இது கட்டுவனூர் சிவமீனாவின் தன்னூர் பற்றிய கவிதை-சோ. சிவகலை.

672

 

ஊர் வாசம்.

வசந்தனாடி மகிழும் கட்டுவன் ஊரின் நினைவுகளில் நனைந்த எமக்கு அவ்வூர்

பற்றிய தகவல்களை அறிய சில அன்பர்களை சந்திக்க முனைந்தபோது வியத்தகு தகவல்கள் பல கிடைத்தன. சேரன்

செங்குட்டுவன் கண்ணகிக்கு கோயிலெடுத்து மகிழ்ந்த போது இங்கும் கோயில்கட்டினான் என்றும், ‘குட்டுவர்’

வந்திருந்ததால் ‘குட்டுவனூர்’ என பெயர் பெற்றதாகவும் பின்னர் ‘கட்டுவனாய்’ மருவியதாகவும்

செவிவழிக்கதைகள் கூறுகின்றன. அதனை நம்பச்செய்யும் வகையில் இங்கு மிகப்பழைய கண்ணகை அம்மன் ஆலயமும்

காணப்படுகின்றது. ஆனால் துறை சார் ஆய்வுகள் எதுவும் இதனை உறுதி செய்ததாக தெரியவில்லை. ஆயினும்

கலாசார தொன்மைமிக்க கட்டுவனூரின் அழகையும் அறிவியல் பொருளாதார செழுமை பற்றியும் அறிய

முடிந்தது. அது கூட வியப்பிற்குரிய வகையிலே அமைந்திருப்பதை காணலாம்.

வசந்தன் பாடல்களை இயற்றிய உட்குடை வரகவி விஸ்வநாதப்புலவர் மட்டுமல்ல இன்னும்பல

புலவர்கள், கல்விமான்கள் இக்கிராமத்துக்கு அணிகலமாய் இருந்து புகழ் சேர்த்துள்ளனர். மயிலிட்டி தெற்கு

மதுரைப்பண்டிதர், வீ.ரீ.வீ.சுப்பிரமணியம்(ஓதுவார் மூர்த்தி), மயில்வாகனப்புலவர்,

தொல்காப்பியக்கடல் கணேசையர், பண்டிதர் நமசிவாயம் என பல இலக்கிய கர்த்தாக்களுடைய பிறப்பிடமாக இந்த

மண் திகழ்ந்துள்ளது. இதுமட்டுமல்லாது சைவத்துக்கு தன்பணியினால் பெருமைசேர்த்த கிரியாவித்தகர்

கணேசக்குருக்களின்(சிவஸ்ரீ கந்த. சிவபாதசுந்தரக்குருக்கள்) பரம்பரையும் இந்த மண்ணிலேயே தோன்றி

வளர்ந்தது எனலாம். இங்கிருக்கும் அற்புதம்மிகு ஆலயங்களில் வழிபாடியற்றும் பெரும்பணியை அவரது

மூதாதையர் தொடங்கி பரம்பரையினரே இயற்றி வருகின்றனர். சமயம் பற்றி கூறுகையில் முக்கியமாக

குறிப்பிட வேண்டிய விடயம் ஒன்று உண்டு. அதாவது இலங்கையிலேயே முதன் முதலாக ஐயப்ப சுவாமிக்கு

தனியான ஆலயம் அமைக்கப்பட்டதும் இந்தக் கட்டுவன் கரண்டைக்குளம் ஐயனார் ஆலயத்துக்கு அண்மையிலே தான்.

கிரியாவித்தகர் கணேசக்குருக்கள் தனது மகளின் குடும்ப சந்தான விருத்திக்காக சபரிமலை யாத்திரை சென்று

1983ம் ஆண்டு அழகிய ஐயப்பசுவாமியின் திருவுருவச்சிலையை இந்தியாவிலிருந்து கொண்டுவந்து

கரண்டைக்குளம் ஐயனார் ஆலயத்தில் அதே வருடத்தில் பிரதிஸ்டை செய்ததுடன்;, அன்றைய தினமே

பதினெட்டுப்படிகளுடன் அமைந்த ஐயப்பன் ஆலயத்திற்கான கட்டுமானப் பணிகளையும் ஆரம்பித்தார். அடுத்த

ஆண்டே அதற்கான அருட்கடாட்சத்தை அவர் பெற்று விட்டார். ஆலயமும் விரைவாக அமைக்கப்பட்டு இலங்கையில்

அமைக்கப்பட்ட பதினெட்டுப்படிகளுடனான கோயிலாக இது பெருமையுடன் திகழ்ந்து வருகிறது. தற்போதும்

பக்தியுடன் விரதமிருந்து இங்கு வரும்பக்தர் குறை தீர்க்கும் பொம்மானாய் சுவாமி ஐயப்பன்

வீற்றிருந்து அருளீர்ந்து வருகிறார்.

வளமான மண்ணின் வனப்போடு பல சுவையான கதைகள் இன்னும் உண்டு. இன்று

நாம்காணும் இரட்டைச்சைக்கில் இலங்கைக்கு வராத காலத்தில் இங்கு சைக்கில் கடை நடத்திய வைத்திலிங்கம்

ஜெயராஜசிங்கம் என்பவர் தானே அதனை வடிவமைத்து ஓடி பிரபலம் பெற்றவர், பலரது பாராட்டுக்களையும்

பெற்றார். இதன் மூலம் இலங்கை முழுவதும் பேசப்பட்டவர். அதே போல வட மாகாணத்தில் முதன்முதலாக பம்பாய்

வெங்காயச்செய்கையை மேற்கொண்டு அதிக விளைச்சல்பெற்று ஆயிரத்து தொழாயிரத்து அறுபத்தி நான்காம்

ஆண்டு வடபகுதி விவசாயிகளுள் முன் மாதிரியாகவும் வழி காட்டியாகவும் திகழ்ந்து பாராட்டுக்களைப் பெற்று

விளை பூமிக்கு பெருமை சேர்த்தவர்.

கூட்டுணர்வால் சிறந்திருந்த இங்கு பத்து கிளைச்சங்கங்களை கொண்ட ‘பாலன் ஞான உதய சங்கம்’

சிறப்பாக திகழ்ந்தது. இதனூடாக விளையாட்டு செயற்பாடுகள், நாடக, கலைச்செயற்பாடுகள் போன்;றன

முன்னெடுக்கப்பட்டு வந்தன. அந்தவகையில் நாடக மற்றும் கலை செயற்பாடுகள் குறித்து நினைவு கூர்ந்த

இவ்வூரின் முதியவர் ஒருவர் தனது நினைவுக்கெட்டிய சிலர் பெயர்களை குறிப்பிட்டார். ஊரைப்பிரிந்து

இருபது ஆண்டிற்கு மேல் சென்று விட்டதால் முளுமையாக என்னால் பெற முடியவில்லை ‘இவர்களை விட இன்னும்பலர்

இருந்தார்கள்’ என்று கூறிய அவரால் பெயர்களை நினைவுபடுத்த முடியவில்லை. ஆனாலும் தெரிந்தவர்களை

நினைவுபடுத்தினர். திரு.சின்னத்துரை புவனராஜா, திரு.கே.ரீ. பாலசுப்பிரமணியம், திரு.ஏ.வீ.

பாலசுப்பிரமணியம், திரு.சி.சர்வானந்தம், திரு.மு. கணேசானந்தம், திரு.இ.பாலச்சந்திரன்,

திரு.ந.சண்முகலிங்கம், திரு.அ.கந்தையா (இவரை ஈழத்து சிவாஜி என்று அழைப்பார்களாம்)

புராணக்கதைகள் சமூககதைகள் என நாடகங்கள் போட்ட இம்மக்கள் மத்தியில் கல்வியறிவு

மிகுந்திருந்ததால் ஆயிரத்து தொழாயிரத்து ஐம்பத்தொட்டு அறுபதுகளிலேயே ‘சோக்கிட்டீஸ்’ நாடகத்தை

அரங்கேற்றியுள்ளனர். தக்கன் யாகம், வள்ளிதிருமணம், சூரசங்காரம், போன்ற புராண கதைகளை

மட்டுமன்றி பலதுறைசார்ந்த நாடகங்களையும் இம்மக்கள் அரங்கேற்றியிருப்பதன் மூலம் அவர்களிடம்

