ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ஆயுதமாக அமைந்தது இனவாதமே!

289

 

  • ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ஆயுதமாக அமைந்தது இனவாதமே!
mahinda-mithri.jpg

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ஆயுதமாக அமைந்தது இனவாதமே!

இயற்­கை­யின் நிய­தி­யால் தாமரை மொட்டு மலர்­கி­றது. ‘ஈஸ்ட்’ என்ற நொதி­யம் அப்­பத்­துக்­கான மாவைப் பொங்க வைக்­கி­றது.’’ கடந்த சில நாள்­க­ளாக சமூக இணை­ய­ளத்­தங்­க­ளில் வெளி­யான விமர்­ச­னத் துணுக்­கு­க­ளில் மேற்­கு­றித்த துணுக்கு பல­ரது இர­ச­னைக்­குப் பாத்­தி­ர­மா­யிற்று.

மாறி­வ­ரும் உல­கில் மாறா­தி­ருக்­கு­மொரு விட­யம் ‘மாற்­றமடைதல்’ என்­பதே என முது­மொ­ழி­ யொன்று வழக்­கில் உள்­ளது. அது எப்­போ­துமே உண்­மை­யா­ன­தும், யதார்த்­த­மா­ன­தும்­கூட. இது அர­சி­ய­லுக்­கும் மிகப் பொருத்­த­மா­ன­தொன்றே. ஆனால் இந்த யதார்த்­தத்தை எமது அர­சி­யல்­வா­தி­கள் புரிந்­து­கொள்­ளத் தவறி வரு­கின்­ற­னர்.

1994ஆம் ஆண்­டுப் பொதுத் தேர்­த­லில், நாட்­டின் அர­சி­யல் வர­லாற்­றில் மிக நீண்­ட­கா­ல­மா­கப் பத­வி­யில் இருந்து வந்த அரசை, பத­வி­யில் இருந்து சந்­தி­ரிகா அகற்­றி­னார். பொது­மக்­கள் ஐக்­கிய முன்­னணி தரப்­புக்கு அந்­தத் தேர்­த­லில் 94 நாடா­ளு­மன்ற ஆச­னங்­கள் கிட்­டிய அதே­வேளை, ஐ.தே.கட்சி 81 நாடா­ளு­மன்ற ஆச­னங்­க­ளைக் கைப்­பற்­றி­யி­ருந்­தது.

ஆட்­சி­ய­மைத்த சந்­தி­ரிகா தரப்­புக்கு 14 தேசி­யப் பட்­டி­யல் மூல­மான ஆச­னங்­க­ளும், ரணி­லின் தலை­மை­யி­லான ஐ.தே.கட்­சிக்கு 13 நாடா­ளு­மன்ற ஆச­னங்­க­ளும் கிட்­டின. முஸ்­லிம் காங்­கி­ர­சின் 7 உறுப்­பி­னர்­கள் மற்­றும் சுயேட்சை உறுப்­பி­ன­ரொ­ரு­வ­ரது ஆத­ரவு பெற்று சந்­தி­ரிகா அர­ச­மைத்­தார். ஒரே­யொரு மேல­திக ஆச­னத்­து­டன் எட்டு ஆண்­டு­கள் கால­மாக சந்­தி­ரிகா ஆட்­சியை முன்­னெ­டுத்­துச் சென்­றார்.

ஆனால் 2001 ஆம் ஆண்­டின் பொதுத் தேர்­த­லில் குறிப்­பி­டத்­தக்க தொகை கொண்ட நாடா­ளு­மன்ற ஆச­னங்­களை வென்­றெ­டுத்த ரணி­லால், இரண்டு ஆண்­டு­கள் காலத்­துக்­குக்­கூட ஆட்­சியை முன்­னெ­டுக்க இய­லாது போயிற்று. அவ்­வி­தம் தாம் அதி­கா­ரத்தை இழக்க நேரு­மென ரணில் கன­வி­லும் கரு­தி­யி­ருந்­தி­ருக்­க­மாட்­டார். அர­சி­ய­லின் சுபா­வம் அத்­த­கை­ய­து­தான். ‘‘நினைப்­ப­தெல்­லாம் நடப்­ப­தில்லை. நினைக்­கா­தது நடந்­து­வி­டும்’’ என்­பது முது­மொழி.

டி.எஸ்.சேன­நா­யக்கா – எதிர் –
எஸ்.டபிள்யூ ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்கா

1946ஆம் ஆண்­டில் ஐ.தே.கட்சி ஆரம்­பிக்­கப்­பட்­ட­வேளை, டி.எஸ்.சேன­நா­யக்கா ஒரு சுதந்­தி­ரப் போராட்ட வீரர். 1948ஆம் ஆண்­டில் நாட்­டின் முத­லா­வது தலைமை அமைச்­சர் பத­வியை அவர் ஏற்­ற­போது பெரும் பின்­ன­டைவு நிலை­யி­ருந்த ஐ.தே.கட்­சியை இரண்டு வரு­டங்­கள் கால இடை­வெ­ளி­யில் அவர் பலப்­ப­டுத்தி வைத்­தார் டி.எஸ். 1947ஆம் ஆண்­டில் டி.எஸ். சேன­நா­யக்கா தரப்­பி­னர்­க­ளுக்கு அதி­கா­ரத்தை வழங்­கிய தேர்­த­லின் பின்­னர், இலங்­கை­யின் வாக்­கா­ளர்­க­ளது போக்­கில் மாற்­றம் ஏற்­பட்­டது.

அர­சி­யல் போட்­டிக் களத்­தில் வெற்­றி­யைத் தீர்­மா­னிக்­கும் துருப்­புச் சீட்­டாக கிரா­மப்­புற வாக்­கு­களே முக்­கி­யத்­து­வம் பெற்­றன. அந்த வேளை­யில் எஸ்.டபிள்யூ ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்கா தாம் எப்­ப­டி­யா­வது நாட்­டின் தலைமை அமைச்­ச­ராக ஆகி­வி­டக் கனவு கண்­டார். சேன­நா­யக்கா தரப்­பி­ன­ரால் பண்­டா­ர­நா­யக்கா, பரம்­ப­ரை­யி­ன­ருக்கு நன்­மை­யே­தும் கிட்­டப் போவ­தில்லை என உணர்ந்த பண்­டா­ர­நா­யக்கா, ஐ.தே.கட்­சி­யி­லி­ருந்து வெளி­யேறி சுதந்­தி­ரக் கட்­சி­யென்ற பெய­ரில் புதிய கட்­சியை நிறு­வி­னார். இலங்கை அர­சி­ய­லில் வலு­வா­ன­தொரு எதிர்த்­த­ரப்பு இதன் மூலம் உரு­வா­யிற்று.

நாட்­டில் இன­வா­தத்தை வளர்த்­தெ­டுத்த 
எஸ்.டபிள்யூ. ஆர்.டி பண்­டா­ர­நா­யக்கா

1956ஆம் ஆண்­டின் பொதுத் தேர்­த­லில் ஐ.தே.கட்சி அர­சுக்கு எதி­ராக சுதந்­தி­ரக் கட்சி, பிலிப் குண­வர்த்­தன தலை­மை­யி­லான சம­ச­மா­ஜக் கட்சி மற்­றும் வேறு அர­சி­யல் அமைப்­புக்­கள் இரண்­டு­டன் கூட்­டணி ஏற்­ப­டுத்­திக் கொண்டு மக்­கள் ஐக்­கிய முன்­னணி என்ற கூட்­ட­ணியை உரு­வாக்கிய பண்­டா­ர­நா­யக்கா தாமே அதற்கு தலைமை தாங்­கிச் செயற்­பட்­டார்.

