அமெரிக்க அரசு வேவு பார்ப்பதை எதிர்த்து வழக்கு போடுகிறது ‘விக்கிபீடியா’

395

இணையத்தில் கோலோச்சிவரும் லாப நோக்கமற்ற மிகச்சில அமைப்புகளுள் விக்கிபீடியாவும் ஒன்று. அது சமீபத்தில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.) மீது வழக்குத் தொடர்ந்திருக்கிறது. அமெரிக்க அரசியல் சாசனத்தில் கருத்து சுதந்திரத்திற்கும் தனி நபர் அந்தரங்கம் காக்கப்படுவதற்கும் அளிக்கப்பட்டிருக்கும் உத்தரவாதத்தை என்.எஸ்.ஏ., மீறியிருப்பதாக விக்கிபீடியா குற்றஞ்சாட்டியிருக்கிறது. அமெரிக்க அரசு இணையத்திலும் இணையத்தைப் பயன்படுத்த உதவும் சாதனங்களிலும் தனி நபர் பற்றிய தகவல்களையும், அவர்கள் இ- மெயில் போன்றவற்றில் அனுப்பும் தகவல்களையும் எந்த முன் அறிவிப்பும் இன்றி சோதிக்கலாம் என்று சொல்லி வருகிறது.
இதற்கு பல இணைய நிறுவனங்கள் எதிர்ப்புத் தெரிவித்தாலும், வேறு வழியின்றி அனுமதித்து வருகின்றன. இந்த நிலையில் விக்கிபீடியாவைப் பயன்படுத்தும் அமெரிக்காவுக்கு வெளியில் இருக்கும் பயனர்கள் குறித்த தகவல்களை என்.எஸ்.ஏ., வேவு பார்க்கிறது என்றும், அப்படிப் பார்ப்பது அரசியல் சாசன மீறல் என்றும் வழக்குத் தொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாங்கள் எங்கள் வாசகர்கள் மற்றும் எடிட்டர்களின் சார்பாக இந்த வழக்கைத் தொடுத்திருக்கிறோம். இணையம் என்பது தகவல் சுதந்திரத்தின் அடையாளம். அது பரிசோதனைக்கும், கூட்டு முயற்சிகளுக்கும், யாரும் எதற்கும் அஞ்சத் தேவையில்லாத ஒரு வெளியாக இருந்தது. அதற்கு ‘பங்கம் விளைவிக்கும் என்.எஸ்.ஏ.,வின் முயற்சியைத் தடுக்கவே இந்த வழக்கு’ என்று விக்கிபீடியாவின் நிறுவனரான ஜிம்மி வேல்ஸ் தெரிவித்தார்.

SHARE