இனப்படுகொலைக்கான தீர்வு எட்டப்படுமா?

449

Sir_Ponnambalam_Ramanathan_(1851-1930) 220px-G_G_Ponnambalam

வடக்கின் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் உருவாக்கத்திலிருந்து இன்றுவரை பல அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதுதான் தமது ஒரேயொரு நோக்கமெனப் பல அமைப்புக்களை உருவாக்கி அரசியல்பணியாற்றியபோதுங்கூடத் தமிழ் மக்களுக்கு எவ்வித உருப்படியான பயனும் கிடைத்துவிடவில்லை. இறுதியாக வடபுலத்து அரசியல் நகர்வில் தமிழர்பேரவை என்னும் புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட்டு அவ்வமைப்பினால் தமிழ் மக்கள் உரிமைபெற்று வாழ்வதற்குத் தமிழ் மக்களும், இளைஞர்களும் உடனடியாகவும் திரள் திரளாகவும் தமது அமைப்பில் இணைய வேண்டுமெனவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அரசியல் வரலாற்றிலேயே பிரித்தானியர் நாட்டிற்குச் சுதந்திரம் கொடுத்துவிட்டுச்சென்ற காலத்திலிருந்து இன்றுவரை எந்தவொரு தமிழ்த் தலைமையோ அல்லது எவ்வொரு தமிழ்த் தலைவரோ தூரநோக்குடனும், தமிழ் மக்களின் நலன் தொடர்பிலும் செயற்பட்டதா? ஆல்லது செயற்பட்டாரா? என வினவின் நிச்சயமான பதில் இல்லை என்பது மட்டுமாகத்தான் இருக்கமுடியும்.

இத்தமிழ்த் தலைமையின் அரசியல் நகர்வு சேர்.பொன்.இராமநாதன், சேர்.பொன்.அருணாசலம் ஆகியோரிலிருந்து ஆரம்பமாகி, ஜி.ஜி.பொன்னம்பலம், எஸ்.ஜே.வி.செல்வநாயகம் ஆகியோர் இடையிட்டு, அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் போன்றோரின் குறுக்கறுப்புடன் இன்று சம்பந்தன், விக்னேஸ்வரன் ஆகியோரின் நாடகமேடைகளில் நின்று நர்த்தனமாடிக்கொண்டிருக்கின்றது.
சேர்.பொன்.இராமநாதன், சேர்.பொன்.அருணாசலம் ஆகியோரின் இலங்கைத்தேசியமும், ஜி.ஜி.பொன்னம்பலம், செல்வநாயகம் ஆகியோரின் தமிழ்த்தேசிய அடிப்படைவாதமும், அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் போன்றோரின் தமிழ்த்தேசிய மிதவாதமும், சம்பந்தன் அவர்களுடைய அதே அடிப்படைவாதமும், விக்னேஸ்வரனுடைய அதே மிதவாதமும் தமிழ் மக்களுக்கு பயனேதும் அளிக்குமெனப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டுமென்பதல்ல.

ஏனெனில் இலங்கை அரசியல் நகர்வில் பிரதானமான அம்சமாகப் பிரித்தானியர் நாட்டைவிட்டு வெளியேறி இன்றுவரை தமிழ்த் தலைவர்களும், அவர்களால் காலத்துக்குகாலம் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும் இலங்கைத் தமிழ் மக்களின் இந்நாட்டிற்கு முதலில் வந்த போர்த்துக்கேசரிடம் பறிகொடுத்த இறைமையைப் பெற்றுக்கொடுக்கத் தவறியிருந்தார்கள், தவறியிருந்தன.

god-father-selvanayagam 220px-Appapillai_Amirthalingam

1977ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கை நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தலில் தனித்தமிழ் ஈழ அரசு ஒன்றை நிறுவுவதற்கான ஆணையைத் தமிழ் மக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட தமிழர் விடுதலைக்கூட்டணி என்னும் அமைப்பானது அவ்வாணைக்கு விசுவாசமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அவ்வாணையைத் துஷ்பிரயோகஞ் செய்தது. அவ்வமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட இவ்பெருந்தவறு தமிழ் ஈழம் என்னும் தனிநாட்டையமைப்பதற்குச் சகல வழிகளாலும் உறுதுணையாகவிருந்த அருமருந்தன்ன ஆயுதப்போராட்டத்தையும் கேள்விக்குறியாக்கி அப்போராட்டம் தோல்வியுறுவதற்கும் பெருங்காரணியாக விளங்கியதைக் காணலாம். தமிழர் விடுதலைக்கூட்டணியானது வங்கச் சிங்கம் முஜிபர் ரஹ்மான், காந்தியடிகள் ஆகியோரின் வழியைப் பின்பற்றித் தாம் தமிழ் மக்களிடமிருந்துபெற்ற ஆணைக்கு விசுவாசமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பின் ஆயுதப் போராட்டத்தின் உறுதுணையோடு நிச்சயமாகத் தமிழ் ஈழத் தனியரசை நிறுவியிருக்கவும் முடியும். ஆனால் அவ்வமைப்பினால் இழைக்கப்பட்ட தவறினால் ஆயுதப் போராட்டம் இடம்பெறுவதற்கு முன்னர் வடபுலத்தில் இருந்த தமிழ் மக்களின் சீவனோபாயநிலையிலும் ஆயுதப்போராட்டத்தின் பின் பெரும் வீழ்ச்சியொன்று உருவானது.
இத்தேசத்திலிருந்து பிரித்தானியர் வெளியேறிச்சென்றபோதே, தேசத்திற்கு முதலில் வந்த போர்த்துக்கேசரிடம் பறிபோன தமிழர் ஆண்ட இராச்சியங்களை உள்ளடக்கிய தமிழர் தாயகத்தைத் தம்மிடம் ஒப்படைத்துச் செல்லுமாறு அன்றிருந்த தமிழ்த்தலைவர்கள் கேட்டுப்பெற்றிருக்கவும் வேண்டும். பாரத சுதந்திரப் போராட்டத்தின்போது ஜின்னா அவர்கள் பாகிஸ்தான் தனியரசை மிகுந்த தூர நோக்கோடு வலியுறுத்தி நின்றது போல இராமநாதன், அருணாசலம் போன்ற தமிழ்த்தலைவர்கள் போர்த்துக்கேசரிடம் இழந்த தமிழர் தாயகத்தை வலியுறுத்தி நிற்கத் தவறியமை அவர்களிடமிருந்த தீர்க்கதரிசனமற்ற தன்மையையே பிரதிபலிக்கின்றது.

இதன் காரணமாகவே பின்னாளில் ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் தமிழ் மக்களின் சம அந்தஸ்து நாடி அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி என்னும் அமைப்பையுருவாக்கினார். ஆனால் இக்கட்சியினாலும் எதுவுமே தமிழ் மக்களின் விமோசனந்தொடர்பில் சாதிக்கமுடியாத நிலையிருந்ததனால் இதில் முக்கியஸ்தர்களாக விளங்கிய எஸ்.ஜே.வி.செல்வநாயகம், கு.வன்னியசிங்கம், டாக்டர்.ஈ.எம்.எவி.நாகநாதன் ஆகியோர் ஒன்றிணைந்து இலங்கைத் தமிழரசுக்கட்சியென்னும் புதிய அரசியல் கட்சியொன்றை 1949ஆம் ஆண்டு ஸ்தாபித்தார்கள். இக்கட்சியானது ஜ.ஜி.பொன்னம்பலம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட ஒற்றையாட்சியின் கீழான சம அந்தஸ்துக்கு மாற்றீடாகச் சமஷ்டி ஆட்சிமுறையை வலியுறுத்தி நின்றது. இக்கட்சியானது வடக்கிலும், கிழக்கிலும், இலங்கைத் தமிழரசுக்கட்சியென்னும் பெயரில் தமிழ் மக்களை உசுப்பேற்றிக்கொண்டு கொழும்பில் (குநனயசயட Pயசவல) சமஷ்டிக் கட்சி என்னும் நிலையில் தமிழ் மக்களுக்குள் சேவைசெய்ய ஆரம்பித்தது. இக்கட்சியானது சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டம், சத்தியாக்கிரக, மறியல் போராட்டங்களை முன்னின்று நடத்தியமையால் தமிழ் மக்களுக்குள் மிகவும் துரிதகதியில் வளர்ச்சியடைந்து அம்மக்களுக்குள் ஒரு வெகுஜன அரசியல் அமைப்பாகவும் பரிணாமம் பெற்றது.

