முதல் சுற்றில் பதிவான 7 மில்லியன் ஓட்டுகளில் அப்துல்லா 45 சதவிகிதமும், அஹமதுசாய் 31.6 சதவிகிதமும் பெற்றிருந்தனர். எனினும் அஹமதுசாய் சார்பாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக அப்துல்லா குற்றம் சுமத்தியுள்ளார். போலி வோட்டுகள் பிரிக்கப்பட்டு உண்மையாகப் போடப்பட்ட வாக்குகள் எண்ணப்படாதவரை தேர்தல் ஆணையத்தின் முடிவை தான் ஏற்கப்போவதில்லை என்று அவர் எச்சரித்துள்ளார்.
இரண்டாவது சுற்று வாக்குப்பதிவின் எண்ணிக்கையின் பூர்வாங்க முடிவுகள் இன்றும், இறுதி முடிவுகள் 22ஆம் தேதியும் அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்துல்லாவின் எச்சரிப்பினால் இவை மீண்டும் தள்ளிப்போடப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையின் பூர்வாங்க முடிவுகள் வரும் 7ஆம் தேதியும், இறுதி முடிவுகள் அடுத்த மாதம் 24ஆம் தேதியும் வெளியிடப்படும் என்று இன்று தேர்தல் ஆணையத் தலைவர் அஹமது யூசுப் நுரிஸ்டான் தெரிவித்துள்ளார்.
அதுபோல் தனது பதவிக்காலம் முடிந்து வெளியேறும் ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் புதிய அதிபரிடம் ஆகஸ்ட் 2ஆம் தேதி பொறுப்புகளை ஒப்படைக்க இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். தேர்தல் முடிவுகள் தற்போது தள்ளிப்போவதால் அதிபரின் இந்த முடிவிலும் மாற்றம் ஏற்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.