அழகால் மனதை மயக்கும் மாலைத்தீவு 

680
உலகிலேயே தட்டையான நாடு என்ற புகழுக்குரிய மிக அழகிய பல சிறிய தீவுகளால் ஆன நாடு தான் மாலைத் தீவு.மீன்பிடிப்பதை முக்கியத் தொழிலாகக் கொண்ட இந்த நாட்டின் தலைநகரம் மாலே. இந்தியாவின் லட்சத்தீவுகளுக்கு தெற்கேயும், இலங்கையிலிருந்து சுமார் 700 கிலோ மீட்டர் தென்மேற்காகவும் அமைந்துள்ளது.

கடல் சார்ந்த ஏரி, அந்தக் கடலையும் ஏரியையும் பிரிக்கும் வகையில் பவளப் பாறைகள். இப்படி அமைந்த பகுதியை பவளத் தீவு என்பார்கள். அப்படி மொத்தம் 26 பவளத்தீவுகளைக் கொண்ட தேசம் மாலத்தீவு.

தீவுகளால் அமைந்த மாலைபோல் காணப்படுவதால் தமிழில் மாலைத்தீவுகள் என்று அழைக்கப்படுகின்றன.

கடலுக்குக் கீழ் ஒரு நீண்ட மலைத் தொடராகக் காணப்படும் இப்பகுதி ஒரு காலத்தில் நிலப்பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்பதையும், அங்கு மக்கள் வசித்திருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.

மேலும் அங்குள்ள மொழி, கலாசார, வாய்மொழி ஒப்பீட்டு வரலாறுகள் சங்க காலத்திலேயே அதாவது கி.மு. 300-ல் மனிதர்கள் அங்கு வாழ்ந்தார்கள் எனவும் அவர்கள் தமிழர்கள் எனவும் சொல்கின்றன.

இந்த 26 பவளத் தீவுகளில் மொத்தம் 1192 தீவுகள். இத்தனை தீவுகளில் 200-ல் மட்டும்தான் மனிதர்கள் குடியேறியிருக்கிறார்கள்.

சோழர்கள் காலம் வரை அவர்களது ஆட்சியில் இருந்த இந்தத் தீவுகள் பின்னர் சிங்களர்கள் ஆட்சிக்குட்பட்டது. 1153ல் இஸ்லாம் மதம் இங்கு கொண்டுவரப்பட்டது.

பின்னர் மாலைத்தீவுகள் 1558 இல் போர்த்துகீசியரிடமும், 1654 டச்சு கிழக்கிந்திய கம்பனியிடமும் பின்பு 1887 முதல் பிரித்தானியரிடமும் அடிமைப்பட்டது.

1965ஆம் ஆண்டு மாலைத்தீவுகள் ஐக்கிய ராஜியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

குறும்பா தீவு கிராமம்

மாலத்தீவுகளின் தலைநகரான மாலே விமான நிலையத்திலிருந்து 20 நிமிட பயணத்தில் இந்த குறும்பா தீவு கிராமத்தை சென்ற‌டையலாம்.

அழகான மணல் வெளிகள், தென்னைமரங்கள், அமைதி பூங்காவை திகழும் சூழல் இப்படி வர்ணனை செய்து கொண்டே போகலாம், அப்படி ஒரு அழகான இடமாக இது திகழ்கிறது.

இங்கு சுற்றுலா பயணிகள் தங்க சொகுசு பங்களாக்கள், கடற்கரை விடுதிகள் நிறைய உள்ளன.

சுற்றுலா பயணிகளை கவருவதற்காகவே நீர் விளையாட்டுகள், படகு சவாரிகள் என இடமே அமர்க்களப்படுகிறது.

நலகுறாய் தோ கடற்கரை

இது மாலேவிலிருந்து 30 நிமிட பயணத்தில் செல்லக்கூடிய இடம். நீல கடற்கரை, அழகிய சூழல், எங்கும் பரவும் இயற்கையின் வாசம் அனைத்தும் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். இங்கு தங்க கடற்கரை விடுதிகள், சொகுசு பங்களாக்கள் நிறையவே உள்ளன.

நைப் ஃபரு ஆட்டல்

இது நான்கு புறமும் நீர்பரப்பால் சூழப்பட்ட ஒரு தீவுப் பகுதியாகும். இந்த இடம் மாலேவிலிருந்து சுமார் 142 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

அருமையான பொழதுபோக்கு அம்சங்கள் இப்பகுதியில் உள்ளன. மணல் மலைகள் ஏற்றம் , நீர் விளையாட்டுகள் உள்ளிட்டன சிறப்பம்சங்களாகும்.

ஈஸ்ஜெஹி அருங்காட்சியகம்

இந்த அருங்காட்சியகத்திற்கு நீங்கள் செல்லும்போது 1870 களின் பிரதிபலிப்பை காணலாம். 1870 களில் நிலவிய கலாச்சார பண்பாட்டை விளக்கும் பல்வேறு வகையான பொருட்கள், கலையை வெளிப்படுத்தும் ஓவியங்கள் உள்ளிட்டவை இடம்பெறுகிறது.

மணாதூ கிராண்ட் ஃப்ரைடே மசூதி

மாலேவிலிருந்து சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனி தீவு பகுதியான இந்த இடத்தில் உள்ளது இந்த பெரிய மசூதி. இங்கு திருமண விழாக்கள் முதற்கொண்டு அரசின் பெரிய விழாக்கள் வரை நடைபெறும்.

SHARE