அரிசித் தட்டுப்பாட்டுக்கும் விலையேற்றத்திற்கும் கடந்தகால அரசாங்கங்களே காரணம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் குற்றச்சாட்டு

28

 

அரிசித் தட்டுப்பாட்டுக்கும் விலையேற்றத்திற்கும் கடந்தகால அரசாங்கங்களே காரணம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் குற்றச்சாட்டு
கடந்த காலத்தில் இருந்த அரசாங்கங்கள் இவ் நெல்வினை சேமித்து வைத்து உரிய பொறிமுறையின் கீழ் மக்களிற்கு அரிசியினை விநியோகிப்பதற்கான செயன்முறையினை மேற்கொண்டிருந்தால் இவ்வகையான தட்டுப்பாடுகளும், விலை அதிகரிப்பும் ஏற்பட்டிருக்காது. எதிர்வரும் காலங்களிலே இவ்வகையான தட்டுப்பாடு ஏற்படாது என்பதுடன், அதற்கான நடவடிக்கையினை நாங்கள் ஏற்படுத்தி இருக்கின்றோம் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.
வவுனியாவில் இன்று (27.01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் பாராளுமன்றம் செல்கின்ற நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களிலே ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்திலே எங்களது பிரசன்னம் இருக்கும். இந்நாட்களிலே மக்கள் தங்களுடைய குறைகளினை இங்கு வந்து எம்மிடம் தெரிவித்துக் கொள்ள முடியும்.
பொதுவாகவே அரசாங்கத்தின் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் மற்றும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்ற கருத்து மக்கள் மத்தியிலே காணப்படுகின்றது. என்றாலும் கூட எமது இந்த ஐந்து வருட ஆட்சிக் காலத்தினுள் எங்களால் தெரிவிக்கப்பட்ட அனைத்து விடயங்களும் முழுமையாக நிவர்த்தி செய்யப்படும்.
குறிப்பாக நாம் ஆட்சியமைத்து மூன்று மாத காலப்பகுதிக்குள் நாம் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் படிப்படியாக பல்வேறுபட்ட விடயங்களை தீர்த்து வைத்துக் கொண்டு இருக்கின்றோம்.
முப்பது வருட காலமாக ஏற்பட்ட மலையளவான பிரச்சனைகளை ஒர் குறிப்பிட்ட சில வாரங்களிலோ அல்லது குறிப்பிட்ட சில மாதங்களிலோ தீர்த்து வைப்பது என்பது எம்மாலும் முடியாது யாராலும் முடியாது.
மேலும் அரசின் மீது தேங்காய் விலை மற்றும் அரிசி விலை அதிகரித்துள்ளதாக ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றது. நாம் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களே ஆகின்ற நிலையில் அரிசி விலை தொடர்பாக எம்மிடம் கேட்கப்படுகின்றது. கடந்த காலத்தில் இருந்த அரசாங்கங்கள் இவ் நெல்வினை சேமித்து வைத்து உரிய பொறிமுறையின் கீழ் மக்களிற்கு அரிசியினை விநியோகிப்பதற்கான செயன்முறையினை மேற்கொண்டிருந்தால் இவ்வகையான தட்டுப்பாடுகளும், விலை அதிகரிப்பும் ஏற்பட்டிருக்காது.
எதிர்வரும் காலங்களிலே இவ்வகையான தட்டுப்பாடு ஏற்படாது என்பதுடன், அதற்கான நடவடிக்கையினை நாங்கள் ஏற்படுத்தி இருக்கின்றோம். இதுவரை காலமும் குறிப்பிட்ட ஐந்து, ஆறு பாரிய வியாபாரிகளினாலேயே அரிசி விலை தீர்மானிக்கப்பட்டு வந்ததன் விளைவினை நாம் அனுபவித்துக் கொண்டு இருக்கின்றோம்.
எதிர்காலத்திலே இவ்வாறான விடயங்கள் இடம்பெறாது. இதற்கான சகல முன்னாயத்தங்கள் அனைத்தையும் நாம் செய்திருக்கின்றோம், என்பதுடன் அதில் இருந்து மீண்டு எழுவோம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.
குறிப்பாக வன்னியிலே காணிப்பிரச்சனை பாரியளவில் காணப்படுகின்றது. எனவே இதனை தீர்க்கும் முகமாக தொடர்ச்சியான கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றோம். கடந்த வாரம் கூட சுற்றாடல் அமைச்சரினை சந்தித்து வன வள திணைக்களம், ஏனைய திணைக்களம் தொடர்பான முறைப்பாடுகளினை மேற்கொண்டிருக்கிறோம். அத்துடன் குறித்த திணைக்கள அதிகாரிகளுடனும் கலந்துரையாடி இருக்கின்றோம். அதன் அடிப்படையில் எதிர்வரும் காலத்திலே அதற்குரிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வதாக வாக்குறுதி வழங்கியுள்ளனர்.
எனவே மக்களிற்காகவே நாம் இந்த ஆட்சியினை அமைத்துள்ளோம் என்பதுடன் இவ் ஆட்சி பயனுள்ள ஆட்சியாக அமையும் என்பதை மக்கள் நம்ப வேண்டும். குறிப்பாக நாம் ஆட்சி அமைத்து மூன்று மாதங்கள் ஆகின்ற நிலையில் வரும் ஒரு வருட காலத்தில் நீங்கள் எதிர்பார்த்த நிலைமையினை ஒரளவிற்கேனும் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.
SHARE