அயர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் கைப்பற்றியது.
குர்பாஸ் 51
ஷார்ஜாவில் அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடந்தது.
நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தெரிவு செய்ய, ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பாடியது. இப்ராஹிம் ஜட்ரான் 22 ஓட்டங்களிலும், ரஹ்மத் 4 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
அரைசதம் அடித்த குர்பாஸ் 51 (53) ஓட்டங்கள் குவித்தார். பின்னர் நிதானமாக ஆடிய அணித்தலைவர் ஷாஹிடி 103 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 69 ஓட்டங்களும், நபி 62 பந்துக்களில் 48 ஓட்டங்களும் எடுத்தனர்.
அதன் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஆப்கானிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 236 ஓட்டங்கள் எடுத்தது. மார்க் அடைர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
முகமது நபி
அடுத்து களமிறங்கிய அயர்லாந்து அணியில் ஆண்ட்ரூ பால்பிரிணி 1 ரன்னில் அவுட் ஆனார். எனினும் அணித்தலைவர் பால் ஸ்டிர்லிங் மற்றும் கர்டிஸ் கேம்பர் கூட்டணி 73 ஓட்டங்கள் குவித்தது.
நபியின் பந்துவீச்சில் ஸ்டிர்லிங் 50 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, கேம்பர் 43 ஓட்டங்களில் நங்யால் பந்துவீச்சில் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து களமாடிய வீரர்கள் முகமது நபி மற்றும் நங்யால் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அயர்லாந்து அணி 35 ஓவர்களில் 119 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 117 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என கைப்பற்றியது.
இப்போட்டியில் முகமது நபி முதல் முறையாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவரது சிறந்த பந்துவீச்சு 5/17 ஆகும். அதேபோல் நங்யால் காரோட்டி அறிமுக போட்டியிலேயே 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.