16 ஆம் நூற்றாண்டிலிருந்து போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் போன்ற அந்நியர் ஆட்சிக்கு இலங்கைத்தீவு உட்பட்டிருந்தது. 1802 ஆம் ஆண்டு முதல் இலங்கை முடிக்குரிய ஒரு குடியேற்ற நாடாக மாறியது. இதிலிருந்து இலங்கையின் கரையோரப் பிரதேசங்களின் சிவில் நிர்வாகம், நீதிப்பரிபாலனம், நிர்வாக விடயங்கள் பிரித்தானிய அரசினால் இலங்கையில் நியமிக்கப்பட்டிருந்த தேசாதிபதியால் நிறைவேற்றப்பட்டன.
அதனைத்தொடர்ந்து 1833இல் பிரித்தானியரால் கோல்புறுக் கமரன் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. இது நாட்டின் அரசியலமைப்பு துறையில் அடித்தளத்தினை வேரூன்ற ஏதுவாக அமைந்தது. அதனையடுத்து 1912இல் குறு மக்கலம் சீர்திருத்தங்கள் 1922இல் மனிங் சீர்திருத்தங்கள், 1924இல் மனிங் டிவன்சயர் சீர்திருத்தங்கள் இடம்பெற்றன. தொடர்ந்து 1931ஆம் ஆண்டில் டொனமூர் அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
அதற்குப்பின்னரான காலகட்டத்தில் இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் 1944 இல் பிரித்தானிய அரசாங்கம் சோல்பரி பிரபுவின் தலைமையில் ஆணைக்குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பியது. இலங்கை அமைச்சர்களால் வரையப்பட்ட யாப்பில் காணப்பட்ட சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டு 1947 ஆம் ஆண்டு சோல்பரி யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. சோல்பரி அரசியல் யாப்பின்படி இலங்கையில் பாராளுமன்ற ஜனநாயக முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகக் கொண்டு முதலாவது குடியரசு யாப்பொன்று 1972ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1977 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தினைத் தொடர்ந்து அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் பற்றி கலந்துரையாடும் தீர்மானம் அனைத்து அரசியல் தலைவர்களினாலும் முன்வைக்கப்பட்டது. முதலாவது குடியரசு யாப்பின் திருத்தமாக அரசாங்கம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அறிமுகத்தோடு 1978ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு முறை கொண்டு வரப்பட்டு அதுவே இரண்டாவது குடியரசு யாப்பாக கொள்ளப்பட்டது.
அடிப்படை உரிமைகள், நீதித்துறை எனப் பலவற்றை உள்ளடக்கிய விரிவான முறையில் இவ்வரசியல் யாப்பு தற்போது வரையில் 19 தடவைகள் திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஆறாவது, பதின்மூன்றாவது, பதினேழாவது, பதினெட்டாவது மற்றும் பத்தொன்பதாவது திருத்தங்கள் அரசியல் முக்கியத்துவத்தினை பெற்று நிற்கின்றன.
2000 ஆம் ஆண்டு அரசியலமைப்பு திருத்த யோசனை பாராளுமன்றில் வரைபாக முன்வைக்கப்பட்ட போதும் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற முடியாது தோல்வியைக் கண்டது. இந்நிலையில் 1972, 1978ஆகிய குடியரசு யாப்புக்களில் தமிழ் மற்றும் தமிழ் பேசும் சிறுபான்மை தேசிய இனங்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டிருந்தன.
2015 ஜனவரி 08ஆம் திகதி நடைபெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் பிரதான அரசியல் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன ஒன்றிணைந்து அமைத்த தேசிய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இலங்கை புதிய அரசியலமைப்பு ஒன்றினை இயற்றும் பணிகள் அனைத்து தரப்பினரின் பங்கேற்புடன் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏகமனதாக நிறைவேறிய பிரேரணை
அரசியலமைப்புச் சபையை நியமிப்பதற்கான பிரேரணையொன்று ஜனவரி ஒன்பதாம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த பிரேரணையில் இலங்கைக்கு அரசியலமைப்பொன்றை வகுத்தல் அவசியமென இலங்கை மக்கள் மத்தியில் பரந்தளவில் இணக்கப்பாடு காணப்படுகின்றது என்பது குறிப்பிடப்பட்டு 23வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
முதலாம், இரண்டாம் வாசகங்களில், இலங்கையின் அரசியலமைப்பு பற்றிய மக்களின் கருத்துக்களையும் ஆலோசனை களையும் பெற்று அவற்றைப் பற்றிக் கலந்தாராய்ந்து அரசியலமைப்பின் 75ஆவது உறுப்புரையின் கீழ் பாராளுமன்றத்தின் தத்துவங்களைப் பிரயோகிப்பதில் அதன் பரிசீலனைக்காக அரசியலமைப்பு சட்டமூலத்தின் வரைபைத் தயாரிக்கும் நோக்கத்துக்காக இதன் பின்னர் அரசியலமைப்புச் சபை என அழைக்கப்படும். எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கிய பாராளுமன்றக் குழு ஒன்று தாபிக்கப்படுதல் வேண்டுமென இந்தச் சபை தீர்மானிக்கின்றது. பாராளுமன்றத்தின் சபாநாயகர் அரசியலமைப்பு சபையின் தவிசாளராக இருப்பார். அரசியலமைப்பு சபை ஏழு பிரதித் தவிசாளர்களைக் கொண்டதாக இருக்கும் என்பதுடன் அவர்கள் அரசியலமைப்பு சபையினால் தெரிவு செய்யப்படவேண்டும். சபாநாயகர் இல்லாத சந்தர்ப்பங்களில், சபைக்கூட்டங்களின் அமர்வுக்குத் தலைமை வகிப்பதற்கு அரசியலமைப்பு சபையின் பிரதித் தவிசாளர்களுக்கிடையே ஒருவரைத் தெரிவு செய்தல் வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மிக முக்கியமாக 5ஆவது வாசகத்தில், அரசியலமைப்பு சபை பின்வரும் உப குழுக்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.
(அ) அரசியலமைப்பு சபையினால் நியமிக்கப்படுகின்ற இருபத்தொரு பேரை விஞ்சாத எண்ணிக்கையாகக் கொண்டதும் அவர்களில் ஒருவர் தவிசாளராகவும் கொண்டதொரு வழிப்படுத்தும் குழு.
வழிப்படுத்தும் குழு அரசியலமைப்பு சபையின் அலுவல்கள் மற்றும் இலங்கையின் அரசியலமைப்பை வரையும் பணி ஆகியவற்றுக்கான பொறுப்புக்களை கொண்டிருத்தல் வேண்டும்.
(ஆ) அரசியலமைப்பு சபையினால் நியமிக்கப்படக்கூடிய அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்களைக் கொண்ட அத்தகைய ஏனைய உபகுழுக்கள்.
ஆயின், ஒவ்வொரு உப குழுவும் பதினொரு பேரை விஞ்சாதவாறு உறுப்பினர்கள் இருத்தல் வேண்டும். ஒவ்வொரு உப குழுவினதும் தவிசாளர் வழிப்படுத்தும் குழுவினால் நியமிக்கப்படுதல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம் குறித்த தீர்மானத்தில் அரசியலமைப்பு வரைபு நிறைவேற்றப்படும் முறைமை மற்றும் உருவாக்கப்பட்ட குழுக்கள் கலைக்கப்படுதல் தொடர்பிலும் 20ஆம் 21ஆம் 22ஆம் 23ஆம் வாசகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
20 ஆவது வாசகத்தில், அரசியலமைப்பு சபையினால் சாதாரண பெரும்பான்மையினால் மாத்திரம் அரசியலமைப்பு சட்டமூலத்தில் உள்ள பிரேரணைகள் அங்கீகரிக்கப்படுமிடத்து.
பிரேரணைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படல் வேண்டுமென்பதுடன் அறிக்கையையும் அரசியலமைப்பு சட்டமூலத்தையும் ஒரு மாதத்திற்குள் சமுகமளிக்காத உறுப்பினர்களையும் உள்ளடக்கியதாக முழுப் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் அங்கீகரிக்கப்படுமிடத்து. அரசியலமைப்பு சட்டமூலம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டுமென்பதுடன் இதற்குப் பின்னர் இதன் 21 ஆவது பிரிவின் ஏற்பாடுகள் ஏற்புடையதாகும் என்பதுடன் அரசியலமைப்பு சபை மற்றும் பிரேர ணையை முன்வைத்த குழு கலைந்ததாக கருதுதல் வேண்டும்.
21 ஆவது வாசகத்தில், அரசியலமைப்புச் சபை அரசியலமைப்பு வரைபு பற்றிய தீர்மானத்தை மூன்றில்இரண்டு பெரும்பான்மையினால் அங்கீகரிக்குமிடத்து அறிக்கை மற்றும்அரசியலமைப்பு வரைவும் வழிப்படுத்தும் குழுவினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும் என்பதுடன் இந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசியலமைப்பு சபையும் உப குழுக்களும் கலைக்கப்பட்டதாகக் கருதப்படல் வேண்டும்.
22ஆவது வாசகத்தில், அரசியலமைப்புச் சபை மற்றும் 5ஆம் வாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உபகுழுக்கள் மற்றும் இந்த தீர்மானத்துக்கு அமைவாக நியமிக்கப்பட்டுள்ள பணியாளர் மற்றும் ஆலோசகர்களுக்கான செலவினங்கள் திரட்டு நிதியத்தில் இருந்து மேற்கொள்ளப்படுதல் வேண்டும் என்பதுடன் அரசியலமைப்பி 150ஆவது உறுப்புரையின் பிரகாரம் அவ்விடயம் தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகளைப் பாராளுமன்றம் மேற்கொள்ளுதல் வேண்டும்.