MS6412 wig_sam

இக்கட்சியின் துரித வளர்ச்சியை ஜீரணிக்க முடியாத ஜி.ஜி. அவர்கள் இக்கட்சிக்கு எதிராக வடக்கு-கிழக்கின் குறிப்பாக யாழ்ப்பாணத்து இந்து மேட்டுக்குடியினரிடம் தனது செல்வாக்கை நிலைநிறுத்துவதற்கு பல்வேறு வழிகளிலும் தந்திரோபாயக் காய்களை நகர்த்தியபோதிலும் கூட அவரால் இந்தக் கட்சியின் வளர்ச்சியைத் தடுத்துநிறுத்த முடியவில்லை. பொன்னம்பலம் அவர்கள் மேற்கொண்ட யாழ்ப்பாணத்து இந்து மேட்டுக்குடியினரைக் கவரும் ஓர் அம்சமாகவே இலங்கைத் தமிழரசுக்கட்சியானது வடபுலத்துக்கான பல்கலைக்கழகம் நிறுவும் விடயத்தில் திருக்கோணமலையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை வலியுறுத்தி நின்றபோது ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்களைத் தலைவராகக்கொண்ட அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் யாழ்ப்பாணத்தில் இந்துப் பல்கலைக்கழகத்தை வலியுறுத்தி நின்றமை அமைந்திருந்தது. எனினும் எவ்வழியிலும் புதிதாக எஸ்.ஜே.வி அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு வடக்கு-கிழக்கு மாகாணங்களிலும், கொழும்பிலுள்ள தமிழ் மக்களுக்குள்ளும் இருந்த அரசியல் செல்வாக்கைத் தமிழ்க்காங்கிரஸ் கட்சியினால் இல்லாதொழிக்க முடியவில்லை.

இவ்வாறான அரசியல் நகர்வின் அடுத்த அம்சமாக 1970இல் இடம்பெற்ற இலங்கை நடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தலின்போது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே ஏறக்குறையப் 12000 வாக்குகள் வித்தியாசத்தில் அதிகளவு பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றிபெற்றுவந்த தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்களிலொருவராக விளங்கிவந்த அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் கல்லூரி அதிபராக இருந்தவரும் அகில இலங்கைத் தமிழ் காங்கிஸ் சார்பில் வட்டுக்கோட்டையில் போட்டியிட்டவருமான தியாகராசா அவர்களினால் தோற்கடிக்கப்பட்டிருந்தார். மறுபுறமாகத் தமிழரசுக் கட்சியின் அரசியல் செல்வாக்கினால் பலங்குன்றியிருந்த தமிழ்க்காங்கிரஸ் அமைப்பின் சார்பில் பின்னாளில் யாழ்ப்பாணம், உடுப்பிட்டி, வவுனியா ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளில் மட்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக முறையே அக்கட்சியின் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம், மு.சிவசிதம்பரம், தா.சிவசிதம்பரம் ஆகிய மூவர் மட்டுமே தெரிவாகி அதிலொருவராக விளங்கிய மு.சிவசிதம்பரம் அவர்களும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழரசுக்கட்சியின் வேட்பாளர் ஜெயக்கொடி அவர்களினால் தோற்கடிக்கப்பட்டிருந்தார். இத்தேர்தலின் இன்னுமோர் பிரதானமான அம்சம் யாதெனில் யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட தமிழ்க்காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் அத்தொகுதியில் மூன்றாம் இடத்துக்குப் பின்தள்ளப்பட்டிருந்தார். அத்தொகுதியில் தமிழசுக்கட்சியின் மார்ட்டின் அவர்கள் யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டதோடு அல்பிரட் துரையப்பா அவர்கள் இரண்டாம் இடத்தில் நின்றமையுந் தெரிந்ததே. இது இவ்வாறிருக்க இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் தொடர்ச்சியாக வெற்றிபெற்றுவந்த நல்லூர்த் தொகுதியில் தமிழ்க்காங்கிரசைச் சேர்ந்த அருளம்பலம் அவர்களும், கிளிநொச்சித் தொகுதியில் லங்கா சமசமாஜக்கட்சியிலிருந்து விலகி அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் கட்சியில் இணைந்து போட்டியிட்ட ஆனந்தசங்கரி அவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டமையும் 1970இல் இடம்பெற்ற புதிய மாற்றமாகும்.

