இந்தியாவிற்கு எதிராக தலிபான்-அல்கொய்தா தீவிரவாத அமைப்புகளுக்கு சலாஹூதீன் அழைப்பு

489
இந்தியாவிற்கு எதிராக போராட தலிபான்-அல்கொய்தா தீவிரவாத அமைப்புகள் உதவி செய்ய வேண்டும் என்று ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் அமைப்பின் தலைவன் சையத் சலாஹூதீன் அழைப்பு விடுத்துள்ளான்.

ஈராக் நாட்டில் அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் போர் புரிந்து வருகிறார்கள். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு எதிராக புனிதப்போர் தொடுப்போம் என்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தளபதி இப்ராஹிம் அவாத் அல் பாத்ரி அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் இந்தியாவிற்கு எதிராக போராட தலீபான்-அல்கொய்தா தீவிரவாத அமைப்புகள் உதவி செய்ய வேண்டும் என்று ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் அமைப்பின் தலைவன் சையத் சலாஹூதீன் அழைப்பு விடுத்துள்ளான்.

பாகிஸ்தானில் பல்வேறு தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ள சலாஹூதீன், அல்கொய்தா, தலிபான் மற்றும் இதே கொள்கையில் உள்ள தீவிரவாத அமைப்புகள் மற்றும் நாடுகள், இந்திய அரசுக்கு எதிரான விடுதலை இயக்கத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளான். ஒடுக்கப்பட்ட காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு அளித்தால் அதனை நாங்கள் வரவேற்போம் என்று சலாஹூதீன் கூறியுள்ளான். இந்திய ராணுவத்தை தாக்கியுள்ள சலாஹூதீன் காஷ்மீரில் இந்திய ராணுவம் பயங்கரவாத ஆட்சி நடத்துகிறது. இதனால் மக்கள் கொல்லப்படுகின்றனர் என்றும் கூறியுள்ளான்.

ஐக்கிய ஜிஹாத் கவுன்சில், ஹர்கத்-உல்-அன்சார், ஹிஸ்ப்-உல்-முஜாகிதீன், ஜாமியத்-உல்-முஜாகிதீன், அல்-ஜிகாத், அல்-பர்க், அல்- பதர், மற்றும் தெரிக்-உல்-முஜாகிதீன் தீவிரவாத இயங்களுடன் சேர்ந்தது.

SHARE