அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி U19 உலகக்கோப்பையை வென்றது.
U19 உலகக்கோப்பை
Willowmoore Park மைதானத்தில் நடந்த U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாடியது. கேப்டன் ஹூக் வெய்ப்கென் 48 ஓட்டங்களும், தொடக்க வீரர் ஹாரி டிக்ஷன் 42 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஹர்ஜாஸ் சிங் 55
அதிரடியாக விளையாடிய ஹர்ஜாஸ் சிங் 64 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 55 ஓட்டங்கள் விளாசினார். பின்னர் ஒலிவர் பெக்கே ஆட்டமிழக்காமல் 46 (43) ஓட்டங்கள் எடுக்க, அவுஸ்திரேலிய அணி 253 ஓட்டங்கள் சேர்த்தது.
இந்திய அணியின் தரப்பில் ராஜ் லிம்பனி 3 விக்கெட்டுகளும், நமன் திவாரி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் அர்ஷின் குல்கர்னி 3 ஓட்டங்களில் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து முஷீர் கான் 22 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பியர்டுமேன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அவுஸ்திரேலியா வெற்றி
அதன் பின்னர் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், ஆதர்ஷ் சிங் 47 (77) ஓட்டங்களில் வெளியேறினார். 122 ஓட்டங்களை எடுத்திருந்த இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அப்போது முருகன் அபிஷேக் அணியை மீட்க போராடினார். அவர் 46 பந்துகளில் 42 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆக, இந்திய அணி 174 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அவுஸ்திரேலிய அணியின் தரப்பில் பியர்டுமேன் மற்றும் ராப் மெக்மில்லன் தலா 3 விக்கெட்டுகளும், கலம் விட்லெர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடிய அவுஸ்திரேலியா, நான்காவது முறையாக U19 உலகக்கோப்பையை வென்றது.