ஆசிரியர்களை தமது சொந்த மாவட்டங்களில் கடமை புரிய நடவடிக்கை – ஹிஸ்புல்லாஹ்

496

தமது சொந்த மாவட்டங்களை விட்டு வேறு மாவட்டங்களில் கடமை புரிகின்ற ஆசிரியர்களை அவரவர் வாழும் மாவட்டங்களுக்கு கடமை புரியும் வகையில் ஏற்ற ஒழுங்குகளைச் செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கல்வி அதரிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 05ஆம் திகதி தொடக்கம் இந்த இடமாற்றங்கரளை வழங்குமாறும் அவர் கேட்டுள்ளார்.

இதுவிடயமான கலந்துரையாடல் மட்டக்களப்பு ஆளுநர் பணிமனையில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இக் கலந்துரையாடலில் மாகாண கல்வி பணிப்பாளர், வலயக்கல்வி பணிப்பாளர்கள், மேலதிக கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்வி அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆளுநரின் புதிய உத்தரவின்படி இடமாற்றத்திற்கான விண்ணப்பங்கள் உடனடியாக (பெப்பரவரி 19 தொடக்கம்) கோரப்படவுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமது சொந்த மாவட்டத்தில் கடமை புரிவதற்கான விண்ணப்பத்தை பூரணப்படுத்தி இம்மாதம் 25 ஆம் திகதிக்கு முன்னர் மாகாண கல்வித் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கும்பட்சத்தில் அது பரிசீலிக்கப்பட்டு ஏப்ரல் 05 திகதி தொடக்கம் இடமாற்றங்கள் வழங்கப்படும் எனவும் ஆளுநரின் உத்தரவில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த இடமாற்றத்தின் காரணமாக கிழக்கு மாகாணத்தில் ஏற்படும் சுமார் 800 ஆசிரிய வெற்றிடத்தை உடனடியாக நிரப்புவதற்காக மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு விண்ணப்பங்களை கோரவுள்ளதாகவும் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.

ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் புதிய ஆசிரியர் நியமனங்களும் வழங்கப்படவுள்ளன.

கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் பிரகாரம் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு ஒவ்வொரு வலயக்கல்வி பணிப்பாளர் அலுவலகத்திலும் புதிய ஆசிரியர் தேர்வுக்கான நேர்முகப் பரீட்சைகளை நடாத்தி வெற்றிடமுள்ள பாடசாலைகளில் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE