அவுஸ்திரேலிய தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து மனஸ்தீவுகளிலும் நவ்றுவிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகள் மற்றும் சட்டவிரோத குடியேற்றவாசிகளில் ஆறு பேர் தற்கொலைக்கு முயன்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்கொட் மொறிசன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையிலேயே இந்த தற்கொலை முயற்சிகள் இடம்பெற்றுள்ளன
மனஸில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கடும் மன அழுத்தத்திற்கு உள்ளான நோய்வாய்ப்பட்டுள்ள நபர் ஒருவர் தனக்கு தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றார் என சூடானை சேர்ந்த அகதி அப்துல் அசீஸ் முகமட் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் முற்றாக நம்பிக்கையிழந்து விட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.
மனஸில் உள்ள அகதிகள் தங்கள் நாட்களை தற்கொலை முயற்சிகளுடன் ஆரம்பிக்கின்றனர்,இந்த நபர் நீண்ட காலமாக உளஉடல் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளார் எனினும் இவரை எவரும் கவனிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் முடிவுகள் காரணமாக அதிகளவு தற்கொலை முயற்சிகள் இடம்பெற்றுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நான் ஒருபோதும் அகதிகளை இந்த நிலையில் பார்த்ததில்லை ஆறு பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர் என மனஸில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பெஹ்ரூஸ் பூச்சானி தெரிவித்துள்ளார்
மூவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் மனஸ் மற்றும் நவ்றுவில் உள்ளவர்கள் மீது கடும் எதிர்மறையான தாக்கத்தை செலுத்தியுள்ளன தங்களை மீள குடியேற்றுவதற்கு தயார் என நியுசிலாந்து விடுத்த வேண்டுகோளை ஸ்கொட்மொறிசன் அரசாங்கம் ஏற்கும் என்ற நம்பிக்கையை அவர்கள் இழந்துவிட்டனர் என அவர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகளிற்கு பின்னர் மனஸ்தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் முற்றாக மனமுடைந்து போயுள்ளனர் என அங்குள்ள இலங்கையரான சமிந்தா கணபதி தெரிவித்துள்ளார்.
எவரும் தங்கள் அறையை விட்டு வருவதில்லை,யாரும் யாருடனும் பேசுவதில்லை, என அவர் தெரிவித்துள்ளார்.