சிங்­க­ள­ மொ­ழியை மட்­டுமே அரச கரு­ம­மொ­ழி­யாக ஆக்­கு­வது உட்­ப­டப் பல்­வேறு சமூக, பொரு­ளா­தார அபி­வி­ருத்­தித் திட்ட யோச­னை­களை முன்­வைத்து மக்­கள் ஐக்­கிய முன்­னணி பொதுத் தேர்­தலை எதிர்­கொண்­டது. சிங்­க­ளத்தை மட்­டும் அரச கரு­ம­மொ­ழி­யாக்­கும் யோச­னையை இட­து­சா­ரிக் கட்­சி­கள் ஏற்­றுக் கொள்­ள­வில்லை. இது ஐ.தே.கட்­சிக்கு வாய்ப்­பா­னதே என சேர்.ஜோன் கொத்­த­லா­வல கரு­தி­ய­போ­தி­லும், சிங்­கள வாக்­கா­ளர்­கள் ஐ.தே.கட்­சி­யைப் புறக்­க­ணித்து ‘மக்­கள் ஐக்­கிய முன்­ன­ணிக்கே’ பேரா­த­ரவு வழங்­கி­ய­தால் ஐ.தே.கட்சி ஆட்சி அதி­கா­ரத்தை இழக்க நேர்ந்­தது. பண்­டா­ர­நா­யக்கா நாட்­டின் புதிய தலைமை அமைச்­ச­ரா­கப் பத­வி­யேற்­றார்.

உய­ரச் செல்­லும் ஊஞ்­சல் மீண்­டும் பழைய இடத்­துக்கு வரு­வ­து­போன்று குறு­கிய கால இடை­வெ­ளி­யில் எவ­ரும் எதிர்­பா­ராத நிகழ்­வு­கள் நடந்­தே­றின. ஆட்­சித் தரப்­பி­னர் மத்­தி­யில் கருத்து வேறு­பா­டு­கள் தலை­தூக்­கின. இனக்­க­ல­வ­ரம் நாட்­டில் பேர­ழிவை ஏற்­ப­டுத்­தி­யது. ஆறு­மாத காலம் கழி­வ­தற்கு முன்­னர் கொழும்பு மாந­கர சபைக்­கான தேர்­த­லில் அரச தரப்பான சுதந்­தி­ரக் கட்சி படு­தோல்வி கண்­டது. ஐ.தே.கட்­சியே கொழும்பு மாந­கர சபை­யின் அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­றிக் கொண்­டது.

அரச தரப்­பால் தலை­தூக்க இய­லாத விதத்­தில் பின்­ன­டைவு நிலை உரு­வா­யிற்று. இட­து­சா­ரித் தரப்­பான பிலிப் குண­வர்த்­தன தரப்­பி­னர் அர­சின்­றும் வெளி­யே­றி­னர். அரச தரப்­புக்­குள்­ளேயே கருத்து மோதல்­கள் உரு­வா­கின. சிக்கல் நிலைமை தீவி­ர­ம­டைந்­தது. ஒப்­பந்­தங்­கள் கிழித்து வீசப்­பட்­டன. 1959ஆம் ஆண்­டில் சுதந்­தி­ரக் கட்­சிக்­குள்­ளி­ருந்து உரு­வான சதி முயற்­சி­யில் சிக்கி, தலைமை அமைச்­சர் பண்­டா­ர­நா­யக்கா படு­கொ­லை­யுற நேர்ந்­தது.

மகிந்த– எதிர் – மைத்­தி­ரி­பால

2010ஆம் ஆண்­டின் அரச தலை­வர் பத­விக்­கான தேர்­த­லில் மகிந்த மீண்­டும் தெரி­வாகி அரச தலை­வ­ரா­கப் பத­வி­யைத் தொடர முடிந்­தது. மூன்று தசாப்த கால­மாக விடு­த­லைப் புலி­க­ளு­டன் இடம்­பெற்ற போரை முடி­வுக்­குக் கொண் வந்து நாட்­டைக் காப்­பாற்­றிய தலை­வ­ராக மகிந்த இரண்­டா­வது தட­வை­யா­க­வும் அரச தலை­வ­ரா­கப் பதவி ஏற்­றுக் கொண்­டார். இலங்­கை­யின் தேர்­தல் வாக்­க­ளிப்பு முறை மீண்­டும் மாற்­ற­முற்­றது.

அர­சி­ய­ல­ரங்­கில் ஊழ­லுக்கு எதி­ரான மக்­க­ளது வாக்­கு­களே பெரும் துரும்­புச் சீட்­டாக அமைந்­தது. மைத்­தி­ர­பால தலைமை அமைச்­சர் பத­விக்­கா­கக் கனவு கண்­டார். ராஜ­பக்ச தரப்­பி­னர்­க­ளால் தமது தரப்­புக்கு அர­சி­யல் ரீதி­யில் பய­னே­தும் கிட்­டப்­போ­வ­ தில்லை என்­பதை உணர்ந்த மைத்­தி­ரி­பால 2014ஆம் ஆண்­டில் மகிந்­த­வி­ட­மி­ருந்து தூர விலக ஆரம்­பித்­தார். இதன் பய­னாக இலங்கை அர­சி­ய­லில் மீண்­டும் பெரி­ய­தொரு மாற்­றுச் சக்தி உரு­வாக நேர்ந்­தது.

இதன் தொடர்ச்­சி­யாக மகிந்­த­வுக்கு எதி­ராக பல தரப்­புக்­கள் இணைந்த கூட்­டுப் போரொன்று ஆரம்பமாகியது.
ஐ.தே.கட்சி, ஜே.வி.பி., தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, ஹெல உறு­மய, நியா­ய­மான சமூ­க­மொன்­றுக்­கான மக்­கள் இயக்­கம் மற்­றும் முன்­னணி அர­சி­யல் அமைப்­புக்­கள் சில­வும் இந்­தக் கூட்­டில் இணைந்து கொண்­டன. அரச தலை­வர் பத­விக்­கான தேர்­த­லில் மகிந்­த­வுக்கு எதி­ரான கூட்­டுத் தரப்­பின் பொது வேட்­பா­ள­ராக மைத்­திரி கள­மி­றக்­கப்­பட்­டார்.

புதிய ஜன­நா­யக முன்­னணி சார்­பில் ‘அன்­னம்’ சின்­னத்­தில் மைத்­திரி போட்­டி­யிட்­டார். மகிந்த அர­சின் செயற்­பா­டு­க­ளில் இடம்­பெற்ற நியா­ய­வீ­னங்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி மைத்­தி­ரி­பால தரப்­பி­னர் தமது பரப்­பு­ரை­களை முன்­னெ­டுத்­த­னர். கடை­சி­யில் மகிந்த, அரச தலைவர் பத­வியை இழந்து வீடு செல்ல நேர்ந்­தது. இலங்கை அர­சி­ய­ல­ரங்­கில் முதல் தட­வை­யாக இரு பிர­தான கட்­சி­க­ளும் இணைந்து கூட்டு அர­சொன்றை நிறுவ முடிந்­தது. அரச தலை­வ­ராக மைத்­தி­ரி­யும் தலைமை அமைச்­ச­ராக ரணி­லும் இணைந்து நல்­லாட்சி அரசு என்ற பெய­ரில் நிர்­வா ­கத்தை முன்­னெ­டுத்­துச் சென்­ற­னர்.

நீண்­ட­கா­லம் கடக்கு முன்­னர், உய­ரச் சென்ற ஊஞ்­சல் மீண்­டும் கீழே வந்­தது. நினைத்­த­தற்கு மாறான சம்­ப­வங்­கள் நடந்­தே­றின. நல்­லி­ணக்­க முயற்சிகள் பின்­ன­டைவு கண்­டன. தென்­னா­சிய வட்­ட­கை­யி­லேயே மிகப் பெரும் வங்­கிக் கொள்ளை எனக் கொள்­ளத்­தக்க பிணை­முறி ஊழல் இடம்­பெற்­றது. ஊழல்­கள் விட­யத்­தில் மாற்­ற­மெ­து­வும் ஏற்­ப­ட­வில்லை. ஊழல் புரிந்­தோர் சுதந்­தி­ர­மாக வெளி­யில் உல­வு­கின்­ற­னர்.

