அளுத்கமை , தர்காநகர் கலவரத்தின் பின்னர் இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிரான பல்வேறு கலவரங்கள்

361

 

பின்னனி.

இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிரான பல்வேறு கலவரங்கள் இடம்பெற்றுள்ளன.குறிப்பாக 1915 கலவரத்தில் தொடங்கி படிப்படியாக இக் கலவரங்கள் நடைபெற்றுள்ளன.இதில் கடந்த 2014 ஆம் ஆண்டு இலங்கையின் தென் மேற்குப் பகுதியான களுத்துறை மாவட்டத்தில் அளுத்கமை, தர்காநகர் ஆகிய இடங்களில் சமய மற்றும் இன ரீதியாக பெரும்பான்மை கடும்போக்கு சிங்கள பெளத்தர்களினால் நடத்தப்பட்ட தாக்குதலை குறிப்பிடலாம்.இத் தாக்குதலில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டு 80 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.முஸ்லிம்களின் நூற்றுக்கு அதிகமான வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,பள்ளிவாசல்கள் ஆகியன தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன.

2014 ஜுன் 11 இல் பொசன் பூரணை நாளன்று குருந்துவத்தை சிறீ விஜயராம கோயிலின் பிரதம குருவும் அவரது வாகன ஓட்டியும் தர்கா நகரைச் சேர்ந்த சில முஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.இத் தாக்குதலை கண்டித்து பெளத்த குருமார் உட்பட சில பெளத்தர்கள் அளுத்கமை நகரில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதை அடுத்து அங்கு இரு இனத்தவரிடையேயும் முறுகல் நிலை ஏற்பட்டது.இவ் ஆர்ப்பாட்டம் இறுதியில் வன்முறையில் முடிவடைந்தது.பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசாரதேரர் இந்த நாட்டில் சிங்களக் காவல்துறையினரும் ,இராணுவத்தினருமே சேவையாற்றுகின்றனர்.

இன்று முதல் மரக்கலயரோ பறையரோ ஒரு சிங்களவரைத் தாக்கினால் அது அவர்களது முடிவாக இருக்கும் என கூட்டத்தினரின் பலத்த கரகோசத்தின் மத்தியில் முஸ்லிம்களை கடுமையாக எச்சரித்தார்.

காவல்துறையினர் அளுத்கமையில் 2014 ஜுன் 15 மாலை 6.45 க்கும் பேருவளையில் இரவு 8.00 மணிக்கும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தனர்.பாதுகாப்புக்காக மேலதிகமாக இராணுவத்தினர் அங்கு குவிக்கப்பட்டனர்.அப்போது கலவரம் இடம்பெற்ற சூழலில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.பொலிவியாவில் ஜி 77 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள சென்றிருந்த அன்றைய இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைதி காக்கும் வண்ணம் அங்கிருந்து அறிக்கை கொடுத்திருந்தார்.இதற்கு தகுந்த விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.நாட்டில் சமயக் குழுக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தக் கூடிய செய்திகளை குறிப்பாக கலவரம் பற்றிய செய்திகளை வெளியிடாது அரசு ஊடகங்களை தடை செய்தது.இத் தாக்குதலை எதிர்த்து இலங்கை மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு கண்டனங்கள் எழுந்தன.

9 வருடங்களின் பின்னர் தாக்குதல் இடம்பெற்ற இடத்தின் சூழல்.

இன்றைக்கு சுமார் 7வருடங்கள் கடந்துள்ள நிலையில் தாக்குதல் இடம்பெற்ற பிரதான நகரமான அளுத்கமையின் வர்த்தக நடவடிக்கைகள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதை அறிந்து கொள்ள அங்கு சென்றிருந்தேன்.தாக்குதல் இடம்பெற்றதற்கான அடையாளங்களே இன்றி மாற்றமடைந்துள்ள சூழ்நிலையை காண முடிந்தது.அளுத்கமை எடுத்துக் கொண்டால் வர்த்தக கேந்திர தளமாக அமைந்துள்ளதோடு ,போக்குவரத்திற்கான இலகுவான அமைப்பையும் கொண்டமைந்துள்ளது.சுமார் 8000 மேற்பட்ட குடும்பங்கள் வாழும் இவ்வூரில் சிங்களம், முஸ்லிம், தமிழ் என பல்லின மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.அளுத்கமை ஊரோடு இணைந்ததாக முஸ்லிம்கள் செறிந்து வாழும் நகரமாக தர்காநகர் அமைந்துள்ளது.

தர்காநகரில் வசிக்கக் கூடியவர்கள் உட்பட ஏனைய பிரதேச மக்களும் அளுத்கமையில் தங்களுடைய அன்றாட ஜீவனோபாயத் தொழிலை செய்து வருகின்றனர்.கடந்த 7 வருடங்களின் முன்னர் ‌இந்த இடத்தில் தாக்குதல் இடம்பெற்றாலும் கூட மக்கள் தற்போது ஒற்றுமையாக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை காண முடிந்தது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்த்தகர்களை கொண்ட அளுத்கமை நகரில் மக்கள் சக வாழ்வோடு தமது வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.வர்த்தக நடவடிக்கைகளில் பல்லின சமூகத்தவர்களிடையேயான உறவு எவ்வாறு என்பதை அவர்களிடம் வினவினோம்.

நிராணி ஜயலத்தா-(வியாபாரி-அளுத்கமை)

நான் இந்த இடத்தில் வியாபாரம் செய்கிறேன்.அளுத்கமையில் இருக்கின்றவர்கள் உட்பட தர்கா நகர்,ஹாதியாவத்தை பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம்களும் எங்களுடன் இனநல்லுணர்வுடன் இருக்கின்றார்கள்.நாங்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றோம்.எங்களுடைய பொருட்களை வாங்குவார்கள்.எங்களுக்கிடையே எது வித முரண்பாடுகளும் கிடையாது.

எஸ்.ஸன்ஜீவ சேனாதீர-(வியாபாரி- அளுத்கமை)

கடந்த 7 வருடங்களுக்கு முன்பு தர்காநகர் மற்றும் அளுத்கமையில் பாரிய இனக்கலவரமொன்று இடம்பெற்றது.உண்மையிலே இது பற்றி எங்கும் கதைக்க விருப்பமில்லை.எமது நாட்டுக்கே ஏற்பட்ட பாரிய விளைவாக நான் கருதுகிறேன்.அந்த பிரச்சினைக்கு பின்பு நாங்கள் பிளவுபட்டோம்.ஆனால் இப்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளோம்.தற்போது அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றோம்.எங்களுக்கிடையே எந்த பிரச்சனையும் கிடையாது.தர்காநகர்,அளுத்கமை நகரில் அனைவரும் ஒன்றினைந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.நாங்கள் அவர்களுடைய திருமண வைபவங்களுக்கு செல்கின்றோம்.அதே போல அவர்களும் எங்களுடைய திருமண வைபவங்களில் கலந்து கொள்கின்றனர். இரண்டு சமூத்திலும் எந்த முரண்பாடுகளும் கிடையாது.தற்போது ஒற்றுமை நிலவுகிறது.

முஹம்மத் ரம்ஸின்-(வியாபாரி- தர்கா நகர்)

சிங்களவர்களுடன் எங்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது.நான் ஜும்மாவிற்காக பள்ளிவாசலுக்கு சென்று வரும் வரையில் அவர்கள் தான் என்னுடைய வியாபார பொருற்களை கவனித்துக் கொள்வார்கள்.அவர்களுடன் நாங்கள் கொடுக்கல் வாங்கல் செய்து கொள்வோம்.

பிரச்சினை இடம்பெற்று ஏழு வருடங்கள் கடந்துள்ள சூழ்நிலையில் சமூகங்களுக்கிடையேயான ஒற்றுமை எவ்வாறு உள்ளது என்பதை அவர்களிடம் வினவினோம்.

நிப்ராஸ் மன்ஸுர்-(சமூக ஆர்வலர்-தர்கா நகர்)

இக் கலவரத்தின் பின்னர் இனங்களுக்கிடையிலான சமூக ஒற்றுமை 100% ஏற்பட்டுள்ளது என்று கூறி விட முடியாது.என்றாலும் பிரச்சினைகளின்றி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.பெரும்பாண்மை இனத்தவர் ஒருவர் சிறுபான்மை இனத்தவர் ஒருவருக்கு ஏதாவது தவறாக கூறினால் அதற்கு பதில் வழங்காது மெளனமாக கடக்கின்ற ஒரு சூழலில் தான் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.2014 கலவரத்தின் முன்பிருந்தே இனவாதத்துக்கு எதிராக பேசியவர்கள் இன்றும் அதே மன நிலையில் தான் இருக்கின்றனர்.இனவாதம் பேசுகின்றவர்கள் இன்னும் பேசிக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.எனவே முஸ்லிம்களை பொறுத்தவரை ஒரு பயத்தோடு தான் இருக்கின்றார்களே ஒழிய 100% இனநல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது என்று கூறி விட முடியாது.

நூர் ஹஸீமா -(சமூகவியலாளர் -வெலிபிட்டிய தர்காநகர்)

என்னுடைய கிராமத்தில் தான் கலவரம் ஆரம்பமானது (கொல்பத்திராஜகொட). எனது நண்பரான அஸ்கர் மற்றும் சிங்கள மதகுருவிற்குமிடையிலான முறுகல் நிலையே இவ்வாறு கலவரம் வரை சென்றது.அக் கலவரத்தின் பின்னர் என்னுடைய பகுதி மற்றும் ஏனைய இடங்களிலும் காவல்துறையினர் இருந்ததால் பாரியளவு சேதங்கள் எங்களுடைய பிரதேசத்தில் இடம்பெறவில்லை.எங்களுடைய கிராமத்திலிருக்கின்ற பன்சலையில் உள்ள படல்கும்ஸ்ரி அரிசா தேரர் சிறந்த மனிதர் , முஸ்லிம்களுடன் ஒற்றுமையாக இருந்தார்.இந்த தாக்குதலிற்கான பொதுபல சேனா அமைப்பினர் அவருக்கு கார் உட்பட ஏனைய வசதிகளை செய்து கொடுத்து மூளைச்சலவை செய்ததால் இத் தாக்குதலுக்கு அவரும் காரணமாக இருந்தார்.ஆனால் தற்போது அது தவறென்று அவர் உணர்ந்திருக்கிறார்.என்னுடைய கிராமத்தில் உள்ள நிறைய பேர் தேரரின் அங்கீகாரத்துடன் அளுத்கமையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். அக் கலவரத்தில் கலந்து கொண்ட சிங்களவர்கள் தர்காநகர் பெரிய பள்ளிவாசல் முன்பாக வரும் போது முஸ்லிம் தரப்பும் கல் எறிந்தனர்.அதில் சில சிங்களவர்கள் தாக்கப்பட்டார்கள்.அதன் பின்பு அவர்கள் முஸ்லிம்களை காணும் போது எச்சில் துப்புவது, தேவையில்லாத வார்த்தைகளை உபயோகித்து பேசுவது , முஸ்லிம் வாலிபனொருவனிடம் சிங்கள ஒருவர் ” ஏனம் உபலட அபஸரனய்” என்று கூறியுள்ளார்.

எங்களுடைய கிராமத்தில் சிங்களவர்களும், முஸ்லிம்களும் மிக நெருக்கமாக ஒற்றுமையாக இருந்தார்கள்.சிங்களவர்களின் மரண நிகழ்வுகள், திருமண நிகழ்வுகளில் முஸ்லிம்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள்.எங்களுடைய கிராமத்தில் நான் சிறுவர் அமைப்பொன்றை ஆரம்பித்தேன்.”பிபன கெகும லமா சமாஜய” அதன் மூலமாக எல்லா சிறுவர்களையும் இணைத்துக் கொண்டேன்.தாக்குதல் இடம்பெற்றது ஜுன் மாதம் இதனை ஆரம்பித்தது ஒக்டோபரில் அப்போது இரண்டு இனத்தவர்களையும் இணைத்து சிறுவர் சந்தையொன்றை ஏற்பாடு செய்தேன்.ஆரம்பத்தில் பேச தயங்கிய சிங்களவர்கள் மெல்ல மெல்ல பேசிவிட்டார்கள்.தற்போது ஒற்றுமை மீள கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

இரு இனத்தவர்களையும் இணைத்து இது போன்ற செயற்பாடுகள் இடம்பெறுவது வரவேற்கத்தக்கது.இவ்வாறான முன்மாதிரி செயற்திட்டங்களை இளைஞர் மட்டத்தில், வயோதிபர் மட்டத்தில் விஸ்தரிப்பு செய்து அனைத்து பிரதேசங்களிலும் மேற்கொள்வதன் மூலம் தேசிய ரீதியில் ஒற்றுமையை கட்டியெழுப்ப முடியும்.

முஹம்மத் அப்fகர் -(தாக்குதலின் போது தன்னுடைய கால் ஒன்றை இழந்தவர்)

அளுத்கமை , தர்காநகர் கலவரத்திற்கு 100% சிங்கள தரப்பு தான் காரணம்.இது திட்டமிட்ட தாக்குதல் என்று தான் நான் கூறுவேன்.இத் தாக்குதலின் போது நான் களத்தில் இருந்தேன்.சிங்களவர்கள் 3 பஸ்களுக்கு வந்தார்கள்.முஸ்லிம் பெண்களுடைய ஆடைகளையும் கலட்ட கூறி வற்புறுத்தினார்கள்.வெலிப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள நான்கு வீடுகளை பெட்ரோல் குண்டுகளை கொண்டு எறித்தார்கள்.ஜும்மா பள்ளியை தாக்கினார்கள் ,பள்ளிக்குல் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.இப் பிரச்சினையில் பாதிக்கப்பட்டு என்னுடைய ஒரு காலையும் இழந்தேன்.என்னை சிறை வைத்தனர், என்னுடைய தம்பியை பாடசாலையை விட்டு விலக்கினர்.இத் தாக்குதலின் பின்னர் வெலிபிடிய பிரதேசத்தில் முஸ்லிம் ஒருவருடைய காணியில் இராணுவ முகாம் ஒன்றை அமைத்துள்ளார்கள்.தற்போதும் அந்த முகாம் இயங்கி வருகிறது.இக் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு ADS அமைப்பு ஒன்றை ஆரம்பித்தார்கள்.எனக்கு செயற்கை கால் பொறுத்த வேண்டும் என வைத்தியர் கூறினார்.எனினும் இந்த அமைப்பு எனக்கு உதவவில்லை.

கலவரத்தில் பாதிப்படைந்தோருக்குரிய நட்ட ஈட்டை வழங்க நல்லாட்சி அரசில் உத்தேசிக்கப்பட்டு அதற்காக 185.9 மில்லியன் ரூபா நிதியை அரசு ஒதுக்கியிருந்தது.மக்களுக்கு நிதி வழங்கப்பட்டாலும் அவர்களுக்குரிய பாதுகாப்பை வழங்காது காவல்துறையினர் கைகட்டி பார்த்துக் கொண்டிருந்ததாக இன்னும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.கலவரம் இடம்பெற்று இன்றைக்கு 7 வருடங்கள் கடந்துள்ள போதும் அங்கு இரு இனத்தவரிடையேயும் முழுமையான ஒற்றுமையை காணமுடியாது என்றும் ஒற்றுமையை கட்டியெழுப்பவே முயற்சிப்பதாகவும் குறித்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மஸாஹிம்-(பேருவளை நகரசபை தலைவர்)

நான் நகரசபை தலைவராகிய பின்னர் கிட்டத்தட்ட 17 பன்சலைக்குரிய மீள் நிர்மாணப் பணிகளை மேற்கொண்டேன்.நோன்பு காலங்களில் அவர்களுக்கும் கஞ்சி கொடுக்கின்ற நடைமுறையொன்று இருந்தது . எனினும் இக் கலவரத்தின் பின்னர் அது தடைப்பட்டது.கொவிட் காலத்தில் அவர்களுக்கான உரிய நிவாரணங்களை வழங்கினேன் அத்தோடு இந்த கஞ்சி கொடுக்கின்ற நடைமுறையும் மீள நடைமுறைக்கு வந்துள்ளது.வெசாக் , பொசன் காலத்தில் அவர்களுடைய மத சடங்குளுக்கான பூரண ஒத்துழைப்பையும் ,ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தேன்.நான் நினைக்கிறேன் இந்த ஒற்றுமையை தொடர்ந்தும் பேண வேண்டுமாயின் இரு தரப்பினரும் சகிப்புத் தன்மையுடன் செயல்பட வேண்டும்.

இலங்கை நான்கு பக்கங்களும் கடலால் சூழப்பட்ட தீவு என்பது போல பெளத்தர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என்ற மதக் கோர்வையாலும் பிணைக்கப்பட்டுள்ளது.இங்கு மக்களிடையே இனவாதம் இல்லை, முரண்பாடுகளும் இல்லை ஆனால் அது அவர்களுக்காக தூண்டப்படும் வரையில் யதார்த்தம் ‌.நாட்டின் ஐக்கியத்தையும்,ஒற்றுமையையும் கட்டியெழுப்பக் கூடிய தூண்களாக இருக்கக் கூடிய அரசே இவ்வாறு மக்களுக்கிடையேயான ஐக்கியத்தையும் , ஒற்றுமையையும் சீர்குலைக்கும் போது யாரிடம் இதற்கு நியாயம் கேட்பது? நட்ட ஈடு கேட்பது? இனவாதம் படைக்கப்பட்டதல்ல உருவாக்கப்பட்டது.பேரினவாதம் பாடப்புத்தகத்தில் இல்லை.நாசகாரர்களால் கற்பிக்கப்பட்டதே இனவாதம் .எனவே , மக்களாகிய ஒவ்வொருவரும் நம் இனம் என்ற எண்ணத்தை விட்டு விட்டு நாம் அனைவரும் ஒரே தேசத்துடையவர்கள் என்று சிந்திப்போம்! இனவாதம் இல்லாத இலங்கையை கட்டியெழுப்புவோம்.

அப்ரா அன்ஸார்.

SHARE