அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளுக்கு ஐ.தே.க பாராட்டு

467

கொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்திற்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று(புதன்கிழமை) இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தவிர்ப்பதற்கு அரசாங்கம் இதுவரை முன்னெடுத்துள்ள செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் திட்டமிட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் பற்றி ஜனாதிபதி விரிவாக விளக்கினார்.

தற்போது வைரஸ் தொற்றுடையவர்களில் பெரும்பாலானவர்கள் நோய்த்தடுப்பு மத்தியநிலையங்களில் அடையாளம் காணப்பட்டவர்கள் அல்லது இதற்கு முன்னர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களுடன் நெருக்கமாக பழகியவர்களுக்கு மத்தியிலிருந்து அடையாளம் கண்டு கொண்டதும் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு பெரிதும் உதவியதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மக்கள் வாழ்க்கையை சுமுகமாக பேணுவதற்கு அத்தியாவசிய சேவைகள், உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்களை விநியோகிக்கும் பொறிமுறை மற்றும் விசேட செயலணி நடைமுறைப்படுத்தியுள்ள நிகழ்ச்சித்திட்டம் பற்றி அதன் தலைவரும் ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியுமான பசில் ராஜபக்ஷ விளக்கினார்.

நாட்டில் இனம்காணப்பட்ட 65 லட்சம் குடும்பங்களில் 53 லட்சம் குடும்பங்களுக்கு ஏப்ரல் மாதம் 09 ஆம் திகதிக்கு முன்னர் 5000 ரூபாவை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

வைரஸ் தொற்று பரவுவதை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டம் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு ஏற்படக்கூடிய தடைகளை குறைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது இருதரப்பினதும் கருத்தாகவிருந்தது.

இந்நிகழ்ச்சித்திட்டம் அரசியல் சார்பற்றதாக இருக்க வேண்டும் என்பதிலும் இரு தரப்பினரும் உடன்பட்டனர்.

நாட்டின் பொருளாதார செயற்பாடுகள் வீழ்ச்சியுறாது தொடர்ச்சியாக பேணுவதும் அரச ஊழியர்கள், வர்த்தகர்கள், பெருந்தோட்டத்துறை மக்கள் மற்றும் நாளாந்தம் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள், சுய தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் முகம்கொடுத்துள்ள கஷ்டங்கள் குறித்தும், அவற்றுக்கு வழங்க முடியுமான தீர்வுகள் குறித்தும் இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.

மருத்துவர்கள், தாதிகள் உள்ளிட்ட அனைத்து சுகாதார ஊழியர்கள், முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு தரப்பினரின் அர்ப்பணிப்பும் இரு தரப்பினரினதும் பாராட்டுக்குள்ளானது.

கலந்துரையாடலில் கலந்துகொண்டவர்கள் மாவட்ட மட்டத்தில் தமது கட்சிப் பிரதிநிதிகளுக்கு அறிவூட்டுவதற்கும் உடன்பட்டதுடன், இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேல் இடம்பெற்ற இக்கலந்துரையாடல் மிகவும் சுமுகமாகவும் வெற்றிகரமாகவும் இடம்பெற்றது.

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர்களான தினேஷ் குணவர்த்தன, நிமல் சிறிபால டி சில்வா, விமல் வீரவங்ச, பந்துல குணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, டலஸ் அழகப்பெரும ஆகியோரும் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி உப தலைவர் ரவி கருணாநாயக, அர்ஜுன ரணதுங்க, ருவன் விஜேவர்த்தன, தயா கமகே, பாலித ரங்கேபண்டார, நவீன் திஸாநாயக, லக்ஷ்மன் விஜயமான்ன ஆகியோரும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆட்டிகல மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யு டீ. லக்ஷ்மன் ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

SHARE