அத்­தி­யா­வ­சிய பாவ­னைப் பொருள்­க­ளது விலை­க­ளில் நாளுக்கு நாள் அதி­க­ரிப்பு ஏற்­பட்­டன. நிறை­வேற்று அதி­கா­ரத்­தில் எந்­த­வித மாற்­ற­மும் ஏற்­ப­ட­வில்லை. பொது­மக்­க­ளது கடன் படு­நிலை உயர்­வ­டைய நாட்­டின் பொரு­ளா­தார நிலை வீழ்ச்­சி­கண்­டது. தேசிய அர­சின் பங்­கா­ளிக் கட்­சி­கள் இரண்­டும் ஒன்­றுக்­கொன்று மோதிக் கொள்­ளும் நிலை உயர்­வ­டைந்­தது.

எவ­ருமே எதிர்­பா­ராத விதத்­தில் கூட்டு அர­சின் இரண்­டாண்­டு­கள் கால முடி­வில் மகிந்­த­வின் புதிய கட்­சிக்கு எதி­ரா­க உள்ளூராட்சித் தேர்த லில் போட்­டி­யிட்ட கூட்டு அர­சின் பங்­கா­ளிக் கட்­சி­கள் பெரும் தோல்­விக்கு முகம் கொடுக்க நேர்ந்­தது.

ஜன­வரி 8 புரட்­சி­யின் பின்­னர் நாட்­டின் 
அர­சி­ய­லில் எதிர்­பார்ப்பு பலித­மா­க­வில்லை

ஜன­வரி 8 புரட்­சி­யின் பின்­னர், வாக்­கா­ளர்­க­ளைக் கவ­ரும் திற­மையை கூட்­டாட்சி அரசு கொண்­டி­ருந்­த­தா­கத் தோன்­ற­வில்லை. வெற்­றிக் களிப்­பில் கூட்டு அரசு திளைத்­தி­ருந்த வேளை, மகிந்­தவோ பெளத்த விகா­ரை­க­ளி­லி­ருந்து தமது முயற்­சியை மீண்­டும் ஆரம்­பித்­தார். அடி­மட்ட ஆத­ர­வா­ளர்­கள் மத்­தி­யில் தமது நட­வ­டிக்­கை­களை விரி­வு­ப­டுத்­தி­னார். அவ­ரது முயற்­சிக்கு அமைய உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் வாக்­கா­ளர்­கள் தமது பேரா­த­ரவை அவ­ரது தரப்­புக்கு வழங்கி உற்­சா­கப்­ப­டுத்­தி­யுள்ளனர்.

இம்­முறை உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் இரண்­டா­வது மற்­றும் மூன்­றா­வ­தை­யும் கூட்­டி­னால் முத­லா­வதை முந்­துமா? படு­தோல்­வி­யைச் சந்­தித்த ஐ.தே.கட்­சி­யும் சுதந்­தி­ரக்­கட்­சி­யும் தத்­த­மது தோல்­விக்கு பற்­பல வியாக்­கி­யா­னங்­களை முன்­வைத்து வரு­கின்­றன.

1970ஆம் ஆண்டு பொதுத் தேர்­த­லில் சிறி­மா­வோ­ வின் தலை­மை­யில் சுதந்­தி­ரக் கட்சி 91ஆச­னங்­க­ளைக் கைப்­பற்­றி­ய­போது, டட்­லி­யின் தலை­மை­யி­லான ஐ.தே.க.17 ஆச­னங்­களை மட்டுமே கைப்­பற்­றி­யது. ஆனால் அந்­தப் பொதுத் தேர்­த­லில் சுதந்­தி­ரக் கட்சி மொத்­த­மாக 18லட்­சத்து 39ஆயி­ரத்து 979 வாக்­கு­க­ளைப் பெற, ஐ.தே.கட்­சியோ 18 லட்­சத்து 92ஆயி­ரத்து 525 வாக்­கு­களை மொத்­த­மா­கப் பெற்­றி­ருந்­தது.

ஆனால் கடை­சி­யில் ஐ.தே.கட்சி படு­தோல்வி அடைந்­த­தா­கவே விமர்­சிக்­கப்­பட்­டது. அந்த வகை­யில் தேர்­த­லில் முத­லா­வது இடத்தை அடை­ப­வரே வென்­ற­வ­ரா­கக் கொள்­ளப்­ப­டு­வார். இரண்­டாம், மூன்­றாம் இடங்­க­ளைப் பெற்­ற­வர்­கள், இரு தரப்­பி­ன­ரது வாக்­கு­க­ளை­யும் கூட்­டித் தாம் வெற்றி பெற்­ற­தா­கக் கூறு­வது பகி­டிக்கு இட­மா­கக் கொள்­ளத்­தக்­கது.
மொத்­தத்­தில் மகிந்­த­வின் அர­சி­யல் எழுச்­சி­யைத் தோற்­க­டிக்­கத்­தக்க திற­னுள்ள அர­சி­யல்­வாதி ஒரு­வ­ரைத்­தா­னும் ஐ.தே.கட்­சி­யில் தேடிக் கண்­டு­பி­டிக்க இய­லா­துள்­ளது.

சுதந்­தி­ரக்­கட்­சியோ அநாதை நிலைக்கு உள்­ளா­கி­யுள்­ளது. அர­சி­ய­லில் எப்­போ­துமே பொது­மக்­களை மடை­ய­வர்­க­ளாக்­கிட இய­லாது. அந்த வகை­யில் இடம்­பெற்ற உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் தாமரை மொட்­டுக்கு மாபெ­ரும் வெற்­றியை மக்­கள் வழங்­கி­யுள்­ள­னர். மகிந்­த­வால் இந்த மக்­கள் ஆணையை 2020 ஆம் ஆண்­டு­வரை பாது­காத்­துக் கொள்ள இய­லுமா என்­பது குறித்து எதை­யும் நிச்­ச­ யப்­ப­டுத்­திக் கொள்ள இய­லா­துள்­ளது. மாறி­வ­ரும் உல­கில் மாற்­ற­மு­றாத ஒரே­யொரு விட­யம் மாற்­ற­ம­டை­தல் மட்­டுமே. இந்த உண்­மை­யைப் புரிந்து கொண்டு செயற்­ப­டும் அர­சி­யல் தலை­வ­ரையோ, கட்­சி­யையோ இந்த நாட்­டில் காண இய­லாதுள்ளது என்­பதே யதார்த்­தம்.

கூட்டமைப்பின் பின்னடைவுக்கு யார் காரணம்?

தொடர் அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் சமூகமொன்று எப்போதுமே ஓரணியில் திரள்வதற்கே விரும்பும். அதன்மூலம், தம்மைப் பலப்படுத்திப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று நம்பும்.

சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில், தமிழ் மக்கள் அதிக தருணங்களில் இந்த நிலையையே எடுத்து வந்திருக்கிறார்கள். இன்னமும் அதன் படிகளிலேயே பெருமளவு நிற்கின்றார்கள்.

தமிழ்த் தேசியப் போராட்டங்கள் எழுச்சி பெற்ற காலம் முதல், தமிழ் மக்கள் ஏதோவொரு கட்சியின் பின்னாலோ அல்லது இயக்கத்தின் பின்னாலோ திரண்டிருக்கின்றார்கள்.

அந்தக் காலங்களில் எல்லாம், மாற்றுக் குரல்கள், மாற்றுச் சிந்தனைகள் என்கிற விடயங்களுக்கான வெளி தமிழ்ச் சூழலிலும் பெரியளவில் ஏற்பட்டிருக்கவில்லை; அல்லது எடுபடவில்லை. கேள்விகள், விமர்சனங்களுக்கு அப்பால் நின்று, ஓரணியில் திரள்வதே  பலம் என்று நம்பி வந்திருக்கின்றார்கள். ஆனால், 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான கடந்த மூன்று ஆண்டுகள், ஓரணியில் திரள வேண்டும் என்கிற நிலையைக் குறிப்பிட்டளவு தளர்த்தியிருக்கின்றது.