இறுதியாக 23ஆவது வாசகத்தில், சந்தேகங்களைத் தவிர்ப்பதற்காக, சமூகமளிக்காத உறுப்பினர்கள் உட்பட பாராளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் மூன்றிரண்டு பெரும்பான்மையினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட, பின்னர் அரசியலமைப்பின் 83ஆவது உறுப்புரையில் தேவைபடுத்தப்பட்டவாறு மக்கள் தீர்ப்பொன்றின் போது மக்களினால் அங்கீகரிக்கப்படுமிடத்து மாத்திரம் அரசியலமைப்பு சட்ட மூலம் சட்டமாக்கப்படுதல் வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பிரேரணையானது மார்ச் மாதம் 09ஆம் திகதி வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
வழிநடத்தும் குழு
அதனையடுத்து அரசியலமைப்பு சபையை நியமிப்பதற்கான கட்டமைப்பு தீர்மானத்தின் 05 (அ) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அரசியலமைப்பு சபையின் முதலாவது அமர்வு 2016 ஏப்ரல் 05 ஆம் திகதி நடைபெற்றபோது அரசியலமைப்புச் சபையின் வழிப்படுத்தும் குழுவுக்கான 21 அங்கத்தவர்களும் நியமிக்கப்பட்டனர்.
வழிப்படுத்தும் குழுவுக்கு தலைவராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார். அமைச்சர்களான லக் ஷ்மன் கிரியெல்ல, நிமல் சிறிபால டி சில்வா, ரவூப் ஹக்கீம்,கலாநிதி.விஜேதாஸ ராஜபக் ஷ, ஏ.டீ.சுசில் பிரேமஜயந்த, ரிஷாட் பதியுதீன், பாட்டலி சம்பிக ரணவக்க, டி.எம். சுவாமிநாதன், மனோ கணேசன், மலிக் சமரவிக்ரம, இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா, ஆகியோரும் எதிர்க்கட்சித்தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன், ஜே.வி.பி.தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, எம்.ஏ. சுமந்திரன், டாக்டர் திருமதி துஸிதா விஜேமான்ன, பிமல் ரத்நாயக்க, பிரசன்ன ரணதுங்க, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.
வழிநடத்தல் குழுவின் அடிப்படை குறிப்புக்கள்
சிலோன் அரசியலமைப்பு ஆணைக்குழு ஆணை (1946 சோல்பரி அரசியல்யாப்பு), 1972 இல் இயற்றப்பட்ட முதலாவது குடியரசு யாப்பு, 1978ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இரண்டாவது குடியரசு யாப்பு, 2000 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு வரைபு, புதிய அரசியலமைப்பினை அடிப்படை ரீதியில் வடிவமைக்க அனைத்து கட்சி பிரதிநிதித்துவ குழுவின் பிரேரணைகள் ஆகியவற்றை அடிப்படை குறிப்பு பொருளாக வழிநடத்தல் குழு எடுத்துள்ளதோடு அடிப்படை உரிமைகள் மீதான புதிய அத்தியாயங்கள் தொடர்பான குழு அறிக்கை, மற்றும் மக்கள் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு பொது பிரதிநிதித்துவ குழு அறிக்கை ஆகியவை தொடர்பாகவும் ஆழமான கவனம் செலுத்துகின்றது.
நேரடியாக கையாளப்படும் விடயங்கள்
புதிய அரசியலமைப்பின் கணிசமான பல்வேறு அம்சங்களில், சிறந்த ஆய்வுகளை மேற்கொள்ளல், திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றினை பரிசீலித்து திருத்தியமைத்தல், அரசியலமைப்பு பிரேரணை வரைபு செய்தல் ஆகிய பணிகளை வழிநடத்தும் குழு மேற்கொள்கின்றது.
தற்போதய அரசியல் யாப்பின் முதலாவது மற்றும் இரண்டாவது அத்தியாயம் தொடர்பில் கலந்துரையாடல், நாட்டின் தன்மை, இறையாண்மை, மதம், அரசாங்கத்தின் கட்டமைப்பு, தேர்தல் சீர்திருத்தங்கள், அதிகாரப் பகிர்வுக்கான கோட்பாடுகள், காணி ஆகிய தலைப்புக்களின் கீழான கலந்துரையாடல்களை மேற்கொண்டு தீர்மானம் மேற்கொள்வதென வழிப்படுத்தல் குழுவினரால் தன்னகத்தே தீர்மானிக்கப்பட்டுள்ளது.