இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆட்சி தொடர்பாகவும், தமிழ்நாட்டு எதிர்ப்புக்கள் மத்தியிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை பதவியேற்பு வைபவத்திற்கு அழைப்பு விடுத்தமை பற்றியும், அதனுடைய பின்னணிகள் இலங்கைத் தமிழர்களுக்கான அரசியற் தீர்வின் சாதக, பாதகமான விடயங்கள் எவ்வாறு அமையப்போகின்றது என்பது பற்றியுமான தமிழ் அரசியல்வாதிகளினுடைய கருத்துக்களை தினப்புயல் பத்திரிகை வினவிய போது தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்.
நரேந்திரமோடி அவர்களின், பிரதமர் பதவியின் பின்னரான அவரு டைய செயற்பாடுகளை வைத்தே தமிழ் மக்கள் பிரச்சினைகள் எவ்வாறு தீர்க்கப்படப் போகிறது என்று கூறலாம் என்கிறார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.
தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் பிரச்சினையில் தெளிவாக இருக்கிறார்கள். அதையும் மீறி மஹிந்தவை இந்திய அரசு அழைத்தது என்பது வர்த்தகம் மற்றும் பிராந்திய நட்புறவில் விரிசல் ஏற்படக்கூடாது என்பதற்காகவே தான். ஆகவே இது இன்றோடு முடியப்போவதல்ல பொறுத்திருந்து பார்க்கவேண்டிய விடயமாகவே உள்ளது.
இருந்தும் இத்தனை எதிர்ப்புக்கள் மத்தியிலும் மஹிந்த சென்றிருக்கின்றார் என்பது, தமிழ் நாட்டு அரசியல் நமக்கு தேவை அற்ற ஒன்று என்பதால் அவர் அதனை பெரிதுபடுத்தவில்லை. மோடி யும் ஒருவேளை, தமிழ் நாட்டு அரசி யலை விட பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால் காலப்போக்கில் தமி ழகம் அடங்கிவிடும் என்றும் அவர் நினைத்திருக்கலாம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
முன்னாள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தற்போதைய ஜனாபதிபதியின் இணைப்பாளரும், திடீர் மரண விசாரணை அதிகாரியுமான சிவ நாதன் கிஷோர் அவர்கள் இவ்விடயம் தொடர்பாக கருத்துத்தெரிவிக்கையில், பா.ஜ.க அரசானது 40 வருடங்களுக்குப் பின் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் அரசு இணைந்தால்தான் வெற்றி பெற முடியும் என பலரும் எதிர்ப்பார்த்தனர். வைகோ வெற்றிபெறுவார். அவர் கூறும் விடயங்களுக்கே மோடி செயலாற்றுவார். ஆனால் இறுதியில் வைகோவை கைதுசெய்யும் அளவிற்கு நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது.
தமிழ்மக்களுக்காக குரல்கொடுத்த திருமாவளவனும் தோற் கடிக்கப்பட்டிருக்கின்றார். ஜெயலலிதா 37 ஆசனங்களைப் பெற்றிருக்கின்றார் என்றால் அது கருணாநிதியிலிருந்த மக்களின் வெறுப்பு என்றே கூறவேண்டும். பா.ஜ.க கட்சி 333 ஆசனங்களைக் கைப்பற்றும் என்று எவரும் எதிர்ப்பார்க்கவில்லை. ஒரு நாட்டினது தலைவரை வரவழைப்பதற்காக தமிழ்நாட்டுத்தலைவர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்ற விடயத்தினை ஏற்றுக்கொள்ளமுடியாது. காரணம் வெறுமனே மஹிந்த ராஜபக்ஷவை மட்டுமல்ல. சார்க் அமைப்பின் அங்கத்துவ நாட்டினது தலைவர்களையும் அழைத்திருந்தமை குறிப்பிடத்தக்கவிடயம்.
இந்தியாவைப் பொறுத்தவரையும் இலங்கையின் பங்களிப்பு என்பது இன்றியமையாததொன்றாகவே இருக் கின்றது. வர்த்தகத் துறையினை எடுத்துக்கொண்டால் பல திரில்லியன் ரூபாய்கள் இந்திய அரசிற்கு இலா பமாக கிடைக்கின்றது. ஆகவே இவ்வருமானங்களை மட்டுமல்லாது ஆசியப்பிராந்தியத்தில் யுத்தம் என்ற ஒன்று ஏற்படுமாகவிருந்தால் இலங்கையின் தளமானது இந்தியரசிற்குத் தேவை.
ஏற்கனவே வடமாகாண முதலமைச்சரை தன்னுடன் வருமாறு மஹிந்த ராஜபக்ஷ அழைப்பினை விடுத்திருந்ததுடன் அவர் அதனை நிராகரித்திருந்தார். இது மஹிந்தவின் இராஜதந்திரமுறைச் செயலா கவும் இருக்கலாம். இலங்கை ஒரு நாடு என்ற வகையில் அமைச்சர்களுக்கோ, வடமாகாண சபை அமைச்சர்களுக்கோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ விடுக்கப்பட்ட அழைப்பல்ல. இது ஜனாதிபதியவர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பாகும். ஜனாதிபதி விரும்பினால் எவரையும் அங்கு அழைத்துச்செல்லலாம். இன்னும் ஓரிரு வருடங்களின் பின்னரே மோடி அரசா னது இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் எவ்வாறு செயற்படப்போகின்றது என்பதனை கூறமுடியும்.
இந்தியாவில் எந்த அரசாங்கம் ஆட்சிசெய்தாலும், தமிழர் விவகாரத்தில் தலையிட்டே ஆவார்கள் என்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்.
இந்தியாவில் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நரேந்திர மோடி பதவியேற்றுள்ள இந்நிலையில், ஈழத்தமிழர்கள் தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் பேச்சு வார்த்தைகளை நடத்தும் அளவிற்கு அவர்களின் அரசியல் நிலைப்பாடுகள் அமையப்பெற்றுள்ளது. மறுபுறத்தில் இலங்கையரசாங்கத்துடன் இந்தியரசு இன்று நேற்றல்ல கடந்த பல வருடங்களுக்கு மேலாக நெருங்கிய நட்புறவுகளை பேணிவருகின்றது.
அதற்கு முக்கிய காரணம் அவர்களின் வியாபார, அரசியற் தந்திரோபாயமும், ஈழத்தமிழர்களினது பிரச்சினையுமேயாகும். நரேந்திர மோடி ஆட்சிபீடமேறி குறைந்தது ஒரு வருடங்களாவது கால அவ காசம் தேவைப்படும். அதற்கிடையில் இலங்கையரசினால் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் எங்கெல்லாம் மூடிமறைக்கமுடியுமோ அவற்றை யெல்லாம் இலங்கையரசு செய்துமுடித்துவிடும். புதைக்கப்பட்ட இடங்களிலெல்லாம் மாளி கைகளும் கட்டப்பட்டுவிடலாம். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இல ங்கை, இந்திய நட்புறவில் நல்லதொரு நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றது. காங்கிரஸ் அரசு ஈழத்தமிழர் விவகாரத்தில் துரோகம் இழைத்ததைப்போன்று தற்போதைய மோடியின் அரசு தமிழ்மக்களுக்காக குறைந்தபட்சமான தீர்வுகளை வழங்க முன்வரலாம்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் இவ்விவகாரம் தொடர்பில், முட்டாள்தனமான முடிவுகளை எடுக்காது சிறந்த முடிவுகளை எடுப்பார் என்பது என்னுடையதும், மக்களினதும் எதிர்பார்ப்பாகும் என்று சிறிதரன் அவர்கள் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக வடமா காணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்கள் கருத்துத்தெரிவிக்கையில், விடுதலைப்புலிகளை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழினத்தையும் அழித்த சாபம் காங்கிரஸ் அரசினையே சாரும். ஆனால் தற்பொழுது நிலைமை மாற்றப்பட்டு இந்த பா.ஜ.க அரசு மோடி தலைமையில் ஆட்சியமைத்துள்ளது. இவர் தமிழ்நாட்டு மக்களாலும், ஏனைய மாநிலத்தில் வாழ்கின்ற மக்களாலும் ஒரு துணிச்சல் மிக்கவர் என்றே மக்கள் வாக்களித்துள்ளனர். ஆகவே ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் கூடிய கவனம் செலுத்துவார் என நான் எதிர்பார்க்கின்றேன்.
இதில் காங்கிரஸினால் முன்னெடுக்கப்பட்ட 13வது திருத்தச்சட்டம் என்பது ஒரு கண்துடைப்பாகவே இதுவரை காலமும் இருந்துவந்தது. இதனையடுத்து ஆட்சிக்குவந்திருக்கும் மோடி அரசாங்கம் இதனை முன்னெடுத்துச்செல்லும் என்ப தையும் நம்பமுடியாது. என்னைப்பொறுத்தவரையில் 13வது திருத்தச்சட்டத்தில் மட்டுமல்ல அதற்கு மேல் சென்றும் தமிழ்மக்களுக்கான தீர்வுகளை முன்னெடுக்கவேண்டும். முன்னெடுப்பதற்கான இராஜ தந்திர அணுகுமுறைகளை எமது தமிழ்த்தலைமைகள் ஏற்படுத்தவேண்டும்.
கடந்த அரசு தமிழ் மக்களின் போராட்டத்தினையும், கட்டிக்காத்து வந்த தமிழ்க்கலாசாரத்தினையும் அழித்துவிட்டார்கள். அதற்கு பிரதி பலனாகவாவது இந்த அரசாங்கம் சகலவிதத்திலும் தமிழ்மக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது சிறந்த விடயமாகும். எமது போராட்டம் பற்றியும் அவர்களுக்குத் தெரியும். ஆரம்பகட்டத்தில் போராட்டத்தை வளர்த்ததும் இவர்கள்தான். அது அவர்களுக்குத் தெரியாதது அல்ல. தமி ழக அரசின் எதிர்ப்புக்கள் இருந்தாலும் கூட அவர்களை புறக்கணித்துவிட்டு தொடர்ந்தும் இந்திய மத்திய அரசினால் செயற்படமுடியாது காரணம் ஏதோ வொருவகையில் தமிழகத்தினுடைய அணுகுமுறை அவர்களுக்கு அவசியமானதொன்றாகும்.
தமிழ் நாட்டு மக்களைப் பொறுத்தவரையில், காங்கிரஸ் அரசினை புறந்தள்ளியதற்கு காரணம் முள்ளிவாய்க்கால் அழிவும், விடுதலைப்புலிகளின் ஒழிப்புமாகும். நிலைமை எவ்வாறிருந்தாலும் மோடி யினுடைய அரசானது இலங்கைத் தமிழர் மீது ஏதோவொரு வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அனந்தி சசிதரன் அவர்கள் தெரிவித்தார்.
சிறி ரெலோக் கட்சியின் செயலாளர் நாயகமான ப.உதயராசா அவர்கள் இதுபற்றி கருத்துத்தெரிவிக்கையில், மோடியினுடைய கட்சி வெற்றிபெற்றிருக்கும் இந்நிலையில், மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு சார்க் அமைப்பின் சார்பாகவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவரின் அழைப்பை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அவர்கள் தன்னோடு செல்வதற்காக முதலமைச்சர் விக்னேஸ்வரனையும் அழைத்திருந்தார். அவர் அவ்வழைப்பை நிராகரித்திருந்ததன் காரண மாக யாழ் மேயர் திருமதி.பற்குணராஜா அவர்களும், ஆறுமுகன் தொண்டமான் உட்பட ஏனைய அரசியல்வாதிகளையும் அழைத்துச்சென்றிருந்தார்.
இது உண்மையில் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விடயமாகும். காரணம் என்னவென்றால் தனிப்பட்ட ரீதியாக எந்தவொரு நாடும் அழைப்பு விடுவது இல்லை. இதனை பலர் அரசின் இராஜதந்திர அணுகுமுறை என்று கூறி னாலும் என்னைப்பொறுத்தவரையில் விக்னேஸ்வரனும் அந்த விஜயத்தில் இணைந்திருந்தால், தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளை இலகுவில் தீர்த்துக்கொள்வதற்கான வழிவகைகள் ஏற்பட்டிருக்கும். காங்கிரஸ் அரசினைப் போலல்ல இவருடைய அரசு.
தீர்க்கமான முடிவுகளை எடுப்பதில் இவர் தலைசிறந்தவர். நரேந்திரமோடியினைப் பொறுத்தவரையில் நாட்டின் அபிவிருத்திக்காக செயற்படக்கூடியவர். ஊழல்களை நாட்டிலிருந்து அப்புறப்படுத்துவதற்காக நடவடிக் கைகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார். வியாபார நோக்கம் கொண்ட ஒருவர். காங்கிரஸ் அரசினைப் பொறுத்தவரையில், லஞ்ச ஊழல் நிறைந்த ஒரு அரசாகும். தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தவர்கள் அல்ல. ஆனால் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளில் ஒருசிலரும், அங்கு வாழ்கின்ற தமிழ் மக்களும் முள்ளிவாய்க்கால் பிரச்சினையின் போது மட்டுமல்ல. அதற்கு முன் இருந்தே ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுத்துவந்தவர்கள். அவர் கட்சி சார்பாக போட்டியிட்ட வைகோ கூட இன்று கைதுசெய்யப்பட்டிருக்கின்றார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையிலும் ஈழத்தமிழர்களுக்கான விடிவினை பெற்றுக்கொடுக்க முடியாது. மத்திய அரசாங்கமே இறுதித்தீர்மானங்களை எடுக்கவேண்டிய நிலையில் உள்ளது. காங்கிரஸ் அரசு முன்வைத்த 13 திருத்தச்சட்டத்தை இந்த அரசு நிறைவேற்றுமா என்று பல கேள்விகள் எழுந்திருந்தன.
நான் நினைக்கின்றேன் அவர்கள் அதற்கு மேலாக செயற்பட்டு தமிழ்மக்களுக்கான நல்லதொரு தீர்வினை பெற்றுக்கொடுப்பார்கள். ஆனால் தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைவதனூடாகவே வெற்றி காணமுடியும் என்றும் ப.உதயராசா அவர்கள் கருத்துத்தெரிவித்தார்.
– தினப்புயல் –