அமைச்சர்களான தொண்டமானுக்கும் டக்ளஸிற்கும் இடையில் வாக்குவாதம்-50000 வீடுகளை நிர்மாணிப்பது தொடர்பி

474

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் நிறைவில் இந்த வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் 50000 வீட்டுத் திட்டம் தொடர்பில் இந்த முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.

50000 வீடுகளை நிர்மாணிப்பது தொடர்பிலான யோசனைத் திட்டத்தை அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இந்த வீட்டுத் திட்டத்தில் குறிப்பிட்டளவு வீடுகள் வடக்கு மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் தேவானந்தா கோரியுள்ளார்.

டக்ளஸின் இந்தக் கோரிக்கைக்கு அமைச்சர் தொண்டமான் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

இந்திய அரசாங்கம் வடக்கு மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதாகவும் இந்த திட்டம் மலையக பெருந்தோட்ட மக்களுக்கானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாக்குவாதத்தில் தலையீடு செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வீடமைப்பு திட்டத்தினை மலையகத்தில் முன்னெடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸின் கோரிக்கைக்கு மதிப்பளிக்காது ஜனாதிபதி தொண்டமானின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்து வெளியேறிய போது “ ஊவா மாகாணசபைத் தேர்தலில் பெருந்தோட்ட தமிழ் மக்களின் வாக்குகள் மூலமாகவே அரசாங்கம் அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டது எனவும், இதனை எப்படியாவது இல்லாமல் செய்ய டக்ளஸ் முயற்சிக்கின்றார்” என அமைச்சர் தொண்டமான் நேரடியாக குற்றம் சுமத்தியுள்ளார்.

 

SHARE