அமெரிக்க ஓநாயின் ஈழ அக்கறை !

795

  obama-aung_2274711b

ந்தவொரு அரசியல் கோரிக்கையும் குறிப்பிட்ட அந்த நாடு மற்றும் உலக நாடுகளின் அரசியல் பொருளாதாரத்திலிருந்து விலக்கப்பட்டது அல்ல. மனித உரிமைகள் சார்ந்த கோரிக்கையையும் அது போன்றே பார்க்க முடியும். அந்த கோரிக்கையை யார் எழுப்புகிறார்கள்; எந்த கோணத்தில் எழுப்புகிறார்கள்; உலகப் படிநிலையில் அவர்கள் வகிக்கும் இடம் என்ன என்றெல்லாம் பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில், அது மக்களின் வாழ்க்கையோடு சம்பநதப்பட்ட குறிப்பிட்ட நிலைமையின் பருண்மையான பொருளை அறிந்து கொள்ள உதவும்.

இலங்கையின் கொலைக்களங்கள்

ஐ.நா மனித உரிமைகள் குழுவில் அமெரிக்க ஒரு தீர்மானத்தை இலங்கைக்கு எதிராக மார்ச் 2013-ல் முன்மொழிந்து சுற்றுக்கு விட்டது. பிரிட்டனின் சேனல் 4 ‘போர் நடைபெறாத பகுதி – இலங்கையின் கொலைக்களம்’ என்றவொரு உண்மை விளக்கப் படத்தை அங்கு திரையிடப் போகிறது. இதற்கு முன்பு இரண்டு உண்மை விளக்கப் படங்களை அதே தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. முதல் படம் ‘இலங்கையின் கொலைக்களங்கள்’ ஜூன் 2011-ல் வெளியிடப்பட்டது. பல அதிர்ச்சியூட்டும் போர்க்குற்றக் காட்சிகளின் தொகுப்பு இது. ‘கொலை களங்கள் : தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்’ என்ற இரண்டாவது படம் மார்ச் 2012-ல் வெளியிடப்பட்டது. இலங்கை அரசின் போர்க் குற்றத்துக்கு திட்டவட்டமான ஆதாரமாக இப்படம் விளங்கியது. மூன்றாவது படம் ஐ.நா. மனித உரிமைகள் குழுவில் காண்பிக்கப்படுவதற்கு முன்பாக டில்லியில் பிப்ரவரி 2-ல் ஒரு முறை திரையிடப்பட்டது.

இந்த உண்மை விளக்கப் படம் வெளிக்கொணர்ந்த ஒரு காட்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. விடுதலைப்புலிகள் தலைவர் பிராபகரனின் மகன் உயிருடன், துன்புறாமல் இலங்கை ராணுவத்தால் பிடிக்கப்படுகிறார். சில மணித்துளிகளுக்குப் பிறகு அவர் நெஞ்சில் ஐந்து குண்டுகள் துளைக்கப்பட்ட காட்சி வருகிறது. இந்த காட்சிகள் 2009-ன் கொடுங்கனவு நினைவுகளை மக்களின் எண்ணங்களில் கிளர்த்தி விட்டுள்ளது. ஆனால் அந்த கொடுங்கனவு பற்றிய விழிப்புணர்வு புதிதல்ல ; இக்குற்றங்கள் நடைபெற்ற போதே உலகத்தின் முன்பு ஆதாரங்கள் குவிந்தன. தமிழ் மக்கள் நடத்தும் உணர்ச்சிமிக்க போராட்டங்கள் இந்திய அரசுக்கு அமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்க கடுமையான அழுத்தத்தை வழங்குவதாக ஒரு கருத்தை வெளியிடுகின்றன, பத்திரிக்கைகள். தமிழகத்தின் முக்கிய கட்சிகள் அனைத்துக்கும் இத்தீர்மானத்தை ஆதரிக்க இந்தியாவை வலியுறுத்துவதில் ஒரு போட்டியே நிலவுகிறது.

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் இப்போது வெளிச்சத்துக்கு வரவில்லை; 2012-ல் ஐ.நா.மனித உரிமைகள் குழு இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்தின் போதும் இல்லை; அவை பல ஆண்டுகளாக ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன. 2009-ல் போர் உச்சத்தை தொட்ட போது ஓர் அழுத்தம் வழங்கப்பட்டிருந்தால் அது பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரை காப்பாற்றியிருக்கும். ஐ.நா மற்றும் இந்தியா, அமெரிக்கா உட்பட பல்வேறு நாட்டின் தலைவர்களுக்கு இலங்கையில் என்ன நடைபெற்றுக் கொண்டிருந்தது என்பது நன்கு தெரியும். எனினும் எந்த நடவடிக்கையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. இவர்களுடைய தற்போதைய பாசாங்கான கரிசனத்திற்கு பின்னால் வேறு நோக்கங்கள் உள்ளன. ராஜபக்சே தன பங்கிற்கு தன்னை இலங்கையின் நலனை மேற்கு நாடுகளின் கோபத்தையும் சம்பாதித்து, சமரசமின்றி பாதுகாக்கும் காவலனாக முன்னிறுத்துகிறார்.

2006-ல் நிலவிய சூழல்

16 ஆண்டுகளுக்கு முன்பாக 1997-லேயே அமெரிக்கா விடுதலைப் புலிகளை அந்நிய ‘பயங்கரவாத அமைப்பு’ என்று பிரகடனம் செய்தது. 2001-ல் அமெரிக்கா, புலிகளுக்கு கூடுதல் பெயரடை ஒன்றை வழங்கியது. ‘தனிச்சிறப்பான உலக பயங்கரவாதி’ என்று தனது ‘பயங்கரவாதத்திற்கு எதிரான உலகப் போர்’ கொள்கைக்கு ஏற்ப புலிகளை சித்தரித்தது. 2006 மே மாதத்தில், அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்து ஐரோப்பிய ஒன்றியமும் புலிகளை பயங்கரவாத அமைப்பில் பட்டியலிட்டது. 9|11 க்குப் பிறகான உலக நிலைமையில் இலங்கைக்கு ஒரு தாக்குதலை நிகழ்த்த இது தெளிவான சுட்டுக்குறியை வழங்கியது. அதே வருடம் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து புலிகளுக்கு வந்து கொண்டிருந்த நிதியை நிறுத்த இலங்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. கனடா மற்றும் ஐரோப்பாவிலிருந்து ஏவுகணைகள் கொள்முதல் செய்த புலிகளின் முகவர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஒரு குறைந்த இடைவெளி நேரத்தில் புலிகள் தமது இருப்புக்கு ஆதாரமான தேசங்கடந்த நிதி மூலத்தை இழந்தார்கள். (புலிகளுக்கு எந்த அரசும் உதவி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).

ராஜபக்சே - கருணா

2004-ல் வி.முரளிதரன் [கர்னல் கருணா] தலைமையில் ஒரு பிரிவு புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி இலங்கை அரசுடன் இணைந்தது. புலிகளின் ராணுவ பலம் மற்றும் புலிகள் பற்றிய ரகசியங்களை நன்கறிந்தவர் கருணா. புலிகள் இப்படி பின்னடைவுகளை சந்தித்துக் கொண்டிருந்த போது, இலங்கை அரசு மிகப்பெரிய அளவுக்கு ராணுவ பலத்தை கூட்டியது. 2005 – 2008 காலகட்டத்தில் இலங்கையின் ராணுவ பட்ஜெட்  முன்பிருந்ததைக் காட்டிலும் 40 சதவீதம் உயர்ந்ததோடு, ராணுவ பலம் 70 சதவீதம் உயர்வு பெற்றது. அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேல் இலங்கைக்கு போர் விமானங்களையும், ரோந்து விமானங்களையும் அளித்தது. இந்தியா ரோந்து கப்பல்களையும், ரேடார் கருவிகளையும் வழங்கியது. முக்கியமாக, இந்தியாவின் தென்மண்டல கடற்படை, புலிகளின் ஆயுதவரத்தை முறியடிக்க இலங்கை கடற்படைக்கு பேருதவி அளித்தது. மேலும் புலிகளின் கடல் போக்குவரத்தை முற்றிலும் முடக்கியது, இந்தியா.

பாகிஸ்தான் போர்க்கருவிகளையும் போர்க்கருவிகளையும், கையெறி குண்டுகளையும் இலங்கைக்கு வாரி வழங்கியது. சீனா வாகனங்கள், சிறிய வகை ஆயுதங்கள், எளிமையாக கையாளும் போர்க்கருவிகள், பீரங்கிகள் மற்றும் படைத்தளவாடங்கள் முதலியவற்றை பெருமளவுக்கு வழங்கியது. இது போக போர் விமானங்களும், ரேடார் கருவிகளையும் வழங்கியது. ஜப்பானை இடம் பெயர்த்து சீனா இலங்கைக்கு பொருளாதார உதவி செய்வதில் முன்னணி நாடாக ஆனது.

அதே நேரம், அமெரிக்கா உள்ளிட்ட அயல்நாடுகளின் ராணுவ பயிற்சி இலங்கை ராணுவத்தின் திறனை அதிகரித்தது. 2009 ‘அயலுறவுக்கான அமெரிக்க செனட் கமிட்டியின்’ அறிக்கையில் அமெரிக்க விமானங்கள் இலங்கையை சுற்றி பறப்பதற்கும், இலங்கையில் தரை இறக்குவதற்கும் இலங்கை இசைவுச் சான்று வழங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கப்பல்கள் இலங்கை துறைமுகத்தை பயன்படுத்தவும் இலங்கை அனுமதி வழங்கியது. மேலும் அமெரிக்க ராணுவத்தின் மனிதாபிமான செயல்பாடுகளுக்கும், ஐ. நா அமைதி நோக்கங்களுக்கும் இலங்கை தன்னை ஈடுபடுத்திக் கொள்ள தெரிவித்துள்ள விருப்பமும் அந்த அறிக்கையில் உள்ளது. 2007-ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையே அதிக அளவு ராணுவ ஒத்துழைப்புக்கு வகை செய்யும் ஒப்பந்தம் ஓன்று கையெழுத்தானது. இது அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் இலங்கையிடமிருந்து எரிபொருள் பெற வழிவகை செய்கிறது. 2007-ல் அமெரிக்கா வழங்கிய அதிநவீன ரேடார் கருவிகள் தான் புலிகளின் கடற்படையை நிர்மூலமாக்க இலங்கைக்கு பயன்பட்டது. சுருங்கக் கூறின் புலிகளை ராணுவ ரீதியாக பலகீனப் படுத்தி மூச்சுத் திணற வைத்ததிலும், தமிழ் மக்கள் மீது இலங்கையின் கொடூரத் தாக்குதலுக்கு பின்னணியிலும் பல நாடுகளுக்கு முக்கிய பங்கு உள்ளன. இந்த நாடுகள் அனைத்தின் கைகளிலும் ரத்தக்கறை படிந்தே உள்ளன.

அமெரிக்காவின் விமர்சன கூச்சல்களும், உண்மையான அக்கறைகளும்

அமெரிக்கா இப்போது தனது முந்தைய நிலையை மாற்றியுள்ளது. ஈழத்தமிழர்கள் படுகொலை பிரச்சினை அதன் அடுத்த கட்டத்தில் இருக்கும் நிலையில் அமெரிக்கா இலங்கையைக் கண்டித்து கூச்சலை எழுப்பிக் கொண்டிருக்கிறது. இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பும், இலங்கையில் சர்வதேச சமூகத்தின் தொடர்பும் இருக்க வேண்டும் எனவும் கோருகிறது. இப்பிரச்சினை தொடர்பாக ஒபாமாவின் முதல் அறிக்கை 2009, மே 14-ல் வெளிவந்தது. மக்கள் கொல்லப்பட்டதற்கு வருத்தமும், இலங்கை ‘அதன் அனைத்து பிரிவு மக்களும் மதிப்புடன் வாழ அமைதி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்’ எனவும் அவர் கேட்டுக் கொண்டார். இலங்கைக்கான அமெரிக்க தூதர் அதிகாரப் பகிர்வுக்கான ”உறுதிமிக்க நடவடிக்கைகளை” மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.

அமெரிக்காவின் உலக ஆக்கிரமிப்பு

ஒரு குழந்தைக்கு கூட தெரிந்த உண்மை இருக்கிறது. அமெரிக்கா இப்பிரச்சினையில் ஏதேனும் உருப்படியான மாற்றத்தைக் கொண்டு வர விரும்பினால் இது போன்ற துல்லியமற்ற விண்ணப்பங்களுடன் நிறுத்திக் கொள்ளாது. யூகோஸ்லேவியா, ஆப்கானிஸ்தான், ஈராக், ஏமன், லிபியா மத்திய ஆப்ரிக்க குடியரசு மற்றும் பல்வேறு செய்து வருவது போல பலவகைகளில் குறுக்கீடு செய்யும். தன்னுடைய படைகளை அனுப்ப விரும்பாத  இடங்களுக்கு ஆயுதங்களையும், பயிற்சியையும் எதிர்ப்பு படைகளுக்கு வழங்கி வந்திருக்கிறது. பொருளாதாரத் தடை போன்ற கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. ஐ.நா. பாதுகாப்பு அவையில் சிரியாவை கண்டிக்கும் தீர்மானம் கொண்டு வருவதை ரசியாவும், சீனாவும் தடுத்த போது ‘சிரியாவின் சர்வதேச நண்பர்கள்’ என்றொரு கூட்டமைப்பை ஏற்படுத்தி சிரிய அரசுக்கு நெருக்கடியும் சிரியாவின் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவும் வழங்கியது அமெரிக்கா. அது போல ஈரானின் அணுத் திட்டங்களை காரணம் காட்டி அதன் மீது பொருளாதார தடைகளை ரசியா மற்றும் சீனாவின் ஆதரவு இல்லாமலே கொண்டுவர துணிந்தது அமெரிக்கா.

இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம் இலங்கை அதிபரின் சகோதரர், பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சே அமெரிக்க குடிமகனாக தொடர்ந்து உள்ளார். இன்னொரு சகோதரன், பாசில் ராஜபக்சே இலங்கை அதிபரின் முதன்மை ஆலோசகராக இருக்கின்ற அவரும் அமெரிக்க பச்சை அட்டையை வைத்திருப்பவர். இதில் கோத்தபாய ராஜபக்சேவுக்கு போர்க் குற்றத்தோடு நேரடி தொடர்பு உள்ளது. [ஆயுதமின்றி பிடிபட்ட புலிகளை கொலை செய்தது தொடர்பாக, சரத் பொன்சேகா உட்பட்ட ராணுவ அதிகாரிகளின் சாட்சியம் இந்த நபருக்கு எதிராக உள்ளது.]

ஆக, அமெரிக்கா, இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான அதன் கவலையை பேரழிவு ஓன்று நடந்து முடிந்த பின்னர், புலிகள முழுமையாக துடைத்தழிக்கப்பட்ட பின்னரே அழுத்தமாக வெளியிட்டது. அதன் மனித உரிமைகள் சார்ந்த அக்கறைகள் போலியானது.

2005-லிருந்து, குறிப்பாக ராஜபக்சே இலங்கையின் அதிபரானதிலிருந்து இலங்கைக்கும், சீனாவுக்குமான உறவு மிகவும் அழுத்தம் பெற துவங்கியது. அமெரிக்காவின் மனப்பான்மையும், ராணுவ கட்டுப்பாடுகளுமே சீனா, பர்மா, ஈரான் மற்றும் லிபியாவுடன் உறவை மேம்படுத்திக் கொள்வதற்கான காரணம் என்று கூறுகிறது, இலங்கை அரசு. திச விதரன எனும் இலங்கை மந்திரி, ‘நம்மை சீனா பக்கம் தள்ளியமைக்கு நாம் அமெரிக்காவுக்கு நன்றி சொல்வோம்’ என்றார். விதரன கூற்றுப்படி, மேற்கு நாடுகள் புலிகளுடனான யுத்தத்தை நிறைவு செய்ய உதவாத நிலையில், அதிபர் ராஜபக்சே பிற நாடுகளின் உதவி பெறும்படி தள்ளப்பட்டார். இது இந்து மகா சமுத்திரத்தில் அமெரிக்காவின் நீண்டகால போர்த்தந்திர நலன்களுக்கு ஊறு விளைவிக்கும் செயல் என்பதில் சந்தேகமில்லை.

சீனா ஆயுதங்களை மட்டும் இலங்கைக்கு வழங்கவில்லை. குறிப்பிடத்தக்க வகையில் பொருளாதார உதவியையும் இலங்கைக்கு அளித்துள்ளது. பல அடிப்படை கட்டுமான பணிகளை சீனா, இலங்கையில் செயல்படுத்தி வருகிறது. ராஜபக்சேவின் பூர்வேகமான ஹம்பன்டோடாவில் பெருமுதலீட்டில் துறைமுக வளாகமும், விமான நிலையமும் சீனா அமைத்து வருகிறது. மேலும், பெரிய அளவுக்கு ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து திட்டங்களுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்காக 10,000 த்திலிருந்து 16,000 சீனப் பொறியாளர்கள், வணிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் இலங்கையில் தற்போது பணிபுரிந்து கொண்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

சீனா, இலங்கையில் கட்டிக்கொண்டிருக்கும் அடிப்படைக் கட்டுமானத் திட்டங்கள் ராணுவ ரீதியிலானதல்ல; வணிக ரீதியிலானது என்றொரு தோற்றம் உள்ளது. சீனாவுக்கும், இலங்கைக்கும் பொருட்படுத்த தகுந்த போர்த்தந்தந்திரம் சார்ந்த உறவுகள் இல்லையென்பது போல தோன்றும். ஆனால், சீன மற்றும் அமெரிக்க போர் வல்லுனர்கள் இலங்கையின் ஹம்பன்டோடாவை சீனாவின் முத்துச்சரம் என்றே அழைக்கிறார்கள். சீனாவின் கடல்சார் போர்த்திறத்தை முத்துச்சரம் என்று முதன்முதலில் அழைத்தார், அமெரிக்க ராணுவ ஒப்பந்ததரரான பூஸ் ஆலன் ஹாமில்டன். அன்றிலிருந்து அமெரிக்கா மற்றும் சீன போர் வல்லுனர்கள் இந்த பதத்தை ஏதோ சீனாவே உருவாக்கிக் கொண்டது போல மிகச் சாதரணமாக பயன்படுத்தி வருகின்றனர். முத்துச்சரத்துக்கு ,அமெரிக்க ராணுவ கல்லூரி’ ஒன்று அளித்த விளக்கம் சீனா குறித்த அமெரிக்காவின் கவலையை அறியத் தருகிறது.

சீனாவின் முத்துச்சரம்

முத்துச்சரம் என்றால் என்ன ? முத்துச்சரத்தில் இருக்கும் ஒவ்வொரு முத்தும் சீனாவின் புவிசார் அரசியல் ஆதிக்கம் அல்லது ராணுவ இருத்தலோடு நெருங்கிய பிணைப்பை கொண்டது. சமீபத்தில் ராணுவ ரீதியாக உயர்ஊட்டம் பெற்ற ஹைநான் தீவு ஒரு ‘முத்து’. வியட்நாமிற்கு கிழக்காக கடல் மார்க்கத்தில் 300 மைல் தொலைவில் உள்ள வுடி தீவில் [Woody Island ] உயர்வூட்டம் பெற்ற ஒரு தற்காலிக விமான நிலையம் ஒரு ‘முத்து’. வங்கதேசத்தில் சிட்டகாங் கப்பல் கொள்கலம் ஒரு ‘முத்து’. மியான்மரின் சித்வேயில் கட்டப்படும் ஆழ் துறைமுகம் ஒரு ‘முத்து’. பாகிஸ்தானின் க்வாடரில் கட்டப்படும் கப்பற்படைத்தளம் ஒரு ‘முத்து’. துறைமுகங்கள், விமான நிலையங்கள் அரசுதந்திர உறவுகள் மற்றும் கட்டாய நவீனமயமாக்கம் ஆகியவை முத்துச்சரத்தில் கோர்க்கப்படுகின்ற முத்துக்கள். சீனாவின் கடலோர நிலப்பரப்பிலிருந்து தெற்கு சீனாவின் கடலோரப் பகுதி வரை மற்றும் மலாக்கா கடற்கால், இந்துமகா சமுத்திரம், அரபிக் கடலின் கடலோரப் பகுதி மற்றும் பாரசீக வளைகுடா வரை சீனாவின் முத்துச்சரம் பரந்து விரிந்து கிடக்கிறது. மத்திய கிழக்குப் பகுதிகளுடன் இணைக்கும் கடலோர தொடர்புநிலைகளுடன் சீனா போர்த்தந்திர உறவுகளையும், முன்னேறிய இருப்பையும் மேற்கொண்டு வருகிறது.

‘உலக அளவில் எண்ணெய் ஆதார வளங்களை பெறுவதில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் கடும் போட்டி நிலவுகிறது’, என்று 2005-ல் அமெரிக்க பாராளுமன்றத்தில் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இது இரு நாடுகளுக்கும் உள்ள பகைமைக்கான காரணத்தை விளக்குகிறது. 2012-ல் அமெரிக்க பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை, சீனாவின் பலகீனங்களை அமெரிக்கா எப்படி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. “சீனத் தலைவர்கள், சீனாவின் அதிகப்படியான அயலக எண்ணெய் சார்பை போர்த்திறம் சார்ந்த பலகீனமாக பார்க்கிறார்கள். எண்ணெய் இறக்குமதிக்கு சீனா பெருமளவு கடல் வணிகப் பாதையை நம்பியுள்ளது. மலாக்கா கடற்கால் மற்றும் ஹொர்முஸ் கடற்கால் பகுதிகள் சீனாவுக்கு முக்கியமானவை. போர்த்ததந்திர ரீதியில் இலங்கை அது அமைந்துள்ள இடத்தால் முக்கியத்துவம் பெறுகிறது” என்கிறது.

அந்த ஆய்வறிக்கை மேலும் கூறுகிறது, “சீனாவின் நடவடிக்கைகள் இந்த பிரதேசத்தில் இலங்கை போன்ற நாடுகளை நட்பு பிடிப்பது; அதன் மூலமாக கடலோர தொடர்பு நிலைகள் – ஹொர்முஸ் கடல்காலிலிருந்து இந்து மகாசமுத்திரத்தின் மேற்காக மலாக்கா கடல்கால் வரையிலும் தனது வணிக மற்றும் எண்ணெய் இறக்குமதி நோக்கங்களை ஈடேற்றிக் கொள்வது தான்” என்கிறது.

அமெரிக்காவின் ஆசிய சுழல்முனை கொள்கை

ன் தவறை மறைத்து மற்றவர் மீது பழி சுமத்துவதை பிராயிட் புறந்தள்ளல் [projection ] என்கிறார். உண்மையில் இந்த சீனாவின் முத்துச்சரம் கொள்கைக்கு எதிராக அமெரிக்கா ஆசியாவை முன்வைத்து உருவாக்கிக் கொண்ட திட்டம் தான் ஆசிய சுழல்முனைக் கொள்கை. ஒரு மாமாங்க காலத்திற்கும் மேலாக ஜார்ஜ் புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகங்கள் மிகத் துல்லியமாக வடகிழக்கு ஆசியா மற்றும் இந்து மகா சமுத்திர வட்டப்பகுதியில் தனது உறவையும், ராணுவ நிலைகொள்ளலையும் வலுப்படுத்தி வருகிறது. மிகச்சமீபத்தில் அமெரிக்கா தனது நோக்கத்தை வெட்ட வெளிச்சமாக்கியது. நவ.2011-ல் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஒபாமா, “ஆசிய-பசிபிக் பிராந்தியத்தை நெறிப்படுத்தவும், அதன் எதிர்காலத்தை வடிவமைக்கவும் அமெரிக்காவுக்கு பெரிய, நீண்டகால திட்டம் உள்ளதாக” தெரிவித்தார். ஜூன் 2012-ல் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் லியோன் பெனிட்டா சிங்கப்பூரில் நடந்த வருடாந்திர ஷங்க்ரி லா பேச்சுவார்த்தையின் போது கூறியதாவது, ஆசியா தொடர்பாக தனது சக்திகளை மீள்சமநிலை செய்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, 2020 வாக்கில், பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பகுதிகளில் 50 – 50 என்று இன்று பிரித்து நிலை நிறுத்தப்பட்டிருக்கும் கப்பற்படையை 60 – 40 என்ற அளவில் மாற்றி அமைக்க இருப்பதாக தெரிவித்தார். அதன்படி 6 போர் விமானத் தாங்கிகள், கப்பல்களை அழிக்கும் நீர் மூழ்கிப் படகுகள், போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை அனுப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது.நீண்ட நாளைய நட்பு நாடுகளான ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் போன்றவற்றை இணைத்துக் கொண்டு சீனாவுடன் முரண்பாடு கொண்டுள்ள நாடுகளுடன் புதிய இணக்கத்தை மேற்கொள்வது அமெரிக்காவின் திட்டம்.

அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹில்லாரி கிளின்டன்

அமெரிக்காவின் ‘ஆசிய சுழல்முனை’யை அமெரிக்க அரசுச் செயலர் ஹிலாரி கிளிண்டன் நவ. 2011-ல் ‘அமெரிக்காவின் பசிபிக் நூற்றாண்டு’ எனும் கட்டுரையில் மிகத் தெளிவாக விளக்குகிறார். இது ‘அயலகக் கொள்கை’ எனும் இதழில் வெளியானது. “ஈராக்குடனான போர் முடிவு பெற்ற நிலைமை மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை திரும்பப் பெறத் தொடங்கியுள்ள சூழ்நிலையில் அமெரிக்கா ஒரு முக்கியப் புள்ளியில் நிற்கிறது. ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் அடுத்த பத்தாண்டுகளுக்கானஅமெரிக்காவின் முக்கியமான ஆட்சிப் பணி வரையறுக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம், ராஜதந்திரம் மற்றும் போர்த்தந்திரம் சார்ந்த வகைகளில் வலுவான முதலீட்டை அங்கு குவிப்பதாகும். பசிபிக் பெருங்கடலையும், இந்து மகாசமுத்திரத்தையும் கப்பல் போக்குவரவு மற்றும் போர்த்திறம் சார்ந்து இணைக்கப்பட்டுள்ளது” என்கிறார் அவர். அமெரிக்காவின் உலகத் தலைமைக்கு இந்த ஒழுங்கு மிக முக்கியமானது எனவும் இந்தப் பகுதி அந்த நோக்கத்திற்கு மிகவும் இன்றியமையாதது எனவும் அவர் கருதுகிறார்.

