பதினோறாவது உலக கோப்பை கால்பந்து தொடர், 1978ல் அர்ஜென்டினாவில் நடந்தது. இங்கு ராணுவ ஆட்சி புரிந்த ஜெனரல் விடேலாவின் சர்வாதிகார போக்கு மற்றும் மனித உரிமை மீறலை கண்டித்து பல நாடுகள் போட்டியை புறக்கணிக்க முடிவு செய்தன. பின் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) தலையிட்டு சமரசம் செய்தது.
தகுதிச் சுற்றுப் போட்டிகளின் முடிவில், முன்னணி அணிகளான இங்கிலாந்து, சோவியத் யூனியன், செக்கோஸ்லோவேகியா, யுகோஸ்லோவியா, பிரான்ஸ் அணிகள் வெளியேறின.
முதல் சுற்றுப் போட்டிகளின் முடிவில், இத்தாலி, நெதர்லாந்து, பிரேசில், மேற்கு ஜெர்மனி, ஆஸ்திரியா, அர்ஜென்டினா, போலந்து, பெரு ஆகிய அணிகள் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறின.
இரண்டாவது சுற்றின் முடிவில் அர்ஜென்டினா, பிரேசில், அணிகள் தலா 5 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தன. பின் அதிக கோலடித்ததன் அடிப்படையில் பைனல் வாய்ப்பை அர்ஜென்டினா பெற்றது.
மறுபக்கம் ஆஸ்திரியா, இத்தாலி அணிகளை வென்ற நெதர்லாந்து அணி, உலக கோப்பை பைனலுக்கு இரண்டாவது முறையாக தகுதி பெற்றது. பரபரப்பான பைனலில் அர்ஜென்டினா, நெதர்லாந்து அணிகள் மோதின. ஆட்ட நேர முடிவில், இரு அணிகளும் 1–1 என சமநிலையில் இருந்தன. பின் கூடுதல் நேரத்தில், அர்ஜென்டினாவின் மரியோ கெம்பஸ், பெர்டோனி தலா ஒரு கோல் அடித்தனர். இறுதியில் அர்ஜென்டினா 3–1 என வென்று, முதன்முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.
இத்தொடரில் 6 கோல்கள் அடித்து அசத்திய அர்ஜென்டினா வீரர் மரியோ கெம்பஸ், ‘கோல்டன் ஷூ’ கைப்பற்றினார்.
‘எக்ஸ்டிரா டைம்’
உலக கோப்பை தொடரை நடத்தி, சொந்த மண்ணில் சாம்பியன் பட்டம் வென்ற அணிகள் வரிசையில் ஐந்தாவது இடத்தை பெற்றது அர்ஜென்டினா. இதற்கு முன், உருகுவே (1930), இத்தாலி (1934), இங்கிலாந்து (1966), மேற்கு ஜெர்மனி (1974) அணிகள் இப்பெருமையை பெற்றன.
ரொனால்டோ ‘15’
உலக கோப்பை வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர் பிரேசிலின் ரொனால்டோ. கடந்த 1998 முதல் 2006 வரை என, மூன்று தொடர்களில் பங்கேற்ற இவர், மொத்தம் 15 கோல்கள் அடித்துள்ளார்.