அது, மக்களை மாற்றுக் குரல்களையும் மாற்றுத் தெரிவுகளையும் பரிசீலிக்கவும் வைத்திருக்கின்றது. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (நேரடியாக ‘தமிழரசுக் கட்சி’ என்று கொள்வதே பொருத்தமானது.) சந்தித்த பின்னடைவு, அந்தப் புள்ளியிலிருந்து ஆரம்பிக்கின்றது.

மஹிந்த ராஜபக்ஷ அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான அலை, நாடு பூராவும் வீசிக்கொண்டிருந்த போது, அந்த அலைக்குள் தமிழ் மக்களும் தங்களை இணைத்துக் கொண்டார்கள். தமது நிலைப்பாட்டைத் தங்கள் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படையாகப் பிரதிபலித்து, மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்த போது, அதை அங்கிகரித்தார்கள்.

அந்த அங்கிகாரத்தின் அடுத்த கட்டமாக, 2015 பொதுத் தேர்தலிலும் கூட்டமைப்புக்கு ஏக பிரதிநிதிகள் என்கிற நிலைக்கு அண்மித்த வெற்றியைப் பரிசளித்தார்கள். 2009 முள்ளிவாய்க்கால் வரை விடுதலைப் புலிகளுக்குப் பின்னால் அணி திரண்ட மக்கள், அதன் பின்னர் அடக்கு முறைகளுக்கு எதிராக, ஓரணியில் திரளும் போக்கில் இருப்பதில், நம்பிக்கையான தரப்பு என்கிற அடிப்படையில் கூட்டமைப்புக்குப் பின்னால் அணி திரள ஆரம்பித்தார்கள்.

ஆனால், 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான கடந்த மூன்று ஆண்டுகள் என்பது, சிறிய ஜனநாயக வெளியைத் தமிழ் மக்களை நோக்கித் தள்ளியது. அது, முடங்கிப் போயிருந்த அரசியல் உரையாடல் வெளியைக் குறிப்பிட்டளவு திறந்து விட்டது.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தாலும், ஆட்சி மாற்றத்தின் பங்காளிகள் என்கிற வகையில் கூட்டமைப்பினரைத் தமிழ் மக்கள், தமது ஆளும் கட்சியாகவே பார்க்க ஆரம்பித்தார்கள். வடக்கு மாகாண சபையில், சி.வி.விக்னேஸ்வரன் ஆட்சியமைக்கும் போது, அதை மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான எதிர்ப்பு அரசியலாகவே மக்கள் முன்மொழிந்தார்கள்.

ஆனால், ஆட்சி மாற்றம் என்பது, கூட்டமைப்பே எதிர்பார்க்காத வகையில், அவர்கள் மீது ஆளுங்கட்சி அடையாளத்தைக் கொடுக்க வைத்தது. அதன்பின்னரான நாட்களில், வடக்கு மாகாண சபைக்குள் எழுந்த குழப்பங்கள் மக்களினால் இரசிக்கப்படவில்லை.

அத்தோடு, தமிழரசுக் கட்சி எதிர்கொண்டிருக்கின்ற அக முரண்பாடுகளும் கூட்டமைப்பின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாகும். தமிழரசுக் கட்சிக்குள் சிரேஷ்ட- கனிஷ்ட உறுப்பினர்களுக்கிடையிலான தலைமுறை இடைவெளி மாத்திரமல்ல, பதவிகளுக்கான அலைச்சலும் பெரும் பிரச்சினையாகும்.

தமிழ்த் தேசிய அரசியலில் தற்போதுள்ள கட்சிகளில் தமிழரசுக் கட்சியே பெரிய கட்சி. அந்தக் கட்சியே தற்போதும் உறுப்பினர்களை வெளிப்படையாக இணைத்துக் கொள்கின்றது. தொகுதி – பிரதேச வாரியாக, நிர்வாக உறுப்பினர்களை நியமித்துச் செயலாற்றுகின்றது. ஆனால், கட்சியின் கட்டுமானத்தில் படிப்படியாக முன்னேறிச் செல்வது – அதற்காகச் செயலாற்றுவது என்கிற நிலைகளுக்கு அப்பால், யாரோடு இருந்தால் பதவிகளை இலகுவாக அடையலாம் என்கிற நிலை, தமிழரசுக் கட்சியைக் கூறுபோட்டு வைத்திருக்கின்றது.
தேர்தல் அரசியலில் இவ்வாறான குத்துவெட்டுகள் இயல்பானதுதான் என்கிற போதிலும், தமிழ்த் தேசியப் போராட்டத்தை தமது தலையாய கடமை என்று சொல்லும் தமிழரசுக் கட்சிக்குள் இவ்வாறான பிற்போக்கான விடயங்கள் அதிகமாகத் தலைதூக்குவது என்பது அபத்தமானது.

சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை நகர சபைகளைக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் இழந்தமைக்கு, தமிழரசுக் கட்சிக்குள் நீடித்த அக முரண்பாடுகளே காரணம்.

சாவகச்சேரியில் அருந்தவபாலனுக்கும் சயந்தனுக்கும் இடையிலான தன்முனைப்புப் பிரச்சினை, கூட்டமைப்பைத் தோற்கடித்தது. பருத்தித்துறை நகர சபைக்கான வேட்பாளர் தேர்விலும் சுகிர்தனின் கை ஓங்கியதை ஏற்றுக்கொள்ளாத தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், கூட்டமைப்புக்கு எதிராக வேலை செய்தார்கள்.

அத்தோடு,வல்வெட்டித்துறை நகர சபையில் சுயேட்சைக்குழு பெற்ற 1,000 வாக்குகள், கூட்டமைப்புக்கு கிடைக்க வேண்டியவை. கடந்த முறை அனந்தராஜா தலைமையிலான சபையைக் குழப்பிய விதத்தில், தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களும் முக்கிய பங்காற்றினார்கள்.

இதனாலேயே, சுயேட்சைக் குழுவொன்றை களத்தில் இறக்குவதற்கு வல்வெட்டித்துறை சமூகம் முனைந்தது. வல்வெட்டித்துறையில் கூட்டமைப்பு முன்னிலை பெற்ற போதும், குறைந்தது இரண்டு ஆசனங்களைப் பெறுமளவுக்கான வாக்குகளை சுயேட்சைக்குழுவிடம் இழந்திருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தை ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டால், கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை வழங்கிவிட்டு, அதிகாரத்தில் பங்காளியாக இருந்த கூட்டமைப்பு மீது மக்களுக்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டது. அதற்கும் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களே பெரும்பாலும் காரணமாக இருந்தார்கள்.

யாழ். மாநகர சபைக்கான மேயர் வேட்பாளர் இம்மானுவேல் ஆர்னோல்டே என்பதை, தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் தரப்பு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்து தயார்படுத்தி வந்தது.

அதுவரை காலமும் அதைக் குறிப்பிட்டளவு ஆமோதித்து வந்த சி.வீ.கே. சிவஞானம் தரப்பு, இறுதி நேரத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவரை, யாழில் இயங்கும் தொலைக்காட்சியொன்றின் உரிமையாளர் உள்ளிட்ட தரப்பினர் கூட்டமைப்பின் மேயர் வேட்பாளராக முன்மொழிய வேண்டும் என்கிற யோசனையை முன்வைத்தபோது, அந்தப் பக்கம் சாய்ந்தது.

அது, தமிழரசுக் கட்சிக்குள்ளும் மத- சாதியவாத உரையாடல்களை மறைமுகமாகச் செய்ய வைத்தது. தேர்தல் பிரசாரங்களின் போதும் அதை முன்னிறுத்திய நிகழ்வுகள் நடந்தன.

அத்தோடு, சுமந்திரனை மீறி இன்னொருவரை மேயர் வேட்பாளராகக் கொண்டு வர முடியாது என்கிற நிலையில், கூட்டமைப்புக்கு எதிரான மனநிலையை அதிகப்படுத்துவதில் அதிகமான தமிழரசுக் கட்சியினரும் ஈடுபட்டனர்.

வடக்கு, கிழக்கிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டது யாழ். மாநகர சபை. அதை வெற்றி கொள்வது என்பது தமிழ்த் தேசிய அடையாள அரசியலில் முக்கியானது. ஏனெனில், அது அனைத்துத் தரப்பு மக்களையும் கொண்ட சபை.

அப்படியான நிலையில், பிரதான கட்சியான கூட்டமைப்பு, தன்னுடைய மேயர் வேட்பாளரை வெளிப்படையாக அறிவித்து, தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க முடியவில்லை என்பதே பெரும் பின்னடைவாகும்.

இருப்பதிலேயே சிறு தேர்தலான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கூட்டமைப்பு பின்னடைவைச் சந்தித்தால், பாதிப்புகளை விரைவாக சரி செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு.

அதில், முக்கியமானது தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தின் உறுதிப்பாடு தொடர்பானது. அடுத்தது, கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன், கட்சிக்குள் நீடிக்கும் குழப்பங்களைக் கண்டும் காணாமல் விடுவது. குழப்பங்கள் எழும்போது தீர்க்கமான முடிவுகளை எடுப்பதுவே கட்சியின் உறுப்பினர்கள் மத்தியில் ஒழுக்கத்தை கொண்டு வரும்.

இவ்வாறான நிலையில், எவ்வளவு உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டாலும், மக்களின் அதிருப்தியைப் பெறுவதை நிறுத்தவே முடியாது.

அத்தோடு, மாற்றுக் கருத்துகள் இருந்தாலும், ஒரு கட்சியாக, ஒரு முடிவை எடுத்த பின்னர், அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நிலையொன்றைத் தமிழரசுக் கட்சி உருவாக்க வேண்டும்.

மாறாக, கட்சிக் கூட்டங்களில் அனைத்துக்கும் தலையாட்டிவிட்டு, கட்சியின் முடிவுகள் விமர்சனத்துக்கு உள்ளாகும் போது, அந்த முடிவுகளுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்பது மாதிரியான நிலைப்பாடுகளை எடுக்கும் நபர்களை அடையாளம் கண்டு வெளிப்படுத்த வேண்டும். அந்த நிலையை, சில காரணங்களுக்காகப் பொறுத்துக் கொள்வது என்பது, கட்சியை மாத்திரமல்ல, மக்களையும் முட்டாளாக்கும் செயலாகும்.

அதைத் தமிழரசுக் கட்சி இனியாவது தவிர்த்துக் கொள்ள வேண்டும். அப்படியான நிலையில், கூட்டமைப்பின் பின்னடைவுக்கு தமிழரசுக் கட்சியே பிரதான பொறுப்பை ஏற்க வேண்டும். சம்பந்தனும் மாவையும் சுமந்திரனும் நின்று நிதானித்து அதேநேரம் தீர்க்கமாகச் செயலாற்ற வேண்டும்.

வடக்கில் தேர்தல்களும் தமிழ் அரசியலும்

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், இலங்கை முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இத்தேர்தல்கள் காரணமாக, ஆளும் தேசிய அரசாங்கத்தில் பிளவு ஏற்பட்டு, அரசாங்கம் பிளவடைவது, கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ராஜபக்‌ஷவின் பரப்பியல்வாதத்துக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய எழுச்சியைத் தொடர்ந்து, தேசியவாத அரசியல், மீண்டும் முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

ஆளும் அரசாங்கத்தின் பொருளாதாரத் தோல்விகள் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்க, அரசமைப்பு ரீதியான அரசியல் தீர்வுக்காக 2015இல் கிடைக்கப்பெற்ற பொன்னான வாய்ப்பு, கிட்டத்தட்ட முழுவதுமாக இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

மறுபக்கமாக, வட மாகாணத்தில் இடம்பெற்ற தேர்தல்கள், எதிர்வரும் ஆண்டுகளில் தமிழ் அரசியலில் ஏற்படக்கூடிய மாற்றங்களைக் காட்டி நிற்கிறது. தமிழ்த் தேசியவாதத்தின் கவலை தரக்கூடிய புதிய முகம் பற்றியும் வடக்கு தமிழ் அரசியலில் காணப்படும் சில முன்னேற்றகரமான சமிக்ஞைகள் பற்றியும், இக்கட்டுரை கவனஞ்செலுத்துகிறது.

பிரசாரங்கள்

2013ஆம் ஆண்டு இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல்களோடும் 2015ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேசிய ரீதியான இரண்டு தேர்தல்களோடும் ஒப்பிடும் போது, வடக்கில் இம்முறை தேர்தல்களுக்கான பிரசாரங்கள், ஒப்பீட்டளவில் குறைவானதாகவே காணப்பட்டன. வட்டார முறையிலான தேர்தலும் பெண்களுக்கான இட ஒதுக்கீடும், அதிகமானோரைப் போட்டியிடத் தூண்டியது. ஆனால், பல வேட்பாளர்கள், குறித்ததொரு கட்சியில் போட்டியிட்டால் தமது வெற்றிவாய்ப்புகள் எவ்வாறு எனக் கணித்தனரே தவிர, கட்சியின் கொள்கைகள் தொடர்பாகவோ நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பாகவோ ஆராயவில்லை.

ஆனால், அரசியல் இயக்கமின்றி குறிப்பாக, பெண்களுக்கான அரசியல் கட்சிகளில் இல்லாமை பல்வேறான பிரச்சினைகளும் வேட்பாளர்களும், முன்னிலைக்கு வரவில்லை. ஒருசில கட்சிகள் மாத்திரம், சாதியத்துக்கு எதிரான அரசியலை மேற்கொண்டன.

போருக்குப் பின்னரான ஏனைய தேர்தல்களைப் போலன்றி, வீட்டுக்கு வீடு சென்று மேற்கொள்ளப்பட்ட பிரசாரம் கணிசமானளவு இருந்த போதிலும், ஒட்டுமொத்தமான தேர்தல் பிரசாரம், எதிர்பார்க்கப்பட்டளவு உற்சாகத்தையோ அல்லது சனத்திரளையோ ஈர்த்திருக்கவில்லை. போட்டியிடும் கட்சிகளின் ஊடகப் பிரசாரங்கள், சேறு பூசுவதிலும் தனது பிரதான எதிரி அல்லது போட்டியாளர் என்று கருதப்பட்ட கட்சியைத் தரமிறக்குவதிலுமே அதிக கவனத்தைச் செலுத்தியிருந்தன.

அரசமைப்புச் சபையின் வழிகாட்டல் குழு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை, அரசியல் தீர்வின் அம்சங்கள், ஊழல் ஆகியன, தேர்தல் பிரசாரத்தின் முக்கியமான தலைப்புகளாக இருந்தன. உள்ளூர்ப் பொருளாதாரம், உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகத்தின் கீழ் வருகின்ற  நிர்வாகப் பிரச்சினைகள் ஆகியன பற்றிக் கவனஞ்செலுத்தப்  -பட்டிருக்கவில்லை.

யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட சூடுபிடித்த அரசியல் பிரசாரங்கள், முன்னைய சமஷ்டிக் கட்சியின் சின்னமான வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட, இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், தமிழ்க் காங்கிரஸின் சின்னமான சைக்கிளில் போட்டியிட்ட, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில், தமிழ்த் தேசியவாதத்தின் உரித்தைக் கோருவதற்கான போட்டியாக மாறின. இப்பிரசாரங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளினதும் அவர்களது அரசியலினதும் வாரிசுகள் யார் என்ற போட்டியைக் கொண்டனவாக மாறியிருந்தன.

பெற்ற வாக்குகள்

இந்தச் சூழலில், யாழ்ப்பாணத்திலும், பொதுவாக வட மாகாணத்திலும், தமிழ் வாக்குகள் எவ்வாறு அமைந்தன?

வட மாகாணத்தில் பெரும்பான்மையானோர் வசிக்கும் யாழ்ப்பாணத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகள் சரிவடைந்து, 35 சதவீதமான வாக்குகளை மாத்திரமே, அக்கூட்டமைப்புப் பெற்றது. மறுபக்கமாக, கணிசமானளவு வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, 21 சதவீதமான வாக்குகளைப் பெற்றது. ஒடுக்கப்பட்ட சாதியச் சமூகங்களின் வாக்குகளைக் கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் (ஈ.பி.டி.பி) சிறந்த வெளிப்பாட்டை வெளிப்படுத்தி, 19 சதவீதமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டது.

தமிழ் மாவட்டங்களாகக் கருதப்படும் கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முறையே 47 சதவீத, 42 சதவீத வாக்குகள் கிடைத்தன. அவ்விரு மாவட்டங்களிலும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஈ.பி.டி.பியும், 5 சதவீதமான வாக்குகளையே பெற்றன. ஆனால், ஈ.பி.டி.பியிலிருந்து ஓராண்டுக்கு முன்னர் பிரிவடைந்த சந்திரகுமார், சுயேட்சைக் குழுக்களில் முன்னிலை வகித்து, கிளிநொச்சியில் 30 சதவீதமான வாக்குகளைப் பெற்றார்.

கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள் என, பல் மத அடையாளங்களைக் கொண்ட மன்னாரிலும், சிங்கள மக்களும் குறிப்பிடத்தக்க அளவு வாழும் வவுனியாவிலும், முடிவுகள் சிறிது வேறுபாடானவையாக அமைந்தன. அவ்விரு மாவட்டங்களிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முறையே 28 சதவீத, 26 சதவீதமான வாக்குகள் கிடைத்தன.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகியன உள்ளடங்கிய தேசியக் கட்சிகள், இம்மாவட்டங்களில் கணிசமானளவு முன்னேற்றத்தையடைந்து, கிட்டத்தட்ட 50 சதவீதமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டன. இத்தேசியக் கட்சிகள், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் முறையே 10, 15, 30 சதவீதமான வாக்குகளைப் பெற்றுக் கொண்டன.

அரசியல் விளைவுகள்

தேர்தல் முடிவுகள், எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மையை வழங்காத நிலையில், வடக்கிலுள்ள பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில், இணைந்து ஆட்சியமைக்க வேண்டிய தேவையேற்பட்டுள்ளது.
வடக்கின் தேர்தல் முடிவுகளிலிருந்து, பின்வரும் விடயங்களை நான் முன்வைக்க விரும்புகிறேன்:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வீழ்ச்சிப் பாதையில் காணப்படுகிறது. இவ்வீழ்ச்சி, வாக்குகள் அடிப்படையிலும் தேர்தல் பிரசாரங்களுக்கான உற்சாகத்தின் அடிப்படையிலும் காணப்படுகிறது. சமஷ்டிக் கட்சியின் விசுவாசிகளான மூத்த தலைமுறையினரால், அது தொடர்ந்தும் வழிநடத்தப்பட்டு வருகிறது.

அவர்களிடத்தில், சுறுசுறுப்புக் காணப்படவில்லை. வடக்கிலுள்ள தமிழ் மக்கள், தங்களுக்கே எப்போதும் வாக்களிப்பர் என்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நம்பிக்கை, அசைத்துப் பார்க்கப்பட்டிருக்கிறது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, துடிப்பான, இளைய அங்கத்தவர்களைச் சேர்த்துள்ளது. அவர்கள், நச்சான தமிழ்த் தேசியவாத அரசியலுடன், இயங்கவிடப்பட்டிருக்கின்றனர். நகரமயமாக்கப்பட்ட தொழில்வாண்மை மிக்க தமது தளத்திலும், புலம்பெயர் தமிழ் மக்களில் கடும்போக்குவாதிகளின் ஆதரவிலும், அவர்கள் தொடர்ந்தும் தங்கியிருக்கின்றனர். பருத்தித்துறை, சாவகச்சேரி ஆகிய நகர சபைகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெற்றிகொண்டுள்ளது. இனவழிப்பு உள்ளிட்ட கலந்துரையாடல்கள் மூலமாக, கடும்போக்குத் தேசியவாத அரசியலுக்கான நிகழ்ச்சிநிரலை அவர்கள் உருவாக்குகின்றனர்.

ஆனால், போரின் இறுதிக் காலத்தில், துயரந்தரும் முடிவைச் சந்தித்த வன்னி மக்களிடத்தில், அவர்களுக்கான வாக்கு வங்கி காணப்படவில்லை. இதுவரை காலமும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை நிராகரித்துள்ள கிராமப்புற மக்களை, அம்முன்னணி சென்றடையுமாயின், தமிழ் அரசியலில் ஆபத்தான மாற்றமாக அது அமையும்.

தமிழ் அரசியலில், முக்கியமான ஓர் அங்கத்தவராக, ஈ.பி.டி.பி தொடர்ந்தும் நிலைத்துள்ளது. தனது தேர்தல் அரசியலுக்காக, அரச பதவிகளில் தங்கியுள்ளது என்ற மாயையை, அது உடைத்தெறிந்துள்ளது.

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த வாக்கு வங்கியொன்றை அது கொண்டுள்ளதுடன், யாழ்ப்பாணத்தின் தீவகப் பகுதிகளில் அது கணிசமானளவு வெற்றிபெற்றுள்ளது.

சாதியத்துக்கு எதிரான அரசியல் உட்பட பல்வேறு காரணங்களுக்காக, பல சுயேட்சைக் குழுக்கள், சிறப்பாகச் செயற்பட்டுள்ளன. காரைநகரில், ஒடுக்கப்பட்ட சாதியச் சமூகங்களின் சமூக அபிவிருத்திக்காகச் செயற்படும் சுயேட்சைக் குழுவொன்று, ஓராண்டுக்கு முன்னர் உருவாக்கப்பட்டதோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இணையாக, 3 ஆசனங்களை அக்குழு வென்றுள்ளது. மயானங்களுக்கு எதிராக, சக்திமிகு சாதிய எதிர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்ற புத்தூரில், புதிய ஜனநாயக மார்க்ஸிஸ லெனினிசக் கட்சியால் ஆதரவளிக்கப்படும் இடதுசாரிகள், நான்கு ஆசனங்களை வென்றுள்ளனர்.

சாவகச்சேரியில், ஈ.பி.ஆர்.எல்.எப் குழுவிலிருந்து வெளியேறி புதிதாக உருவாக்கப்பட்ட, தமிழர்களுக்கான சமூக ஜனநாயகக் கட்சி, 2 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது. கிளிநொச்சியில், சந்திரகுமாரால் தலைமை தாங்கப்படும் முற்போக்கான சுயேட்சைக் குழுக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பிரதான சவாலாக அமைந்ததோடு, 19 ஆசனங்களை வென்றுள்ளன. நீண்டகாலமாகப் புறக்கணிக்கப்பட்ட, மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னியில் வசிக்கும் தமிழ்ச் சமூகமும், சந்திரகுமாரின் ஆதரவுத் தளத்தில்  உள்ளடங்குகிறது.

உள்ளூரிலிருந்து பிராந்தியத்துக்கு

தேசிய மட்டத்தில் தமிழ் அரசியலின் எதிர்காலம் தொடர்பாக, இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஏதாவது சமிக்ஞையை வழங்கியுள்ளன என்றால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் தலைமை தாங்கப்படும், துருவப்படுத்தப்படக்கூடிய தமிழ்த் தேசியவாத அரசியலின் கீழ்நோக்கிய பயணத்தின் ஆபத்தே அது. மறுபக்கமாக, குறுகிய தமிழ்த் தேசியவாதத்தைத் தவிர்க்கும் முற்போக்கான அரசியலின் துளிர்கள், தமிழ் அரசியலை மீள ஆரம்பிப்பதற்கான நம்பிக்கையைத் தருகின்றன.

