இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில்,
இந்தியாவின் நிலைப்பாட்டில் சில சந்தர்ப்பங்களில் ஒரு மௌனம் ஏற்பட்டிருக்கலாம். அதற்காக இலங்கை தமிழ் மக்களை இந்தியாவின் புதிய அரசாங்கம் கைவிட்டு விட்டது என அர்த்தம் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
இந்தியா இலங்கையின் அயல்நாடு மாத்திரமல்ல. ஒரு பிராந்திய வல்லரசாகவும் திகழ்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை அயல்நாடு எல்லாவற்றுடனும் சிநேகித நிலையைப் பேணவும் வளர்க்கவுமே விரும்பும். அக் கொள்கை நியாயமானது. அவ்விதமான நிலைப்பாட்டையே இலங்கையுடனும் தொடர முற்படுகின்றது.
இதேவேளை இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு தீர்க்கப்படாத பாரிய பிரச்சினையொன்று இருக்கிறது. அது தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்ற யதார்த்தத்தை புரிந்து கொண்டு அதற்காகவே இந்தியா நீண்ட காலமாக செயற்பட்டு வந்திருக்கிறது.
இந்தியாவின் இந்த முயற்சியானது 1983ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை – இந்திய ஒப்பந்தம் 13வது அரசியல் சாசனத்திருத்தம் ஆகியன அதனடிப்படையில் உண்டாக்கப்பட்ட விடயங்களாகும்.
இது தவிர இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் இந்தியா அக்கறை கொண்ட வேறு சில விடயங்களும் உள்ளடங்கும்.
இந்தியாவின் அந்த முயற்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது. அது கைவிடப்படவில்லை. மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக முதல் முதல் தெரிவு செய்யப்பட்ட காலத்திலும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை சம்பந்தமாக இலங்கை – இந்திய அரசுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
அவ்வாறு நடைபெற்ற போதெல்லாம் இலங்கை ஜனாதிபதி வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ஆகியோர் இந்திய மத்தியரசாங்கத்துக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளனர்.
அந்த வாக்குறுதிகளில் 13வது திருத்த சட்டம் கட்டியெழுப்பப்பட்டு அதன் மூலமாக அர்த்தபுஷ்டியுள்ள அதிகாரப் பகிர்வை நாங்கள் ஏற்படுத்துவோம் என்ற பல வாக்குறுதிகளை அளித்திருந்தார்கள்.
இந்தியாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண வைபவத்திற்கு இலங்கை ஜனாதிபதி சென்றிருந்தார். வைபவம் முடிந்த மறுநாள் புதிய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை ஜனாதிபதி சந்தித்து உரையாடிய வேளையில் இந்தியாவுக்கு இலங்கை அளித்த வாக்குறுதிகள் பற்றி இந்தியப் பிரதமர் வினவியுள்ளார்.
வினவியது மாத்திரமல்ல யுத்தம் முடிந்து 5 வருடங்களுக்கு மேலாகியும் வாக்குறுதிகள் ஏன் நிறைவேற்றப்படவில்லையென்ற கேள்வியையும் இந்தியப் பிரதமர் எழுப்பியிருந்தார். இது எதைச் சுட்டிக்காட்டுகின்றதென்றால் இந்தியாவின் நிலைப்பாட்டில் கடுகளவு மாற்றமும் நிகழவில்லையென்பதையே ஆகும்.
பல்வேறு விடயங்களை ஆராய்ந்து பார்க்கின்ற போது இந்தியா இலங்கையை பகைக்காமல் இருக்கலாம். அதற்காக இலங்கைத் தமிழ் மக்கள் மீது இந்தியா காட்டி வந்த அக்கறையை கைவிட்டு விட்டது என நாம் அச்சம் கொள்ள வேண்டிய தேவையில்லை.
இந்திய மத்தியரசின் அழைப்பை ஏற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு டில்லி சென்று வருவதற்கு முன்பு மக்களுக்கு எதையும் சொல்ல முடியாது. அது விடயமாக பேசுவது ஏற்றதல்ல. அப்படி பேசுவது பாதகமாக அமையலாம். ஆனால் நடைபெற வேண்டிய கருமங்கள் நன்றாகவே நடைபெறுமென மக்களுக்கு கூற விரும்புகின்றோம் என்றார்.
தமிழத் தேசியக் கூட்டமைப்புடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு இலங்கை அரசாங்கம் தயாராகி வருகிறது பற்றி தெரிவிக்கையில்,
கூட்டமைப்பைப் பொறுத்தவரை எமது பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு ஏற்பட வேண்டுமென்பதில் கவனமாக இருக்கிறோம். எங்கள் மக்களின் இறைமை மதிக்கப்பட வேண்டும். அவர்களின் பொருளாதார அரசியல் சமூக கலாசாரங்களை மதிக்கக்கூடிய விதத்தில் அந்த அரசியல் தீர்வு அமைய வேண்டும். என்றார் இரா.சம்பந்தன் அவர்கள்.
– See more at: http://www.newstamilwin.com/show-RUmsyHRULclqz.html#sthash.aYRjHcng.dpuf