அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் 6 பேர் பலி: பாகிஸ்தான் கண்டனம்

500

தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் என்ற பெயரில் பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் உள்ள தர்கா மண்டி என்ற இடத்தில் சந்தேகத்துக்குரிய ஒரு வீட்டின் மீது நேற்று பறந்த அமெரிக்க ஆளில்லா விமானம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 6 பேர் பலியாகினர். பலியானவர்கள் பற்றிய உடனடி தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், அமெரிக்காவின் இந்த அத்துமீறலுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

‘நாங்கள் ஏற்கனவே பல முறை தெளிவாக தெரிவித்திருப்பதைப் போலவே, அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்தியுள்ள இன்றைய தாக்குதல், பாகிஸ்தானின் இறையாண்மையை மீறும் செயலாகும். இதுபோன்ற தாக்குதல்கள் பாகிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட அரசு மேற்கொண்டு வரும் முயற்சிக்கு எதிரான விளைவை ஏற்படுத்தி விடும்’ என்று அந்நாட்டின் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் தஸ்னிம் அஸ்லம் கூறியுள்ளார்.

‘உளவு தகவல்களை அடிப்படையாக கொண்டு, அமெரிக்காவின் சி.ஐ.ஏ. பாகிஸ்தானில் நடத்தி வரும் இதுபோன்ற ஆளில்லா விமான தாக்குதல்களை நிறுத்த முடியாது’ என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடந்த மாதம் திட்டவட்டமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE