எந்த முனைப்பும் கவனிப்பும் தேவையின்றி வீட்டு வாசல்களில் துளிர்த்துக் கிளம்பும் முருங்கையின் முக்கியத்துவம் நம்மில் பலருக்கும் தெரியாது. ‘‘ஒருநாள் விட்டு ஒருநாள் முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்கிறவர்களுக்கு ரத்த சோகை என்கிற பிரச்னை எட்டிக்கூடப் பார்க்காது. முருங்கை மரத்தை அதிசய மரம் என்றே அழைக்கலாம். அந்தளவுக்கு இந்த மரத்தின் ஒவ்வொரு பாகமும் உபயோகமாக உள்ளது. இலைகள் மட்டுமின்றி, வேர்கள், விதைகள் ஆகியவை சமையல் மற்றும் மருத்துவத்துக்கு உபயோகப்படுத்தப்படுகின்றன’’ என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ். முருங்கையில் மறைந்துள்ள மகத்தான குணங்களைப் பற்றிப் பேசுகிறார் அவர்.
‘‘முருங்கையின் உள்ளே உள்ள விதைகள் மற்றும் முருங்கை இலைகள் ஆகியவற்றில் கரோடின், இரும்புச் சத்து, கால்சியம் மற்றும் வைட்டமின் சி ஆகியவை அடங்கியுள்ளன. இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் சூப் ஆஸ்துமா, மார்புச் சளி மற்றும் காசநோய் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாக உதவுகிறது. முருங்கை இலைச் சாறு பருக்களை அகற்றி முகத்தை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறது.
முருங்கை இலைச் சாறு எலும்புகளை வலுவாக்குகிறது. முக்கியமாக குழந்தைகளுக்கும் வளரும் பிள்ளைகளுக்கும் உதவுகிறது. சிறுநீரக நோய்களுக்கு மருந்தாகிறது. இலை, பூ மற்றும் விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் சூப், எல்லா வகையான தொற்று நோய், குறிப்பாக தோல், தொண்டை பிரச்னைகள் ஆகியவற்றை சரி செய்கிறது. பச்சையான முருங்கைக்காய் இரும்புச் சத்து, வைட்டமின், கால்சியம் ஆகிய சத்துகளைக் கொண்டது.
தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் முருங்கை சாப்பிட்டால் நமது எலும்புகள் வலிமை பெறும் என்பது நிரூபணமாகி உள்ளது. இதன் டானிக்கை தொடர்ந்து கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு கொடுத்தால் அவர்களுக்கு தேவையான கால்சியம், இரும்பு, வைட்டமின் ஆகிய சத்துகள் கிடைக்கின்றன. மேலும் கர்ப்பப்பையின் மெத்தனத்தை சரி செய்கிறது. பிரசவத்தை எளிதாக்கி, பிரசவத்துக்கு பின் வரும் பிரச்னைகளையும் சரி செய்கிறது. முருங்கைக் கீரை பொரியல் தாய்ப்பால் அதிகமாக சுரக்க உதவுகிறது.
இந்தப் பொரியல் தயாரிக்க முதலில் முருங்கை இலைகளை தண்ணீரில் உப்பு சேர்த்து கொதிக்க விடவேண்டும். பிறகு தண்ணீரை வடிகட்டி விட்டு அந்த இலைகளை நெய் சேர்த்து உண்ண வேண்டும். முருங்கைக்காய் அஜீரணக் கோளாறுகளுக்கு மருந்தாக உதவுகிறது. இலையின் சாறு 1 டீஸ்பூனுடன் தேன் கலந்து இத்துடன் 1 டம்ளர் இளநீர் சேர்த்து 2 அல்லது 3 முறை ஆயுர்வேத மருந்தாக அருந்த காலரா, பேதி, வயிற்றுக் கோளாறுகள் ஆகியவற்றை சரி செய்யும். இது எலும்புகளை வலுவாக்குவதுடன் ரத்தத்தையும் சுத்தப்படுத்தும். முருங்கைப் பொடி ஆண்மைக் குறைபாட்டை சரி செய்கிறது. செக்ஸ் உறவில் பிரச்னைகளைத் தீர்க்கவும் உதவுகிறது.
எப்படி வாங்க வேண்டும்?
முருங்கைக்காய் சிறியதாக இருக்க வேண்டும். ஏனெனில் உள்ளே விதைகள் இருப்பதால் முருங்கை சிறிய அளவில் இருத்தல் வேண்டும். மிகவும் முதிர்ந்த காய்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
முருங்கைக்காய் நல்ல பச்சை நிறத்துடனும் மேல் காணப்படும் தோல் மிருதுவாகவும் இருக்க வேண்டும். முருங்கைக்காய் முற்றிய நிலையில் இருந்தால் லேசாக சீவி விட்டோ அல்லது கீறி விட்டோ சமைக்கலாம்.
முருங்கைக்காய்களை வாடாமலும் உலர்ந்த நிலையிலும் வைப்பதற்கு பிளாஸ்டிக் பை அல்லது பேப்பரில் சுற்றி வைக்கலாம். ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். ஆனாலும், ஃப்ரெஷ்ஷாக சமைத்து சாப்பிடுவதே ஆரோக்கியமானது.
எச்சரிக்கை
முருங்கைக்காயில் உடம்புக்குத் தேவையான அத்தனை நல்ல சத்துகளும் உள்ளன. இருப்பினும் வேர் பகுதியிலிருந்து பெறப்படும் தூள்களை மருத்துவரை ஆலோசிக்காமல் உண்ணக்கூடாது. ஏனெனில் இதில் விஷத்தன்மை உள்ள வேதியியல் மருந்துகள் காணப்படுகின்றன. இவை பக்கவாதத்தை உண்டு பண்ணலாம்.
என்ன இருக்கிறது?
(100 கிராமில்) முருங்கைக்காய் இலை
ஆற்றல் 26 கி.கலோரி 92கி.கலோரி
கார்போஹைட்ரேட் 3.7 கிராம் 13.4 கிராம்
கொழுப்பு 0.1 கிராம் 1.7 கிராம்
நார்ச்சத்து 0.48 கிராம் 0.9 கிராம்
புரோட்டீன் 2.5 கிராம் 6.7 கிராம்
நீர்ச்சத்து 86.9% 75.0%
வைட்டமின் ஏ 0.11 மி.கி. 6.8 மி.கி.
வைட்டமின் பி 423 மி.கி. 423 மி.கி.
வைட்டமின் பி1
(தையமின்) 0.05 மி.கி. 0.21 மி.கி.
வைட்டமின் பி2
(ரிபோஃப்ளேவின்) 0.07 மி.கி. 0.05 மி.கி.
கால்சியம் 30 மி.கி. 440 மி.கி.
தாமிரம் 5.3 மி.கி. 7 மி.கி.
மெக்னீசியம் 24 மி.கி. 24 மி.கி.
பாஸ்பரஸ் 259 மி.கி. 259 மி.கி.
பொட்டாசியம் 110 மி.கி. 70 மி.கி.
இரும்புச் சத்து 5.3 மி.கி. 7 மி.கி.
ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ் சொன்ன முருங்கை ரெசிபிகளை செய்து காட்டுகிறார் சமையல் கலைஞர் ஹேமலதா.
முருங்கைக் கீரை ரசம்
என்னென்ன தேவை?
முருங்கைக் கீரை – ஒன்றரை கப், கறிவேப்பிலை – சிறிது, துவரம் பருப்பு – கால் கப், புளி – 1 டேபிள் ஸ்பூன், தக்காளி – 1 (விழுதாக்கவும்), ரசப் பொடி – 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, ஃப்ரெஷ்ஷாக பொடித்த மிளகு – கால் டீஸ்பூன்.
தாளிக்க…
எண்ணெய் – 1 டீஸ்பூன், பெருங்காயம் – சிறிது, கடுகு – அரை டீஸ்பூன், காய்ந்த சிவப்பு மிளகாய் – 1, கொத்தமல்லி – தேவைக்கு.
எப்படிச் செய்வது?