காணப்பட்ட குறுகிய தன்மையற்ற சமூகமயப்பட்ட தன்மையை அறியமுடிகிறது. வாத்திய கலைஞர்களும் சிறப்பாய்

வாழ்ந்துள்ளனர். குறிப்பாக சுப்பையா, வல்லிபுரம் போன்ற பறைமேளக்கலைஞர்கள் ஊரின்

கடைசிக்காலத்தில்(1980 களில்) சிறப்பான பணியை செய்துள்ளனர்.

இங்கு வாழ்ந்து தமிழுக்கு பெருமைசேர்த்த தொல்காப்பியக்கடல் கணேசையர் பற்றி

குறிப்பிடல் முக்கியமானதாகும். நிறைந்த தமிழறிவும், வடமொழி அறிவும் பெற்றவர், அத்துடன்

பக்தியிலும் மிகுந்தவர். வேத ஆகமங்களிலும் சோதிடம், மருத்துவம் போன்ற சகல துறைகளிலும் ஈடுபாடு

கொண்டவர். ஒரு முனிவனைப்போல வாழ்ந்த இவரின் மாணவர்களில் தமிழ்த்துறை விற்பனராக பண்டிதர்

நமசிவாயம் அவர்களும், வேத ஆகம துறையில் விற்பனராக கிரியாவித்தகர் கணேசக்குருக்கள்(சிவஸ்ரீ. கந்த.

சிவபாதசுந்தரக்குருக்கள்) அவர்களும் விளங்கினார்கள் என்பதனை மகிழ்வுடன் கூறினார் அந்த ஊரின்

இப்படியான இவ்வூரில் றம்மியமான ஆலமர சோலையில் அமைந்திருக்கும்

ஐயனார் ஆலயத்தின் சக்தி மிக அற்புதமானது. இன்றும் பல அற்பு தங்களை ஐயன் நிழ்த்திக் கொண்டு தான்

இருக்கிறான் என்று கூறும் ஊர்மக்கள் தமது காவல்தெய்வமாக அவரையே நம்பியிருக்கின்றனர்.

இரண்டாயிரமாம் ஆண்டுகளின் பின்னர் ஏற்பட்ட சமாதான சூழலில் இப்பிரதேசம் மீள் எழுச்சி

பெற்ற பின்னர் மக்கள் தமது ஆலயத்தை சிறப்பாக அமைத்து வருகின்றனர். சபரிகிரி ஐயப்பன்

ஆலயத்திலும் விரதமிருந்து படியேறி விழா எடுத்து மகிழ்கின்றனர். ஐயனார் அலயத்தின் ஆலமரசோலை

இன்னும் பரந்து விரிந்து காணப்படுகிறது. ஆதி தல விருட்ஷமான அரசும் தற்போதும் காணப்படுகின்றது.

இந்த அரசமரத்தடியில் தான் முன்னைய காலங்களில் புராண படிப்புக்கள் செய்யப்பட்டன. புற்று ஒன்று

காணப்படுகிறது, அதில் நாக தம்பிரான் இருப்பதாக கூறப்படுகிறது.

அருகில் காணப்படும் பலாலி இராணுவ முகாமின் பாதுகாப்பு வேலி ஆலயத்திற்கு

அண்மையில் காணப்படுகிறது. அங்கு கடமையில் இருப்பவர்களின் வசதி கருதி இடர்மிகுந்த காலத்தில் ஒருநாள்

இராணுவ அணியொன்று ஆலமரத்தின் கிளைகளை வெட்டும் நோக்குடன் வந்து ஆலயச்சூழலில் உள்ள ஆலமரத்தை

வெட்ட தயாரான போது அங்கு திடீரென தோன்றிய நாக பாம்புகள் அவர்களுடைய ஆயுத தளபாடங்களை

அவ்விடத்திலேயே போட்டு விட்டு ஓடுமளவு நிலை ஏற்பட்டுவிட்டது. இதை அறியாது பூசைக்கு வந்த

ஆலயக்குருக்கள் ஆலயச்சுழலில் இராணுவ ஆயுத தளபாடங்கள் இருப்பது கண்டு விபரீதம் என்ன என அறியாது

திகைத்து, பின்னர் ஆலயத்தின் உள்ளே சென்று பார்த்தபின்னர் குறிப்பால் உணர்ந்துகொண்டார்.