இங்கு போர்த்தந்திரம் என்பது என்ன ? தமது ‘முன்னோக்கிய விரிவு’ என்ற ராஜதந்திரத்தின் மீதான நீடித்த ஈடுபாடு என்கிறார், ஹிலாரி. அதாவது, உயரதிகாரிகள், தனித்திறம் மிக்கவர்கள், சர்வதேச வணிக முகவர்கள் மற்றும் இதர உடைமைக் கூறுகள் அனைத்தையும் ஆசிய -பசிபிக் பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு மூலைக்கும், நாட்டிற்கும் அனுப்புவதாகும் என்று விளக்குகிறார். மேலும், இந்தப் பகுதியின் உடனடி, மற்றும் நீண்ட மாறுதல்களுக்கு ஏற்ப தகவமைத்து கொள்ளுதல், இப்பிராந்தியத்தின் நாடுகளுடன் மாறாத, நிலைபேறுள்ள உறவை அமைத்துக் கொள்வது குறித்தும் பேசுகிறார். மட்டுமின்றி, இப்பிராந்தியத்தில் எழும் புதிய சவால்களுக்கு ராணுவத்தை பரவலாக்குவதன் மூலம் தீர்வு காணலாம் என்றும் நம்பிக்கை கொள்கிறார். மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா மேம்பட்ட வகையில் உதவி செய்ய தகுதியோடு இருப்பதை நினைவுபடுத்தும் ஹிலாரி கிளிண்டன், நட்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவது அப்பிராந்தியத்தின் அமைதிக்கும், உறுதிப்பாட்டிற்கும் ஒரு கொத்தளம் போன்ற பாதுகாப்பை ஏற்படுத்தும் என்று விளக்குகிறார்.

ஹிலாரி கிளிண்டன் தமது வழமையான் சீனாவுடன் நல்லுறவு பேணல் என்ற கூச்சலையும் எழுப்ப தவறவில்லை. அப்படியானால், யாருக்கு எதிராக இந்த ராஜதந்திர காய் நகர்வு ? சீனாவின் கப்பல் போக்குவரவு ஏன் தடம் பற்றப்படுகிறது ? ஹிலாரி சொல்கிறார், “அமெரிக்கா மற்றும் சர்வதேச சமூகம் சீனத்தின் எத்தனிப்புகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. சீனாவின் ராணுவ நவீனமயமாக்கமும், விரிவாக்க நோக்கமும் பல கேள்விகளை எழுப்புகின்றன” என்கிறார். அதே வேளை இந்தியாவின் அதிகார விழைவு அமெரிக்க கண்களை உறுத்தவில்லை என்பதை இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். இந்திய பாராளுமன்றத்தில் கடந்த வருடம் உரை நிகழ்த்திய ஒபாமா இந்திய–அமெரிக்க உறவு என்பது 21 -ஆம் நூற்றாண்டில் பொதுவான எண்ணங்களையும், நலன்களையும் கொண்ட உறுதிமிக்க நட்பு நாடுகளாக இருக்க வேண்டும் என்று ஆவல் தெரிவித்தார். இரு நாடுகளின் இணக்கத்திற்கு தடைகள் இல்லாமல் இல்லை. ஆனால், ஒரு போர்த்தந்திர பணயத்தை இந்தியா மீது வைக்கிறது, அமெரிக்கா. இந்தியாவுக்கு உலகின் அமைதியையும், பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்துவதில் பெரும் பங்கு இருப்பதை நினைவுபடுத்துகிறார், ஒபாமா. இந்தியா மற்றும் ஜப்பானுடன் முத்தரப்பு ஒருங்கிணைவை விரும்புகிறது, அமெரிக்கா. இந்தியாவை காப்பணியாக வைத்தி பொருளாதாரா ரீதியாக ஒருமுகப்படுத்தப்பட்ட மற்றும் அரசியல் ரீதியாக நிலையான தெற்கு மற்றும் மத்திய ஆசியா குறித்த புதிய பார்வையை அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

ஆசியாவை ஆட்கொள்ளும் போர்த்தந்திர நகர்வுக்கு ‘மனித உரிமைகள்’ பிரச்சினை மிகவும் முக்கியமானது. “நமது நாட்டின் முதன்மையான உடைமை என்பது நமது மதிப்பீடுகள் — மிகக் குறிப்பாக ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கு நாம் வழங்கி வரும் உறுதிமிக்க ஆதரவு. மேலும் இது நமக்கு ஆழமான தேசிய பண்பை வழங்குவதுடன், நமது அயல் விவகாரக் கொள்கையின் இதயம் போன்றது. நமது ஆசிய – பசிபிக் பிராந்தியக் கொள்கையிலும் இதுவே பிரதிபலிக்கிறது. நாம் தீவிரமாக ஈடுபாடு கொள்ள விரும்பும் நாடுகளுடன் நமக்கு இந்த பிரச்சினைகளில் முரண்பாடு தோன்றும் போது, நாம் அவர்களை சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியும், ஆட்சித்திறனை மேம்படுத்தவும், மனித உரிமைகளை பாதுகாக்கவும், அரசியல் சுதந்திரத்தை அளிக்கவும் தீவிரமாக வற்புறுத்துவோம். வியட்நாம் மற்றும் பர்மாவில் இதனை செய்துள்ளோம்”.