புளியை 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். துவரம் பருப்பையும் 15 நிமிடங்களுக்கு ஊற வைத்து, குக்கரில் 4-5 விசில் வரும் வரை வேக விடவும். பின்பு அதிலுள்ள தண்ணீரை வடிகட்டி பருப்பை மட்டும் எடுத்துக்கொள்ளவும். இதற்கிடையில் முருங்கை இலைகளை 4-5 முறை தண்ணீரில் சுத்தப்படுத்தவும். ஒரு கடாயில் 1 கப் தண்ணீர், முருங்கை இலைகள், கொத்தமல்லி இலை சேர்த்து 5 நிமிடங்கள் வேக விடவும். இலைகள் வெந்தவுடன் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். புளிக் கரைசலை சேர்த்துக் கொதிக்க விடவும். இதனுடன் ரசப் பொடி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கடாயை மூடி 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
இதில் வெந்த துவரம் பருப்பு தண்ணீர், வெந்த பருப்பு, மிளகுத் தூள் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கவும். மற்றொரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், கொத்தமல்லி, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். தயாரித்து வைத்துள்ள ரசத்தில் இதனை சேர்த்து கொத்தமல்லி இலை சேர்த்துப் பரிமாறவும்.
மற்றொரு முறை: பருப்பு சேர்க்காமல் வெறும் புளியை வைத்து இந்த ரசத்தை செய்யலாம். ஒரு டீஸ்பூன் பூண்டும் சேர்த்து செய்வதால் சுவை கூடும்.
முருங்கைப் பட்டாணி உருளை மசாலா
என்னென்ன தேவை?
முருங்கைக்காய் – 1, உருளைக்கிழங்கு – 2, தோலுரித்த பட்டாணி – அரை கப், எண்ணெய் – 5 டீஸ்பூன், வெங்காயம் நறுக்கியது – 2, பச்சை மிளகாய் நறுக்கியது – 3, தக்காளி நறுக்கியது – 2, மிளகாய் தூள் – 2 டீஸ்பூன், மல்லித்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், கரம் மசாலா – 1 சிட்டிகை, உப்பு – தேவைக்கேற்ப, புதினா அல்லது கொத்தமல்லி – சிறிது.
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெயை வைத்து அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். இத்துடன் தக்காளி, மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடத்துக்கு தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கவும். இத்துடன் முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, பட்டாணி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் 4 கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்கள் வைத்துக் கொதிக்க விடவும். இதன் மேலே புதினா மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்த்து சிறிது கரம் மசாலா தூள் சேர்த்து அலங்கரிக்கவும். சப்பாத்தியுடன் பரிமாறலாம்.
பாரம்பரிய ரெசிபி முருங்கைக்காய் பொரிச்ச கூட்டு
என்னென்ன தேவை?
சிறு துண்டுகளாக நறுக்கிய முருங்கைக்காய் – 2 கப், மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், வெந்த பருப்பு (துவரம் பருப்பு (அ) பயத்தம் பருப்பு) – 1 கப், புளி – ஒரு எலுமிச்சை அளவு, உப்பு – தேவைக்கு.
வறுத்து அரைக்க…
துருவிய தேங்காய் – அரை கப், பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், மிளகு – 1/2 டேபிள்ஸ்பூன், சிவப்பு மிளகாய் – 2, தனியா – ஒரு டேபிள்ஸ்பூன்.
இவற்றை ஒவ்வொன்றாக வறுத்து தேங்காயுடன் சேர்த்து அரைக்கவும். தாளிக்க… கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை – தேவைக்கு.
எப்படிச் செய்வது?
நறுக்கிய முருங்கைக்காயை ஒரு பாத்திரத்தில் சிறிதளவு நீர், உப்பு, மஞ்சள் தூள் போட்டுக் கொதிக்க விடவும். பாதி வெந்தவுடன் புளியை கரைத்து வடிகட்டி இதில் ஊற்றவும். பின் அரைத்த விழுது, வெந்த பருப்பு முதலியவை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். கடைசியில் நெய்யில் கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்துப் பரிமாறவும். இத்துடன் வெந்த மொச்சைக்கொட்டை சேர்த்தும் பரிமாறினால் இன்னும் அட்டகாசமாக இருக்கும்.