ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் பாடசாலைகள் மீதான தாக்குதல்கள் பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது – யுனிசெவ்

344

ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் பாடசாலைகள் மீதான தாக்குதல்கள் பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது என தெரிவித்துள்ள யுனிசெவ் இதன் காரணமாக ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் மாணவர்களிற்கு உரிய கல்வியை உறுதிப்படுத்தமுடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் 2017 இல் பாடசாலைகள் மீது 68 தாக்குதல்கள் இடம்பெற்றன என தெரிவித்துள்ள யுனிசெவ் 2018 இல் 192 பாடசாலைகள் தாக்கப்பட்டன எனவும் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் கல்வி தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளது என தெரிவித்துள்ள யுனிசெவ் பாடசாலைகள் மீதான  இந்த அர்த்தமற்ற தாக்குதல்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் கொல்லப்படுதல், காயமடைதல் கடத்தப்படுதல் மற்றும் கல்விக்கு எதிரான அச்சுறுத்தல்களால் ஒரு தலைமுறையின் கனவுகளும் நம்பிக்கைகளும் அழிக்கப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளது.

தலிபான் மற்றும் ஐஎஸ் அமைப்பின் அச்சுறுத்தல்கள் காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகள் ஆப்கானிஸ்தானில் மூடப்பட்ட நிலையிலுள்ளன.

பெண்கள் கல்வி கற்பதற்கான தனது எதிர்ப்பை தலிபான் கைவிட்டுள்ள போதிலும் தங்களிடம் அனுமதியை பெறாத பாடசாலைகளை மூடும் நடவடிக்கைகயில் அந்த அமைப்பு தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்றது.

 

ஆப்கானிஸ்தானில் ஏழு வயது முதல் 17 வயதிற்குட்பட்ட 3.7 மில்லியன் மாணவர்கள் கல்வி வாய்ப்பில்லாத நிலையில் உள்ளனர் எனவும் யுனிசெவ் தெரிவித்துள்ளது.

அதிகரித்து வரும் பாதுகாப்பின்மை,வறுமை அதிகரித்து வருவது மற்றும் பெண்களிற்கு  எதிரான தொடர்ச்சியான பாகுபாடுகள் காரணமாக கடந்த வருடம் பாடசாலையிலிருந்து விலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ள யுனிசெவ் 60 வீதமான மாணவிகள் கல்விகற்க முடியாத நிலையில் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

SHARE