வடக்கில், பொருளாதார அங்கலாய்ப்புகள் அதிகரிக்கும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் தலைமை தாங்கப்படும் தற்போதைய அரசியல் தலைமை வீழ்ச்சியடையலாம். ஆனால், அதற்கான மாற்றாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் தலைமை தாங்கப்படும், வலதுசாரி மேல்தட்டுவர்க்க தேசியவாதம் உருப்பெறுதல் அமையும். தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரையும் அரசியலையும், சந்தர்ப்பவாதத்துக்காகப் பயன்படுத்தும் ஒன்றாக, இவர்களின் அரசியல் இருக்கிறது.

மறுபக்கமாக, போர்க்காலத்தில் மெளனிக்கப்பட வைக்கப்பட்டிருந்த, சாதியவாதத்துக்கு எதிரான அரசியல், பல்வேறான சிறிய கட்சிகளின் அரசியலாக, தற்போது உருவாகிறது. புறக்கணிக்கப்பட்ட மக்கள், அரசியல் குரலொன்றைத் தேடும் நிலையிலேயே, இந்நிலை உருவாகியுள்ளது.

தமிழ்த் தேசியவாதத்தின் அரசியல், முதலமைச்சர் விக்னேஸ்வரனின் ஆதரவுடன், தமிழ்த் தேசியவாதத்தில் இந்து அங்கத்தையும் அண்மைக்காலத்தில் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், தேர்தல்களைத் தாண்டி, இவ்வாறான முற்போக்கு அரசியல் இயக்கங்கள், கடும்போக்குத் தமிழ்த் தேசியவாதத்தின் தெருவரசியலுக்காக, முக்கியமான தடையாக அமையக்கூடும்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தவறான அரசியல், 2005ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலை வடக்கில் புறக்கணிக்கச் செய்து, ராஜபக்‌ஷவைத் தெரிவுசெய்ததைப் போன்று, தற்போதைய குறுகிய தமிழ்த் தேசியவாதிகள், தெற்கில் ராஜபக்‌ஷவின் முன்னேற்றத்தைக் கண்டு திருப்தியடைகின்றனர்.

தமிழ்த் தேசியவாதத்தால் தமிழ் மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பற்றிக் கவலையடையாமல், சிங்கள – பௌத்த தேசியவாதத்தின் எழுச்சியை, தமிழ்த் தேசியவாதத்துக்கான சர்வதேச அங்கிகாரத்துக்கான பாதையாக அவர்கள் பார்க்கின்றனர்.

தேசியவாதத்தை நோக்கிய பயணத்தைத் தடுத்து நிறுத்தி, ஜனநாயகத்தையும் சமூக நீதியையும் நோக்கி, பரந்த இயக்கமொன்றை ஏற்படுத்துவதே, பல்வேறு இனச் சமுதாயங்களுக்கும் தற்போது தேவையான ஒன்றாகக் காணப்படுகிறது.

சிறிய அனுபவக் கதையொன்றுடன், இதை நான் நிறைவுசெய்கிறேன். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கிராமப்புறப் பெண்ணொருவரிடம், யாருக்கு வாக்களித்தார் என்று நான் கேட்டபோது, “வீடு” எனப் பதிலளித்தார். அவரது வாக்குக்கான காரணம் குறித்துக் கேட்டபோது, ஈ.பி.டி.பியின் வீணைச் சின்னத்துக்கே வாக்களித்தாரென அவர் தெரிவித்தார். “அவர்கள் (ஈ.பி.டி.பி), மின்சாரம் பெற உதவினார்கள், எங்கள் வீதியை நிர்மாணித்தார்கள், எங்களுக்கு வீடு கிடைப்பதற்கு அவர்கள் தான் காரணம். தமிழ் மக்கள், வீட்டுக்கு வாக்களிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுவதால், வீட்டுக்கு வாக்களித்தோம் என்றே நாங்கள் சொல்கிறோம். ஆனால், எங்களுக்கு உதவுபவர்களுக்குத் தான் நாம் வாக்களிக்கிறோம்” என, அவர் தொடர்ந்து விளக்கமளித்தார்.

சரிந்து போகிறதா கூட்டமைப்பின் சாம்ராஜ்யம்?

உள்ளூராட்சித் தேர்தலில், வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு படுதோல்வி கண்டிருப்பதாக ஒரு பார்வையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெரும் எழுச்சி கண்டிருப்பதான ஒரு கருத்தும் பரவலாகத் தோற்றம் பெற்றிருக்கிறது.

கடந்த நாடாளுமன்ற, மாகாணசபைத் தேர்தல்களுடனான ஒப்பீடுகளின் அடிப்படையிலேயே, இந்தக் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அத்தகைய ஒப்பீடு பொருத்தமானதா, என்பது முக்கியமான கேள்வி.
ஏனென்றால், நாடாளுமன்றம்,  மாகாணசபைத் தேர்தல்களில் செல்வாக்குச் செலுத்தாத பல விடயங்கள், உள்ளூராட்சித் தேர்தல்களில் செல்வாக்குச் செலுத்தக் கூடியவையாக இருந்தன.

நாடாளுமன்றம், மாகாணசபைத் தேர்தல்களில் மிகக் குறைந்தளவிலான வேட்பாளர்களே களத்தில் இருப்பார்கள். அதில், எத்தனை கட்சிகள் போட்டியிட்டாலும், வாக்குகள் பிரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால், வேட்பாளர்கள் பெரும்பாலும், வாக்காளர்களுக்கு மிக நெருக்கமானவர்களாக இருக்கமாட்டார்கள்.

அறிமுகமானவர்களாக இருந்தாலும், அவர்களுக்காக வாக்களிக்க வேண்டும் என்பதை விட, கட்சிக்காக கொள்கைக்காக வாக்களிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமே வாக்காளர்களுக்கு அதிகம் இருக்கும்.
ஏனென்றால், பெரும்பாலான வேட்பாளர்களின் தனிப்பட்ட ஆளுமை, வாக்காளர்களின் தெரிவில் செல்வாக்குச் செலுத்துவது குறைவு. அதனால் கட்சி, சின்னம் என்பன கூடுதல் தாக்கம் செலுத்தும்.

ஆனால், உள்ளூராட்சித் தேர்தலில் அவ்வாறு இல்லை. குறிப்பிட்ட ஒரு பிரதேசத்துக்குள் தான் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பார்கள். இதனால் ஒரே பிரதேசத்துக்குள் பல வேட்பாளர்கள் களமிறங்கியிருப்பார்கள்.  இவர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்தவராகவோ, நெருக்கமானவர்களாகவோ அல்லது குறைந்தபட்சம் நேரில் கண்டால் தலையாட்டி விட்டுச் செல்கின்றவர்களாகவோ இருப்பார்கள்.
வேட்பாளர்களின் தனிப்பட்ட நட்பு, உறவு, ஆளுமை என்பன உள்ளூராட்சித் தேர்தலில் கணிசமான செல்வாக்கைச் செலுத்தக் கூடியது.

எனவே, உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை, முன்னைய நாடாளுமன்றம், மாகாணசபைத் தேர்தல் முடிவுகளுடன் முழுமையாக ஒப்பீடு செய்து, இதை ஒரு பெரும் வீழ்ச்சியாகப் பதிவு செய்ய முடியாது.
அவ்வாறு ஒப்பீடு செய்கின்றபோது, நாடாளுமன்றம், மாகாணசபைத் தேர்தல்கள் நடந்த சூழலையும் இப்போதைய சூழலையும் ஒப்பீடு செய்ய வேண்டியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டை வலியுறுத்தும், இரண்டு கட்சிகள்தான் மோதின. ஒன்று கூட்டமைப்பு; இரண்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

அதனால், தமிழ்த் தேசிய அபிலாஷைகளைக் கொண்ட வாக்காளர்கள், கொள்கை சார்ந்து வாக்களிக்கும் வாக்காளர்கள், இரண்டு தெரிவுகளில் ஒன்றையே தேர்ந்தெடுத்தனர்.

