அமெரிக்காவை தொடர்ந்து பிரான்ஸ்-இங்கிலாந்திலும் பரவும் எபோலா

391

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, சியாரா லியோன், லைபீரியா மற்றும் நைஜீரியா நாடுகளில் ‘எபோலா’ வைரஸ் என்ற உயிர்க் கொல்லி நோய் கடுமையாக பரவி வருகிறது. இங்கு எபோலா நோய்க்கு இதுவரை 3500 பேர் பலியாகி உள்ளனர்.

லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கப்படாததால் பேரழிவு நோய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொற்று நோய் என்பதால் பல நாடுகள் லைபீரியா, சியாரா லியோன் உள்ளிட்ட நாடுகளுக்கு விமான போக்குவரத்தை ரத்து செய்து விட்டன. இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் விமான நிலையங்களில் சுகாதார பணியாளர்களை நியமித்து ஆப்பிரிக்கா நாட்டு பயணிகளுக்கு ‘எபோலா’ நோய் பரிசோதனை நடந்துகின்றன.

இந்த நிலையில் மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் இருந்து அமெரிக்கா திரும்பிய ஒருவருக்கு ‘எபோலா’ நோய் தாக்கியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. எனவே அவரும் அவரை சார்ந்தவர்களும் தனிமையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே இந்த நோய் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்திலும் பரவும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் அதிவேகமாக பரவும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

‘எபோலா’ மிகவும் பாதித்த கினியா, லைபீரியா, சியாரா லியோன் ஆகிய நாடுகளில் பிரெஞ்ச் மொழி பேசும் மக்கள் அதிகம் உள்ளனர். இவர்கள் பிரான்சுக்கு அடிக்கடி விமானம் மூலம் வந்து செல்கின்றனர்.

இவர்கள் இங்கிலாந்தின் ‘ஹீத்ரோ’ வழியாக பயணம் மேற்கொள்கினறனர். அதனால் இங்கிலாந்திலும் இந்நோய் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் இந்நோய் பரவும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பெல்ஜியம், ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது.

SHARE