இவ்விடத்தில் தான் 1971ஆம் ஆண்டு இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சியும் அடக்கப்பட்டபின் 1972ஆம் ஆண்டு புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டு இலங்கை குடியரசு நாடாகவும் ஆக்கப்பட்டது. வேடிக்கை யாதெனில் இக்குடியரசு அரசியல் யாப்பை வரைந்தவர் ஒரு காலத்தில் ஒரு மொழி இரு நாடு. இரு மொழி ஒரு நாடு என உளமார ஆதங்கப்பட்டவரும் லங்கா சமசமாஜக்கட்சியின் முன்னணித் தலைவர்களிலொருவருமான கலாநிதி.கொல்வின் ஆர்.டி.சில்வா அவர்களே என்பதாகும். இக்குடியரசு அரசியல் யாப்பில் இதற்கு முன்னர் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பாக விளங்கிய 29ஆவது சரத்தும் அகற்றப்பட்டு இந்த யாப்பானது தமிழ் மக்கள் மீது முழுமையான அடிமை முத்திரையை ஆழப் பதிந்து நின்றது. இதனால் இப்புதிய அரசியல் யாப்புக்கு ஆதரவாகத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திடக்கூடாது என்னும் கருத்தானது தமிழ் மக்களுக்குள் ஆழமாக வலுப்பெற ஆரம்பித்தது. அதன் விளைவாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட மார்ட்டின் என்னும் நாடாளுமன்ற உறுப்பினர் தவிர்ந்த ஏனைய உறுப்பினர்கள் கைச்சாத்திடாது புதிய யாப்புக்குத் தமது எதிர்ப்பை வெளியிட்டனர். தமிழ்க் காங்கிரஸ் சார்பில் தெரிவுசெய்யப்பட்டிருந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆனந்தசங்கரி தவிர்ந்த ஏனைய இரு உறுப்பினர்களும் புதிய யாப்புக்கு ஆதரவாகக் கைச்சாத்திட்டிருந்தார்கள். இப்பரபரப்பான அரசியல் சூழ்நிலையின்போது தான் அரச பட்டதாரி மொழிபெயர்ப்பாளராகச் சேவையாற்றிய உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் தமிழ் அரச அலுவலர்கள் அனைவரினதும் உண்மையான உணர்வைப் பிரதிபலிக்கும் முகமாகப் புதிய அரசியல் சட்டத்துக்கு விசுவாசமாகச் சத்தியப்பிரமாணம் செய்ய மறுத்துத் தனது அரச மொழிபெயர்ப்பாளர் பதவியை இராஜினாமாச் செய்திருந்தார்.

வருத்தந்தோய்ந்த இத்தமிழ் அரசியல் பின்புலத்தில் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஞானமூர்த்தி என்பார் தமிழ் மக்களுக்குள் பிரிந்து நின்று தமக்குள் போட்டியிட்டு அரசியல் பணியாற்றும் பிரதான அரசியல் கட்சிகளான தமிழ்க் காங்கிரஸ் கட்சியையும், தமிழரசுக் கட்சியையும் ஐக்கியப்படுத்தி கூட்டமைப்பை உருவாக்குவது தமிழர் உரிமைப் போராட்டத்திற்கு மிகுந்த வலுச்சேர்க்கும் என்பதை உணர்ந்துகொண்டு இவ்விரு கட்சிகளையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அன்னாரின் இம் முயற்சி வெற்றிபெறவே செய்தது. அவரால் உருவாக்கப்பட்ட இத்தமிழர் கூட்டணியில் மேற்படி இரு கட்சிகளோடு மலையகத்தின் தொண்டமான் தலைமையிலான இ.தொ.கா அமைப்பும் இணைக்கப்பட்டது. மேலும் அந்நாளிலேயே வவுனியா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தமையோடு தனிநாட்டுக் கோரிக்கையையும் வலியுறுத்திய அடங்காத் தமிழர் முன்னணித் தலைவர் சி.சுந்தரலிங்கம் அவர்களும் இவ்வமைப்புத் தொடர்பில் பச்சைக்கொடிகாட்டி ஈடுபாடு காட்டியுமிருந்தார்.