மாகாணசபைத் தேர்தலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புறக்கணித்தது. அதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம், தமிழ்த் தேசிய அபிலாஷைகளை முன்வைத்த ஒரே தரப்பாகப் போட்டியிட்டது.

மாகாணசபைத் தேர்தலில், கூட்டமைப்புடன் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் இணைந்தே போட்டியிட்டிருந்தன. அது கூட்டமைப்பின் வாக்கு வங்கியை இன்னும் பலப்படுத்தியது.

மாகாணசபைத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ எதிர்ப்பு அலை, வடக்கில் தீவிரமாக வீசிக்கொண்டிருந்ததால், அதுவும் கூட்டமைப்புக்குக் கைகொடுத்தது.

இவையெல்லாம், மாகாணசபைத் தேர்தலில் அதிகபட்ச வாக்களிப்பையும் கூட்டமைப்பின் அசுர பலத்தையும் வெளிப்படுத்தக் காரணமாகின.

ஆனால், உள்ளூராட்சித் தேர்தலில் நிலைமை அவ்வாறில்லை. தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் மூன்று அணிகளாகப் பிரிந்து மோதினர்.

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளாத ஏனைய கட்சிகளைப் பற்றிக் கவலைப்படாமல், இவர்கள் தமக்குள் தான் அதிகம் மோதிக் கொண்டார்கள். தமக்குள் ஒருவர் மீது, ஒருவர் சேற்றை வாரிக் கொண்டனர். இதனால், தமிழ்த் தேசியக் கொள்கை நிலைப்பாடு கொண்ட வாக்காளர்களின் வாக்குகள், மூன்றாகப் பிரிந்து போனது.

உள்ளக மோதல்களால் வெறுப்படைந்த,  கொள்கை சார்ந்து வாக்களிக்கும் வாக்காளர்கள் பலர், ஒதுங்கிக் கொள்ளவும் நேரிட்டது. குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு வீதம் கணிசமாகக் குறைந்தது.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் உள்ளக முரண்பாட்டைப் பயன்படுத்திக் கொண்டு, தேசியக் கட்சிகளும் ஏனைய சிறுகட்சிகளும் வாக்காளர்களின் கவனத்தைப் பெற்று, வெற்றியைப் பெற்றிருக்கின்றன.

மூன்றாகப் பிரிந்த தமிழ்த் தேசிய வாக்குகள், மற்றும் ஏற்கெனவே முன்னைய தேர்தல்களில் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் என்பன, இம்முறை தனியாக இணைந்து போட்டியிட்டமை என்பன, கூட்டமைப்பின் வாக்கு வங்கியை உடைத்திருக்கிறது.

அதைவிட, மாகாணசபைத் தேர்தலில் ஒதுங்கியிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இம்முறை பலமாகக் களமிறங்கியிருந்தது. அது கூட்டமைப்புக்கான கடுமையான சவாலையும் கொடுத்தது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தாய்க் கட்சியான தமிழ்க் காங்கிரஸ் பழமையான கட்சி. அதற்கென்று ஒரு வாக்குப் பலமும் இருந்து வந்தது.

இந்த உள்ளூராட்சித் தேர்தலில், ஒப்பீட்டளவில் நாடாளுமன்றம், மாகாணசபைத் தேர்தல்களை விட, யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு வீதம் குறைந்திருக்கிறது. அதிகளவு வேட்பாளர்கள், அறிமுகமான ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்தவர்கள், அதற்கு எதிராக வாக்களிப்பதை விட, வாக்களிக்காமல் இருந்து விடலாம் என்ற சிந்தனை, தமிழ்க் கட்சிகளுக்கிடையிலான அடிபிடிகள் என்பனவற்றினால் ஏற்பட்ட வெறுப்பு என்பன யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு வீதத்தைக் கணிசமாகக் குறைத்திருக்கிறது.

ஏனைய இடங்களை விட, யாழ்ப்பாணத்தில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகள் அதிகளவில் சரிந்திருக்கின்றன. எனவே, யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு வீதம் குறைந்ததை, அதற்கான ஒரு முக்கியமான காரணியாகக் கொள்ள வேண்டியிருக்கிறது.

எனினும், கூட்டமைப்புக்கு வாக்குகள் குறைந்திருப்பதை, பெரும் வீழ்ச்சியாகவோ, தோல்வியாகவோ அடையாளப்படுத்த முடியாது. ஏனென்றால், இன்னமும் யாழ்ப்பாணத்தில் முதலிடத்திலும் ஏனைய இடங்களில் பெரும் பலத்துடனும் அதுவே இருக்கிறது.

அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெரிய வெற்றியைப் பெற்று விட்டது போன்ற தோற்றப்பாடும் காட்டப்படுகிறது. ஆனால், கூட்டமைப்புக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான வாக்கு வீதத்தில் பெரும் வித்தியாசம் இருக்கிறது.

உள்ளூராட்சித் தேர்தலில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெற்றிருக்கின்ற வாக்குகள், ஆசனங்கள், அதற்கு ஓர் ஊக்கத்தையும் உள்ளூர் மட்டத்தில் இருந்து, ஒரு பலமான கட்டமைப்பை உருவாக்குகின்ற சூழலையும் பலமான அணியாக மேல் எழுவதற்கான ஒரு வாய்ப்பையும் கொடுத்திருக்கிறது.

அதேவேளை, கூட்டமைப்புக்கு யாழ்ப்பாணத்திலும் ஏனைய இடங்களிலும் வாக்குகள் குறைந்திருக்கின்றன. ஆனாலும், மொத்தமாகக் கிட்டத்தட்ட மூன்று இலட்சத்து 40 ஆயிரம் வாக்குகளுடன் தமிழர் பிரதேசத்தின் முன்னணிக் கட்சியாக நிலைத்து நிற்கிறது.

அதேவேளை, இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்னடையவில்லை. 2011ஆம் ஆண்டை விட, அதிக ஆசனங்களையும் அதிக வாக்குகளையும் பெற்றுக் கொண்டிருக்கிறது என்ற வாதங்களும் சிலரால் முன்வைக்கப்படுகின்றன.

உதாரணமாக, 2011 உள்ளூராட்சித் தேர்தலில், சுமார் 255,078 வாக்குகளைப்பெற்று, 274 ஆசனங்களுடன் 32 சபைகளைக் கைப்பற்றிய கூட்டமைப்பு, இம்முறை, 339,675 வாக்குகளைப் பெற்றுள்ளது. 407 உறுப்பினர்களுடன் 34 சபைகளில் வெற்றி பெற்றுள்ளது என்று சிலர் வாதிடுகின்றனர். ஆனால், உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி செலுத்தக் கூடிய வாய்ப்பு, கூட்டமைப்புக்கு இரண்டே இரண்டு சபைகளில் தான் கிடைத்திருக்கிறது. ஏனைய 32 சபைகளிலும், பிறகட்சிகளின் தயவை நாட வேண்டிய நிலையே உள்ளது.

கூட்டமைப்புக்கு இந்தத் தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது உண்மை. ஆனால், அது தோல்வியல்ல. இது தோல்வியாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதை மறுக்க முடியாது.

கூட்டமைப்புக்குப் பின்னடைவு ஏற்பட்டது என்பது எந்தளவுக்கு சரியான கருத்தோ, அதுபோல தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னேறியிருக்கிறது என்று கூறுவதே பொருத்தமானது.

எவ்வாறாயினும், இந்தத் தேர்தல் கூட்டமைப்புக்குத் தம்மை மறுசீரமைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியிருக்கிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு இன்னும் முன்னேறுவதற்கான வழிகளைத் தேட வேண்டிய அவசியத்தை உணர்த்தியிருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏகபோகத்துக்கு இந்தத் தேர்தல் சவாலை ஏற்படுத்தியிருந்தாலும், அதைச் சாய்க்க முடியுமா அல்லது சரிய விடாமல் காப்பாற்ற முடியுமா என்பதை அடுத்து வரும் தேர்தல்கள்தான் உறுதி செய்யும்.

 

SHARE