மனித உரிமைகள் விவகாரத்தை பயன்படுத்தி பர்மாவை சீன தாக்கத்திலிருந்து பிரிப்பது

ஒபாமா, சூ கீ

பர்மாவில், குற்றம் நாடுகிற முறையில் ‘மனித உரிமைகள்’ பிரச்சினையை அமெரிக்கா எழுப்பியது. 1997-லிருந்து பொருளாதார தடையை பர்மா மீது விதித்துள்ளது. இந்த நிலையில் பர்மா ராணுவ ஆட்சியாளர்கள் சீனா பக்கம் சாய்ந்தனர். எப்படி வல்லரசு நாடுகள் மூன்றாம் உலக நாடுகளை தமது போர்த்தந்திர நோக்கங்களுக்கு பயன்படுத்திக் கொள்கின்றன என்பதற்கு பர்மா மீது அமெரிக்கா எழுப்பும் ‘மனித உரிமைகள்’ பிரச்சினை சான்று பகர்கிறது. அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறிய பின்னர் ‘மனித உரிமைகள்’ நிலைமை மோசமாக சென்றாலும் அந்நாடு அமெரிக்காவின் இகழ்ச்சிக்கு ஆளாகாது. ‘மனித உரிமைகள்’ என்ற கருவியை தனது வெளியுறவு கொள்கையில் இணைத்து ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் பல நாடுகளில் அமெரிக்கா தனது நோக்கங்களை வெற்றி பெறச் செய்துள்ளது. பர்மாவில் தனது நோக்கத்தை ‘ஆட்சி மாற்றத்தால்’ அல்ல; ‘ஆட்சி ஒழுங்கமைவு’ ஒன்றின் மூலம் சாதித்துள்ளது.

ராஜபக்சே நிகழ்த்திய கொடூரத் தாக்குதலுக்கு உதவியும், ஊக்கமும் அளித்தவை அமெரிக்காவும், இஸ்ரேலும். இறுதிப் போரின் போது, பொதுவான கோரிக்கையுடன் அமெரிக்கா தன்னை வரம்பிட்டுக் கொண்டது. கவனமாக தவிர்க்கப்பட்ட வார்த்தைகள் ராஜபக்சேவுக்கு தெளிவான சுட்டுக் குறியை அளித்தது. இப்போது, படுகொலைகள் முடிந்த பின்னர், குவியும் ஆதாரம் இலங்கையை தனது போர்த்தந்திர ஒழுங்கிற்கு பணிய வைக்கும் வாய்ப்பாக அமெரிக்காவுக்கு பயன்படுகிறது. பர்மாவை போன்று இலங்கை அமெரிக்காவுக்கு சுலபமான ஒன்றல்ல. பர்மா அரசு மக்கள் செல்வாக்கை இழந்து, மக்களின் கோபத்துக்கு ஆளாகியிருந்தது. ஆனால், இலங்கையின் ராஜபக்சேவோ சிங்கள பேரினவாத உணர்ச்சிக்கு ஆட்பட்ட மக்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்றுள்ளார். வெளியிலிருந்து அளிக்கப்படும் நெருக்கடியை காரணம் காட்டி, சிங்கள நலனை காக்கும் காப்பாளனாக தன்னை முன்நிறுத்துகிறார். மட்டுமின்றி, இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் பிணைப்புகள் பர்மாவுடையதை விட ஆழமானது.

இலங்கையுடனான அமெரிக்காவின் தற்போதைய செயல்முறைகள் சற்று கடினமானதாக தோன்றலாம்; அனால், அவற்றின் இனிப்பான பலன்களுக்காக காத்திருக்கிறது, அமெரிக்கா. அயல் உறவுகளுக்கான செனட் ஆணையம் 2009-லேயே தமிழ் அகதிகள் பிரச்சினை குறித்து இவ்வாறு கருத்துரைத்தது. “இலங்கை இந்து மகா சமுத்திரத்தில் மிக முக்கியமான கடல்சார் வணிகப்பாதையில் ஐரோப்பா, சீனாவின் மத்திய கிழக்கு மற்றும் ஆசியப் பகுதிகளை இணைக்கும் புள்ளியில் அமைந்துள்ளது. அமெரிக்காவால் இலங்கையை நிச்சயமாக இழக்க முடியாது.” என்கிறது அந்த அறிக்கையின் வாசகங்கள். மேலும், அமெரிக்க ராணுவம் மனித உரிமைகள் சார்ந்த அக்கறைகள், இலங்கை ராணுவ அதிகாரிகளின் எதிர்கால நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக அமையப் பயிற்சி அளித்து, உறவு மேம்பட உதவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.