எனினும் 1977ஆம் ஆண்டு தேர்தலின்பின் இவ்வமைப்பின் நடவடிக்கைகள் தமிழர் விடுதலைப் போராட்டத்துக்குப் பாதகமாகவும், அப்போராட்டத்தை எதிரிக்குக் காட்டிக்கொடுக்கும் தன்மைவாய்ந்தவைகளாகவுமே விளங்கின. இவ்வமைப்பு இலங்கையில் 1977ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தலின்போது தமிழ் மக்களிடம் தமிழ் ஈழத்துக்கான ஆணைகேட்டு வடக்கு-கிழக்குப் பகுதிகளில் போட்டியிட்டிருந்தது. தமிழ் மக்களும் தமது சுயமரியாதையோடு இயைந்த வாழ்வுக்குத் தனிநாடு ஒன்று மட்டுந்தான் இனிமேல் சரியான தீர்வாகவிருக்கமுடியுமென நன்கு புரிந்துகொண்டு அவ்வமைப்புக்கு மிகப் பெரும்பான்மையான வாக்குகளை வழங்கித் தனிநாட்டுக்கான தமது ஏகோபித்த ஆதரவை வழங்கியிருந்தனர். எனினும் தமிழ் மக்களிடமிருந்து இவ்வாணையைப் பெற்றிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியென்னும் வல்வையின் ஞானமூர்த்தி அவர்களினால் உருவாக்கப்பட்டிருந்த இவ்வமைப்பானது தமிழ் மக்களும், தமிழ் இளையோரும் நம்பிக்கைகொண்டிருந்தமைக்கும், எதிர்பார்த்தமைக்கும் மாறாகத் தமிழ் மக்கள் அவர்களுக்கு வழங்கிய ஆணையைத் துஷ்பிரயோகஞ் செய்தமையோடு அவ்வாணையைப் பலவீனப்படுத்துவதற்குமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுமிருந்தார்கள். இவ்விடத்தில் அத்தேர்தலின்போது ஆட்சியமைத்த ஐ.தே.க கட்சிக்குக் கிடைத்த ஆசனங்களுக்கு அடுத்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குக் கிடைத்த இடங்களைவிட அதிகளவிலான ஆசனங்களைத் தமிழர் விடுதலைக்கூட்டணி என்னும் புதிய அமைப்பானது பெற்றுக்கொண்டமையால் அக்கூட்டணியானது புதிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாகும் எதிர்பாராத அமைவொன்றும் தோற்றுவிக்கப்பட்டது. இதனால் அப்போது ஆட்சியமைத்த ஐ.தே.க கட்சியின் சார்பில் ஜே.ஆர். அவர்கள் ஜனாதிபதியாகவும், பிரேமதாசா அவர்கள் பிரதமராகவும் ஆனதோடு தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகமாக விளங்கிய அமிர்தலிங்கம் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவருமானார். இந்நாடாளுமன்றத்தில் மேற்படி கூட்டணியானது எதிர்க்கட்சியானமையும் அவ்வமைப்பானது தமிழ் மக்கள் அளித்த ஆணைக்கு விசுவாசமாகச் செயற்படமுடியாமல் போனமைக்கான காரணிகளிலொன்றெனலாம். உண்மையில் இவ்வமைப்பின் நடவடிக்கைகள் இவ்வமைப்பானது தமிழ் மக்களிடம் பெற்றுக்கொண்ட ஆணைக்கு விசுவாசமாகக் கீழ்வருமாறே அமைந்திருக்கவேண்டும். அவ்வமைப்பினர் செயலாற்றியிருக்கவேண்டிய நீதிபிறழா நெறி பின்வருமாறு ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் ஒரேயொரு அமர்வில் மட்டும் பங்குபற்றி ‘எமக்கு எமது தமிழ்மக்கள் தமிழ் ஈழம் அமைப்பதற்கான ஆணையைத் தந்துவிட்டார்கள் எனவே வேற்றுநாடான ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் எமக்கு எவ்விதமான அரசியல் பணியும் இனிமேலில்லை. நாங்கள் பங்களாதேஷில் முஜிபர் ரஹ்மான் அவர்கள் செய்தமைபோல எமது நாட்டுக்கான அரசியல் வரைபை எமது நாட்டுத் தலைநகரில் வரையவுள்ளோம்’. எனக்கூறிவிட்டு யாழ்ப்பாணத்திலேயோ அல்லது திருக்கோணமலையிலேயோ புதிய அரசியல் சட்ட யாப்பை வரைந்திருக்கவும் வேண்டும். அவர்கள் அவ்வாறாகப் புதிய அரசியல் யாப்பை வரையும்போது வங்கச் சிங்கம் முஜிபர் ரஹ்மான் அவர்கள் கைதுசெய்யப்பட்டமைபோல அமிர்தலிங்கம் உள்ளடங்கலான தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பார்கள். இப்பின்னணியில் காந்திநெறியில் தமிழ் ஈழம் முழுவதும் சட்ட மறுப்பு, அரச நிர்வாகப் பகிஸ்கரிப்பு ஆகியவை மேற்கொள்ளப்பட்டிருக்க ஆயுதப்போராட்டமும் ஒருமுகப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்டிருக்கக்கூடிய சாத்தியம் அமைந்திருந்ததனால் நிச்சயமாகத் தமிழ் ஈழத்திலிருந்து ஸ்ரீலங்கா ஆட்சி நிர்வாகத்தை மிகக்குறுகிய காலத்தில் வாபஸ்பெறவைத்துத் தனித் தமிழ் ஈழ அரசை நிறுவியிருக்கவும் முடியும். தமிழர் கூட்டணித் தலைவர்கள் இந்நெறியைக் கடைப்பிடிக்காததனாலேயே ஆயுதப்போராட்டமும் பிளவுபட்டுப் பல்வேறு கூறுகளானதோடு தோல்வியிலும் முடிவடைந்தது. ஆதலால் இறுதியாக உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி என்னும் அமைப்பும் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி, இலங்கைத் தமிழரசுக்கட்சி ஆகிய கட்சிகள் இனப்படுகொலையின் தீர்வுக்குப் பயனற்றுப்போனமைபோல அத்தீர்வுக்குப் பயனற்றேபோய்விட்டது. இவ்வாறே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் இதுவரையில் பயனற்ற ஒன்றாகவே இருந்துள்ளது. இனியும் அவ்வமைப்பினாலும் சரி புதிதாக உருவாக்கப்பட்ட தமிழர் பேரவையினாலும் சரி ஒருபோதும் இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படாது, தேசத்தில் சிறுபான்மையினப் பிரச்சினை தொடர்ந்தும் நீடித்துக்கொண்டேயிருக்கும்.

வீரப்பதி விநோதன் 

SHARE