ஆயினும் இராணுவதளபாடங்கள் ஆலய சூழலில் இருப்பது பொருத்தமற்றது. ஏனெனில் அக்காலத்தில்

போராளிகள் இரகசியமாக இருந்து தாக்குதல்களை நடத்துகின்ற காலம். இவ்வாறு ஆலய சூழலில்

ஆயுதங்களிருப்பது விபரீதமானது என்பதால். ஆலயக்குருக்கள் பாதுகாப்பு வேலியில் இருப்பவர்களுக்கு

விடயத்தினை தெரியப்படுத்தினார். சமகாலத்தில் ஓடிய இராணுவ அணியினரும் அதிகளவான சகாக்களுடன்

வாகனங்களில் வந்து தமது ஆயுதங்களை பெற்றுச்சென்றனர். படையினர் மறுநாள் பெரும் பூசை வழிபாடுகளில்

ஈடுபட்டனர். அறியாத அயற்கிராமவாசிகளான சிறுவர்கள் ஆட்டுக்கு குழை வெட்டுவதற்காக என்று வருவதுண்டு.

இப்போது அவர்களை வெட்ட விடாது இராணுவத்தினர் கலைத்து வருகின்றனர்.

என்றும் குறையாத அற்புதங்களும் அழகும் நிறைந்த

பெரும்பகுதி மக்கள் வாழாத உயர்பாதுகாப்பு பிரதேசமாக காணப்படுகின்றது. குடியமர விடப்பட்ட இடங்களில்

அபிவிருத்திப்பணிகள் இடம்பெற்று மக்கள் வாழத்தொடங்கிவிட்டார்கள். ஏனைய பகுதிகளும் விரைவில்

அப்படி மாறும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

குளிர்தேசங்களில் கூடுகட்டி வாழும்

ஊர்க்குருவிகளின் நெஞ்சுக் கூட்டினுள்ளும்

தாய் மண்காணும் ஆசையின் தவிப்பு

சூடாய் இருக்கிறது.

முதாதையர்களில் கால் ரேகை வழி சுவறிய

செம்மண்ணின் வாசம் நுகரும் ஆவல் தொகையாய் இருக்கிறது.

வசந்தனும், ஒயிலும் ஆடிக்களித்த ஆலயமுற்றத்தில்

ஆறஅமர்ந்து மூச்சுவிடும் கனவு கனதியாய் அழுத்துகிறது.

சனிதோறும் சுவாமி கோசமிட்டு ஐயப்பனைப் பாடிக்களைத்து

ஆலமரநிழலில் படுத்துறங்கும் சுகம் காணும் எண்ணம்

நிறைய இருக்கிறது.

பனங்கீற்று தடவிவரும் காற்று ஆலிலையில் ஓய்வெடுத்து

குளிரோடு தவளும் சுகம் பெறுவதற்காய் உடல்கள் பல காத்திருக்கு.

தீராத நோய் அழிய, பிள்ளை வரமருளும் ஐயப்பன் அருள்

கரண்டைக்குளத்தின் வற்றிவிட்ட நீர் மீண்டும் வருமட்டும்

காத்திருக்கும் தாமரை போல எப்போதுமிருக்கும்.

குலம் தளைக்கும். நலன் விளங்கும்

குட்டுவர்கள் வந்து பக்தியுடன் அமைத்த கண்ணகியின் காற்சிலம்பு

கட்டுவனூர் தழைக்க நல்ல இசை எழுப்பும்.

பிள்ளைகளின் காற் சதங்கை கணகணக்க

ஆடிமகிழ்வர் இனி ஒயிலும், வசந்தனும்.

இது கட்டுவனூர் சிவமீனாவின் தன்னூர் பற்றிய கவிதை.

 

கட்டுவன் . -02 சோ. சிவகலை.

SHARE