காஸாவில் போர் நிறுத்தம் வலியுறுத்தி அமெரிக்க விமானப்படை வீரர் ஆரோன் புஷ்னெல் உயிரை மாய்த்துக் கொண்ட இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த(07.10.2023) இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே தொடங்கிய போர் 4 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.
இதனால், லட்சக்கணக்கான மக்கள் தங்களது வாழ்விடத்தைவிட்டு இடம்பெயர்ந்துள்ளனர். இப்போரில் 30,000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். இருப்பினும் காஸா மீது இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
சமீபத்தில் தெற்கு காஸாவில் உணவுக்காக காத்திருந்த பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 100-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் உலக நாடுகளிடையே மிகப்பெரிய அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியது.
இதனிடையே கடந்த (25.02.2024) அமெரிக்க விமானப்படை வீரரான ஆரோன் புஷ்னெல் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி, அமெரிக்காவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் முன் ‘சுதந்திர பாலஸ்தீனம் வேண்டும்’ என்று முழக்கமிட்டுக்கொண்டே தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
இச்சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஆரோன் புஷ்னெல் உயிரை மாய்த்துக் கொண்ட இடமான இஸ்ரேலிய தூதரகத்தின் முன் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
‘சுதந்திர பாலஸ்தீனம் வேண்டும்’ என்ற பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல அமெரிக்க வீரர்கள் தங்கள் சீருடைகளை எரித்து முழக்கமிட்டனர்.
இந்த போராட்டம் குறித்த பல வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது.