அழகான முக அமைப்பிற் குரிய முக்கியமான அடையாளமாக மூக்கு திகழ்கிறது. அதனால் தான் அதற்கு கூடுதல் அழகூட்டி மெருகேற்ற விரும்புகிறோம். பெண்கள் மூக்கை அழகு படுத்தவே மூக்குத்தி அணிந்துகொள்ளவும் செய்கிறார்கள். மூக்கில் இருக்கும் சிறிய குறைபாடுகளை போக்க, அதற்குரிய மசாஜ் செய்யலாம்.
* வயது அதிகரிக்கும்போது எலும்புகள் மற்றும் தசைகளின் கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்படும். மசாஜ் செய்வதன் மூலம் அவற்றின் இயல்புத் தன்மையை சீராக பராமரிக்கலாம். அதனை கருத்தில் கொண்டுதான் பச்சிளம் குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் கொடுக்கும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. குழந்தைகளை குளிப்பாட்டும் போதும், எண்ணெய் மசாஜ் செய்யும்போதும் மூக்குக்கும் மசாஜ் செய்வது வழக்கம். அவை மூக்குக்கு நல்ல வடிவம் பெற்றுக்கொடுக்கும். குழந்தைகள் மட்டுமின்றி மற்றவர்களும் அவ்வப்போது மூக்குக்கு மசாஜ் செய்வது நல்லது. விரல் களால் மூக்கை கீழ்நோக்கியும், மேல்நோக்கியும் அசைத்து மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.
* வலமிருந்து இடமாக மூக்கை அசைத்து மசாஜ் செய்வதும் மூக்குக்கு நல்ல வடிவத்தை ஏற்படுத்தி கொடுக்கும். அத்துடன் ஒற்றை தலைவலி, சைனஸ் போன்ற பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் பெறவும் உதவும்.
* மூச்சை நன்றாக உள் இழுத்துக்கொண்டு இடமிருந்து வலமாகவும் மசாஜ் செய்ய வேண்டும். தினமும் சிறிது நேரம் இவ்வாறு மசாஜ் செய்து வரலாம். இது மூக்குக்கு நல்ல வடிவம் கொடுப்பதோடு நாசி தசைகளுக்கும் வலு சேர்க்கும்.
* மூக்குக்கு மசாஜ் செய்யும்போது அதிக அழுத்தம் கொடுக்கக்கூடாது. மூக்கு எலும்புகள் மென்மையானவை. அவற்றுக்கு அழுத்தம் கொடுத்தால் காயமடைந்துவிடக்கூடும்.
* மூக்கின் இரு புறமும் விரலைவைத்து லேசாக அழுத்தியும் மசாஜ் செய்யலாம். அப்படி செய்யும்போது மூக்கின் தடிமன் குறையும். இரு கை விரல்களையும் பயன்படுத்தி இந்த மசாஜை செய்ய வேண்டும். மூக்கின் அழகுக்கான மேக்கப் போடுவதை விட மசாஜ் செய்வது எளிதானது.
* நன்றாக மூச்சை உள் இழுத்து ஒரு துவாரத்தை விரலை கொண்டு அடைத்துவிட்டு மற்றொரு துவாரம் வழியாக மூச்சை வெளியே விட்டு மூச்சு பயிற்சி செய்தால் ஆரோக்கியம் கிடைப்பதோடு மூக்கு அழகும் மேம்படும்.