்களும் எதிர்த்து வாக்களித்தனர்.
மசோதா நிறைவேறியது. எனினும், செல்வநாயகம் கூறியது போலவே இந்த மசோதாவினால் எந்த பலனும் இல்லை. 10 லட்சம் தமிழர்கள் ‘நாடற்றவர்கள்’ என்ற நிலையில் நீடித்தனர்.
தேர்தலில் இழப்பு
மலையகத் தமிழர்களின் தலை வராக சி.தொண்டமான் விளங்கினார். 1947 தேர்தலின்போது, மலையகத் தமிழர்கள் ஓட்டுரிமை பெற்றிருந்ததால், பாராளுமன்றத்தில் 7 இடங்களை அவர்கள் பெற்றனர். ஆனால், 10 லட்சம் தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதால் 1952ஆம் ஆண்டு தேர்தலில் அவர்கள் போட்டியிடுவதற்கான தகுதியை கூட இழக்க நேரிட்டது.
சேனாநாயக மரணம்
1952 தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன், பிரதமர் டி.எஸ்.சேனாநாயக மரணம் அடைந்தார். அவருக்குப்பின், அவர் மகன் டட்லி சேனநாயக பிரதமர் ஆனார். 1952 தேர்தலில் பொன்னம்பலத்தின் ‘இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி’ 4 இடங்களில் வெற்றி பெற்றதுடன், தொடர்ந்து டட்லி சேனாநாயக அரசுக்கு ஆதரவு தர முன்வந்தது. அதனால் பொன்னம்பலம் மீண்டும் மந்திரி ஆனார். டட்லி சேனாநாயகவுக்கும், அவருடைய உறவி னரான ஜோன் கொத்தலாவலவுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் டட்லி ராஜினாமா செய்ய நேர்ந்தது. புதிய பிரத மராக கொத்தலாவல பதவி ஏற்றார்.அவர் பதவிக்கு வந்ததும், மந்திரி பத வியைவிட்டு பொன்னம்பலத்தை நீக்கினார். இதன்பின், பொன்னம்பலத்தின் அரசியல் வாழ்க்கை வீழ்ச்சி அடைந்தது. 1956 தேர்தலில் வென்று பண்டாரநாயகா பிரதமர் ஆனார். செல்வநாயகத்துடன் செய்த ஒப்பந்தத்தை கிழித்து எறிந்தார். 1956இல் இலங்கை பிரதமராக பதவி ஏற்ற பண்டாரநாயகா, இலங்கைத் தமி ழர் தலைவர் செல்வநாயகத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை, சிங்களவருக்கு பயந்து கிழித்து எறிந்தார். சிங்களத் தலைவர்கள் எந்தக் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், தமிழர்களுக்கு எதிரான திட்டங்களையும், சட்டங்களையும் கொண்டு வருவதில் ஒன்றுபடுவார்கள். சில சமயம் தமிழர்களுக்கு பரிந்து பேசுவது போலத் தோன்றினாலும், திடீரென்று தங்கள் போக்கை மாற்றிக்கொண்டு ‘பல்டி’ அடிப்பார்கள்.
பண்டாரநாயகா
சிறிமாவோ பண்டாரநாயகாவின் கணவரும், சந்திரிகாவின் தந்தையுமான பண்டாரநாயகாவின் கதையும் இதுதான்.ஆரம்பத்தில், தமிழர்களுக்கு ஓரளவு சாதகமாகப் பேசிவந்த பண்டாரநாயகா, 1956 தேர்தலில் வெற்றிபெற்று, ஏப்ரல் 12ஆம் திகதி பிரதமராகப் பதவி ஏற்றார்.சிங்களத்தை மட்டும் ஆட்சிமொழி ஆக்க வேண்டும் என்றும், அரசு அலுவல்கள் சிங்களத்திலேயே நடைபெறவேண்டும் என்றும் சட்டம் இயற்ற ஏற்கனவே இலங்கை அரசு திட்டமிட்டு இருந்தது. சட்ட அமைச்சரை பண்டாரநாயகா அழைத்து, ‘சிங்கள மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் அதேசமயத்தில் தமிழர்களின் நலனையும் கவனிக்க வேண்டும். அதற்கேற்றபடி சட்டத்தை தயாரியுங்கள். இலங்கையில் வாழும் எல்லா மக்களும், அரசாங்கத்துடன் தங்கள் தாய் மொழியில் தொடர்பு கொள்ள வசதி செய்து தரவேண்டும்’ என்று கூறி னார்.
சிங்களவர்கள் ஆவேசம்
மொழி விஷயத்தில், பண்டாரநாயகா தமிழர்களுக்கு சாதகமாக இருக்கிறார் என்று வெளியே செய்தி பரவியது. சிங்களவர்கள் ஆவேசம் அடைந்தனர்.சிங்களவர் கட்சியின் முக்கிய தலைவரான ஜெயசூரியா, பாராளுமன்றத்தின் முன் அமர்ந்தது, ‘சாகும் வரை உண்ணாவிரதம்’ தொடங்கினார். ‘சிங்களம் மட்டுமே ஆட்சிமொழியாக இருக்கவேண்டும். தமிழுக்கு எந்தவித இடமும் தரக்கூடாது’ என்பது அவருடைய கோரிக்கை. சிங்கள தீவிரவாதிகளின் ஆதரவில் ஆட்சிக்கு வந்த பண்டாரநாயகா, சிங்களவருக்கு அடிபணிந்தார். சிங்களத்தை மட்டும் ஆட்சி மொழியாக்க வகை செய்யும் சட்டத்தை 1956 ஜூன் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
– மறவன் –
தொடரும்…