30 ஆண்டுகாலப் போர் வெற்றி கொள்ளப்பட்ட பின்னர் இதனை வெற்றி கொண்ட நாட்டின் பெரும்பான்மை சமூகமும், பாதுகாப்புப் படையும்
மிகவும் பெருந்தன்மையுடனும், தாராள மனப்பாங்குடன் நடந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக, இவர்கள் போர் மமதையுடன் நடந்து கொண்டனர்.
இவ்வாறு கொழும்பை தளமாகக்கொண்ட Ceylon Today ஆங்கில ஊடகம் தனது ஆசிரியத் தலையங்கத்தில் சுட்டிக்காட்டி உள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.
சிறிலங்கர்களின் ‘காஸா’ என நோக்கப்படும் வடக்கில் சிறிலங்கா அரசாங்கமானது பொதுமக்களுக்குச் சொந்தமான நிலங்களை அபகரிப்பது தற்போது அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் தனியாருக்குச் சொந்தமான 6000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பை சிறிலங்கா அரசாங்கம் தனக்குச் சொந்தமாக்க தீர்மானித்துள்ளதானது தற்போது சிறிலங்காவின் வடக்கில் எவ்வாறான தீவிரமான சூழல் நிலவுகின்றது என்பதை தெளிவாகக் காண்பிக்கிறது.
இவ்வாறான நிலைப்பாடு தொடர்பாக சிறிலங்காவில் செயற்படும் இரு முக்கிய பொது அமைப்புக்களான ‘மாற்றுக் கொள்கைக்கான மையம்’ மற்றும் ‘தேசிய சமாதானப் பேரவை’ ஆகிய இரண்டும் தமது எதிர்ப்பை இரு வேறு அறிக்கைகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளன. மாற்றுக் கொள்கைக்கான மையமானது யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொண்ட களஆய்வு அறிக்கையில், இங்கு நிலவும் நில அபகரிப்பு தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலை தொடரும் போது பல ஆயிரக்கணக்கான மக்கள் தமது நிலங்களை இழக்க வேண்டி ஏற்படலாம். இதனால் சிறிலங்கா அரசாங்கம் இதன் தீவிரத்தன்மையைக் கருத்திற் கொண்டு வெளிப்படையான, மக்கள் பங்களிப்புடன், நீதியான நடவடிக்கைகளை மிகத் துரிதமாக எடுக்க வேண்டும் என மாற்றுக் கொள்கைக்கான மையம் தனது களஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
போரால் பாதிக்கப்பட்ட மக்களின் காணிகளை சிறிலங்கா அரசாங்கம் சுவீகரிப்புச் செய்வதால் மக்கள் இதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதாக தேசிய சமாதானப் பேரவையின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 24 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தமக்குச் சொந்தமான காணிகளை இழக்க வேண்டிய ஆபத்தில் உள்ளதால் இவர்கள் இதனைத் தாம் ஒருபோதும் இழந்து விடக்கூடாது என்பதற்காக இவ்வாறான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர் எனவும் இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலை தற்போது வடக்கில் வாழும் பெரும்பாலான மக்கள் மத்தியில் அதிருப்தியையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
போரின் விளைவால் இடம்பெயர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மே 2009ல் சிறிலங்காவின் உள்நாட்டு யுத்தம் முடிவுற்ற கையோடு அரசாங்கத்தால் வாக்குறுதி வழங்கப்பட்டதாகவும் தேசிய சமாதானப் பேரவை தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில், பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது எனவும் இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் தான் வழங்கிய வாக்குறுதியைக் காப்பாற்றத் தவறிய அதேவேளை, தமது நிலங்களைத் தம்மிடம் திருப்பித் தருமாறு கோரும் பொதுமக்களை அடக்குவதற்கு பாதுகாப்புப் படையினரைப் பயன்படுத்துவதாகவும் தேசிய சமாதானப் பேரவையின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காணி அதிகாரம், சமூக வளர்ச்சி, அரசியல் அதிகாரப் பகிர்வு போன்றன தொடர்பான மூலோபாயங்கள், கோட்பாடுகளில் வடக்கு தெற்கு பிரிவினைவாதம் என்பது தற்போதும் தொடர்கிறது. வடக்கு மற்றும் தெற்கில் வாழும் இனங்களின் தலைவர்கள் குறிப்பாக 20ம் நூற்றாண்டில் இவ்விரு இனங்களின் உறவுநிலையில் விரிசலை ஏற்படுத்துவதில் முன்னோடிகளாக காணப்படுகின்றனர்.
சிறிலங்காத் தீவு சுதந்திரமடைந்ததிலிருந்து இதனை ஆண்ட அரசாங்கங்கள் தேசியப் பிரச்சினைக்கு நிலையான தீர்வொன்றை முன்வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போதும் அவை தோல்வியில் முடிவடைந்தன. சிறிலங்காவில் வாழும் இனங்களுக்கிடையில் ஒற்றுமையையும் சமாதானத்தையும் ஏற்படுத்துகின்ற நடுநிலையான மீளிணக்கப்பாட்டு முயற்சிகளை அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக, இவ்வினங்களின் அரசியற் தலைவர்கள் புராதான காலத்தில் பயன்படுத்தப்பட்ட இன அதிகாரத்துவத்தை தமது முன்னைய வரலாற்றுச் சம்பவங்கள் மற்றும் வேதாகமங்கள் மூலம் நிரூபிப்பதற்கான வழிமுறையைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இவ்வாறான எதிர்மறை விளைவுகள் இனங்களுக்கிடையில் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியானது நாட்டின் பொருளாதாரத்தை பெருமளவில் பாதித்தது. 30 ஆண்டுகாலப் போர் வெற்றி கொள்ளப்பட்ட பின்னர் இதனை வெற்றி கொண்ட நாட்டின் பெரும்பான்மை சமூகமும், பாதுகாப்புப் படையும் மிகவும் பெருந்தன்மையுடனும், தாராள மனப்பாங்குடன் நடந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக, இவர்கள் போர் மமதையுடன் நடந்து கொண்டனர். இதனால் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் உளவியல் பாதிப்பைச் சந்திக்க வேண்டியேற்பட்டது.
அண்மையில் சிறிலங்கா அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட நில அபகரிப்புச் சட்டம் மற்றும் அதன் இரண்டாவது சரத்து ஆகியவற்றின் மூலம் தற்போது பொதுமக்களுக்குச் சொந்தமான நிலங்களை அரசாங்கம் சட்ட ரீதியாக சுவீகரித்து வருகிறது. குறிப்பாக வடக்கில் வாழும் மக்களின் சொந்த நிலங்களை அரசாங்கம் அபகரிப்பதால் நாட்டில் மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு இது உதவிசெய்யவில்லை என கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான நிலை தொடரும் போது வடக்கில் வாழும் மக்கள் மட்டுமல்லாது நாட்டில் நிலையான சமாதானம் எட்டப்படாது தெற்கில் வாழும் மக்களும் பாதிக்கப்படுவார்கள்.
ஏற்கனவே நல்லிணக்க ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை அமுல்படுத்த வேண்டும் சிறிலங்கா அரசாங்கம் மீது அனைத்துலக சமூகம் அழுத்தங்களை மேற்கொண்டுள்ள இந்நிலையில் இவ்வாறான தொடர்ச்சியான தமிழர் நிலங்கள் அபகரிப்பானது கிட்டிய எதிர்காலத்தில் நாட்டை சீரழிவிற்கு இட்டுச் செல்லும் என்பது உறுதியானது.