இந்திய ஆட்சியாளர்களின் மாற்றத்தில் தமிழ் உணர்வுகளுக்கு இடமில்லை

இந்திய கொள்கை

தமிழ் மக்களின் அழுத்தத்திற்கு அடிபணிந்து தான் இந்திய அரசு ஐ.நா. மனித உரிமைகள் குழுவில் இலங்கைக்கு எதிராக வாக்களித்தது என்ற வாதத்தை ஏற்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. 2009-ல் பேரழிவு நடந்து கொண்டிருந்த போது இந்தியா தனது கப்பற்படையை புலிகளின் கப்பற்படைக்கு எதிராக கொண்டு நிறுத்திய போது தமிழகத்தில் கிளர்ந்த தமிழ் உணர்ச்சி கைகொடுக்கவில்லை. இப்போதும், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் போராட்டங்களும் கண்டுகொள்ளப்படவில்லை என்பதே உண்மை. உண்மையில் ஜெயலலிதாவின் ஆவேசங்கள் அமெரிக்காவின் திசை மாறும் கொள்கையை ஒப்பனையற்று தடம் பற்றுகிறது. ஒரு கூடுதல் மிகை மற்றும் தீவிரத்தன்மையுடன் புலிகளிடம் வெளிப்படையான பகைமையை பாராட்டிக் கொண்டிருந்தவர் ஜெயலலிதா. தொடக்கத்தில் ராஜபக்சேவின் போருக்கு மறைமுக ஆதரவையே வழங்கினார். ஜனவரி 2009-ல், இன்று நமக்கு தேவை போர் நிறுத்தம். அதனை எப்படி சாதிக்க முடியும்? புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைந்தால் தானே இது சாத்தியமாகும். அதே ஆண்டு மார்ச் 10-ம் தேதி அவர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டார். இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் ஒரு சுயநிர்ணய உரிமையை கோரினார். மே 10-ம் தேதி ‘ தனித் தமிழீழமே இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு ஒரே தீர்வு. இந்திய ராணுவத்தை இந்திரா காந்தி கிழக்கு பாகிஸ்தானுக்கு அனுப்பி வங்கதேசத்தை அமைத்தது போல ஈழம் அமைப்பேன்’ என்றார். வெறும் நான்கே மாதங்களில், புலிகளை ஆயுதங்களை கீழே போட கேட்டுக் கொண்ட நிலைப்பாட்டிலிருந்து தடம் புரண்டு ஈழத்தை பெற்றுத்தர இந்திய ராணுவம் ஆயுதம் தூக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு தாவினார்.

ஜூன் 2011-ல் இந்தியா வருகை தந்த ஹிலாரி கிளிண்டன் ஜெயலலிதாவை சந்தித்தார். அமெரிக்க அரசுத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்ட தகவலில் இருவரும் இலங்கை குறித்து விவாதித்துள்ளார்கள். அண்ணா மைய நூலகத்தில் ஹிலாரி பேசும் போது அமெரிக்காவும் இந்தியாவும் ஜனநாயக மதிப்பீடுகளுக்காக இப்பிராந்தியத்தில் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும் அவர், “அமெரிக்கா பசிபிக் பிராந்தியத்தில் சக்தி படைத்த நாடு. இந்து மகா சமுத்திரம் மற்றும் பசிபிக் பெருங்கடலுக்கு இடையே இருக்கும் பிராந்தியத்தில் இந்தியா ஒரு மேலாளர். இந்த பகுதி விதிமுறைகளை ஒழுங்காக கடைப் பிடிக்குமா? சர்வதேச விதிமுறைகளை கடைப்பிடித்து இங்கு சமூக நிறுவனங்கள் எழுப்பப்படுமா ? இரு நாடுகளுக்கும் இந்த பகுதியின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெரும்பங்கு உள்ளது” என்று தெரிவித்து விட்டு சென்றார்.

இலங்கை மீதான அமெரிக்காவின் அழுத்தம் என்பது 2011 -க்குப் பிறகு வேகம் பெற்றது. ஜெயலலிதாவும் அன்றிலிருந்து இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக உரத்த கடுங்குரல் எழுப்பி வருகிறார். அவருடைய பகட்டு நடிப்புத்திறம் கருணாநிதியையும் விஞ்சி நிற்கிறது. இலங்கை தொடர்பாக இரண்டு கணக்குகளை இந்தியா எடைபோட்டு வருகிறது. இரண்டுமே ஈழத்தமிழர்களுக்கு ஆதரவானதல்ல. ஒரு பக்கம் தனது செல்வாக்குமிக்க பகுதியில் சீனா செய்து வரும் ஆதிக்கத்தால் இந்தியா கவலை கொள்கிறது. 2007-ல் இலங்கை JY –11 3D ரேடார் கருவியை சீனாவிடமிருந்து பெற்றபோது இந்திய பாதுகாப்பு ஆலோசகர் MK நாராயணன் ஆவேசப்பட்டார். அதை, இந்திய வளிமண்டலத்தை ஆக்கிரமிக்கும் சீனாவின் சதியாக கருதினார். இலங்கைக்கு வேண்டிய ஆயுதங்களை இந்தியாவால் தர இயலும் என்று கூறினார். அதனை அடியொற்றி 2009-ல், ஐ.நா மனித உரிமைகள் குழுவில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தது.

இன்னொரு பக்கம், அமெரிக்கா இந்திய ஆட்சியாளர்களிடம் இலங்கையில் ஒரு ‘ஆட்சி மீள்ஒழுங்கமைவு’ ஒன்றிற்கு ஒத்துழைப்பை கோரியிருப்பதாக தெரிகிறது. இந்தியாவுக்குரிய வெகுமானத்தையும் அமெரிக்கா அளிக்கும். அதன்படியே 2009-ல் ஐ.நா மனித உரிமைகள் குழுவில் இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தது.

இலங்கையின் போர்க்குற்றவாளிகளை தண்டிக்கும் நேர்மையான கோரிக்கை என்பது அந்த குற்றத்தோடு தொடர்புடைய அனைவரிடமிருந்து விலகி, சுயேச்சையாக ஒலிக்க வேண்டும்.

SHARE