அரசியல் கைதிகள் விவகாரத்தில் பொது மன்னிப்பு  அல்லது புனர்வாழ்வு  அதற்குமேல் கேட்குமளவிற்கு தமிழ் தலைவர்களுக்குத் திராணியுமில்லை 

410

 

 

கடந்த ஆண்டு அரசியற்கைதிகள் போராடிய போது அதில் யாழ் பல்கலைக்கழகமும் பங்குபற்றியது. கைதிகளுக்கு ஆதரவாக போராட்டத்தை முன்னெடுத்த சமூக அமைப்புக்களின் பிரதிநிதியாக அருட்தந்தை சக்திவேல் பல்கலைக்கழக மாணவர்களைச் சந்தித்தார். இச்சந்திப்பின் போது ‘நாங்கள் தலையிட்டால் அது உச்சக்கட்டப் போராட்டமாக இருக்க வேண்டும்’ என்று மாணவர்கள் கூறினார்கள். முடிவில் மாணவப் பிரதிநிதிகளும், சில அரசியல்வாதிகளும் சிறைச்சாலைக்குப் போனார்கள்.

அரச தரப்பைச் சேர்ந்த அங்கஜன் வழங்கிய வாக்குறுதிகளையடுத்து கைதிகள் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்கள். ஆனால் கைதிகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. தமது விசாரணையை அநுராதபுரத்திற்கு மாற்றக்கூடாது என்று கேட்ட கைதிகளுக்கு மட்டும் சிறு பரிகாரம் கிடைத்தது. மற்றும்படி கைதிகள் மறுபடியும் போராட வேண்டிய நிலமையே தொடர்ந்தது.

இப்பொழுது கைதிகள் மறுபடியும் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த வெள்ளிக்கிழமையோடு நமக்கு ஏற்றப்படும் சேலைனையும் நிறுத்தப்போவதாக அவர்கள் அறிவித்திருந்தார்கள். கடந்த ஆண்டு அவர்களுக்கு வாக்குறுதி வழங்கிய அங்கஜன் இப்பொழுது அமைச்சராக இருக்கிறார். அவரோடு போன மாணவர்கள் தமிழ் விழாக் கொண்டாடியிருக்கிறார்கள்.

இத்தனைக்கும் கைதிகளில் ஒருவர் பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சகோதரன் ஆவார். இது பற்றி தமக்கு பின்னரே தெரியவந்தது என்றும் அதற்கு முன்னரே விழா ஒழுங்குகள் செய்யப்பட்டு விட்டதாகவும் மாணவர்கள் கூறுகிறார்கள். மாணவர்கள் விழா கொண்டாடுவதில் தவறில்லை. ஆனால் தாங்கள் தொடங்கிய ஒரு போராட்டத்தில் அதன் உச்சக்கட்டம் வரை போய் அதற்கு ஒரு தீர்வு காண வேண்டிய பொறுப்பு அவர்களுக்குண்டு. போராடுவது என்பது தெட்டம் தெட்டமாக இடைக்கிடை செய்யப்படும் ஒரு தேநீர் விருந்து அல்ல. அது தொடர்பில் ஒரு சரியான அரசியல் தரிசனமும் வழிவரைபடமும் இருக்க வேண்டும். பல்கலைக்கழக மாணவர்களிடம் அது உண்டா?

மாணவரிடம் மட்டுமல்ல. தமது அரசியல்வாதிகளிடமும் அது உண்டா என்று கேட்க வேண்டும். கைதிகள் போராடும் போது அரசியல்வாதிகளும் சேர்ந்து போராடுகிறார்கள். அவர்களே வாக்குறுதிகளை வழங்கி போராட்டத்தை முடித்து வைக்கிறார்கள். ஆனால் ஒரு தீர்வும் கிடைப்பதில்லை. இப்படியாக சீசனுக்கு சீசன் கைதிகளுக்காகப் போராட வேண்டிய ஒரு நிலைமை ஏன் ஏற்பட்டது? இதற்குத் தமிழ் தலைவர்களே பொறுப்பு.

கடந்த ஏப்பிரல் மாதம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரனை கொண்டு வரப்பட்ட போது கூட்டமைப்பு அதற்கு எதிராக வாக்களித்தது. அதன் போது பத்து அம்சக் கோரிக்கைகளை கூட்டமைப்பு ரணிலிடம் முன்வைத்தது. அதில் கைதிகள் தொடர்பான கோரிக்கையும் உண்டு. அதன் பின் யூலை மாதம் 17ம் திகதி அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் சம்பந்தரைச் சந்தித்தார்கள்.

ரணில் விக்கிரமசிங்கவைக் காப்பாற்றுவதற்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அவர் நிறைவேற்றவில்லை என்பதனை சம்பந்தருக்கு நினைவூட்ட வேண்டியிருந்தது. அச்சந்திப்பின் போது சம்பந்தர் கைதிகள் தொடர்பாக உங்களிடம் உள்ள விபரங்களைத் தாருங்கள் என்று கேட்டிருக்கின்றார். அவர் இப்படிக் கேட்பது இதுதான் முதல் தடவையல்ல. இதற்கு முன்னைய ஆண்டுகளிலும் கேட்டிருக்கிறார்.

அவரைப் போலவே அரசுத்தலைவர் கேட்டிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் விக்னேஸ்வரன் தலைமையிலான குழு அரசுத்தலைவரை சந்தித்து அரசியற்கைதிகள் தொடர்பாகப் பேசிய போது அவர் அப்படிக் கேட்டிருக்கிறார். அது மட்டுமல்ல சட்டமா அதிபர் திணைக்களம் இது விடயத்தில் அவருக்கு கீழ்ப்படிவாக இல்லை என்ற ஒரு தோற்றம் வரத்தக்க விதத்தில் அச்சந்திப்பு அமைந்திருக்கிறது.

இப்படியாக கைதிகள் போராடும் பொழுது அரசாங்கத்தின் பிரமுகர்களும், தமிழ்த் தலைவர்களும் போராடும் அமைப்புக்களிடம் தகவல்களைத் தாருங்கள் என்று கேட்கிறார்கள். இது தொடர்பில் சரியான தகவல்களைக் கேட்டுப் பெற வேண்டியது யார்? சம்பந்தர் தான் அதைச் செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தில் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பி சம்பந்தப்பட்ட அமைச்சரிடமும் திணைக்களங்களிடமும் உத்தியோகபூர்வ தகவல்களைப் பெறவேண்டியது கூட்டமைப்புத்தான். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை.

போராடும் அமைப்பிடம் தகவல்களைத் தாருங்கள் என்று கேட்டால் அதற்கு என்ன பொருள்? கூட்டமைப்பு யாருடைய பிரதிநிதி? யூலை மாதம் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பு சம்பந்தரைச் சந்தித்த போது விரைவில் அரசுப் பிரதானிகளை தான் சந்திப்பேன் என்று அவர் கூறியிருக்கிறார். ஆனால் கைதிகள் போராடும் வரை இது தொடர்பான உத்தியோகபூர்வ சந்திப்புக்கள் எதுவும் இடம்பெற்றதாகத் தெரியவில்லை. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களின் பின்னரே கூட்டமைப்பு அரசுப்பிரதானிகளை சந்தித்திருக்கிறது.

இப்பொழுது போராடிக்கொண்டிருக்கும் கைதிகள் ஒப்பீட்டளவில் நடைமுறைச்சாத்தியமான ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார்கள். ஒரு குறுகிய காலப் புனர்வாழ்வின் பின் தங்களை விடுவிக்கக் கேட்கிறார்கள். கோட்பாட்டு ரீதியாகப் பார்த்தால் இது தவறு. புனர்வாழ்வைக் கேட்டுப் பெறுவது என்பது கைதிகள் தமது அரசியல் வாழ்க்கையை தாமாகவே பிழை என்று ஒப்புக்கொண்டதாகப் பொருள்.

பொது மன்னிப்புக் கேட்பதும் அப்படித்தான். தமது அரசியல் வாழ்க்கையையும் தமது அரசியல் செயற்பாடுகளையும் குற்றம் என்று ஏற்றுக்கொண்டே பொது மன்னிப்பு கேட்கப்படுகிறது. எனவே புனர்வாழ்வு அல்லது பொது மன்னிப்பு போன்ற கோரிக்கைகள் கைதிகளின் விவகாரத்தை சட்டப் பிரச்சினையாகவே பார்க்கின்றன.

ஆனால் இது சட்டப்பிரச்சினையல்ல. பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் வைத்துக்கொண்டு அதை சட்டப்பிரச்சினையாக அணுகினால் தீர்வு கிடைக்காது. மாறாக அதை ஓர் அரசியல் பிர்சசினையாகவே அணுக வேண்டும். அப்படி அணுகுவதற்குத் தேவையான அரசியற் திடசித்தம் தமிழ்த்தலைவர்களிடம் இல்;லை. இது விடயத்தில் அவர்கள் விசுவாசமாகவும் இல்லை.

ஆனால் இந்தக் கோட்பாட்டு விளக்கங்களைக் கைதிகளோடு கதைக்க முடியாது. அவர்கள் பல்லாண்டுகளாக குடும்பத்தைப் பிரிந்து வாழ்கிறார்கள். எவ்வாறான அரசியற் செயற்பாடுகளுக்காக அவர்கள் விசாரிக்கப்பட்டார்களோ அல்லது தண்டிக்கப்பட்டார்களோ அவ்வாறான அரசியற் செயற்பாடுகளை செய்யுமாறு அவர்களுக்கு கட்டளையிட்ட பலரும் இப்பொழுது வெளியே வந்துவிட்டார்கள். அவர்களில் சிலர் முன்னைய அரசாங்கத்தோடு இணங்கிச் செயற்பட்டு அமைச்சர்களாகவும் இருந்திருக்கிறார்கள். ஆனால் உத்தரவுகளை நிறைவேற்றிய கீழ்மட்டத்தினர் சிறையில் வாடுகிறார்கள். அவர்களுடைய பிரச்சினை இப்பொழுது எப்படியாவது வெளியே வருவது என்பதுதான்.

புனர்வாழ்வு ஒரு பொறியாக இருந்தாலும் கூட அதுவே உள்ளதில் இலகுவான வழியாகவும் அவர்களுக்குத் தெரிகிறது. 2009 மேக்குப் பின் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்களும் அப்படிக் கருதித்தான் புனர்வாழ்வை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களுடைய வழக்கறிஞர்கள் அவர்களுக்கு அப்படித்தான் ஆலோசனை கூறினார்கள். பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குக் கீழ் வழக்காடுவதில் உள்ள இடர்களைக் கவனத்தில் கொண்டே வழக்கறிஞர்கள் கைதிகளுக்கு அவ்வாறு கூறுகிறார்கள்.

புனர்வாழ்வு ஒரு தண்டனையல்ல என்று சட்டமா அதிபர் திணைக்களம் கூறுகிறது. புனர்வாழ்வு பெற்ற ஒரு கைதி வேறொரு குற்றத்திற்காக விசாரிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. எனினும் அதைவிட்டால் வேறு வழியில்லை என்று கைதிகள் கருதுகிறார்கள்.

சம்பந்தரும் பொது மன்னிப்பைத்தான் கேட்கிறார். அதே சமயம் சம்பிக்க ரணவத்த அரசியல் கைதிகளையும், போர்க்குற்றவாளிகளையும் சமப்படுத்தும் பேரம் ஒன்றை முன் வைக்கிறார். கைதிகளை விடுவிப்பதற்குப் பதிலாக போர்க்குற்ற விசாரணைகளைக் கைவிட வேண்டும் என்று அவர் கேட்கிறார். தோற்கடிக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்தை நோக்கி வெற்றி பெற்ற ஒரு இனத்தின் பிரதிநிதி ஒருவர் முன்வைக்கும் பேரம் இது. அரசுத்தலைவர் மைத்திரியும் போர்க்குற்ற விசாரணைகளை ஆதரிக்கவில்லை.

ஐ.நாத் தீர்மானங்களில் மாற்றங்களை ஏற்படுத்தப் போவதாக அவர் முன்பு கூறினார். தாமாக ஒப்புக்கொண்டு நிறைவேற்றிய தீர்மானங்களை இப்பொழுது திருத்த வேண்டுமென்று அவர்கள் சிந்திக்கிறார்கள். ஆனால் மேற்கு நாடுகளின் அழுத்தம் காரணமாக கடந்த வாரம் ஐ.நாவில் அவர் அந்தக் கோரிக்கையை முன்வைக்கவில்லை என்று தெரிகிறது.

ஆனால் இலங்கை விவகாரத்தில் உலக சமூகத்தின் தலையீடு தேவையில்லை என்று அவர் ஐ.நாவில் உரையாற்றியிருக்கிறார். அப்படியென்றால் 2009 மே மாதம் அவர் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலத்தில் யுத்தத்தை எப்படி வெற்றி கொள்ள முடிந்தது? உலக சமூகத்தின் பங்களிப்பின்றி அது நடந்திருக்குமா? தமிழர்களைத் தோற்கடிப்பதற்கு உலக சமூகம் தேவை. இப்பொழுது போர்க்குற்ற விசாரணைக்கு மட்டும் உலக சமூகம் தேவையில்லை.

இப்படிச் சிந்திக்கும் ஓர் அரசுத்தலைவர் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிப்பாரா? அல்லது புனர்வாழ்வு அளிப்பாரா? தென்னிலங்கையில் இப்போதுள்ள களநிலவரத்தின் படி பொது மன்னிப்பு அல்லது புனர்வாழ்வு இரண்டில் ஒன்றைத்தான் அவர் தெரிந்தெடுக்கலாம். அந்த இரண்டில் ஒன்றைத்தான் தமிழ்த் தலைவர்களும் கேட்கிறார்கள். அப்படிக் கேட்குமளவிற்குத்தான் தமிழ்ப் பேரம் இருக்கிறது. அதற்குமேல் கேட்குமளவிற்கு தமிழ் தலைவர்களுக்குத் திராணியுமில்லை

SHARE